யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 4 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
இரவு உணவுதயாரகிவிட, நமது நடைபாதைசுத்தப்படுத்தும் நண்பர்கள் வரத்துவங்கினர், அவர்களைத்தொடர்ந்து மதியம் நாங்கள் உதவிய மற்ற நண்பர்கள். இறுதியில் மொத்தமாக 75 சாப்பாடு. வந்திருந்த விருந்தினர்களில் சிலர், மேலும் சாப்பிடஇயலாத சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டிருக்க, சிலர் சிரிக்கநேரமில்லாததுபோல் விரைவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த உற்சாகம், உணவுச்சாலையின் ஊழியர்களையும் தொற்றிக்கொண்டது, சாதம், சாம்பார், காய்கறிகள்,ரசம் மற்றும் தயிர்ரென மாறி, மாறி சுழன்றனர். ஜானும், அஞ்சலியும் தண்ணீருடன் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர். நிராலி,ஜெயேஷ்பாயுடன் நானும், விருந்தினர்களுடன் கலந்து உணவு உண்ணத்தொடங்கினோம்.

பின் வேகமாக முகம் கழுவிவிட்டு,உடைகளை மாற்றிக்கொண்டு திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் திருமணநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்து சேர்கையில், சிலமணி நேரங்கள் தாமதமாயிருந்தோம். சற்றே வேர்வைகலந்த வித்தியாசமானதொரு வாசனையுடன் நாங்களிருந்தபோதிலும், அந்த நாளின் இரண்டாவது கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.

பி.கு:
மன்னிக்கவும், அன்றைய சேவையின் புகைப்படங்கள் என்னிடமில்லை, அப்பொழுது காமிரா கொண்டுசெல்லத்தோன்றவில்லை, இருப்பினும் அப்பொழுது எங்கள் கைகள் வேறு வேலைகளில் மும்முரமாய்த்தானே இருந்தது.

ம.பி.கு:
அன்றைய தினத்திற்கு அடுத்தநாள் மதியம், வேறு ஒரு நண்பர்கள் குழுவுடன் - அஞ்சலி, ஜெயேஷ்பாய்,நிராலி,ஜான்,டிம்,ப்ரியா,ப்ரியாவின் அம்மா மற்றும் யோ-மி உடன் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்று ஒருமணிநேர தியானத்தை புதுமணதம்பதியர்களுக்கு சமர்ப்பித்தோம்.

இந்த பதிவானது வேறு நாட்டைச்சேர்ந்த ஒரு நண்பரின் பார்வையில் விவரிப்பதாய் எழுதப்பட்டிருக்கின்றது, இந்த சம்பவம் நடந்த இடம், சூழ்நிலை, நண்பர்கள் என சில விளக்கங்களை அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 3 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005

எங்களின் உணர்ச்சிகரமான புதிய நண்பரின் பெயர் வீரப்பன், தான் கேள்விப்பட்ட செய்திகளிலேயே இதுதான் மகத்தானதொரு செயலென்று தனக்குத்தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் எங்களிடம் உரையாட ஆரம்பிக்கிரார்.


திடீரென உதித்தது மற்றுமொரு யோசனை, இங்கிருக்கும் நடைபாதையில் வாழ்பவர்களுக்கும், இந்த தெருவை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கும் ஓர் இனிய விருந்தளித்தாலென்னவென்று. சாப்பாடு பறிமாறுவதற்கான வாழைஇலை எங்கு கிடைக்கும், சாதம்,சாம்பார் பறிமாற பாத்திரங்கள் எங்கு கிடைக்கும் என்று எனக்குத்தெரியும், ஆனால் நல்ல சுவையான சாப்பாட்டிற்கான இடத்திற்கு வீரப்பனின் சிபாரிசு தேவை. குப்பைபெருக்குவதில் கலந்துகொள்ளாவிடினும், எங்களுடன் சிறிதும் தாமதிக்காமல் கலந்துகொண்டு, எங்களின் நோக்கத்தைப்புரிந்து கொண்டு உதவத்தொடங்கினார்.


