யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 05, 2009
நண்பர்களே,
இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.

இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா” நிகழ்ச்சியை உங்களிடமும், உங்கள் நண்பர்களிடமும் பரப்புவதே.

11-அக்டோபர்-2009 சென்னையையும், அதைச்சுற்றிலும் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கான நிகழ்ச்சி. உங்களுக்கு தெரிந்த தன்னார்வக்குழுக்கள் இருப்பின் (சிறிதோ/பெரிதோ) அவர்களிடம் சொல்லி அவர்களையும் இதில் பங்கேர்க்கச்செய்வதின் மூலம் அவர்களுக்கான பயனை அடையச்செய்யலாம்.

1. போட்டிகள் (திருக்குறள்/ படம் வரைதல், வினாடிவினா, மொழிபெயர்ப்பு..)
2. எதிர்கால பாதை பற்றிய பேச்சு
3. “சாதிப்பது சாத்தியமே” - சுயமுன்னேற்ற பேச்சு
நிகழ்ச்சியில் பங்குபெறவரும் இல்லங்களில் குழந்தைகளுக்கு பயண செலவும், மதிய உணவும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: admin@indiasudar.org

நிறைந்த நினைவுகள்

Published by யாத்ரீகன் under , on திங்கள், மார்ச் 16, 2009
என்ன சொல்வதென தெரியவில்லை, பலநாளாய் படிக்கவேண்டுமென நினைத்திருந்த “வெயிலோடு போய்” சிறுகதை “பூ” என்ற படமாக வந்தபொழுதும், அதைப்பற்றிய நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதும் கட்டாயம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த ஒரு தோழியின் நெகடிவ் விமர்சனத்தையும் மீறி இன்று பார்க்கத்துவங்கினேன். பார்த்ததும் தோன்றியதுதான் இந்த பதிவின் முதல் வரி. என்ன சொல்வதென தெரியவில்லை.

மனது நிறைய ஒரு வகையான, என்னவென்று நேரடியாக பெயரிட முடியாதொரு ஒரு உணர்வு மனமெங்கும் நிறைந்திருக்கின்றது. மாரியின் கள்ளங்கபடமில்லாத அன்பா, அந்த இறுதிமுடிவா, வாழ்வின் நிதர்சனத்தில் அடிபட்டுப்போகும் எல்லாமா, எளிதாய் காணவியலாத இப்படியொரு எதிர்பார்ப்பில்லாத அன்பா.. என எல்லாவற்றையும் ஒன்றாய் கண்டதொரு ஒரு உணர்வுதான் அது.

சுருக்கமாய் சொல்வதென்றால் மிக மிக மிக பிடித்தபடங்களுள் ஒன்றாக இருக்குமென்று நினைக்கவேயில்லை. ஆனால் அவ்வளவு சுருக்கமாய் முடித்துவிட தோன்றவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும், பாத்திரப்படைப்பையும், வசனங்களையும் நுணுக்கமாய் இரசித்து இரசித்து சந்தோஷப்பட்டு, வருத்தப்பட்டு பார்த்துக்கொண்டிடுருந்தேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கலாம், பெயர் போட்டு முடித்ததும் வரும் அந்த கிராமத்தின் அறிமுகக்காட்சிகளில் வரும் பாளம் பாளமாய் வெடித்திருக்கும் மண்ணும், அடுத்து வரும் முகமெங்கும் சுறுக்கம் கொண்ட பாட்டியின் க்ளோசப் காட்சிகளில் போடும் அட, இறுதிவரை வரும் ஒவ்வொரு காமெரா கோணங்களிலும் நெஞ்சை அள்ளுகிறது, கிராமமென்றாலெ பசுமைதான் அழகென்பதை உடைத்து, சிவகாசியனருகே இருக்கு ஒரு வரண்டமண்ணுமொரு அழகுதான் என காட்டும் காட்சிகள் அட்டகாசம். இதை சத்யம் தியேட்டரில் பார்க்கத்தவறிவிட்டேனே !!!

