யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தலைகீழ் இரவு

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, நவம்பர் 29, 2015


       'தல்வார்' திரைப்படத்தை மாலை பார்க்கத்துவங்கியபோது இருந்த சாதாரண மனநிலை வேறு, ஒரு இடைவேளைக்குப்பிறகு அந்த நிகழ்வை நினைத்துப்பார்க்கும் அசாதாரண மனநிலை வேறு. இது இரண்டுக்கும் இடையில் நடந்த கூத்து, மகளின் திருவிளையாடல், எங்களின் கவனக்குறைவு.

      நாள் முழுதும் அலைந்து திரிந்து, ஆசையாசையாய் வாங்கிய உடையில், வீட்டையே அவள் பெரும் சிரிப்பில் நிறைத்துக்கொண்டிருந்த வேளை. சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் திடீரென புரையேறி இருமினாள். விளையாட்டு ஆர்வத்தில் அவ்வப்போது நடப்பதென்பதால் முதுகை தட்டி, தடவிக்கொண்டிருக்க, மெல்ல மூச்சுவிடத்திணறுவது போலத்தோன்றியது.

    முதுகை இன்னும் கொஞ்சம் வேகமாக தட்டி, தடவிக்கொடுத்தும் பலனில்லை, அழுகத்துவங்கிவிட்டாள். அழுவதும் சாதரணமாயில்லாமல், மூச்சுவிடத்திணறித்திணறி அழுகை. குழந்தை ஒன்றின் தொண்டையில் திராட்சைப்பழம் சிக்கிய செய்தி நினைவுக்கு வந்துபோக, கலங்கிப்போனேன்.

  அழுகையும், மூச்சுத்திணறலோடுயிருக்கும் இவளை சமாளிப்பதா, பயந்து அழுதுகொண்டிருக்கும் அம்மாவை சமாளிப்பதா. தோசை அடைத்துக்கொண்டிருக்குமென வாயினுள் விரலைவிட்டு எடுக்க முயற்சி செய்தால் மேலும் அழுகிறாள், வாயை இறுக மூடிக்கொள்கிறாள், பயந்துபோய் அம்மாவிடம் தவ்வுகிறாள். அதையும் மீறி செய்தால் சளி மட்டும் கோழை கோழையாய் வருகிறது. தலைகீழாக மடியில்போட்டு முதுகை வேகமாக தட்டியும் பார்த்தாயிற்று, திணறல் நிற்பதாக தெரியவில்லை.வீட்டில் எல்லோரும் பதறிப்போய் கைபிசைந்து சுற்றிக்கொள்ள, பதட்டம் அதிகரித்துதான் போனது.

 மீண்டும் விரல்விட்டு எடுக்க, ரோஸ் நிறத்தில் ஏதோ கண்ணில்தென்பட்ட நொடி காணாமல் போனது. உணவுப்பொருளில்லை, வேறேதோதான் என உறுதியானதும் பதட்டத்தோடு எல்லோர் மேலும் கோபமும் சேர்ந்துகொண்டது. அடுத்தடுத்த முயற்சியிலும் ஏதும் சிக்கவில்லை, பால் கொடுத்துப்பார்க்கலாமென முயற்சித்தால் அதற்கும் அவள் ஒத்துழைப்பதாயில்லை.

ஒரு கட்டத்திற்குமேல், தவறாய் ஏதேனும் செய்யப்போய் பெரிய பிரச்சனையாய் ஆவதற்குள், நேரத்தை அறைகுறை அறிவில் வீணாக்கவேண்டாமென மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடினோம்.

போகும் வழியிலேயே திணறல் குறைந்தும், உறுதி செய்துகொள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம். மருத்துவர் பரிசோதித்து வாயில் ஏதுமில்லை, விழுங்கியிருந்தால் பிரச்சனையில்லை, வெளியில் வந்துவிடும் என்று உறுதியளித்தும், சித்தப்பாவிற்கு திருப்தியேயில்லை. கிளம்பும்வரை நல்லா பார்த்துட்டீங்களா என மறுபடியும், மறுபடியும் கேட்டுக்கொண்டிருந்தான்.

சளி கோழையை எடுத்துவிட்டதா, இல்லை அதை அவள் விழங்கிவிட்டதாவென தெரியவில்லை,  அழுகையும் திணறலும் முற்றிலும் நின்று தங்கமீன்களை விரல்கொண்டு துரத்திக்கொண்டிருந்தாள்.

அத்தனையும் 7-8 நிமிடங்களே நடந்திருக்கும், ஆனால் ஆயுளுக்குமான பயத்தை விதைத்துவிட்டாள். அத்தனைக்கும் எல்லோர் கண்பார்வையிலும், கவனத்திலுந்தான் விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு நொடியில் அந்த இரவு தலைகீழாய் மாறிப்போனது.

ஆருசி தல்வார், பரபரப்பான தினத்தந்தி வகையிலான செய்தியாகத்தான் இந்த நிகழ்வு எனக்கு அறிமுகம். பலவிதமான ஆருடங்கள், திட்டமிட்ட கவனக்குவிப்பு, புலனாய்வில் அநியாய கவனக்குறைவு, மக்களின்/ஊடகங்களின் கிசுகிசு பசிக்கு என பல பரிணாமங்கள். அத்தனையும் மீறி என்னை பெரிதும் உறுத்தாத ஒன்று, தாய்-தந்தையே எப்படி மகளைக்கொல்ல முடியுமென்பது. உறுத்தாதற்கு காரணம், தாய்-தந்தை-தாத்தா-அண்ணன் போன்ற உறவுகள் செய்யும் அ'கெளரவ'க்கொலைகள் பற்றி நிறைய செய்திகள் கேள்விப்பட்டிருந்ததாலிருக்கலாம்.

ஆனால் நேற்று நிகழ்விற்கு பிறகு, குழந்தை உட்பட எல்லோரும் ஆசுவாசமாய் தூங்கச்சென்றுவிட்ட பிறகும், ஏனோ ஒரு பதட்டம். தல்வார் தம்பதியினர் அதை செய்திருக்கக்கூடுமா, செய்திருந்தால் அந்த நொடியின் நினைவே ஆயுளுக்குமான மிகப்பெரும் தண்டனையாய்த்தான் இருந்திருக்கும். அவ்வப்போது மகளின் நெஞ்சில் காதுவைத்து சுவாசம் இயல்புக்கு மாறி இருக்கிறதாவென பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

இவள் விபத்தாய் மூச்சுத்திணறுவதையே தாங்க முடியவில்லையே, தன் ஆயுளுக்கு முன்னேயே, கண்முன்னேயே குழந்தைகளை பரிகொடுப்பவர்களின் நிலையை அன்றுதான் உணர்ந்ததுபோலிருந்தது. சிறுவயதில் தவறிப்போன மகளை தோளில்போட்டுக்கொண்டு நள்ளிரவில் அலைந்த அப்பாவின் நினைவு மனதை என்னமோ செய்யத்துவங்கிவிட்டது.