யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கதைசொல்லி அனுபவம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006

பல வருடங்களாய் நாட்குறிப்பு எழுதிவருவதையும், தமிழ் 1, தமிழ் 2 என தேர்வுதாள்களில் எழுதியதை தவிர கதை எழுதி எங்கும் பழக்கமில்லை எனக்கு. தேன்கூட்டின் சென்ற போட்டியான "தேர்தல் 2060" பற்றிய கதைகளை படிக்கும்போது கூட எந்த ஆர்வமும் வந்துவிடவில்லை. இந்த முறை, போட்டிக்கான கதை/கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது நாமும் கடந்து வந்தது தானே "இந்த விடலைப்பருவம்" , ஏன் ஒரு முறை முயலக்கூடாது என யோசனை.


முதலில் வந்த தடைக்கல், இதுவரை வந்த எந்த ஆக்கத்தின் பாதிப்போ, ப்ரதிபலிப்போ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், அதன்பின், வித்தியாசமான கதைசொல்லும் முறை. அட இவ்வளவுதானே, பார்த்துக்கொள்ளலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் தடையை தாண்டுவதே கடினமாய் ஆனது, காரணம் , தலைப்பில் இருக்கும் எல்லா கோணங்களையும் எடுத்து எழுதிவிட்டர்கள். எதை தொடுவது என்று நினைத்தாலும், முந்தின தினம் படித்தவைகள் நினைவுக்கு வந்து, அதுதான் அந்த கதையில் இருக்குதே என தோன்ற ஆரம்பித்தது.

இதை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்வுதான், விடலைப்பருவம் விடைபெரும்போது, அந்த பருவத்தில் தோன்றிய எண்ணங்கள் எப்படி மாற்றம்பெருகின்றது என்ற என் ஆக்கத்திற்கான கருவானது. என்னதான் பிறர் கதைகளை படிக்கும்போது நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் என தோன்றினாலும், வித்தியாசமாய்த்தான் இருந்தது திடீரென தினசரி நிகழ்வுகளில் இருந்து தாக்கம் உருவானது.

கதை சொல்லும் முறையில் ரொம்ப வித்தியாசமாய் இல்லாமல் இயல்பான மதுரை பேச்சுத்தமிழ் நடையில் இருக்கட்டும் என்று முடிவு பண்ணியது வேண்டுமானால் எளிதாய் இருந்தது ஆனால் அதை கதையில் கொண்டுவருவதற்கு கொஞ்சம் அதிகமாய் தான் மெனக்கெட வேண்டியிருந்தது. வேண்டுமென்றே வார்த்தைகளை சிதைப்பதும், சொற் குற்றங்கள் அதனால் உருவாவதும், அப்படி தெரிந்தே எழுத கஷ்டமாய் தான் இருந்தது.

எழுத/தட்டச்ச ஆரம்பிக்கையில் மனதில் இருந்தது கதை ஒரு மாதிரியாகவும், முடித்தபின் ஆங்காங்கே அது வேறு மாதிரி போனதையும் கவனிக்க முடிந்தது. மனதில் தோன்றிய நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கொண்டுவருவதில் இருந்த சிரமங்கள் புரிய ஆரம்பித்தன.

கோர்வையாக நிகழ்வுகளை கொண்டு வந்தபின், நீளத்தை கண்டு பயந்துவிட்டேன். இவ்வளவு நீளமான கதையை படிப்பதற்கு எனக்கே அயற்சியாய் இருந்தது. ஆரம்பம் என்னவென்று பாதி வருகையிலேயே மறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு :-)

நீளத்தை குறைப்பதற்கு மிகவும் திறமை வேண்டும்போல, தேவையில்லை என எந்த பகுதியை தீர்மானிப்பதும், தேவைப்படும் பகுதியை சுருக்கினாலும் அது சொல்ல வந்ததை அதே அளவு வலிமையுடன் சொல்ல வேண்டும்.

முடிவு... அடுத்த சவால், என்னதான் சுவாரசியமாய் கதை சொல்லியிருந்தாலும் முடிவு ஒன்றே படிப்பவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது. தெரிந்த/யூகிக்க முடிவதாயினும் அதை சொல்லும் விதமும் அழுத்தமாய் இருக்கவேண்டுமென்பது கஷ்டமாய் இருந்தது.

கதை படித்த சிலர், அந்த வட்டார வழக்கை கவனித்து பாராட்டியதும், ஆச்சர்யமாகவே இருந்தது.. படித்தவர்கள் மேல் அல்ல, என் மேல் எனக்கே :-)

தமிங்கலக்கலப்பும் இந்தக்கால கல்லூரி மாணவர்களின் பேச்சை பதிவு செய்யப்போக வந்தது, வேண்டுமென்றே புகுத்தப்பட்ட அது இனி இருக்காது.