சின்ன சின்னதாய் வரும் சில விஷயங்களை பார்த்து பார்த்து மனசு ஏனோ படமெங்கும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் சட்டென 10-15 வருடங்கள் சரேலென பின்னாலிலுத்துக்கொண்டிடுருந்தது. கடையில் தேங்காய் சில்லு வாங்க வரும் சிறுவன் (இப்போதெல்லம் தேங்காய் சில்லு தருகிறார்களா ?! :-) , அதை உடைத்து அதன் தண்ணீரை உடைத்து அப்படியே ஊற்றிவிடுவதும், மண்டைவெல்லம் கேட்டதற்கு தேங்காய்தண்ணீர் குடித்ததை சொல்லுவதும்.. வீட்டினெதிரே இருக்கும் செட்டியார் கடையில் அடித்த கூத்துதான் நியாபகம் வருது. புது சேலை பார்த்ததும் எடுத்தியாடி, எடுப்பாதானிருக்குனு சொல்லும் சிறு வசனம்தான், பலரின் கவனத்தை கவரும் அளவுக்கு முக்கியத்துவமானதுமில்லை, ஆனால் கண்முன் நடமாடிய பல பாட்டிமார்களை ஒரு நொடியில் நியாபகப்படுத்திவிட்டது. சாப்பிட மாரி உட்காரும் முறையிலாரம்பித்து, ஒவ்வொரு மானரிஸங்களிலும் மாரியாகவே உலாவியிருக்கும் பார்வதி அடுத்த முத்தழகுதான்.

பேனாக்காரர் கதாபாத்திரம் இன்னொரு அட்டகாசம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியங்களையும் பக்கம் பக்கமான வசனங்களில் விளக்காமல் காட்சியமைப்புகளாலயே (வண்டிக்காரர் பேனாக்காரர் என்பது வெறும் வார்த்தை வித்தியாசமில்லை என்பதில் வரை) அசத்தியிருக்கிறார் சசி.

வயல்வெளிகளில் கைகளை கோர்த்துக்கொள்ளும் கற்பனை கவிதை, அதுவும் படத்தில் முக்கியமாய் பயன்பட்டிருப்பது அருமை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களை அறிமுகமான முகங்களாய் விடாமல் புதியவர்களை அதுவும் கிராமத்தினரையே உலாவ விட்டிருப்பது பெரும் பலம், அண்ணன் தங்கையிடையே நடைபெறும் வசனங்கள், மாரிக்கும் அவள் அண்ணனுக்கும் நடக்கும் முறையும், மாரியின் அம்மாவுக்கும் அவர்களின் அண்ணனுக்கும் நடக்கும் வசனம் (ஆரம்பகட்டத்திலும் - குடுகுடுக்குப்பைக்காரனை விரட்டசொல்வதும், வயதானவர்களானதும் - சாபம்விடுவதும்) காட்டப்படும் இயல்பு, வித்தியாசம்.. அப்படியே கண்முன் நடந்த எத்தனையே விஷயங்களை நியாபகப்படுத்தியது.

புது கிளாசில் மாணவர்களின் அதிகபட்சக்கனவும், மாணவிகளின் குறைந்தபட்ச கனவின்மையும், மெலிதாய் வந்து போவது பலருக்கு சிரிப்பாயிருந்திருக்கலாம், ஆனால் யோசிக்கையில் இப்படித்தானே இருந்திருக்கிறோம், இன்னும் இப்படித்தானே இருக்கு என்று நினைக்கையில் என்னமோபோலிருந்தது. அங்கு ஆரம்பிக்கும் மாரியின் அந்த வெள்ளந்திதனமான, கள்ளமில்லாத அன்பு படமெங்கும் விரவிக்கிடக்கின்றது, நம் மனமெங்கும் நிறைந்துகொள்கிறது. படுக்கையில் , ஆமா மோண்டேன் , கோயில்ல சாமிகிட்டயும் சொல்லிக்கோனு தைரியமாய் சொல்பவள், அழுவதென்று கவிதையாய் நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கும் தருணம், எத்தனை முறை நாமும் இப்படி பிடித்தமானவர்கள் முன் விளையாட்டுக்குக்கூட அவமானப்படுவதை கண்டு எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்போம்.

பருத்திவீரனில் டக்ளஸ் அண்ணனென்றால் இங்கெ ஒரு அலோ.. இறுதியில் வரும் ஒரு முக்கியமான justification-க்கும் இந்த பாத்திரம் பயன்படுத்தப்படும்போது, படத்தில் எதுவுமே தேவையில்லாமல் இல்லை என்பதை உணர்ந்து, சிறுகதையையும், அதை திரைக்கதையில் பிசராமல் கொண்டுவந்தவரின் உழைப்பும் அட்டகாசம்.

