யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

குஷ்பு

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 10, 2005
குஷ்பு
இப்போ எல்லாம் இந்த தலைப்பைப்பத்தி எழுதாவிட்டால் வலைப்பதிவெழுத்தாளானாக மதிக்கமாட்டார்களாமே.. சரி எதற்கு வம்பு.. நானும் எனக்கு தெரிந்த குஷ்புவைபத்தி எழுதிவிடுகின்றேன்..


வாசனை என்றவுடன் பளிச்சென மூக்கின் முன் நிற்பது "மண்வாசனை"-தான்... அதைவிட சடாலென சந்தோஷத்தை அள்ளித்தருவது எதுவுமே இல்லை.. அந்த முதல் துளி விழுந்ததுமே பரபரவென எப்படித்தான் பரவுதோ.. சின்ன குழந்தையோ, வயதானவரோ.. வித்தியாசமின்றி உற்ச்சாகத்தை அள்ளிப்பரப்புவது மண்வாசனையால் மட்டுமே முடியும்..

மண்வாசனை என்றவுடன் நினைவுக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று.., பள்ளியில் ஒருமுறை ஆங்கில வகுப்பில் நானும் என் நண்பனும் கடைசி வரிசையில் எதோ பேசிக்கொண்டிருப்பதை கண்ட நிர்மலா ஆசிரியர், கூப்பிட்டு என்னவென்று கேட்க்க, மண்வாசனைக்கு இணையான ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க நாங்கள் நடத்திய விவாதத்திற்கு அவருக்கும் விடை தெரியவில்லை. :-) சில வார்த்தைகள் மொழிபெயர்க்க முடியாதென உணர்ந்தது அன்றுதான்..

மண்வாசனைக்குப்போட்டியாக அடுத்து நிற்பது, அம்மா கடுகு தாளிக்கும் போது எழும் வாசனை.. என்னதான் சுவையான சாப்பாடாயிருந்தாலும், இந்த சாதரண கடுகு தாளிக்கும் வாசனையை மிஞ்ச முடியாது.. கல்கத்தாவிலிருக்கும் போதும் சரி, இங்கே வந்து சமைக்கும் போது கடுகை தாளிக்கும் போது சட்டென ஆயிரம் மைல்கள் தாண்டி வீட்டின் சமையலறையில் அம்மா முதுகின் பின்புறம் நின்று என்ன சமையல் என்று எட்டிப்பார்ப்பது போன்று தோன்றும்... :-(

ஹீம்.. அடுத்து.. புதிதாய் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் உள்ளிருந்து வரும் அந்த ஈர சிமெண்ட் வாசனை... எவ்வளவு அவசராமாயிருந்தாலும்... செல்லும் வழியில் இந்த வாசனைக்காக சிறிது நொடி அங்கே கண்மூடி நிற்கத்தவறியதில்லை..

வீடு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது, வீட்டின் வாசனைதான்... ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வாசனை உண்டு... அது நறுமணமா, நாற்றமா என்று இனம் பிரிக்கமுடியாத இருவகையானது... எத்தனை நாட்கள் கழித்து வீடு திரும்பினாலும், வீட்டின் வாசனை நுகர்ந்தபின் வரும் அந்த பாதுகாப்பான உணர்வே தனி.. அது இங்கே அடிக்கும் எத்தனை விலையுயர்ந்த அறை வாசனை திரவியத்திலும் கிடைக்காது...

அடுத்து, பழைய புத்தக வாசனை..., எழுதிய பழைய நாட்குறிப்பு, பள்ளி நோட்டு புத்தகங்கள், அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன்... என சொல்லிக்கொண்டே போகலாம்... எல்லோரும் புதிய புத்தக வாசனையை சிலாகித்து பேசும் போது, அட இவர்களெல்லாம் பழைய புத்தக வாசனையுடன் எழும் நினைவலைகளில் திளைத்ததில்லை என்று பரிதாபப்படத்தோன்றும்...

பத்தாவது பள்ளித்தேர்வு விடுமுறையில், அந்த பழைய பைண்ட் பண்ணிய பொன்னியின் செல்வனின் வாசனைக்கே அதை திருப்பி திருப்பி படித்துக்கொண்டிருந்தது வாசனைக்கு.. மன்னிக்கவும் நினைவுக்கு வருது...

அப்புறம்... பெட்ரோல் வாசனை, நல்லா ஆசை தீரத்தீர விளையாடிவிட்டு வரும்போது வரும் வியர்வை வாசனை, அப்பாவுடைய பீரோ வாசனை, டெட்டால் வாசனை.. புதிதாய் அடித்த பெயிண்ட் வாசனை.. இப்படி நிறைய உண்டு...

இப்போ இங்கே வந்து எந்த வாசனையும் புதிதாய் பரிச்சியமானதாய் நியாபகம் இல்லை...

அப்படியே எல்லோரும் ஒரு நொடி கண்மூடி உங்களுக்கு என்ன வாசனை வருதுனு சொல்லுங்க பார்ப்போம்

பி.கு:
யாருக்காவது, "மண்வாசனை"-க்கு இணையான ஆங்கில வாசனை.. ச்.சீ.. ஆங்கில வார்த்தை தெரிந்தால் சொல்லுங்களேன்...!!!

அப்பாட.. நாமலும் ஒருவழியா குஷ்புவைப்பத்தி எழுதியாச்சு.. , ஆமாம் ஹிந்தில வாசனைக்கு குஷ்புனுதான் சொல்லுவாங்கலாமே...

ஆஹா.. இப்பொ.. யாரோ தார் கொண்டு வர்ர மாதிரி தெரியுது.. அண்ணா.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்லைங்கன்னா......