போட்டிக்கான ஒவ்வொரு ஆக்கத்தின் வித்தியாசமான களத்தையும், கதை சொல்லும் முறையையும் கண்டபோது இது ஒன்றும் விளையாட்டுத்தனமான போட்டியில்லை என புரிந்தது. ஏதேதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் உள்ளேயிருந்த திறமைகள் பளிச்சிடத்தொடங்கியிருந்தது நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது.

முழுவதுமாய்ப்பார்த்தால் கதை வாசிப்பதைவிட.. கதை சொல்வது ஒரு பெரும் அனுபவமாய் இருக்கின்றது முழுமையாய் இரசித்து அனுபவித்தேன் :-)

சொல்ல வந்த கதை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006
இந்த கதையில் நான் சொல்ல வந்தது, விடலைப்பருவ மாற்றம் என்பது ஒரு கணநேர அதிர்ச்சியில் உருவாவது அல்ல, அதை நாம் நம்மை அறியாமலே அடிமேல் அடிவைத்து கடந்து வருகின்றோம். மாற்றத்தை நாம் உணரும்போது என்றோ அதை கடந்து வந்திருப்போம் என்பதே.

விடலைப்பருவ மாற்றங்களில் பல கோண்ங்கள் உண்டு, இனக்கவர்ச்சி, வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், குடும்பப்பொறுப்பு.. என்று. அதில் ஒன்று நட்பு/உறவுகள் பற்றிய பார்வையும் மாற்றங்களும்.

நண்பர்கள், நட்பு, உறவுகள் பற்றிய பார்வை எப்படி ஆரம்ப காலங்களில் இருக்கின்றது, நாட்கள் செல்லச்செல்ல அதில் உருவாகும் மாற்றங்கள், அந்த மாற்றத்திற்கு காரணமான நிகழ்வுகள், அது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று சொல்ல நினைத்தேன்.


கதை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வாயிலாக, நிகழ்வுகளாக விவரிக்கப்படுகின்றது. அதில் பின்நோக்கிய நினைவுகளை நினைத்துப்பார்ப்பதாக இருக்ககூடாது என முயன்றேன், காரணம் எந்த ஒரு திரைப்படத்தையும் நினைவு படுத்தி விடக்கூடாது என்று.

கதையின் இடையே, அந்த கதாபாத்திரத்தின் மனதின் குரல் மூலம் அதற்குள் நடைபெரும் சின்ன சின்ன மாற்றங்களை படம்பிடிக்க முயற்சித்தேன்.

ஆரம்பத்தில் தாய், தந்தையருடன் உறவு எப்படி இருக்கின்றது, நண்பர்களே இல்லாமல், பின் இடையில் அதில் கவனமேயின்றி முழுவதுமே நண்பர்களுடன் பொழுது என்று மாற, அதன்பின் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும் முறையும், நேர அளவும் மாற.. மீண்டும் தாய் தந்தையர் பற்றி நினைப்பதும், பின் அதிலும் மாற்றம் வருவதும் என மனதின் குரல் மூலம் காண்பிக்க நினைத்தேன்.

கல்லூரிகாலங்களில், நாள் முழுவதும் நண்பர்களுடன்.. ஆனால் பின்பு அதே நண்பர்களின் நேரமின்மை காரணமாக அவர்கள் மீது கோபப்படுவதும், பின் புரிந்துகொள்வதுமான வளர்ச்சி என...

இதையெல்லாம் வெளிப்படையாக சொல்லியபின் படிப்பவர்களுக்கு புரியக்கூடாது, அது சொல்லப்பட்ட விதத்திலேயே புரிந்திருக்க வேண்டும், அதுதான் வெற்றி.

அதனாலயே உங்கள் மறுமொழிகளுக்கு பதில் அளிப்பதில் நேரம் தாழ்த்தினேன். அந்த வகையில், உங்கள் மறுமொழிகளிலிருந்து ஒரளவு வெற்றி கண்டேன் என்பதை காணும்போது மகிழ்ச்சியே..

நன்றி !!!

என்று அடைவோம் இந்த வளர்சிதை மாற்றம் ?

Published by யாத்ரீகன் under on புதன், ஜூன் 21, 2006
"ஸ்கூல் விட்டு வந்ததும் வராததுமா படிக்கலையாப்பா...", அம்மாவோட குரல் ஒண்ணுங் ரொம்ப கண்டிப்பானதெல்லாம் இல்ல, அதுந்து கூட பேச தெரியாது அம்மாவுக்கு. ஆனா அதுக்கப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போற அப்பா, என்ன எங்கேனு கேட்டுருவாரேனு பயத்துல எழுத்து மேஜையை இழுத்து கணக்கு போட ஆரம்பிக்குறேன்.

சே !!! அந்த பாண்டி பய கபடி வெளயாடுற யெடத்துக்குள்ள விடவே மாட்டான்.. ஆறாப்பு வந்தா பெரிய பையன்டா, அப்போ கூட சேந்து வெளயாடலாம்னு நேத்து தான் அசோக்கு சொன்னான், இன்னைக்கும் பாத்து கபடி டீம்க்கு ஆள் சேக்குறாங்கே..

