யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2

Published by யாத்ரீகன் under , , on வியாழன், ஜூலை 24, 2008
வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.

ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5 பெண்கள், முன்னே சொன்ன அடையாளங்களுடன். யாரும் யாரையும் தேவையின்றி தொந்தரவு செய்வதில்லை, ரோட்டின் நடுவே வற்றிப்போக வாய்ப்பிலாத இரவு நேர ஜீவநதி, நாட்டில் ஆண்களாய் உருவகம் செய்யத்தக்க ஒரே நதியென்று நினைக்கிறேன். சாரை சாரையாய் ஆண்கள், குமாஸ்தாக்கள், கூலி வேலை செய்து களைத்தவர்கள், ரிக்க்ஷா இழுத்து வியர்வையில் குளித்தவர்கள் என ஊரின் வறுமைக்கோட்டு ஆண்களிலிருந்து மத்தியதர ஆண்கள் வரை ஒரே இரவில் குவிந்து விட்டார்களோ என்று நினைக்குமளவிற்கு.

எவரும் நிற்பதாய் தெரியவில்லை, நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து கடப்பதா இவர்களின் நோக்கம் என்று சந்தேகிக்கும் வேளையிலே அவர்களின் வேலையும் நடந்துகொண்டே இருக்கின்றது.

இருபுறமும் நிற்பவர்களை மெல்ல பார்த்த எங்களுக்கு இங்கிருந்து தான் அதிர்ச்சி தொடங்கியது. இதுவரை பாலியல் தொழில் என்று கிளு கிளுப்பான சாதரண பார்வையிலிருந்த எங்களுக்கு,அங்கிருந்த 4/5 பெண்களில் குறைந்தபட்சம் இருவராவது சிறுமிகள் என்பதே முதலில் ஜீரணிக்க முடியவில்லை.

சிறுமிகள் என்ற வார்த்தை சாதரண பயன்பாடை போலேவே தோன்றுகிறது, அதன் முழுமையான அதிர்வை கொடுக்க தவறுகின்றது. 15 வயதை கூட தொடாத குழந்தைகள் போலத்தான் இருந்தார்கள், அவர்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கவே எங்கள் மேல் எங்களுக்கு அருவருக்கத்துவங்கியது. சாதரணமாய் பார்த்தால் பள்ளி ஆண்டுவிழாவில் மேக்கப் போட்டு மேடையேரத்தயாராய் இருக்கும் குழந்தைகள் போல இருக்கும் அவர்கள், அடுத்த சில வினாடிகளில் அவர்கள் கடக்கப்போகும் நிகழ்வைக்குறித்த பிரக்ங்கை சிறிதும் இன்றி, அருகில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, தங்களை பார்பவர்களிடம் சைகைகள் காட்டிக்கொண்டு... சத்தியமாய் மிகக்கொடுமையான தருணங்கள் அவை. மீண்டும் கற்பனை செய்து பார்க்கவே வலிக்கின்றது.

இவர்களுடன் நிற்கும் இளவயது பெண்கள், கண்களில் எந்த ஒரு உணர்ச்சியுமின்றி, அங்கு நிற்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதுபோல நின்றிருக்கிறார்கள். இப்பெண்களில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளில் இருந்து சிறு குழந்தைகளை கவனித்துக்கொண்டே நிற்கின்றனர்.

அடுத்து பார்த்தது வயதானவர்கள், வாழ்வின் கடைசி 15 வருடங்களில் இருப்பவர்களை போன்று இருப்பவர்கள், அவர்களும் இந்த வரிசையில் நிற்பதை என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பரிதாபமா இல்லை இவர்களையுமா வதைக்க வேண்டுமா என்று கோபமா தெரியவில்லை.

இவர்களுடன் பல திருநங்கைகளும் உண்டு.

