யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

சிறந்த இந்திய திரைப்பட முத்தம் எது ?

Published by யாத்ரீகன் under on சனி, ஆகஸ்ட் 30, 2008
#1 கமலின் முத்தங்களை தவிர நம்ம தமிழ் திரைபடங்கள்ள வந்த முத்தங்கள்ள, சும்மா விருப்பமிலாம கண்ணை வெறுப்போட மூடுற பெண்ணை வண்புணருவதை போலில்லாமல், கவிதைத்துவமா முத்தமிடும் காட்சிகள் எதுவும் இருக்கா ?

#2 சரி கமலின் முத்தங்களிலேயே அப்படி கவிதைத்துவமா வந்த காட்சி எது ?

#3 வேறு இந்திய மொழிப்படங்கள்ள வந்த கவிதைத்துவமான முத்தங்கள் எதாவது ?

உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

பி.கு:
ஏடாகூடமா யோசிக்காதீங்க, Notebook படத்தில வருவது Best Kiss of a year-நு படிச்சேன் இன்னும் பார்க்கல, சரி நம்ம படங்கள்ல எதுனு கொஞ்சம் தேடி பார்த்தப்போ, கிட்டதிட்ட எல்லாமே பல்லு விளக்காத ஹீரோ தன்னை வன்புணருவதை போலத்தான் reaction குடுக்குறாங்க, மேலும் அதன் காட்சியமைப்பும் அத்தனை கவிதைத்துவமா இருக்குறதில்ல.. இப்படி ஏடாகூடமா நான் யோசிச்சதோட விளைவு தான்.. உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

இயற்கையோடு இயைந்த வாழ்வு: உலகத்திரைப்படங்கள் 2

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008
சிறு வயதில் படித்த உண்மைக்கதையொன்று நியாபகம் வருகின்றது, மிகத்துள்ளியமாய் நினைவில் இல்லையெனினும் அதன் சாராம்சம் இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

இயற்கையின் மீது பெரும் அன்பும், கவனமும் கொண்ட பெரியவர் ஒருவர், மரங்களை தானே நட்டு, பாதுகாத்து வளர்த்து வருகின்றார். தன் பராமரிப்பில் இருக்கும் மரங்களை தன் குழந்தைகளை போல பார்த்துவரும் இவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு உத்தரவு வருகின்றது, இவர் கண்காணிப்பில் இருக்கும், இவர் உருவாகிய காடு ஒன்றை வெட்டப்போவதாக. அதை வெட்ட வருபவர்களை எவ்வளவு தடுத்தும் கேட்காததால், அம்மரங்களை கட்டியணைத்துக்கொள்கிறார், வெட்டுபவர்களும் இவர் விலகிவிடுவார் என நினைத்து கோடாலியை ஒங்க, இறுதியில் அம்மரங்களுக்காகவே உயிர்விட்டு அதன் உயிர்களை காக்கின்றார்.

இயற்கையின் மேல் இத்தனை காதலுடன் இருப்பவர்களை, இவர்களால் தான் நமக்கு வாழ்வளித்துவரும் பல இயற்கை செல்வங்கள் இன்னும் அழியாமல் இருக்கின்றன என அறியாமல், எளிதாக பைத்தியக்காரர்கள் என பலர் ஒதுக்கித்தள்ளிவிட்டு போகின்றோம், இவர்களின் செயலில் நூற்றில் ஒரு பங்கை கூட நம் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாய் வைக்காமல் தவறிக்கொண்டிருக்கிறோம்.

இத்தகைய இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வேண்டுமென்று, விடுமுறைக்காலங்களில் ஊர்சுற்றும்போது நமக்கு தோன்றுவதோடு சரி. அவர்களுடைய வாழ்வுமுறையை இருப்பவர்களை மேலோட்டமாய் காணும்போது பெரும் பொறாமை ஏற்படுகின்றது, அதற்கு பின்னால் அதை காக்க அவர்கள் செய்யும் போராட்டமும் அதற்கான இழப்புகளும், வலிகளும் கற்பனைக்கெட்டாதவை .