அசோக்கு என்னோட பெஸ்ட் ப்ரெண்ட், நானும் அவனும் என்னைக்கும் பிரிய கூடாது, கல்யாணம் பண்ணாலும் அக்கா, தங்கச்சியத்தான் கட்டிக்கனும் அப்பொதான் ஒரே வீட்டுல இருக்க முடியும்...என்னனே புரியல ஆறாப்பு வந்ததும் அப்பா என்னை, இனிமே பக்கத்து சந்துல இருக்குற பசங்களோட போய் வெளையாட வேணாம்னு ஒழுங்கா படிக்குற வேலயப்பாருனு திட்டுறாரு...

ஸ்கூலு படிக்குற வரைக்கும், வீடு - வீட்ட விட்டா ஸ்கூலுனு போய் போய் வர்ரது தான் எனக்கு வேல, பக்கத்து சந்து பசங்களோட வெளயாடவோ, ஸ்கூலுல எக்ஸ்கர்சன் போகவோ விடவே மாட்டேனுட்டாங்க.. யப்பா இப்போ காலேஜு வந்தாச்சு..

அப்பா நம்மள கொஞ்சம் கண்டிச்சாலும் நம்ம நல்லதுக்காத்தான இருந்திருக்கு. இல்லாட்டி வெளயாட்டுத்தனாமாவே இருந்திருப்பேன் நல்ல ஸ்கூல்ல எடம் கெடச்சிருக்காது, அப்பாவுக்கு மெரிட்ல சீட் கெடச்சிருக்காது,செலவு கொரஞ்சிருக்காது... நாம வளர்ர சூழல் நம்ம வளர்ச்சில எவ்ளோ பங்கு கொள்ளுது !!! ஒருவேலை வெளயாண்டுக்கிட்டே இருந்திருந்தா இதெல்லாம் நமக்கு தெரியாமலே/கெடைக்காமலே போயிருந்துருக்கும்...


"அம்மா, இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும், சத்யா ட்ரீட் இருக்குமா போய்ட்டு வர்றேன்..." "இன்னைக்கு பிரண்ட்ஸ் டேமா, எங்க கேங் எல்லோரும் இன்னைக்கு முழுக்க சேந்து சுத்தப்போறோம், போய்டு நைட்டுதான் வருவேன்...." "நாராயணன் அண்ணன் கல்யாணம்மா, பசங்க எல்லோரும் போறாங்க, அப்டியே சேந்து பக்கத்துல ஜாலியா ஊர் சுத்தீட்டு வர்றோம்மா..."

யப்பா, பிரண்ஸோட இருக்குறது எவ்ளோ சந்தோசமா இருக்கு, அப்பா-அம்மா சண்டையில்லாம, தாத்தாவோட தொந்தரவில்லாம..... இப்படியே எப்பவும்போல இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்....

நேத்துதான் பைவ்ஸ்டார் படம் பாத்தோம், ஹய்யோ.. அதுல இருக்குற மாதிரி பிரண்ஸ் எல்லாம் சேந்து ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...

இப்டி நெனைச்சுகிட்டு இருக்கைலயே நாலு வருசம் ஓடிப்போயிருச்சு.. அட வேலைக்கு முன்னால டிரைனிங்காமே, ஹை ப்ரெண்ட்ஸ் எல்லாமே சேந்து.. சரிஜாலியா இருக்கும்.

என்னடா இது ட்ரெயினிங் முடிச்சிட்டு ஒரே எடத்துல போடுவான்னு பாத்தா, என்னய மட்டும் தனியா கல்கத்தா போட்டுருக்கான், அட புது ஊருகூட பாக்கலாம் ஆனா என்னடா தனியா மாட்டிக்கிட்டோம்னு தான் இருக்கு... சரி அங்க போய் ப்ரெண்டு பிடிச்சுக்க வேண்டியதுதான்..

நல்லவேல, நல்ல கேங் அமைஞ்சிச்சு... ஒரே அரட்டை, கும்மாளமா இருக்கு, ஜாலியா போகுது...

என்னா ஆச்சு இவுங்களுக்கு, இப்டி கணக்கு பாக்குறாங்க.. சே !! அப்டி என்னத்த ஏமாத்திறப்போறோம்... ப்ரெண்ஸ்குள்ள கூடவா இப்டி 5 ரூபா எங்க போச்சுனு கணக்கு பாப்பாங்க...

எல்லாம் இந்த ஜோடி, ஜோடியா சேருராங்கல்ல அவுங்களால வந்தது.. எவ்ளோ ஜாலியா இருந்தோம் எல்லோரும். இப்போ என்னடானா, ஒவ்வொருத்தரும் தனிதனியா சுத்துறாங்க... சே !! என்ன ப்ரெண்ஸ் இவுங்க.. காலேஜ்ல யெல்லாம் எப்டி இருந்தோம்..