தெரு செல்லச்செல்ல குறுகிக்கொண்டே போனது, கூட்டம் இருபுறமும் நின்று கொண்டிருந்தவர்களை இலவசமாய் உரசிச்சென்று கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த குறுகுறுப்போ போய், அருவருப்பு தொடங்கியது. அந்த வயதும், அதுவரை தெரிந்திருந்த கற்பனை உலகமும், எங்களை எதையோ எதிர்பார்த்து அழைத்து வந்திருந்தது.. ஆனால் அங்கே நடந்ததோ, உண்மையின் கசப்பும், குரூரமும் ஒன்று சேரத்தாக்க கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போய்க்கொண்டிருந்தோம். அங்கு நடந்துகொண்டிருக்கும் எதையும் எங்களால் கனவல்ல நிஜம் என்று ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் குறுகிய தெருக்களின் இருட்டிலும் எங்கள் கண்களின் மிரட்சியையும் பயத்தையும் எளிதாய் இனங்கண்டு கொண்ட நபர்கள் தரகர்களைப்போல எங்களை இழுத்துக்கொண்டு அப்பெண்களருகே நிறுத்தி விலை பேசத்துவங்கி விட்டனர். உதறிக்கொண்டு விலகும் எங்களை பார்த்ததற்கு காசு என மிரட்டவும் துவங்கிவிட்டனர்.

இன்னும் உள்ளே செல்லச்செல்ல, பார்க்கும் விஷயங்களின் வீரியம் அதிகமாகிப்போனது, அதற்கு மேல் எதையும் கவனிக்கும் மனநிலையில் எவரும் இல்லை. உடனே திரும்பிப்போகத்துவங்கினோம்.

வீட்டிற்கு வந்து சேரும்வரை மௌனத்தை மட்டுமே பரிமாறிக்கொண்டோம், அதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட தயங்கினோம். ஒருவழியாய் வீட்டினில் நுழைந்தும் இரவு முழுவதும் அத்தனை குளிரிலும் மனப்புழுக்கம் தாங்காமலா, இல்லை குற்றஉணர்ச்சியா, அருருவருப்பா என புரியவில்லை, மயான அமைதியாய் நிசப்தத்துடன் அன்றிரவு மட்டுமல்ல அடுத்த 4/5 நாட்கள் கழிந்தன.

இந்த நிகழ்வுகளை அன்றைய நாட்குறிப்பில் குறிக்கையில் பல எண்ணங்கள். இங்கே எனக்கு வந்திருப்பதென்ன உணர்ச்சி ?

அழகான பெண்களை எதிர்பார்த்துச்சென்று அவலட்ச்சணமாணவர்களை பார்த்த அருவெறுப்பா ? இல்லை அந்த குழந்தைகளை பார்த்து, இவர்களை பயன்படுத்தும் இடத்துக்கு சென்று விட்டோமே என்று வருத்தமா/குற்றஉணர்ச்சியா ?, இல்லை திருநங்கைகளையும் வயதானவர்களையும் கூட பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களும் உண்டா என்ற அதிர்ச்சியா ? ஒன்றும் உடனடியாய் புரியவில்லை.

உண்மையை வெட்க்கமில்லாமல் ஒப்புக்கொள்வதானால், அருவருப்பில்தான் தொடங்கியது சிந்தனை. தவறுதான், இந்த சிந்தனையில் இருப்பவனுக்கும், அங்கு தெருக்களில் தன் வேட்க்கையை தனித்துவிட திரிபவனுக்கும் பெரிய வித்தியாசமில்லைதான், ஆனால் அப்படித்தான் தொடங்கியது. பின் அந்த குழந்தைகளை நினைக்கையில், எப்படி இவர்களால் முடிகின்றது, குழந்தைகள் என்ற எண்ணம் வரவே வராதா, இங்கிருந்து திரும்பி வீட்டுக்குத்திரும்புகையில் குற்ற உணர்ச்சியின் ஒரு துளிகூட இருக்காதா என தோன்றியது. இதில் வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர் மட்டும் என்றில்லை என்று Park Street-இல் இரவு 10 மணிக்கு மேல் சென்றால் தெரிந்தது.

அந்த நேரத்தில்,ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் "மன்மத எந்திரம்" என்ற கவிதைத்தொகுப்பு படிக்க வாய்ப்பமைந்தது. மனதில் தோன்றியிருந்த முடிவில்லாக்கேள்விகளுக்கு புதியதாய் ஒரு கோணம் அமைந்தது. தோன்றிய கேள்விகள் அனைத்தையும் இப்பொழுது அந்த பாலியல் பெண்களின் பார்வையில் யோசிக்க இன்னும் கொடுமையை இருந்தது. புத்தகத்தின் தலைப்பே அதன் கதை சொல்லியது.