அந்த முதலாளியின் பாத்திரமும், வசன உச்சரிப்பில் ஆரம்பித்து எல்லாவகையிலும் (தங்கராசை பார்க்கும்பொழுது அப்பா சொன்னாரு என சொல்லும் சின்ன வசனத்திலேயும் அட்டகாசம்) பார்த்த மனிதர்களையே நினைவுபடுத்தும் மனசில் தங்கிய இன்னொரு சின்ன கதாபாத்திரம்.

நினைவிலிருக்கும் போன் நம்பர் ஒரு சின்ன க்ளிஷே ஆனாலும் நல்ல கலகல :-) , அடுத்து அந்த தோசை முத்தம் :-)))))))))))))) வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் :-)))))))

உயரம் பார்ப்பதும், மொந்த செருப்பிலும் எம்பி எம்பி உயரத்தில் திருப்திபட்டுக்கொள்வதும் :-))) , அந்த போர்மென் கதாபாத்திரமும் பச்சக்.. (கண்ணாடியில்லாமல் கண் தெரியாமலிருப்பது வழக்கமான கதாநாயகியின் மதிப்பைக்குறைக்காத செயல் எனினும்)
கள்ளிப்பழம் சிதறிப்போகும் கனவை குறிப்பால் காட்டும் காட்சியாயிருக்கலாம், ஆனால் மாரியின் குணத்தை காட்டும் அந்த காட்சியை மறக்கவே முடியாது, மாரியையும் மறக்கவே முடியாது :-) , இப்படி அன்பை பொழியும் நபர்களை பார்பதும் சரி, வாழ்வின் அங்கமாய் கொள்வதும் சரி, எளிதில் வாய்த்துவிடுவதில்லை.

ஒவ்வொரு சமயமும் இன்னாரு மகனா நீயி, இன்னாரு மக போல இருக்காளே என்ற சின்ன சின்ன வசனங்கள் கூட.. miss பண்ணும் எத்தனையோ பெயர் தெரியாத சுற்றுப்புறத்தவர்கள் கொண்ட விழாக்களை நியாபகப்படுத்திக்கொண்டிருந்தது.

நல்லவேளை, பட்டணத்து தோழி காதலை சொல்லவில்லை, தோழியாகவே விட்டுருப்பது இயல்பாகவே இருந்தது.

900 ரூபாய்க்கு விற்க்கப்படும் கறுப்பி கூட படத்தின் முக்கியமான கதாபாத்திரம், அதுவும் முடிவை எளிதாய் நம்முன் வைக்க உதவும் ஒரு கதாபாத்திரமாயிருப்பது அட்டகாசம்.  அதே போல் மாரியின் கணவனும் ப்ளாஷ்பேக் நினைவுகளில் அவர்களிடையே உலாவுவதும் சொல்லும் நிஜங்கள் பல :-)

கருப்பசாமியிலிருந்து பெருமாளுக்கு மாறுவது நுண்ணரசியல் விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம் ஆனால் கோவிந்தா கோவிந்தாவென ஒலிக்கும் அந்த குரல் செம டைமிங் :-))))))))))) , அதோட சேர்ந்து “தங்கராசு வேணும்”-னு மாரி கேட்கும்போது நம்மை அறியாமல் மனமெங்கும் பொங்க்கும் ஒரு மகிழ்சிக்கு அந்த கதாபாத்திரத்துக்கான நம் மகிழ்ச்சி மட்டும்தான் என வெறுமென ஒதுக்கி விடமுடியுமா ? ;-)

சட்டென்ற கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதும், சாகாமல் வெறுமென வாழ்வதுமட்டுமின்றி சந்தோஷமாய் வாழப்போவதற்கான காரணத்தை மாரி சொல்லும்போது, அதுவே இறுதியில் முடியும் ப்ரேமில் வரும் மாரியின் ரியாக்‌ஷனை நெஞ்சை பிசையும் சோகமாய் மாற்றுவது, அழகிக்குபின்னும், காதலுக்குபின்னும் வரும் கனத்த சோகத்தை கொண்டு இதுவரை படமெங்கும் சின்னசின்னதாய் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவர்களை அசைத்துவிடுகின்றது.