இனியும் எல்லாரும் சின்னப்பசங்க கெடயாது, நாம ப்ராக்டிகல் லைப்க்கு வந்தாச்சு...
ஒவ்வொருத்தரும் "தன்" எதிர்காலம்னு திட்டம் போடுற நெலமைக்கு வந்தாச்சு.. இனியும் எல்லாரையும் காலேஜ் ப்ரெண்ஸ் மாதிரி எதிர்பாக்குறது முட்டாள்தனம், நட்புக்கும், நிதர்சன வாழ்க்கைக்கும் இடைவெளி உண்டு, இல்லைனு சொல்றது நாம மட்டும் கண்ண மூடிக்குற மாதிரி.. இதுல யார் மீதும் தப்பு கெடயாது.. வாழ்க்கை போற வழி அப்படித்தான்...

ஹீம்.. ஒருவழியா ஆன்சைட் வந்தாச்சு, இனி தம்பி படிப்ப பாத்துக்கலாம்.. ஆனா ஏன் எல்லோரும் நார்த்தி, சவுத்தினு பிரிச்ச்து அடிச்சுகிறாங்க.. என்ன ப்ரெண்ஸ் இவுங்க...
அட ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆரம்பிக்குதா, சூப்பர்ல.. இவ்ளோ சீக்கிரமா நாளெல்லாம் ஓடுது... , சே !! சுபா கல்யாணத்துக்கு கூட அங்க இருக்க முடியல..

இந்த மெட்ராஸ் பசங்க செம ஜாலி பண்றாங்க, மொத பாச்சிலர் லைப் சொதந்திரம் இருக்கும்போது எல்லோரும் சேந்து இருக்காங்க, நல்லா ஊர சுத்தி என் ஜாய் பண்றாங்க, நாம் இங்க வந்துட்டோம்.. ஒருவேள நாம போறதுக்குள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆயிட்டா அப்பவும் இவ்ளோ ப்ரெண்ஸா இருப்பாங்களா.. இதப்பத்திதான் எனக்கும் கணேஷுக்கு நெறயநாள் இதப்பத்திதான் பேச்சு... பாப்போம் போகப்போக தெரியும்...

நட்புன்றது என்ன, அன்பை/சந்தோசத்தை பகிர்ந்துகிறது, அது கல்யாணத்துக்கப்புறம் பகிர்தலோட பெரிய பங்கு எங்க போகுது என்பது தான் பொஸ்சிவ்னஸ் பிரச்சனையாகுது.. முந்தி மாதிரி ப்ரெண்ஸ் கிட்ட ஒரு நாளோட முக்கால்வாசி நேரம் செலவழிக்க முடியாதுதான், ஆனால் கூட இருக்கும் அந்த சில நிமிடங்களாவது அந்த பழைய இன்டிமஸி இருந்தாலே போதுமே... அது அந்த அந்த நபர்களோட கையிலதானே இருக்கு...

ஏன்டா ஆன்சைட்ல இருந்து வர்ர மொதல்ல வீட்டுக்கு வரலியானு அம்மா கேட்டப்ப கூட... , என்னம்மா ரொம்ப நாள் கழிச்சு பசங்கள பாக்குறேன், ஒரு நாள்தானம்மா, இருந்துட்டு வர்றேனு சொல்லிட்டேன்.. அப்பா கூட ஒன்னும் சொல்லல..

என்னடா இது சில பசங்க கிட்ட என்னமோ வித்தியாசம் தெரியுது, முந்தி மாதிரி இல்ல.. எது கேட்டாலும் வேலைனு சொல்றானுங்க, எல்லாரையும் ஒரு எடத்துல கொண்டு சேக்குறது/பாக்குறதுனா பெரும்பாடா இருக்கு. மாம்பலத்துலயே ரெண்டு வீடு எடுத்து தங்கியிருகாங்கே ஆனா பாத்துகிட்டு 8 மாசம் ஆச்சாம், இன்னொருத்தன காலேஜுல பாத்ததாம்...

நட்புன்றதைவிட, பந்தங்களால் உருவாகும் அப்பா, அம்மா போன்ற சுயநலமில்லாத உறவுகள்தான் கடைசிவரை இருக்கும் போல..

காலேஜு முடிச்சு 3 வருசந்தான ஆகுது, அதுக்குள்ள 20 வருசம் முடிஞ்சு போன ரேஞ்சுக்கு பேசுறானுங்க, அப்போ 20 வருசம் கழிச்சு எப்படி இருப்பானுங்க... தெரியல.. ஒருவேல நாமலும் இன்னும் கொஞ்ச நாள்ல அப்படி ஆயிருவோமோ ?

முன்ன மாதிரி இல்ல, காரியரின் ஆரம்ப கட்டம்.. நெறய உழைக்கனும், அப்போ இப்படித்தான் ஆகும்போல.. ஆனாலும் 8 மாசமெல்லாம் ரொம்ப அதிகமில்லையா, அட எப்பயாவது ஒரு போன் கால் கூடவா கஷ்டமா இருக்கு...