அங்கிருக்கும் எவர்க்கும் அதில் ஈடுபாடு இருக்கப்போவதில்லை, ஆனால் அதையும் ஒரு தொழிலாக கருதிக்கொண்டு வாழும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இவர்கள் இல்லையேல் மற்ற பெண்கள் தைரியமாய் நடமாட முடியாது என்று சொல்பவர்களுக்கு, இவர்களை பலிகடாக்களாக்க யாருக்கு யார் அதிகாரம் தந்தது.

10 ரூபாயிலிருந்து இங்கு உங்களுக்கு தேவையானது கிடைக்குமென சொல்லும் தரகர்களின் உறுதியான குரலில் தெரிந்தது என்ன ? எப்படியாயினும் எனக்குத்தேவை சிறிது நேரத்துக்கு ஒரு உடல் என்று வெறி கொண்டு அலையும் ஆண்களின் மேல் உள்ள நம்பிக்கையா ?

எங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அங்கு நடமாடும் காவல்துறை. இவர்களை மீட்டெடுப்பது என்பது நடக்கக்கூடிய விஷயமில்லை, அதைத்தவிர உருப்படியாய் இவர்களுக்கு பாலியல் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவரத்துடிக்கும் சமூக அமைப்புகள். என அத்தனை பேரும் இவர்களைச்சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன், இத்தகைய இடமொன்று தங்களிடையே உண்டென்பதை தங்கள் கொல்கத்தா வாழ்வின் மற்றுமொரு அங்கமாக எடுத்துக்கொண்டு அருவருக்காமல்/தயங்காமல், தனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாததைபோல நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பெங்காலி நண்பர்கள்தான் சராசரியான ஒரு நடுத்தரவர்க்க பெங்காலி.

இதற்குப்பின் சோவாபஜாரை கடக்கும்பொழுதெல்லாம் எங்களையுமறியாமல் ஒரு குற்ற உணர்வில் எங்கள் மனம் கணக்கத்துவங்கியது மட்டுமின்றி இத்தகைய விஷயங்களில் எங்களின் பார்வை மாறியது.

பி.கு:
2 வருடங்களுக்கு பிறகு ஒரு விடுமுறையில் துர்கா பூஜை காண சென்றிருந்தபோது, துர்க்கா சிலை வடிக்கும் சிற்பிகள் முதல் சிலையை இப்பெண்களின் காலடி மண்கொண்டு செய்வது தெய்வீகம் என்ற நம்பிக்கை இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்று கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துர்கா பூஜையின் 3 முக்கிய நாட்களில் கொல்கத்தா நகரெங்கும் விழாக்கால பக்தி மயமாக, அன்றும் சோனாகாச்சியில் கூட்டத்துக்கு குறைவில்லை, பலத்த போலிஸ் காவலும் அங்கிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதை கண்டதும் என்ன மதம், என்ன நம்பிக்கை, என்ன சமூகம் என்று கோபங்கள் அதிகமாகிப்போனது.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 23, 2008
கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

>>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது. <<<

கப்பியின் இந்த பதிவில் வரும் மேற்கூறிய வாசகங்களில் உள்ள நிதர்சனம் நம் முகத்திலறையும். இதில் சமூகம் என பொதுப்படையாய் கூறியிருந்தாலும் அதிலொரு பங்கு நமக்கும் தொடர்பு உண்டு என்பது கசக்கும் உண்மை. எங்கோ நடக்கும் துயருக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேள்வி எழுப்பினால், பின் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கேதிறாய் உங்களுக்காக குரல் கொடுக்ககூட யாரும் இருக்கப்போவதில்லை.

When the Nazis came for the communists, I said nothing; I was, of course, no communist.
When they locked up the Social Democrats, I said nothing; I was, of course, no Social Democrat.
When they came for the trade unionists, I said nothing; I was, of course, no trade unionist.
When they came for me, there was no one left who could protest.

கப்பியின் இந்த பதிவில் Born into Brothels என்ற ஆவணப்படத்தை குறிப்பிட்டிருந்ததை படித்ததும், இதற்கு முன் தேடி கிடைத்திராத DVD தற்போது NetFlix-இன் உதவியுடன் பார்த்து முடித்ததும், மனக்குரங்கு சட சடவென கொல்கத்தாவின் நினைவுகளுக்கு தவ்வத்தொடங்கியது.