இவர்களுக்கு இங்கு சாப்பாடு பறிமாறுவதைவிட, நல்லதொரு உணவுச்சாலைக்கு கூட்டிச்செல்வது நன்றாக இருக்குமென்பது அவரின் சிபாரிசு. ஜெயேஷ்பாயையும், தீப்தியையும் உரிமையுடன் கைகளால் பிடித்து சிறிது தூரத்திலிருந்த "ஷ்ரீ ஷங்கர் பவன்"-க்கு கூட்டிச்சென்றார். கொஞ்சம் கருப்படைந்த, இருட்டான சின்னதொரு உணவுச்சாலை அது, இருப்பினும் இந்த சாலையில் உள்ளதொரு நல்ல உணவுச்சாலை என அறிமுகம் செய்தார்.


நல்லவேளை அதன் உரிமையாளர் நாங்கள் பேசுவதை புரிந்துகொண்டார், ஜெயேஷ்பாய் அவரிடம் 50 பேருக்கான இரவு உணவைதயாரிக்க சொன்னபோது அவரால் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை போலிருந்தது. ஆனால், சாப்பிட வரப்போவபர்கள் யாரென அறிந்தபோது வியாபாரத்துக்கான அந்த உற்சாகம் முழுவதும் வடிந்துபோனது. ஜெயேஷ்பாயின் விடாமல் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து, அந்த 50 பேரும் இரவு உணவு அங்கே உண்ண ஏற்பாடானது.


சுத்தமாகிவிட்ட எங்களின் அந்த நடைபாதை நண்பர்களிடம் சென்று, இரவு உணவுக்கான அழைப்பைவிடுக்க ஆரம்பித்தோம்.வீரப்பனால் உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலாமல், அவரே முன்வந்து மேலும் ஒரு நடைபாதைவாசியை அழைக்க ஆரம்பித்தார், அப்படியே அங்கிருந்த அனைவருக்கும் பெரிதாக சப்தமிட்டு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். "சரியான செய்தி, ஆனால் தவறான வெளிப்பாடு", என்று அவருக்கு புரியவைக்க முயற்சிசெய்கின்றேன்,


அவரின் முகத்திலருகில் சென்று, "நீங்களும் எங்களுடன் உணவருந்த வாருங்க்கள்", என்று உச்சஸ்தாயில் கத்தினேன், அடுத்து உடனே ஒரு அடி பின் சென்று, மெதுவாக என் கைகள் இரண்டையும் நீட்டி அவரை வரவேற்கும் விதமாக வைத்து, அமைதியாக "எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவதின் மூலம் எங்களுக்கு உதவுவீர்களா", என்று கேட்க, அடுத்த நபரிடம் சென்று கத்தியழைப்பதற்கு பதிலாக அவரின் கைகளைப்பற்றி அழைக்கச்செல்வதற்குமுன், பெரியதொரு புன்சிரிப்புடன், வியர்த்துவழிய உண்ர்ச்சி மேலிட என்னை கட்டியணைத்துக்கொண்டார் :-).


இரவு உணவு ஆரம்பிப்பதற்கு இன்னும் 1 மணிநேரம் உள்ளது, அதற்குமுன் கோவிலுக்குச்செல்ல எங்களுக்கு வீரப்பன் அழைப்பு விட ஆரம்பித்தார். கோவிலின் வெளிப்பிரகாரங்களில் ஓர் சின்ன சுற்றுலா (கோவிலின் உள்ளே இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி) முடிந்தபின், கோவிலுள் தெற்குவெளி வீதியில் சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பார முடிவெடுத்தோம்.


எங்களினருகில் அமர்ந்திருந்தது ஓர் வயதான கிழவர், கடைசிக்காலத்தை கோவிலில் பிச்சையெடுத்துப்பிழைத்துக்கொள்ள அவரின் குடும்பத்தினரால் இங்கு விடப்பட்டவர். அவரருகே சென்ற ஜெயேஷ்பாய் "அருகில் வாருங்கள் சகதோரா",என்று கூற. அவருக்கு ஹிந்தி புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஜெயேஷ்பாயிடம் இந்தவொரு அற்புதமான ஒரு திறன் உண்டு,எவரிடமும் மொழியின் எல்லைகள்தாண்டி பரிசுத்தமான அன்புடன் செயல்முறையில் உரையாடும் திறன்தான் அது.