ரொம்ப தயக்கத்துக்கப்புறம், நேத்து அப்பாகிட்ட அவர் ரிட்டயர்மன்ட்ல வரப்போற பணத்துல ஒரு நல்ல இடத்துல நிலம் வாங்கிப்போடுங்கப்பா பின்னாடி உதவியா இருக்கும்னு பேசிட்டுருந்தேன்.. அப்போ 6 மாசத்துக்கு முன்னாடி எங்கயோ கொஞ்சம் நிலம் வாங்கி பதிஞ்சாச்சுனு சொல்ல சொல்ல என்னவோ போலிருந்தது எனக்கு..

புது சட்டையெடுத்ததை கூட ஏதோ பெரிய விஷயம் போல பகிர்ந்துகிட்டிருந்த எனக்கு, இது ஒன்னோடது, அது அவனோடதுனு சின்ன வயசுல பழகிராத எனக்கு திடீரென ஒரு தீவைப்போல உணர்ந்ததை தவிர்க்க முடியல... , அட அப்போ தன் வாழ்க்கைனு வந்தப்புறம் பெத்தவுங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூட ஒரு இடைவெளி இருக்குனு தோண ஆரம்பிச்சிருக்கு....

ரொம்பநாளாச்சு..இங்க என் உயிர்தோழர்களையும்/தோழிகளையும் பாக்க காத்துகிட்டிருக்கேன்.. ரொம்ப வருஷங்களாச்சு அவுங்கள நேர்ல பாத்து, ஒவ்வொருவருக்கும் குடும்பம், குழந்தைகள்னு ஆகிடுச்சு... நாமதான் இன்னும் ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கோம்...

அட.. வந்துட்டாங்க.. பரவாயில்லை அரைமணிநேரம் கழிச்சு வந்தாலும்.. சிலராவது வந்துட்டாங்க.. என்ன அவனக்கானாம்?.. அட நெனக்குறோம் கால் பண்றான்!!!.. என்னாது குழந்தைக்கு ஒடம்பு சரியில்லயா.. பரவாயில்லடா .. நாம இன்னொரு நாள் தனியா பாத்துக்கலாம்.. என்னது சாரியா.. என்னடா புது வார்த்தையெல்லாம்..

எப்படி இருக்க.. எவ்ளோ நாளாச்சு.. என்னது இங்க அவரு சொந்தகாரங்க வீட்டுக்கு போனுமா.. ஹே நோப்ராப்ளம்.. நமக்குள்ள என்ன பார்மாலிட்டீஸ்.. அவுங்கதான் எதிர்பாப்பாங்க.. நீங்க போங்க நாம இன்னொருநாள் பாத்துக்கல்லாம்..

ஹேஹேஹே !!!! ஹாய்.. நாம மெயில் பண்ணியே ரொம்ப நாளாச்சுல.., ஹாங் நல்லா இருக்கேன், நீ எப்படி.. வேலைபோய்கிட்டு இருக்கு.. ஓ.. புறப்படுறியா.. சரி தென்.. பாப்போம்...

ஒவ்வொருத்தருக்கும் அவுங்க அவுங்க சூழ்நிலை, நம்ம கூட நேரம் செலவழிச்சாத்தான் நண்பர்களா என்ன... '

ஆனாலும், அந்த கெட்டுகெதர் ஹாலில் தனியே உட்கார்ந்திருந்த எனக்கு தனிமை ரொம்ப முன்னரே கைகுடுத்து மெல்ல மெல்ல பழகத்தொடங்கியிருந்தது போலொரு உணர்வு.. ஆனால் இன்றுதான் நான் அதை கவனிக்கத்தொடங்கியிருக்கேனோ ?!!!!

செய்ய நினைக்கும் தொழிலே தெய்வம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 12, 2006
ப்ரியாவின் Tag (சங்கிலித்தொடருக்கான) விருப்பத்தை தொடர்ந்து இந்த பதிவு.

எல்லோருக்கும் நாம் காணப்போகும் வேலையைப்பற்றி ஒரு கனவு இருந்திருக்கும், பள்ளிப்பருவத்திலே ஒரு fantasy (கற்பனை) , கல்லூரிபருவத்திலே ஒரு passion (பெரும் ஆசை), வேலை கிட்டாத வேளையிலே ஒரு தார்மீக கோபம், கிடைத்த வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு ஆதங்கம், குடும்பப்பொறுப்பில் மீள்கையில் ஒரு பெருமூச்சு என அந்த கனவு கலைந்திருக்கக்கூடும்/கலைந்துகொண்டிருக்கக்கூடும்...

வெகு சிலரே தன் சூழ்நிலைகளையும் மீறி.. தன் கனவுகளை புதைத்துவிடாமல், தோல்வி,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,உழைப்பு என அத்தனை உரங்களையும் அதில் பொறுமையாய் இட்டு முன்னேறிக்கொண்டிருப்பவர்கள்..