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

வேலை துவங்கி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற இடங்களாக போகத்துவங்கியதும், எப்போது எப்போது என நேரம் கிடைத்தபோதெல்லாம் பர பரத்துக்கொண்டிருந்தோம். யாவருக்கும் அங்கே செயலில் ஈடுபடுவதில் மனமில்லை என்பதோடு தைரியமுமில்லை என்று எங்களுக்குள் தெரிந்திருந்தாலும், இங்கிருக்கும்போதே எப்படி இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும் என்று ஏதோ ஒரு குறுகுறுப்பு. என்னதான் "மஹாநதி, குணா.." என்று படங்களில் பார்த்திருந்தாலும், அப்படி என்னதான் மச்சான் பண்றாங்கன்னு பார்த்திரலாம்டானு காத்துக்கொண்டிருந்தோம்.

எங்களுடன் 6 தோழியரும் இருந்த நேரம் என்பதனால் அவர்களை கழட்டி விட்டு விட்டு சென்று வர சரியான சந்தர்ப்பம் வாய்க்க காத்துக்கொண்டிருந்தோம். சோனாகாச்சி என்பது கொல்கத்தாவின் புகழ்(?) பெற்ற இடமாயினும் அது ஒன்றும் மேப்பில் உள்ள ஒரு இடமல்ல, சகவயது பெங்காலி நண்பர்களிடம் அரட்டியடிக்கும்போதும், "சோனாகாச்சி"-யின் சரியான இடமேது என்பதில் எங்களின் தேடல் துவங்கியது. கேட்ட பெங்காலி நண்பர்களும் அதிர்ச்சியோ அருவருப்போ எதுவும் தராமல், தவறாமல் சரியான விடை தெரியாமல் நாக்கை பிதுக்கிகொண்டிருந்தனர் அல்லது ஆளுக்கு ஒரு இட எல்லையை சொல்லிக்கொண்டிருந்தனர் அதுவும் உறுதியாகச்சொல்லாமல்.

ஒவ்வொரு முறையும், நிரம்பி வழியும் மேக்கப்புடன் ஒரு பெண்ணை மெட்ரோ இரயில் நிலையத்தின் இடுக்கில் பார்ப்பதும், இந்த இடமாய் இருக்குமோ என்று ஏகப்பட்ட யூகங்கள் வேறு. ஒரு வழியாய் "சோனாகாச்சி" என்பது சோவாபஜார் (Shova Bazar) மெட்ரோ நிலையத்தினருகே தொடங்கி எம்.ஜி ரோடு (Mahatma Gandhi Road) மெட்ரோ வரையிலான நிழற்ப்பகுதியே என உறுதிசெய்தோம்.

அதன் பின்னர் இவ்விரு இடங்களை கடந்து செல்லும்போதேலாம் கண்கள் அலைபாயும், 10 பேரும் தோழியருடன் அந்த இடங்களை இரவில் கடக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு பயம் உரசிவிட்டுப்போகும்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து 10 பேரும் கிளம்புவதற்கு பதிலாக நாங்கள் நால்வர் மட்டும் தங்கிவிட்டு பின்னர் தனியே புறப்பட்டோம். இரவு 10 மணிக்குள் அந்த பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுங்கள், பயத்தை கண்களில் தவறியும் காட்டாதீர்கள், கைப்பிடித்து இழுப்பவரை உதறுவதில் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் என பல அறிவுரைகள் வேறு.

சோவாபசாரில் இறங்கியதும், இடதா வலதா எங்குபோவது, தெரியாத ஊராயினும் வெட்க்கம்விட்டு கேட்க்க முடியாத இடம். ஒருவழியாய் ரோட்டில் ஜால்மூரி (பொறி ) விற்பவரை கேட்டு (அவர் எங்களை மேலும் கீழும் பார்த்து வழி சொன்னது வேறு கதை), நடக்க ஆரம்பித்தோம். எவனாவது ஒருவன் சஞ்சலமாவது போல் தெரிந்தாலும் மீதி மூவர் அவனை இழுத்துக்கொண்டு வெளியேறுவது என்று ஒரு ஒப்பந்தம் வேறு எங்களுக்குள்.