அத்தகைய மனிதர்களுடைய துயரமும், அழகிய வாழ்வையும் அற்புதமாய் பதிந்திருக்கும் இரு படங்கள் தான் முறையே "Mountain Patrol: Kekelexi" மற்றும் "Story of the Weeping Camel". இவை இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக்கொன்டவை என்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை.


இதில் "Mountain Patrol: Keklexi" எதிர்பாராமல் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு documentary படம் போல இருக்குமென்ற நினைப்போடு தொடங்கியவனுக்கு, அட்டகாசமான கேமரா கோணங்கள், மனதை மயக்கும் திபெத்தின் மலைமுகடுகள், காடுகள், அற்புதமான-வேகமான திரைக்கதை, அங்காங்கே அதிர்ச்சியூட்டும் உண்மைச்சம்பவங்கள், முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகள் என மனதை கவர்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதன் முடிவு cinematic-ஆக இருந்துவிடுமோ என்று வருத்தப்படுக்கொண்டிருந்த வேளையில் .. அதை ஏன் சொல்ல வேண்டும், பாருங்களேன்.

ஒரு சாவிற்கான அதிர்ச்சியூட்டும் திபெத்திய மதச்சடங்குகளுடன் தொடகுகின்றது படம், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குழுவினருள் ஒருவனாய் நாமும் அவர்களுடன் பயணிக்கத்தொடங்குகின்றோம், ஓடுகின்றோம், மூச்சுவாங்க உயிர்பிழைக்கின்றோம்.

இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். Patrol செய்ய புறப்படும்போது அந்த குழுவினருடைய உணர்ச்சிகள், நூற்றுக்கணக்கான மான்கள் கொல்லப்பட்டு கிடக்கும் அந்த தருணம், அதைக்காணும் அவர்களின் உணர்வு, கைதிகளை மேற்கொண்டு செல்ல முடியாமலும் கொல்ல முடியாமலும் அவர்களை விட்டுச்செல்வதும், உணவின்றி, எரிபொருளின்றி குழுவில் சிலரை நடுவே வேறு வழியின்றி பனிபொழியாது என்ற நம்பிக்கையுடன் விட்டுச்செல்லும்போதும், சரியான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுக்கு கூட பணமின்றி, அவர்கள் மனசாட்சிக்கு விரோதமாய் செயல்படுவதைத்தவிர வேறு வழியின்றி சூழ்நிலை அமைவதும்.

கட்டாயம் பாருங்கள் !!!!


ஒரு அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து படம் வேண்டும் என்பவர்கள் மேலுள்ள படம் பார்க்கையில், இப்போதைக்கு ஒரு அழகிய கவிதைபோல, வித்தியாசமான, சுவாரசியமான படம் ஒன்று பார்க்கும் மனநிலைக்கொரு படம் வேண்டுமென்றால் நீங்கள் பார்க்க வேண்டியது, "Story of the Weeping Camel".

இதெல்லாம் அறிவியல்பூர்வமான உண்மையா ?, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராய்ந்து யோசிப்பதை விட்டு பார்க்கத்துவங்கினால் நிச்சயமாய் இரசிப்பீர்கள். நடக்கும் நிகழ்வுகளை மிக கவிதைத்துவமாய் விஷுவலாய் காமிப்பதும், அதை போர் அடிக்காமல் கொண்டுசெல்வதும்.. மிகவும் சந்தோசத்தை வரவழைக்கும் படம் இது.

நம் ஊர்பக்கம்,அனுபவம் மூலமும், instinct மூலமும் பெரியவர்கள் செய்யும் சில விஷயங்களை பார்த்திருப்போம், இதுபோலதொரு நிகழ்வுஐ நாம் பார்த்திராத ஒரு பிரதேசத்திளுள் காமிக்கும்போதுதான், இதுபோன்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் விருப்பம் மிகவும் அதிகரிக்கின்றது.