சரி எதற்கு இத்தனை கட்டுமானப்பணி [builtup தமிழாக்கம் ? :-) ]

ப்ரியாவின் இந்த சங்கிலித்தொடர்பதிவுக்காண தலைப்பே காரணம், வழக்கமான பிடித்த 7 என்ன என்ன என்ன.... என்றில்லாமல் .. இதோ கீழே..

"If.... if incase you HAVE TO switch fields once in every 5 years between your 30 to 50 yrs of age assuming that your monetary needs are taken care in upper-middle class standards, what (4-5 professions) you would wish to do (and say few words about it) ? "

சரி... இதோ என் தேர்வுகள்.. (இதில் குறிப்பிட்டிருக்கும் வரிசையிலேயே அமையவேண்டும்)

1) பைக்கர்:
இதனை ஒரு வேலையாக , ஏன் ஒரு பொருட்டாகவே கூட இங்கே யாருமே கருதுவதில்லை... ஒரு பைக் ஒன்றை சொந்தமாக வாங்கிக்கொண்டு, நேரம், காலம், திட்டமிடுதல் ஏதும் இன்றி, சாப்பாடு,தங்குமிடம் என்ற யோசனையின்றி கிடைப்பதே போதும் என்று, அங்கங்கே கிடைக்கும் வேலையை செய்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாடு முழுவதையும் (முக்கியமாய் மூலை முடுக்காக) சுற்ற வேண்டும். இது முதல் 5 வருடங்களில்.
காரணம்:

இந்த வயதில் இயல்பாக உள்ள வேகம், ஆர்வம் இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி இந்த பணியில் இருந்து வாழ்கை என்னவென்பதை கற்றுக்கொள்வதோடு, பல வகையான மக்கள், அவர்களின் வாழ்வு முறை என புரிந்து கொள்ள இயலும்.

2) விவசாயி:
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை " என சிறப்பிக்கப்பட்ட தொழில். கற்ற கல்வியின் மூலமும், திரட்டிய அனுபவ அறிவின் மூலமும், சிறந்த முறைகளை (உதா. இயற்கை உரங்கள் போன்று) பயன்படுத்தி, அதைப்பற்றி சக விவசாயிகளுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், தான் விளைத்தவறால் தான் நஷ்டப்பட்டு, அதன் மூலம் பிறர் இலாபப்படுவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும். இது அடுத்த 5 வருடங்களுக்கான தொழில்.

காரணம்:
கற்ற கல்வியையும், அனுபவத்தையும் .. இந்த வயதில் உள்ள ஆரோக்கியமான உடலுழைப்புடன் கலந்து சிறந்த பணி ஆற்ற வகை செய்யும் இந்த தொழில். மேலும் நாட்டின் முக்கிய பங்காற்றும் ஒரு பிரிவினர் படும் இன்னல்களை நேரடியாக களத்தில் சந்தித்து அதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொள்ள உதவும்.

3) தினசரி ஊடகத்தின் ஆசிரியர்:
மக்களிடம் தினசரி போய்ச்சேரும் ஒரு ஊடகத்தின் தலைமை ஆசிரியராக. அது பத்திரிக்கையானாலும் சரி, தொலைக்காட்ச்சியானாலும் சரி. ஊடகங்களின் நோக்கம் வெறும் விற்பனை/இலாபம் மட்டும் இல்லை. வெறும் செய்திகளை தொகுத்து தருவது/மறைப்பது மட்டுமின்றி, மக்களிடையே பல தலைப்புகளில் விழிப்புணர்ச்சி கொண்டுவருவதும், செய்திகளின் பின் உள்ள உணர்வுகளையும், அதில் மக்களின் பங்கு என்னவென்று அவர்களை உணர்த்துவதுமே. அதை திறம்பட செயலாக்க வேண்டும்.

காரணம்:
இந்த வயதில், வெறும் வேகம் குறைந்து, நிதர்சன வாழ்வில் பல அனுபவங்களை சந்தித்து, மனது சிறிது பக்குவப்பட்டிருக்கும், அது ஒரு செய்தியின் பல கோணங்களை காணும் சிந்தனையை கொடுக்கும். மேலும், முன்பு சந்தித்த அனுபவங்களை பலரிடம் சேர்க்க இயலும், சேர்த்து அவர்களுக்கு தீர்வு காண இயலும்.முதலில் இத்தகைய ஊடகத்தின் நிருபர் என்று யோசித்தேன், பின் நாம் என்னதான் உழைத்தாலும் அது இதன் தலைமைப்பொருப்பை சார்ந்தே அது வெளியாவது உள்ளது, மேலும் தலைமைப்பொறுப்பிலிருந்தால் இன்னும் பலரை ஊக்குவிக்கலாம் என்ற பேராசை :-)