படத்தின் முடிவைப்பற்றி எத்தனையோ விதமான விமர்சனங்கள் வந்துவிட்டன, அத்தனையும் அவரவரின் பார்வை, சரியென்றும், தவறென்றும் ஒன்றுமில்லை, ஆனால் இந்த படத்தை இத்தனை ஆழமாய் பதியவைத்தது எதுவென யோசித்துக்கொண்டிருந்தேன்...

அழகி, ஆட்டோகிராப் போன்ற திருமணமான ஆண்களின் காதல் நினைவுகளை, நினைவுகள் என்று கவுரமாய் பெயரிடும் முறை, இதே நினைவுகள் பெண்களின் வழியே வரும்போது, அதிர்ந்து போகும் மாரியின் அம்மாவிலிருந்த்து, ”இன்னுமா நியாபகம் வைச்சிருக்க--” எனக்கேட்கும் தோழியின் குரலில் இருக்கும் தொனியில்வரை, வேறு வகையில்தான் நிஜ வாழ்க்கையில் classify செய்யப்படுகின்றது.

ஆனால் படம் முடிந்ததும் “மாரி” அப்பாவி சிறுமியிலிருந்து மிக உயர்ந்த கதாபாத்திரமாய் மாறிய்போவதை அந்த பனைமரத்தின் கீழ்வரும் காமிரா கோணத்திலிருந்து காமிப்பதில் மனம் எளிதாய் வேறு விவாதங்களின்றி ஒத்துக்கொள்கின்றது.

சாதரணமாய் இத்தகைய நிகழ்வுகளை நண்பர்களிடையேயான தண்ணிபார்ட்டியில் ஒரு பேச்சுக்கூட தவறாய் நினைக்கமுடியும் மனம், கொஞ்சம் கூட மாரியை பற்றிய அபிப்பிரயாத்தை களங்கப்படுத்த முடியாதே கதையின் பலம், கதாபாத்திரங்களின் வெற்றி.

ச.தமிழ்ச்செல்வன், சசி, ஷ்ரீகாந்த், பார்வதி, பெயர் தெரியாமல் படமெங்கும் பரவிகிடக்கும் அத்தனை கதாபாத்திரங்கள், காமிரா, வசனம், தயாரிப்பாளர்கள் என அத்தனைபேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

It made my weekend.

அவ்வளவு சந்தோஷமாய் துள்ளித்திரியும் அந்த சூ..சூ... மாரி பாடலே இறுதியில் மனதை அறுக்கும் வரிகளாய் வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒன்றை நம் மனது திட்டித்தீர்ப்பதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.

சேர்த்து வெச்ச நெனவெல்லாம் நெருஞ்சிமுள்ளா அறுக்குது .. சூ.. சூ... மாரி...

Das Leben der Anderen

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
              காது மடல்களை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது இன்றைய மெல்லிய குளிர், ஊரெங்கும் மூடுபனியால் சூழ்ந்திருக்க, அட்டகாசமான வானிலை. சுடச்சுட இருந்த Starbucks-இன் White Chocolate Mocca-வுடன் வழக்கம்போல  நீண்டதாய் இலக்கில்லா வழியில் காரை ஓட்டிச்சென்று வீடு திரும்பியதும், இருந்த தூக்க கலக்கமெல்லாம் எங்கே சுருண்டுகொண்டதென்று தெரியவில்லை. 

            இருந்த புத்துணர்வுக்கு நல்ல படம் பார்க்கனுமென Que-வை மேயத்தொடங்க கிடைத்ததுதான் Das Leben der Anderen.  Run Lolla, Downfall போன்ற ஜெர்மன் படங்கள் ஏமாற்றாததால் நம்பிக்கயுடன் பார்க்கத்துவங்கினேன்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது (Valkyrie படத்தையும் ஒரு ஜெர்மனிய படமாக இந்த இயக்குனரே இயக்கியிருக்கலாம்). இயக்குனரின் முதல் படமாம், சத்தியமாய் நம்பமுடியவில்லை.
    