உடனே வேகமாக தன்னுடைய பலவீனமான மெலிந்த தேகத்தை எங்களை நோக்கிதிருப்பத்தொடங்கினார் அந்த வயதானவர். ஜெயேஷ்பாய் எங்களிடமிருந்த ஈரமான துண்டையெடுத்து, அந்த வயதானவரின் வாயினருகே ஒட்டியிருந்த உணவுப்பருக்கையை துடைத்துவிட்டு, அவரை திரும்பச்சொல்லி, சின்ன எண்ணெய் பாட்டிலை எடுத்து அவரின் தலையில் தடவி பிடித்துவிடத்தொடங்கினார். அவரிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை, ஜெயேஷ்பாயின் கைகள், கைதேர்ந்த ஓர் தலைமுடிதிருத்துவரைப்போல இந்த வயதான அன்பரின் தலையில் விளையாடத்துவங்க, அவரின் முகம் மலரத்தொடங்கியது. பின் ஓர் சீப்பையெடுத்து மெதுவாக சீராக வாரத்துவங்கினார். இப்பொழுது அவரின் கந்தல் ஆடைமட்டுமே அவரை நடைபாதையில் வாழ்பவரென காட்டியது.


இதைக்கண்ட வீரப்பனால், தன்னுடைய உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, அவர் ஜெயேஷ்பாயருகில் வந்து, தலையில் விளையாடத்துவங்கினார். ஆரம்பிக்கும்போதிருந்த அளவைவிட முடிக்கும்போது சிறிது அதிகமாகவே கம்மியாகவே ஆனது ஜெயேஷ்பாயின் தலைமுடி ;-). அந்த வயதான அன்பர் பெற்றது மென்மையானதென்றால், தான் பெற்றது கொஞ்சம் முரட்டுத்தனமான அன்புகலந்திருந்தது என்று பின்னர் சொன்னார் :-). அதேநேரத்தில் அஞ்சலி பொறுமையாக அங்கிருந்த மற்றொரு வயதானவரின் தலைமுடிக்கும் இந்த எண்ணெய் வைத்தியத்தை நிகழ்த்த, நிராலி அங்கிருந்த பல வயதான பெண்மணிகளுக்கு விரல்நகங்களை வெட்டிவிட, இவர்களுடன் ஜானும், தீப்தியும் பலூன்களை வாங்கி ஊதி அங்கிருந்த சிறுவர்களுடன் கோவிலின் உள்வீதியில் விளையாடத்துவங்கினார்கள்.

தொடரும்.....

பாகம் 1 , பாகம் 2

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 2 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
பாகம் 1

குப்பை பிரித்தெடுக்கப்பட்டு ஓர்வண்டியிலேற்றப்ப்பட்டவுடன் ஆட்டோக்கள் பிடித்து மீனாட்ச்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஜெயேஷ்பாயும்-ஜானும் சேர்ந்து எங்களின் அடுத்த திட்டத்தை வகுக்க தொடங்கினார்கள். கோவிலின் சுவரைச்சுற்றியிருக்கும் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களிடையே இருக்கும் குழந்தைகளுக்கும் வளர்ந்திருக்கும் அசுத்தமான விரல்நகங்களை வெட்டிசுத்தப்படுத்தி, அவர்களிடையே புன்னகையையும், மகிழ்ச்சிதரும் இதமான வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தோம்.

ஜான் பசித்திருபவகளுக்கு பிஸ்கட் வாங்கித்தரத்தொடங்க, தெரு வியாபாரியிடமிருந்து ஒரு துண்டை வாங்கிய நான், பொதுக்குழாயில் நீரில் நனைத்து, அங்கிருக்கும் குழந்தைகளின் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கைகளையும், முகங்களையும் துடைத்துவிடத்தொடங்கினேன். இதை தொடர்ந்துகொண்டே, 300 மீட்டர் செல்வதற்குள் ஒருமணிநேரம் சென்றுவிட்டது.

தென்கிழக்கு மூலைநோக்கி நகர்ந்துசெல்கையில், அவ்வழியிலிருந்த தெருசுத்தம் செய்பவர்களைக்கண்டோம். இந்தியாவிலிருக்கும் இவர்களுக்கும், அமெரிக்காவிலிருக்கும் இதே வேலை செய்பவருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உண்டு. முதலில், கூட்டுதலும், குப்பையை பெருக்குதலும் வெறும் கையாலையும், குச்சிகளால் செய்யப்பட்ட விளக்கமாறுகளாலும் செய்யப்படும். இந்த விளக்கமாறுகளால் கூட்டப்படும்போது, குனிந்து தரைக்கலருகில் கூட்டவேண்டும், ஆதலால் முதுகெழும்பை முறிப்பது மட்டுமின்றி, தூசுகளால் மூச்சு முட்டும் வேலையிது. இதுவே அடுத்த வித்தியாசத்தை கூறிவிடும், ஆம் இந்த வேலையை செய்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள்.