இறுதியில் அந்த முடிவை காண்பவர்கள் இசைப்பிரியர்களாய் இருந்தால் இன்னும் இரசிப்பார்கள் :-)

இசையென்னும் இன்பவெள்ளம்

Published by யாத்ரீகன் under , on சனி, ஆகஸ்ட் 23, 2008
இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவ்வளவு எளிதாய் ஒரு கட்டுக்குள் அடைக்க இயலாத வாழ்வின் சில விஷயங்களில் இசையும் ஒன்று.

தெய்வீகமானது என்று சொல்லும் பழம்பெரியவர்களுக்கும், வார்த்தை தெளிவாய் இரைச்சல் குறைவாய் இருக்கும் பெரியவர்களுக்கும், மனதை வருடுவதுபோல இருக்கவேண்டும் என்று சொல்லும் முதியவர்களும், நினைவை சுகமாய் மீட்டவேண்டும் எனச்சொல்லும் நடுத்தரவயதினருக்கும், நம் கவலைகளை மறக்கடித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களுக்கும்.. என அனைவருக்கும் இசையின் வடிவம் வெவ்வேறு ஆனால் அனைத்தும் இசையே.

இப்படிப்பட்ட பறந்து விரியும் இசையின் சாம்ராஜியத்தில், நம்மில் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளின் இசை என்றாலே இரைச்சல் என்று குறுகிய வட்டத்தினுள் அடைத்துக்கொள்வோம். பொதுவாய் பத்திரிகைகளும், அந்த இசையை பெரிதாய் கேட்டிராதவர் முதற்கொண்டு, ஆங்கில இசை என்றதும்.. "யப்பா ஒரே சப்தம்.." என்று முந்திக்கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதில் எத்தனை ஆர்வம்.

ஆரம்பத்தில் கேட்டிருந்த சில புகழ் பெற்ற பாடல்களில் (சாமானியன் வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி இறைச்சல்களிலாமல்) ஆர்வம் வந்தாலும், அதில் வரும் ஒரு வரியும் புரியாததால் அதை தொடர்ந்து தேடிக்கேட்கும் ஆர்வம் என்றுமே இருந்ததில்லை. என்னதான் இசை அத்தனை வசிகரமாயிருந்தாலும் , அதில் கலந்திருக்கும் வரிகளை உதடுகள் உச்சரிக்கும்போதுதான், அந்த இசையினுள் முழுதாய் நுழைந்தெலும் மகிழ்ச்சி பொங்குவதை உணரமுடிகின்றது.

இசையை கேட்கும்போதும், அதை காதினுள் நுழைய விடுவதைவிட, அறையெங்கும் பரவவிட்டு அதில் மிதக்கும் அனுபவமே தனி. முடிந்தவரை முன்னதை தவிர்த்துவிட்டு, அறையெங்கும் இரைச்சலோ, இசையோ அதை முழுவதுமாய் பரவவிட்டு இரசித்துக்கொண்டிருப்பேன்.







சென்ற ஞாயிறு அறை நண்பரின் தேர்வில், விருப்பத்தில் அருகே நடந்த "Linkin Park"-இன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கிளம்பினோம். பீட்டர் பாட்டின்மேல் ஆர்வமிலாத நானும், அதன் மேல் கடும் கிரேஸ் கொண்ட இருவரும் என.. எப்படி 5 மணி நேரத்தை போக்குவது என்ற குழப்பத்துடனே சென்றேன்.