          படம் ஆரம்பிக்கும் விசாரணை காட்சியிலிருந்து, கடைசி காட்சியில் இருக்கும் டச் வரை அட்டகாசம். வசனங்களும், மிக மிக மிக முக்கியமாய் அந்த பிண்ணனி இசையும்.. படம் முடிந்தபின்பு அந்த கதாபாத்திரங்களிடையே நாம் வாழ்ந்து முடிந்தமாதிரி ஒரு உணர்வு. 

          என்ன புத்தகம் எழுதலாம், என்ன படிக்கலாம் என தமிழகஅரசாங்கம் மக்கள் சிந்தனையை  குறுக்க நினைத்து என்ன பண்ணுகின்றோமென உணராமல் முட்டாள்தனமாய் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த படம் பார்த்தது என்னவெல்லாமோ யோசிக்க வைத்துவிட்டது. 

        பிண்ணனியிசையென்றதும் நினைவுக்கு வரும் ஒரு கவித்துவமான காட்சி, படத்தின் உயிர் நாடிகளின் ஒன்றான அந்த பியானோ வாசிக்கும் ஒற்றை காட்சியில் எத்தனை அழகாய் படத்தின் போக்குக்கான justification.

        சரி அப்படி என்னதான் கதை ?   

  ஒருவரை ஒட்டுகேட்கத்துவங்குகின்றீர்கள்,  ஒரு வரி அல்ல ஒரு நிமிடமல்ல.. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நொடியையும்.. உங்களின் செயல் எத்தனை தூரம் ஒட்டுக்கேட்கப்படுபவர்களையும், உங்களையும், சமுதாயத்தையும் மாற்றும் என நினைத்துப்பார்த்திருப்பீர்கள் ?   அதுதான் கதை. வழக்கமான அட்டுத்தனமான Action/Thriller வகையறாக்களல்லாமல் ரெக்ளைனரின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டதொரு பொலிடிக்கல் திரில்லர்.
Das Leben der Anderen (The Lives of Others)
 கருத்து மற்றும் சிந்தனை சுதந்திரம், ஐடியலான நல்லதொரு சமூகம்/அரசாங்கம், இவற்றில் இன்று நாம் அனுபவிக்கும் நல்லவிஷயங்கள் அதனால் நாம் கவனமின்றி, கவலையின்றி தவரவிட்டுக்கொண்டிருக்கும் உணர்வுகள் .. என பல விஷயங்களை கிண்டி கிளறிவிட்டது.. 

படம் முடிந்தபின், அடுத்த படத்திற்கோ/வேலைக்கோ கடிகார முட்களின் ஓட்டத்திற்கு நடுவே தவ்வுவதற்குமுன் கொஞ்சம் தனிமையும் அசைபோடுதலையும் சேர்த்துப்பாருங்களேன்.. Its worth it.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, ஜனவரி 11, 2009
                     ஊருக்கு செல்லும் முன் மூடிய Netflix கணக்கை மீண்டும் திறந்தபின் கிடைத்த முதல் குறுந்தட்டு “அந்த நாள்”. எத்தனையோ பேர் சொல்லக்கேட்டிருந்தாலும், நம்பிக்கையில்லாமல் பார்க்கத்துவங்கினேன், அட்டகாசம். எத்தனையோ முறை பலர் துவைத்து காயப்போட்டுவிட்ட விமர்சனமென்பதால் புதிதாய் சொல்ல ஏதுமில்லை, ஆனால் கவனத்தை சிதறடிக்காத திரைக்கதை மட்டுமல்ல, அந்தநாட்களில் மனிதர்களின் வாழ்கை நடைமுறை, போலிசாரின் உடை, மற்றவைகள் என மீண்டும் கவனிக்கவே மற்றோரு முறை பார்த்துக்கொண்டிருந்தேன். 

    இத்தனை நடுவிலும் படத்தில் சடாரென மனதில் ஒரு மின்னல்வெட்டு அந்த அழகான உதடுகள் :-) , யாரிது ?
முணுமுணுப்பு

என் அன்பே நானும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
...
...

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே
விழி தொடும் திசையே
உடல் தொடும் உடையே
விரல் தொடும் கணையே
இணைவாயே


பி.கு.:  அந்த படத்துக்கும் என் முணுமுணுப்புக்கும் சம்பந்தமில்லை. இப்பொழுதுதான் முதல் முறை கேட்கிறேன் ;-)