4) ஆசிரியர் (மூன்றாம் வகுப்பு முதல் - ஐந்தாம் வகுப்பு வரை)
எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலமும், அதில் உள்ள குழந்தைகளின் குணநலன்களைப் பொருத்தே அமையும். இந்த குழந்தைகளின் குணநலன்கள் என்பது, இந்த குறிப்பிட்ட வயது குழந்தைகளிடையே எளிதாக நம்மால் பதிய வைக்க இயலும். ஆக நல்ல எதிர்காலத்துக்கான விதைகளை நாம் இங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இவர்களுக்கு வெறும் நீதிக்கதைகளை மனனம் செய்ய கற்பிக்காமல், அதில் உள்ள நீதியை விளக்கி, அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை பதிய வைக்கவேண்டும். படிப்பவற்றை தேர்வுக்கு மட்டுமின்றி, தினசரி அவர்கள் காணும் சக குழந்தைகளிடமிருந்தே அவர்கள் பயன்படுத்த துவங்க வேண்டும்.

காரணம்:
கற்ற அனுபவத்தை சிறந்த வழியில், எதிர்காலத்தில் சிலருக்காவது பயனுள்ள வகையில் செலவழிக்க இயலும்.

5) மாநில கல்வி இயக்குநகரத்தின் இயக்குநர்:
மனனம் செய்து கல்வி கற்கும் முறையை மேலும் சீராக்கி, பாடதிட்டத்தை எதிர்காலத்துக்கு (அவர்களின் வேலைவாய்புக்கு) மட்டுமின்றி, நல்ல மனிதர்களாகவும், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல், தெளிவான உலகறிவு பெற்றிட ஒரு வாய்ப்பாகவும், தன்னம்பிக்கை அளித்திடவும்... என சீர்படுத்தப்பட்ட பாடதிட்டத்தை, எந்த தலையீடு வந்தாலும் அசராமல் அதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

காரணம்:
இதை இறுதியாக தேர்ந்தெடுத்த காரணம், இத்தகைய முக்கியமான பணி புரிவதற்கு முன் பரந்துபட்ட உலகறிவும், நம்மக்களின் தற்கால வாழ்வு முறை பற்றியும், மாணவர்களின் தேவை என்ன என்றும் தெளிவான சிந்தனை வேண்டும், இதற்கு இதுவரை கடந்து வந்த பாதை உதவி புரியும் என்று நம்புவதால்.

இதை படிக்கும் சிலருக்கு நிஜ வாழ்வுக்கு ஒத்துவராத புனித பிம்பங்களின் Ideal சிந்தனை என்று தோன்றலாம்...

ஆனால் பெரும் செயல்களுக்கு பின்புலமாய் இருந்தவை Ideal கனவுகளே....

"நட்சத்திரங்களை குறிவை, கட்டாயம் மண்ணிலே வீழ மாட்டாய்"

பிகு:
யாருக்கேனும் இந்த சங்கிலிப்பதிவு சுவாரசியமாய் தோன்றினால் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பலருடைய கனவுகள் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாமென்ற ஆசைதான் :-)

மரணபயம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 06, 2006

ரோஜாக்களின் வாசனையை நுகர்ந்தால் என்ன தோன்றும் உங்களுக்கு ? உங்கள் முதல் காதல் ? (அ) காதலன்/லி (அ) மனைவி (அ) மென்மை (அ) இயற்கையின் அழகு என்று கவிதை எழுதப்புறப்படும் எண்ணமா ?

எனக்கு தோன்றுவதெல்லாம் மூச்சை முட்டும் மரணவாசனை. கட்டாயம் இது என்றோ வரப்போகும் மரணத்தைப்பற்றிய பயமல்ல... சிறுவயதிலிருந்தே ரோஜாப்பூவின் வாசனையை தனியே நுகர்ந்ததைவிட, சாவு வீட்டிலோ, ஊர்வலத்திலோ நுகர்ந்ததே எனக்கு அதிகமாயிருந்திருக்கின்றது. சாவைப்பற்றிய அறிமுகத்தோடு இலவசமாக ரோஜாப்பூவின் வாசனையும் பரிச்சயமானதுதான் காரணம்.

எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் ரோஜாப்பூவின் தனி வாசனை கூட என்னை மரணம் சம்பவித்த வீட்டின் நடுவே நிற்கும் உணர்வை கொண்டுவிட்டுவிடுகின்றது. அது காதல்-உயிர் என்று பினாத்திக்கொண்டு நண்பர்கள் கொண்டுவரும் ரோஜாவின் மணத்தின் கூட.

செய்தித்தாள்களில் மரணச்சம்பவங்கள் படிக்கும் போதோ, தொலைக்காட்சிகளில் காணும்போது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி,

இறப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ? அதுவும் தான் உறுதியாக சாகும் நிலையில் இருக்கின்றோம் என்று அறிந்தவர்களின் அந்த நொடி மன ஓட்டம் என்னவாக இருக்கும் ? மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்ன யோசித்து கொண்டு இறந்திருப்பார்கள் ? வலிக்குது என்றா ? யாரையும் விட்டு விட்டு போகின்றோம் என்றா ? எதையும் முடிக்காமல் போகின்றோமென்றா ? அய்யோ போகின்றோமே என்றா ? தான் போகப்போவது சொர்க்கமா இருக்கனும் என்றா ? கடவுளைப்பார்க்கப்போகின்றோம் என்ற கேள்வியுடனா ?