சென்றதும் முதலில் தெரிந்தது மகிழ்ந்தது , அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அதிகபட்சம் 8 desi மக்களை மட்டும் கண்டிருப்போம் (அதில் 3 பேர் நாங்கள் ;-) , அடுத்து அங்கு வந்திருக்கும் கூட்டத்தின் சராசரி வயது :-D , அவர்களின் வித்தியாச பேஷன் உடைகளும், அலங்காரங்களும் என சாரசரியான high excited அமெரிக்க இளைஞர் கூட்டம். கொஞ்சம் அதிர்ந்து போனது, Linkin Park வரப்போவது 9 மணிக்குத்தான் அதுவரை சிறு சிறு band-கள் என்பது.


மேடையில் கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய 67 ஸ்பீக்கர்களை கண்டதும் அதில் இன்னும் இசை வராமலே அதிர்ந்து போனேன். ஒன்னும் புரியாததுடன் காது செவிடாகபோகுது என்றுதான் நினைத்தேன்.


சின்ன சின்ன Band-கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டத்தினுள் உற்சாகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் வரிபுரியா அந்த இசையில் ஏனோ ஆர்வமே வரவில்லை. அவ்வப்போது முழு பாடலிலும், சிறு சிறு பகுதிகள் அட்டகாசமாய் இருந்தது. எப்போடா முடியுமென lemonade-களும், french fries-களும் படுவேகமாய் உள்ளே போய்க்கொண்டிருந்தது.


சரியாய் 9 மணிக்கு தொடங்கியது "Linkin Park"-இன் வரவு, அட்டகாசமான பில்டப்களுடன், தீப்பொறி பறக்க, நூத்துக்கணக்கான விளக்குகளின் ஒளிவிளையாட்டுடன் தொடங்கியது. அப்படியென்ன band இது என நினைத்திருக்கையில், கடல் மணலில் பெயரை எழுதிஇருக்கையில் எதிர்பாராமல் வரும் அலையின் ஈரம் பெயரை அழித்து மணலில் வேகமாய் இறங்கும் பாருங்கள், அதுபோலத்தான் அதிரடியான இசை உள்ளத்தில் உற்சாகத்தையும், பரவசத்தையும் பரப்பத்தொடங்கியது.


வீட்டில் இருக்கும் இரண்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்ககளில் வரும் அட்டகாச இசைக்கு பரவசப்படும் நான், அந்த 67 ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டிருபேன் என விவரிக்க முடியவில்லை. அதிரடியான எலெக்ட்ரிக் கிதாரும், டிரம்சும் வெட்டியாய் அதிரவில்லை.. அட்டகாசமான இசை... 2:30 மணி நேரம், எப்படி போனதே என்று தெரியவில்லை.. அத்தனை நேரமும் எங்களில் எல்லோருக்கும் உற்சாகம் கூடிக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை.


இறுதியில் அவர்களின் "In the End" பாடலுடன் முடித்தது சரியான சாய்ஸ். ஆனால் உற்சாகத்தில் கரைபுரண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதில் விருப்பமில்லை, கூட்டத்தோடு குரல் கொடுக்கத்துவங்கினோம்.. 15 நிமிடங்கள் போட்ட சப்தத்திற்கும், கூச்சலுக்கும் பலன்.. "What have i done" என்ற அந்த சூழலுக்கு பொருத்தமான பாடலுடன் அட்டகாசமாய் மீண்டும் ஒரு இறுதி பாடலுக்கு வந்தார்கள், வென்றார்கள்.


இப்போது youtube-இல் அவர்களின் பாடல்களாக (பாடல் வரிகளுடன் தேடி) முணுமுணுக்க துவங்கியிருக்கிறேன்.. இதுவும் இசைதான், வித்தியாசமானதொரு பரவசம்..






I'll face myself
To cross out what I've become
Erase myself
And let go of what I've done
What I've done
Forgiving what I've done!!!

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 19, 2008
Life is one long insane trip. Some people just have better directions.