அத்தனை கடினமான வேலைசெய்யும் இந்த பெண்கள் அணிந்திருக்கும் நேர்த்தியான உடையான புடவை , அவர்கள் செய்யும் வேலைக்குச்சம்பந்தமில்லாதமிடிலும் அவர்கள் வசதியிலிருக்கும் தாழ்வுநிலையின்றி அவர்களின் பண்பாட்டையும், கண்ணியத்தையும் எடுத்துக்காட்டியது.

பெண்மையின் வெளிப்பாடாக தென்னிந்தியாவில் நான் கண்ட மற்றுமொரு சின்னம் தலையில் சூடும் மல்லிகைப்பூக்கள். தெருவின் எதிர்த்த வரிசையில் அமர்ந்திருந்த பூக்கள் விற்பவர்களிடம் பூக்கள் வாங்கி, இந்த சுத்தம் செய்பவர்கள் மூவருக்கு பூக்கட்ட உதவுகின்றேன்.

அப்பொழுது அங்கே வந்த ஜெயேஷ்பாய் மற்றும் ஜான், இவர்களிடமிருந்து சிறிதும் யோசனையின்றி, அந்த விளக்கமாறுகளை வாங்கி கோவிலின் தெற்கு பகுதியை சுத்தப்படுத்தத்துவங்கினர். இந்த நேரத்தில் அஞ்சலியும், நானும் அவர்கள் கூட்டிவைத்த குப்பையை அள்ளி சைக்கிள்களில் ஏற்றத்தொடங்கினோம். அப்பொழுது தீப்தியும், நிராலியும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களின் விரல்நகங்களையும், முகங்களையும் சுத்தப்படுத்துக்கொண்டிருந்தனர்.

ஆச்சரியத்துடன் அங்கே கூட்டம் கூடத்துவங்கியது, ஒருவழியாக ஆங்கிலம் பேசத்தெரிந்த நபர் ஒருவரை கண்டு, நாங்கள் நாளை நடக்கவிருக்கும் எங்கள் நண்பர்களின் திருமணப்பரிசாக இந்த சேவையை செய்கின்றோமென்று அங்கே கூடியிருந்தவர்களிடம் விளக்கச்சொன்னோம். இதை அவர் விளக்கமுயற்சிக்க, மற்றவர்கள் மேலும் குழப்பத்திலேயே ஆழ்ந்தனர். இறுதியில் இதை ஒருவர் புரிந்துகொண்டார்: கூட்டத்திலிருந்து, தன் நெற்றியிலிருக்கும் தழும்பைவிட அகலமான ஒரு புன்சிரிப்புடன் தோன்றிய அவர், ஒரு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஓர் ஆட்டோ ஓட்டும் இளைஞர்.

உரக்கவாழ்த்தியபடி வந்த அவரின் சிரிப்பிலிருந்த உற்சாகமும், கண்களிலிருந்த அன்பும் காணாவிட்டால் அது எங்களை அடிக்கவந்திருப்பதாகவே புரிந்துகொண்டிருப்போம்.

தொடரும்...

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 1 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
எங்கள் நண்பர் வட்டத்திற்குள், பிறந்தநாளாகட்டும் வேறு எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகட்டும், பொருளுக்கு பதில் பிறருக்கு செய்யும் சேவையை பரிசளிப்பது அரிதானதொன்று அல்ல. சனிக்கிழமை மதியம், திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, நண்பர்கள் நாங்கள் சிலர் சிறுகுழுவாக, கொண்டாட்டங்களிலிருந்து வெளியேறி நான்கு மணிநேரம் நாங்கள் செய்யப்போகும் சேவையை தம்பதியர்களுக்கு பரிசளிக்க முடிவுசெய்தோம்.

திங்களன்று, திருமண நிகழ்ச்சிகள் முடிந்தபின்பு, நண்பர்கள் அனைவரும் நாட்டின், உலகத்தின் பல மூலைகளுக்கு பிரிந்து செல்லும்முன், நடத்தப்படப்போகும் மிகப்பெரும் சேவைப்பரிசு பற்றி அறிந்திருந்தோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் திடீரென பயணத்திட்டங்கள் மாறிவிட, நடந்தால் இப்பொழுது, இல்லையேல் நேரம் இல்லையென சனிக்கிழமை மதியம் உணர்ந்துவிட்டோம். நிகழ்ச்சிகளிடையே கிடைத்த சிலமணிநேர இடைவெளியில், இரவு நேர நிகழ்ச்சிக்கு சிலமணிநேரம் தாமதமாக வந்தால் தவறில்லையென புரிந்துகொண்டு, திட்டமிடத்துவங்கினோம்.