இத்தனையும் தெரிந்துவிட்டால் மரணத்தின் சுவாரசியமே தொலைந்துவிடுமே என்றும் சமாதானப்படுத்திக்கொள்வேன்.

இத்தனைக்குமான பதில் இவ்வளவு விரைவில் தெரியப்போகின்றது என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

ஒரு மாதமாகிவிட்டது எங்கும் புதிய இடங்களுக்கு பயணம் செய்து என்று, நண்பன் திருமணத்தோடு குற்றாலம் சென்றோம். முடித்துவிட்டு திரும்புகையில் பேரையூரில் ஒருநாள் தங்க முடிவு செய்தோம் (மறக்க முடியாத நினைவுகளை தரப்போகின்றது என்று அறியாமல்).
காலையில் எழுந்து நண்பனின் தோட்டத்தில் பம்ப்செட்டில் குளிக்க முடிவாகி போனபோது, அங்கிருந்த கிணற்றைப்பார்த்ததும் ஆசை தோன்றியது. என்னதான் தூசி,இலைதழை இருந்தாலும் கிணற்றில் குளிக்கும் சுகம் அறிய ஆசையானது. நீச்சல் ஒன்றும் கைவந்த கலையில்லை, அதனால் அந்த காட்டில் வேலை பார்ப்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆட்டம் ஆரம்பித்தது.

ஒவ்வொருவராய் ஆரம்பிக்க, என் முறையும் வந்தது. மனதுக்குள் மெல்லிய பயம் கலந்த உற்சாகம், முதல் முறையாய் கிணற்றுக்குளியல், குளிர்ந்த நீர் உடலெங்கும் சிலிர்ப்பைத்தூண்ட.. மெல்ல இறங்க ஆரம்பிதேன்.

குதித்து கிணற்றின் நடுவே செல்ல செல்ல, திடீரென மூழ்க ஆரம்பித்தேன் (தண்ணீரைப்பற்றி என்றுமே ஒரு பயம் இருந்திருக்கின்றது அதுதான் காரணமோ ?, பொதுவாகவே டவுன் பசங்களுக்கு இந்த பயம் இருப்பதை தவிர்க்க முடியாது போல)

மூழ்க ஆரம்பித்ததும் அலறவில்லை, ஏற்கனவே தெரிந்திருந்தபடி கையையும் காலையும் வைத்து தண்ணீரை கீழே தள்ள மேலே எழும்ப ஆரம்பித்தேன். அப்போது நான் பண்ணிய தப்பு, நீந்த துவங்காமல் ஒரு பிடியை எதிர்பார்த்து கையை நீட்ட ஆரம்பிக்க, மீண்டும் மூழ்க தொடங்கினேன். படியில் அமர்ந்திருந்த தோட்டக்காரரை, தண்ணியில் முன்னமே இறங்கி துணைக்கிருக்க சொன்னது நல்லதாய் போனது.

என்னை காப்பாற்ற அருகில் வந்தவரை எனக்கு சொல்லியிருந்த அறிவுரையெல்லாம் மீறி பிடித்து தொங்க, அவருக்கோ என் உச்சிமுடி தட்டுப்படாமலிருக்க, என்னுடன் சேர்ந்து முழ்க தொடங்கினார்.

அய்யோவென்று கத்தியபடி என்னை உதறிவிட்டு படிக்கு சென்று அங்கிருந்து அய்யோ, அய்யோ என்று கத்த தொடங்கினார்.

நானே மீண்டும் மேலே எழும்பி, அதே தவறை செய்யத்தொடங்கினேன். இந்த முறை வெளியே ஆதியின் (கல்லூரி நண்பன்) அய்யோவென்ற கூச்சலும் சேர்ந்தே கேட்கத்தொடங்கியது.

மூளையில் எந்த சிந்தனையும் இல்லை, பயமோ, பதட்டமோ இல்லை, மூழ்க தொடங்கினால் என்ன செய்யவேண்டுமென்று சொன்ன அறிவுரைகள் எதுவும் தோன்றவில்லை, கடவுள், சொர்க்கம், நரகம், நிறைவேறாத ஆசைகள்.. என என் கேள்விகளில் இருந்த எதுவுமே வரவில்லை சிந்தனைக்கு.

எப்படியோ கிணற்றுப்படியை பிடித்து வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்த அந்த நொடியும் ஒன்றுமே மனதில் ஓடவில்லை, பதற்றமும் இல்லை, இதயத்துடிப்பு எகிறியிருக்கவேண்டும் ஆனால் அதுவும் இல்லை. ஏனென்று புரியவில்லை.

பதில் கிடைத்துவிட்டது, ஆனால் புது கேள்வியும் தோன்றிவிட்டது, ஏன் இப்படி என்று :-)