Oh, I dunno. I mean I'd like to believe I'm not but I just... I've just never seen any proof so I... I just don't debate it anymore, you know? It's like I could spend my whole life debating it over and over again, weighing the pros and cons and in the end I still wouldn't have any proof so I just... I just don't debate it anymore. It's absurd

ஒலிம்பிக்ஸ் - தங்கம் - தோல்வி

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008
அதீத பொறுப்புணர்வுடன் கூடிய நாட்டுப்பற்றை ஊறுகாயாய் ஊட்டும் விளம்பரங்களின்போதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின்போதும், திரைப்படங்களில் நம் தேசியக்கொடி எறிய அல்லது கிழே விழ அதை கதாநாயகன் தடுக்கும்போது இசைக்கப்படும் பின்னணி இசையின்போதும் நமக்கு அடிக்கடி சிலிர்த்துக்கொள்ளும் அந்த சாமானியனின் தேசபக்தியை, அவ்வப்போது கிடைக்கும் வெண்கலங்களும், எப்போதாவது கிடைக்கும் தங்கங்களும் உரசிவிட்டு குத்தீட்டுக்கொள்ளச்செய்யும்..

அப்படி ஒரு நிகழ்வாகத்தான் அபினவின் வெற்றியை வணிகமாக்கும் மீடியாக்களின் செயலும், அதை வாக்குகளாக்கும் அரசியல்வாதிகளின் செயலும், அதை பணமாக்கும் அதிகாரிகளின் செயலும் தெரிகின்றது. நம் தேசபக்தியில் குளிர்காயத்தான் இவர்கள் அனைவரும் பார்க்கின்றார்களே தவிர, அதில் ஒரு உணர்வை தேடித்தேடி களைத்துபோய்விட்டேன்..

இப்படி பதக்கங்கள் வெல்லும்போது தான் சாமானியர்களுக்கும் இப்படி ஒரு விளையாட்டு இருப்பது நியாபகம் வரும், அதை அங்கீகரிக்காத அரசாங்க இயந்திரமும், அந்த இயந்திரத்தின் பல்சக்கரங்களும் நியாபகம் வரும்.

நேர்மையாகச்சொல்லுங்கள், நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் எதிர்காலம் ஒரு விளையாட்டு வீரனாக இருக்கச்செய்ய முயலுவோம்? (அது அந்த குழந்தையின் ஆர்வமாக இருக்கும்பட்சத்தில்), தினமும் படிக்கும் பாடத்தை அன்றன்றே படித்து மனனம் செய்துவிடு என்று சொல்வதை விட்டு, விளையாட்டில் வாங்கி வந்திருக்கும் ஒரு consolation சான்றிதழில் அந்த குழந்தையின் ஆர்வத்தை கண்டு எத்தனை பேர் சரியான தீனி போட்டிருப்போம் ?

நம் அரசாங்கம் மற்றும் மீடியா மட்டுமல்ல, சமூகம் இதை பார்க்கும் விதமும் குறைபட்டுக்கொள்ளவேண்டியதாகவே இருக்கின்றது. இதை நாம் நேர்மையாக ஒப்புக்கொள்வதில் தான் இப்பிரச்சனைக்கான தீர்வு இருக்கின்றது.

பொதுவாக எந்த ஒரு சமூகத்திலும் வெற்றியை கொண்டாடுவதில் சிறிதும் குறையிருப்பதில்லை, ஆனால் அந்த வெற்றிக்கான அடிப்படையாகும் ஆரம்பகால தோல்விகளை ஒரேடியாய் ஒதுக்கும் குணம் நம் சமூகத்துக்கு சிறிது அதிகம் உண்டென்று நினைக்கின்றேன். இதற்கு மக்களின் மனநிலை, அவர்கள் வாழ்வை அணுகும்விதமே முக்கிய காரணம்.

