யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வெறுமை

Published by யாத்ரீகன் under , on திங்கள், மே 27, 2013


                 நான்கு பத்து நாட்களுக்கு முன் திறந்துவைத்த இந்த Compose window -வும் வெறுமையாகவே காலத்தை கடத்திக்கொண்டிருந்திருக்கின்றது. உதற உதற ஒட்டிக்கொள்ளும் கடல் மணலைப்போல, என்னவென்று சொல்லவியலாத வெறுமை மனதில் ஒட்டிக்கொண்டுள்ளது. பார்க்க நினைத்த படங்களை துவங்கிய சில நிமிடங்களிலேயே மூடிவிட்டேன், படித்துக்கொண்டிருந்த 'நெடுங்குறுதி'-யும் வாலற்ற பட்டத்தைப்போல, துன்பங்களிடையையே உழலும் மாந்தர்களைப்பற்றியே சுற்றிக்கொண்டிருந்தது, புது வீட்டிற்கான வேலையிலும் அத்தனை ஆர்வமில்லை.. இப்படி எல்லா திசையிலும், பல பெயரிடப்பட்ட எதோவென்று மனதை அழைக்கழித்துக்கொண்டேயிருந்தது.

               புகைப்படங்களோ, சமையலோ, பயணங்களோ, பாடல்களோ, அரசியலோ, திரைப்படங்களோ, வாசிப்போ ...  வேலைக்காகவோ, வாழ்வுக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ எல்லோரும் தனக்கு பிடித்ததான ஏதோ ஒன்றை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வப்போது இவைகளில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என கடந்து செல்லும்போது ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும். எந்த இலக்கை நோக்கி போகிறோம் என்ற அறியாமை மேலும் மேலும் மனதை அழுத்திக்கொண்டேயிருந்தது.

              தவறவிட்ட, உறுதியாய் தேர்வு செய்யாத, நிலையாய் இருந்திடாத..என கடந்து சென்ற அத்தனை வாழ்வின் வாய்ப்புகளும் நினைவில் மறுபடியும் சுழன்று எரிச்சலை கூட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை, சுயபச்சாதாப குழிக்குள் மட்டும் இறங்கவேயில்லை.

            சுற்றி இருந்தவர்களிடம் எதையும் வெளிப்படுத்திக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை, இதை புரிந்து கொள்வாளா என்ற ஐயமும் சேர்ந்துகொள்ள, அவளிடமும் இதை காட்டிக்கொள்ளவில்லை.

            இந்நேரம் பார்த்தா உடல் வலியும் சேர்ந்துகொள்ளவேண்டும் ? கழுத்தையும், தோள்பட்டையையும் கழற்றி, overhauling செய்ய கொடுத்துவிடலாமவென எண்ணுமளவுக்கு வலி. அழைக்கழித்துக்கொண்டிருந்த மனதை 'வலியின் மீதே' ஒருமுகப்படுத்திக்கொடுத்தது என்று சொல்லுமளவுக்கு வலி.        

           போதும் என்றபோதுதானே நிறைந்து வழியும். இந்த குழப்பங்களுக்கிடையே, சுற்றியிருப்பவர்களுக்கு தைரியமும், வாழ்வின் ஒரு மிகவும் மோசமான கட்டத்தை கடந்து வரவேண்டி  ஒரு கை தரவேண்டிய நிலையில் நான் நின்றது என்னவிதமான design-ஓ.

           ஒருவிதமான தனிமையை நாடத்துவங்கியிருந்தேன். மின்னஞ்சல், புத்தகம், சமூக வலைத்தளம், படங்கள், நண்பர்கள் என எல்லாவற்றையும் விட்டு விலகியிருந்தேன். புதிய முயற்சிகள், சிந்தனைகள், வாசிப்புகள் ஏதும் இல்லாமல், எளிய சிந்தனை கொண்டவனாய் சில நாட்கள். என் நிறை, குறைகளனைத்தையும் ஒப்புக்கொண்டு, ஆமாம் இதுதான் நான் என அமைதியாகிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது, இப்படி ஒப்புக்கொள்வது தோல்வி இல்லையா ? வாழ்வை சுவாரசியமில்லாமல் ஆக்கிவிடுமல்லவா என மனக்குரல்கள் கேட்காமலில்லை, ஆனால்ஒரு தெளிவு கிடைக்கும்வரை எதையும் கண்டுகொள்வதில்லையென ஒரு முடிவு.

           அவ்வப்போது 'இலக்கில்லா அம்புகளின் வலி யாருக்கு புரியும்' என மடக்கி மடக்கி எழுதும் கவிதைபோன்றவைகளும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

          முடிவெடுத்துவிட்டேன் என இறூமாந்திருக்கும்போதுதானே அதை அசைத்துப்பார்க்கும் நிகழ்வுகளெல்லாம் நடக்கத்துவங்கும். அதே எனக்கும் தொடர்ந்தது. தவறவிட்டிருந்த வாய்ப்புகளையும், சரியாய் பயன்படுத்தாதவைகளையும் அசைபோடத்துவங்கினால், எல்லாமே சிறிது முன்னமே கிடைத்தவைகளாக இருந்திருக்கிறது. அந்த வாய்ப்புகளின் அருமை தெரியாமல் வீணடித்திருக்கிறேன் அல்லது மொத்தமாக அலட்சியப்படுத்தியிருக்கிறேன்.

           புயலின்போது அமைதியையும், அமைதியின்போது புயலையும் நினைத்து, அந்தந்த நேரத்துக்கான சுவாரசியத்தையும், அழகையும் இரசிக்க இயலாத வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறதுபோலானது.

            ஒருவழியாய் புயலுக்குபின்னான அமைதி வந்ததுபோல இருக்கின்றது. எதைக்கண்டாலும் புலம்பும், அலைபாயும், ஏக்கப்படும் மனது இப்போது ஒரு தீர்க்கமான அமைதியடைந்திருக்கிறது. இதிலேயே இருக்க விருப்பமில்லை, ஆனால் ஒரு தூர ஓட்டத்துக்குப்பின்னும், அடுத்த ஓட்டத்திற்கு முன்னுமான இடைப்பட்ட அமைதியும், ஓய்வும்போல ஒரு நிலை என எனக்கு நானே ஒப்புக்கொண்டு அமைதியடைந்திருக்கிறேன்.

              விளையாட்டின் அடுத்த சுவாரசியமான கட்டமே இனிமேதான் ஆரம்பிக்குது என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். புத்துணர்ச்சி நிறைந்து வந்திருக்கிறேன்.