நடக்க ஆரம்பித்து பல அடிகள் கடந்திருந்தாலும், எதற்கான ஒரு அறிகுறியும் இன்றி, வழக்கமான பரபரப்புடன், அதிக பொதுமக்கள் (சாதரண பெண்கள்,குழந்தைகள் உட்பட) நடமாட்டத்துடன், அங்காங்கே பயனில் இருக்கும் டிராம் தடங்களுடன் இருந்த கொல்கத்தாவின் மற்றுமொரு குறுகிய பழந்தெருக்கள் போலவே தோன்றியது. இரு பொட்டலமாவது வாங்கி இருக்கலாம் அந்த ஜால்மூரி விற்பவரிடம் சரியான வழியாவது காண்பித்திருப்பான் என்று புலம்பிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம்.

போகப்போக தெரு மேலும் குறுகத்துவங்கியது, கடைகளில் வெள்ளை வெளிச்சம் போய் மஞ்சள் நிற தெருவிளக்குகள் மட்டுமே அதிகமானது. வாழ்வின் அதிர்ச்சியான கட்டங்களை நோக்கித்தான் செல்கின்றோம் எனத்தெரியாமல், வழக்கமான அபத்தமான காமேன்ட்டுகளுடன் சிரித்துக்கொண்டே தான் சென்றோம் ஒரு வீட்டின் வாசலில், அதீத மேக்கப்புடன் நிற்கும் அந்த நான்கு பெண்களை பார்க்கும்வரை.

நான்கு பெண்கள், அலைபாயும் கண்கள் எங்கும் மை, பளபளக்கும் உடை, உதட்டில் வழியும் சிவப்பு, கைகளின் மாநிறத்திற்கு பொருந்தாத பிங்க் கன்னங்கள் என அடையாளங்களை கண்டதும் நுழைந்துவிட்டோம் என்று தோன்றியது. அடுத்த வெகுதூரத்துக்கு நடந்தும், சம்பந்தமிலாமல் ஒரு நல்ல ஏரியாவில் இந்த வீடா என்று தோன்றியது. இன்னும் குறுக்கு சந்துகளுக்குள் புகுந்து செல்லச்செல்ல அங்கிருந்தது வெளியில் நாங்கள் கண்டதற்கு சம்பந்தமில்லா உலகம் கண்டு ஒரு நொடி அரண்டு போயிருந்தோம்.

வரிசையாக வீடுகள், வாசல்களில் கும்பல் கும்பலாக பெண்கள். ஒவ்வொரு வீட்டின் முன் ஆண்கள் ஒரு சில நொடிகள் நிற்பது போலத்தோன்றும், அதற்குள் எல்லாம் பேசி முடித்து, புறாக்கூண்டு போலிருக்கும் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்குள் அழைத்துச்சென்றனர். நடைபாதையில் சில போலிஸ் கான்ஸ்டபிள்கள் வாய்நிறைய ஜால்மூரியும் கைநிறைய கலைக் ஷனுமாய் ரவுண்ட்ஸ் வேறு. அவர்கள் கண்முன்னே நடக்கும் செயலுக்கும் தங்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத மாதிரி அவர்கள் சென்ற விதம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சிதான். என்னதான் படங்களில் போலீஸ்காரர்களின் கண்முன்னே தவறுகள் நடக்கும்போது சாதரணமாய் போவது போல பார்த்திருந்தாலும் , கேட்டிருந்தாலும்.. நேரில் பார்த்தபோது அதிர்வதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு வீட்டின் எதிரே ரோட்டுக்கடையில் Chowmien வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம், பின்னே மானமுள்ளவர்களுக்கு வெறுமனே வெறித்துப்பார்ப்பது கூச்சமாயிருக்காதா :-( .. ஒவ்வொரு வீட்டிலும் வருவதும் போவதும், சில நிமிடங்களில் வாசல் காலியாவதும் வாடிக்கையாய் நடந்துகொண்டிருந்தது.

வாங்கிய Chowmien தீர்ந்ததும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இந்த முறை பக்கத்தில் சென்று பார்த்துவிடுவதாய் திட்டம், ஒரு இடத்தில் கூட்டமாய் சிறு சந்து ஒன்று, உள்ளே செல்ல முடிவிடுத்து செல்லத்தொடங்கினோம். விளையாட்டாய் தொடங்கிய விஷயங்களுள் இத்தனை கூரூரம், வேதனை என வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் ஆளானவர்கள் இவர்கள் என உணரவைத்த தருணம் அது.