இங்கு, மதிப்பெண்களில் முதலில் வரும் மாணவி, வித்தியாசமான முயற்சியாயினும் வெற்றி பெரும் இயக்குனர்கள், சிறு அல்லது மிக வித்தியாசமான தொழிலாயினும் கோடியில் வெற்றி பெரும் தொழிலதிபர்கள், பதக்கங்கள் வெல்லும் வீரர்கள் .. என வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகமாக இருக்கின்றதோ என்று ஒரு சந்தேகம். இதில் சமூகத்தின் அங்கீகாரம் என்பது அவரவர்களின் குடும்பத்திலிருந்து துவங்குகிறது..

வெற்றி காண்பவர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரத்தின் சிறு பங்கு கூட தோல்வியுற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை, தீண்டத்தகாதவர்களைப்போல் நடத்தப்படுவதும், இவையாவும் நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கப்போவதில்லை.

முதல் தோல்வியிலேயே ஊக்கமில்லாமல் கருகிவிடும் மொட்டுக்கள் நம் தோட்டங்களில் எத்தனையோ?. வெற்றி பெற்றவர்களை அதீத உற்சாகப்படுத்த தயங்காதவர்கள், தோல்வி கண்டவர்களை ஊக்குவிக்க தயக்கம்கொள்வதேனோ?

அடுத்த காரணம் தேர்வில் நடக்கும் அரசியல், அதை பலரும் துவைத்து, பிழிந்து அலசி காயவைத்துவிட்டார்கள், அங்கு அப்படி நடந்துகொள்பவர்களில் கணிசமான பங்கு அதிகாரிகள் அல்லவா? அவர்களும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் தானே? அவர்களை போன்ற மாற்ற அதிகாரிகள் மற்ற விஷயங்களில் செய்யும் அரசியல் இவர்களை பாதிப்பதே இல்லையா? பெரிய வட்ட மேஜையில் ஒருவர் கைமாற்றி கைமாற்றி வரும் பனிக்கட்டியை போல இறுதியில் வந்துசேரும்போது வெறும் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி என்பது போலத்தான் இவர்கள் நிதி ஒதுக்கீட்டில் செய்யும் அரசியல்.

மிகமுக்கியமான பலரும் கவனிக்கத்தவருகின்ற அல்லது வசதியாய் மறந்துவிடும் காரணம், விளையாட்டை சரியாக மார்க்கெட்டிங் பண்ணுவது. இன்னும் கூட டிடியில் அலுப்பூட்டும் வர்ணனையுடன் வரும் ஒலிம்பிக்ஸ்-ஐ எந்த சிறுவர்களும் இளைஞர்களும் பார்க்கப்போவதில்லை. ஒலிம்பிக்ஸ்-க்கே இந்த கதியென்றால், லோக்கலில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை நினைத்துப்பாருங்கள்? பின் Sponser இல்லையென்றும், யாரும் முன்வராததால் விளையாட்டை முன்னேற்றமுடிவதில்லை என்றும் குறைகூட மட்டும் அனைவரும் முன்வந்துவிடுவர். Sponser செய்பவர்கள் யாரும் சேவை செய்யப்பிறந்தவர்கள் இல்லை, அவர்களுக்கு அது ஒரு வியாபார மூலதனம்.

என் நண்பன் ஒருவன் கல்லூரியில் மிகச்சிறந்த discus thrower ஆனால் அவனும் சரி, அவனின் குடும்பத்தினரும் சரி தெளிவாய் இருந்தனர், இது வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை என.இதில் நாம் குற்றம் சாட்டப்போவது யாரை? சத்தியமாய் அவர்களை அல்ல, இப்படிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்காத விளையாட்டு அமைப்பின்மீது தான், ஒரு விளையாட்டை ஒரு profession-ஆக நம்மை தேர்ந்துடுக்க விடாத அளவுக்கு இருப்பது அதன் financial returns. அது மிகப்பெரும் வெற்றி அடைபவர்களையே சேருகின்றது.