மதுரை, பரந்து விரிந்த நிலப்பரப்பிற்க்கு மட்டுமின்றி, அதன் கலைநுணுக்கத்திற்கும் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலின் இருப்பிடம். இது ஆன்மீக மையம் மட்டுமில்லை, இந்த நகரத்தின் மையம் கூட. திருமணநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல, எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி ஆறு பேர் நாங்கள். தொடங்கிவிட்டால் செயல்கள் உருப்பெறத்தோன்றிவிடும் என்று நம்பினோம், என்றுமே அது நடந்திருந்தது.

நகரின் மையத்திற்கு செல்ல ரிக்ஷாக்களுக்கு காத்திருக்கையில்,எங்களின் முதல் வாய்ப்பை ஜெயேஷ்-பாய் சுட்டிக்காட்டினார்: அன்றைய தினத்தில் சேகரித்த பொருட்களை பிரித்தெடுத்துக்கொண்டிருக்கும், பழையபொருட்களை சேகரிப்பவர்கள். அவர்களை வாழ்த்திவிட்டு, பேப்பர்களை பிளாஸ்டிக் பைகளிலிருந்தும், கண்ணாடிகளிலிருந்தும், இரப்பர்களிலிருந்தும் பிரித்தெடுக்க உதவத்தொடங்கினோம்.

அங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை கண்டால், யோசனையேயின்றி, சுகாதாரத்தைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், சுற்றுப்புர சீரழிவைப்பற்றி நினைக்காமல் எப்படி இப்படி குப்பை கொட்டுவார்களோ என்று தோண்றும்.இந்த பழையபொருட்கள் சேகரிப்பவர்கள், இந்த சமூகத்தின் அடையாளம் தெரியாத முதுகெலும்பானவர்கள். நகரத்தின் தெருக்களை குப்பை கிடங்காகாமல் சுத்தமாக இருப்பதற்கு இவர்களே காரணம். இவர்களைத்தான், ஜெயேஷ் "குப்பைகளை போடுவதற்கு ஆயிரம் கைகள், ஆனால் அதை எடுப்பதற்கோ இரண்டே கைகள்" என்று குறிப்பிட்டார்.

குப்பைகளை இனம்பிரிப்பது மிகவும் அசுத்தமானதொரு வேலை (இந்த குப்பைகளை சுமக்கும் இதே தெருக்கள்தான் பலருக்கு கழிவறைகளாகவும் பயன்படுகின்றது). இருப்பினும் வறியவர்களிலும் வறியவர்கள் பலர் இதன் மூலம் தங்கள் வாழ்வை சம்பாதிக்கின்றார்கள். உதவிசெய்த எங்களை கண்ட அவர்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்ந்தாலும், பின்னர் உணர்ச்சிவசப்பட்டுப்போனார்கள். அவர்களுடனான எங்கள் கைகுழுக்கள்களும், புன்னைகளுமே அவர்களை பின்னர் இயல்பாக்கியது. ("ஆம்", "இல்லை", "கைகுடுங்கள்" என்பதற்கான எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளே அவர்களுடன் பேச உதவியது).

சுற்றிலும் குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள். பழையபொருட்களை சேகரிக்கும் இவர்களின் சேவையை நாங்கள் கண்டு வியக்கிறோம் என்பதை அங்கிருந்த ஆங்கிலமறிந்த ஒருவர் மூலம் அவர்களுக்கு விளங்கச்செய்தோம், மேலும் அவர்களின் இந்த சேவையில், எங்கள் நண்பர்களின் திருமணபரிசாக பங்கு கொள்கின்றோம் எனவும் புரியவைத்தோம். திருமணப்பரிசாக பொருட்களில் தாராளமாய் செலவழிக்கும் பெரும்பாலானோர் இருக்குமிடத்தில் இத்தகைய எங்கள் செயல் குழப்பத்தையே உண்டு பண்ணியது. ஆனால் அதற்குள் அங்கே தோழமையான, மகிழ்வானதொரு சூழ்நிலை நிலவத்தொடங்கியது.


தொடரும்....