வெள்ளம்

Published by யாத்ரீகன் under , on புதன், ஜூலை 02, 2008
வெள்ளம் வந்ததற்கான அறிகுறிகள் முற்றிலும் மறைந்துபோய்விட்டன, சிலவாரங்களுக்கு முன் கடும் வெள்ளம் வந்த ஊரா எனும் எண்ணும் வண்ணம் வெயில் கொளுத்துகின்றது. மூடப்பட்டிருந்த சாலைகள், அலுவலகங்கள் எனமுழுமையாய் திறந்து செயல் படத்துவங்கி விட்டன. வெயிலின் புழுக்கம்அதிகமாகி, ஒரே இரவில் Tornado warning என்பதும் thunderstom warning என்பதும் மிகவும் நெருக்கமாய்விட்டது.

100 வருடங்கள் கழித்து இப்படி ஒரு கடும் பாதிப்பு என்பதாலோ என்னவோ, உடனடி உதவிக்கு வந்தவரிலிருந்து தீயணைப்புத்துறையினர் வரை திகைத்துப்போய் விட்டனர்... எங்கிருந்து தொடங்குவது , யாரை எப்படி கவனிப்பது, யாருக்கு முதலிடம் குடுப்பது என அத்தனை குழப்பம்.. ஆனால் மிகவிரைவாய் மீண்டு, ஒரு ஒழுங்கு முறையோடு மீட்பு பணிகளை நடத்தியவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கால்வாயின் படுகையினோரம் இருந்ததால் அலுவலகம் உச்சகட்டபாதிப்புக்குள்ளானது. இருந்த Test Engines , Prototypes, Servers, Wirings என அத்தனையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விட, இன்றுவரை 150 பேர் இராப்பகலாக உழைத்தும் அலுவலகம் முழுமையாய் செயல்படத்துவங்கிய பாடில்லை. வெகுசில இடங்களில் மட்டும் மின்சாரம், காற்றும் வெளியில் இருந்து generator மூலமாக பம்ப் செய்யப்பட்டு, குடிதண்ணீரும் இலவசமாய் பாட்டில்-களில் விநியோகிக்கப்பட்டு இன்று முதல் இங்கு மீண்டும் வேலை தொடங்கினோம்.

வெள்ளத்தின் சூழல் அறியாமல் Volleyball விளையாண்டு முடிக்கையில் எங்களை சுற்றி கால்வாயில் வழிந்த உபரி நீர், சூழ்ந்திருந்த நீரில் விளையாண்டு வீட்டுக்கு திரும்பிவிட்டோம். வரும் வழியில் ஆங்கிலம் தெரியுமா, உதவிக்கு வர முடியுமா என்று அழைத்தவரிடம் சென்றால், எங்கோ ஒரு முதியோர் இல்லத்தை காலி செய்து வீட்டினருகே இருக்கும் பள்ளியில் தஞ்சம் புகுந்துகொண்டிருந்தனர். அதுவரை வெள்ளத்தின் விபரீதம் புரியாமல் தான் விளையாண்டுகொண்டிருந்தோம்.

எத்தனை முதியோர்கள், சும்மா இல்லை குறைந்தது 85-95 வரை இருந்திருப்பார்கள். தொட்டாலே வலிக்குமோ என்பது போல மெல்லிய தோல். இருவரை கவனமாய் இறக்கி பள்ளியில் விட்டபின் நம்ம வீடு என்னாச்சு பார்ப்போம் என்று புறப்பட்டாச்சு.

நள்ளிரவில் மின்சாரமும் முழுமையாய் தடைபட்டு போனது (பாதுகாப்புக்காரணங்களுக்காக), வீட்டைக்காலி செய்ய அறிவிப்பு வந்ததும்தான் மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் வீட்டில் இல்லாதது உரைத்தது :-) , இருந்த கைபேசி வெளிச்சத்தில் பாஸ்போர்ட், சில துணிகள் தூக்கிக்கொண்டு வெளியேற ஆரம்பித்தோம். அடுத்த நாள் விடியும் வரை இப்படியே திரிவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காரை கிடைத்த மேட்டில் ஏற்றிவிட்டு கடைசி ஆசாமி புறப்படுகையில் Apartment Complex-எ ஒரே ரணகளம்தான்.