என் தம்பி ஒருவன் athletics-லும், discus throw-விலும் பள்ளியில் மிகச்சிறப்பாய் விளையாடிக்கொண்டிருந்தவன், இப்பொழுது விளையாடிக்கொண்டே படிப்பை கோட்டை விட்டவன் என்ற பெயர்தான் அவனுக்கு வீட்டில் பலரிடம் மிச்சம் (இத்தனைக்கும் அவன் பெற்றது ஒரு descent enough percentage).

யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், நான் ஓவியனாக இருக்கிறேன், செஸ் விளையாடுவது என் தொழில் என்று, எம்.எப். ஹுசைன்-ஐயும், விஸ்வநாதன் ஆனந்தையும் கேலி செய்ய துணியாதவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று.. சிறு வயதிலிருந்தே, விளையாட்டு ஒரு hobby என்று மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நம்மில் பெரும்பாலானவர்கள்.

சில வருடங்களுக்கு முன் படித்த குற்றாலீஸ்வரனின் பேட்டி ஒன்று நியாபகம் வந்து தொலைக்கின்றது, நிதர்சனத்தின் மறுஉருவம் என்று சொல்லுமளவுக்கு அமைந்திருந்தது அந்த பேட்டி.. மீடியாவின் வெளிச்சத்திலிருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவருக்கு ?
இத்தனையும் தாண்டி 110 கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கம் மட்டுமா ? (ஒலிம்பிக்கில் என்ன இத்தனை பேருக்கு ஒரு தங்கம் என்று திட்டமா இருக்குது) , சிறிய நாடுகள் குவிக்கவில்லையா ? என சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு விடைகாண முயற்சிப்போம்.


பி.கு:
அபினவின் இந்த பதிவை பார்த்ததும் ஏற்கனவே இருந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என தோன்றியதின் விளைவு.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under on திங்கள், ஆகஸ்ட் 04, 2008
ஞாயிறு காலை, சுடச்சுட, மிளகு காரம் தொண்டைஎங்கும் இறங்க, பொங்கல் சாப்பிட்டுவிட்டு வெளியே வர, அற்புதமான மேகமூட்டத்துடனான வெயில் வெளியே.. refreshing-ah என்ன பண்ணலாமென யோசிக்கையில் ரிதம் படம் கையில் தட்டுப்பட்டது.. Netflix-இல் OldBoy மூலம் போனவாரம் போட்டுக்கொண்ட சூடு நியாபகம் வர.. வேறு யோசனையின்றி போட்டுவிட்டேன்..

வஸந்தின் படங்கள் எல்லாம் ஒரு மாதிரி feel good படங்கள், மெல்லிய நீரோடை மாதிரி, ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிவிடும்.. ஆனால் என்ன பேசி பேசி கதாபத்திரங்களுக்கு மூச்சு வாங்குகிறதோ இல்லையோ பார்க்கும் நமக்கு களைப்பாகிவிடுகின்றது.. அப்போ அப்போ அலுக்கும் streotype காட்சிகளும் இதோடு சேர்ந்து கொள்ள.. (அத்தனையும் தெரிந்தும் தியேட்டரில் பார்ப்பதற்கு நான் முயற்சி எடுத்து சூடுபட்டுக்கொண்ட படம் சத்தம் போடாதே மட்டும் தான்)...

ரஹ்மானின் இசை, அழகான ஜோ, அமைதியான அர்ஜுன், Nostalgic தனியே தன்னந்தனியே பாடலும் மயக்கும் ஷங்கர் மஹாதேவனின் குரலும்.. நிஜமாவே refreshing தான்.. ஒரு கட்டத்தில் இன்னும் எவ்வளவு நேரம் படம் இருக்குன்னு பார்க்கையில் இன்னும் ஒரு மணிநேரமா என அலுத்துத்தான் போனது.. ஆனால் மோசமில்லை its so refreshing.. ஒரே யோசனையில் சொல்வேன் இசைதான் காரணம் :-)