அந்த முதியோர்களை ஏற்றும்போது இதே இடத்துக்குத்தான் நாமும் வருவோம்னும் கொஞ்சமும் எதிர்பார்க்கல :-) , மடக்கு படுக்கை, போர்வை, சிறிது தின்பண்டம்னு சட சட்னு விநியோகம் ஒரு பக்கம் ஆரம்பிச்சாச்சு. சரி இந்த நிலைமைல நம்ம ஊர் மக்களும் இந்த ஊர் மக்களும் என்னதான் பண்றாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சேன்.. ஹ்ம்ம்..

கொஞ்ச நேரத்திலேயே படார்னு பயங்கர சப்தம், பூட்டியிருக்கும் கதவை ஒடச்சிட்டு தண்ணிர் உள்ளே வருது.. ஏதோ ஆங்கில படம் பார்க்குற உணர்வு, 15 நிமிஷம் இடுப்பளவு தண்ணீர் இந்த பள்ளியினுள். அந்த இடத்துலதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லா விநியோகமும் நடந்ததுனு நெனச்சுபார்த்தா, சரி ஏதோ பெருசா நடக்கபோகுதுனு தான் தோனுச்சு.. கீழ power lines எல்லாம் short circuit ஆகிகிட்டு இருக்கு, ஒரு பக்கம் படகுகள், life jacket-நு குவியுது.. குழந்தைகள் வச்சிருந்தவுங்க எல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம bachelor பசங்க கோஷ்டி வழக்கம் போல மச்சான் அங்க பாருடா அந்த வயலட் கலர்னு இந்த ரணகளத்துலயும் ஒரு குதுகலமாத்தான் இருந்தாங்க :-) .. இத்தனை குழப்பத்துல , ஒரு அதிகாரியும் ஒரு அறிவிப்பும் வெளியிடுற மாதிரி தெரியல, வெளிய கொண்டுபோரதுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்குற மாதிரியும் தெரியல ..

நல்ல வேளை, தாமதமா ஆனாலும் மக்களை Panic அடையவிடாம அடுத்த பள்ளிக்கு எல்லோரையும் மாற்றி, அடுத்தநாள் காலை, மதியம் உணவுன்னு கொடுத்து நல்ல விதமாவே முடிஞ்சது.

அடுத்த ரெண்டு நாளைக்கு வீட்ல வர்ற தண்ணியில குளிக்க கூட கூடாதுன்னு கடும் அரசாங்க உத்தரவு, மின்சாரம் இல்லை, மின்சார அடுப்புனால எதுவும் சமைக்க முடியல, refridgerator-உம் வேளை செய்யாததால எல்லா கூத்தும் முடியும்போது இருந்த எல்ல பொருட்களையும் வெளில தான் தூக்கி போட வேண்டி வந்தது. ஊர்ல இருந்த கடைகள் எல்லாத்திலையும் தண்ணீர் பாட்டில் காலி, ஊருக்கு உள்ள வர்ற I-65/US-31 ஹைவேக்களும் மூடியாச்சு. வீட்ல இருந்த கேன்ஐ உலுக்கி உலுக்கி கடைசி துளி வரை பொறுப்பா பயன்படுத்துன நாட்கள் அவை :-)

மொத்தத்தில ரொம்ப வித்தியாசமான அனுபவம், நம்மூர்ல வெல்லம் மட்டுமே பார்த்தவனுக்கு இங்க வந்து வெள்ளம் பார்த்ததுல சிறுபுள்ளத்தனமான திருப்தி :-) , வீட்ல இருந்தே வேளை பாக்குறேன்னு NetFlix-ல வரிசையா படமா பார்த்து தள்ளின சந்தோசம் :-)

வித்தியாசமான அனுபவம்னு போக பல விஷயங்களை யோசிச்சு பார்க்க வைத்தது, அதையெல்லாம் பதிவு பண்ண, மனதில் தோன்றும் எண்ணங்களை அதே வேகத்தில் Blogger-இல் பதிவு செய்ய ஒரு சாதனம்தான் வேண்டும்.
(இதை பதிவு பண்றதுக்குள்ள அடுத்த வெள்ளமே வந்திருக்கும் போல :-)