யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பத்து

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 06, 2008
ப்ரியாவின் இந்த Tag , ஒரு பெரிய ப்ளா(தூ)க்கத்தில இருந்து விழித்து வந்து எழுத வச்சிருக்கு.. நன்றி ப்ரியா :-)

இப்போ இவை இல்லாம வாழ முடியாதுன்னு இருக்குற 10 பொருள்களின் ப்ராண்ட். இந்த ப்ராண்ட் மோகம்னு எதுவும் கிடையாது, எதோ கிடைக்குறத வச்சி ஓட்டிகிட்டு இருந்தேன் .. குறிப்பா இதுதான் வேணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்ததில்ல.. சரி இப்போ இங்க இருக்குற நிலைமையே வேற, என்னதான் அப்படி இல்லாம வாழ முடியாதுன்னு யோசிச்சா, இதோ அடுத்து வருது பாருங்க அவைகள் தான் ...


1. ADIDAS - என்கிட்ட இருக்குற பொருள்களிலேயே, இது இல்லாம இப்போ இருக்கவே முடியாதுனா என்னோட Adidas Supernova Shoe தான், என்னோட தட்டைப்பாதாங்களால் வெகு தூரமோ/ நேரமோ ஒடமுடியாம வலியில் துடிச்ச எனக்கு இது ஒரு வரம். கொஞ்சம் இல்லை, ரொம்பவே விலை அதிகம் தானோ-னு யோசிச்சு யோசிச்சு வாங்குன பொருள் ஆனா இப்போ அதுக்கு கொஞ்சமும் வருந்தவே இல்லை :-)

கொசுறு: All Day I Dream About Sports-னு பரவலா சொல்லப்பட்டாலும் இதோட பெயர்காரணம் வேறு.


2. Himalaya Hair Cream - இந்த பொருள் இல்லாம நான் இப்போ இருக்குற நிலமைல வெளியில தலை காட்ட முடியாது :-) , பின்னே இது இல்லைனா, சிங்கத்தோட பிடறி range-க்கு வெளியில போக எனக்கு விருப்பம் இல்லை :-D
கொசுறு: 78 வருடங்களுக்கு முன்பு மதம் பிடித்த யானைகளுக்கு குடுக்கப்பட்ட வேர்களின் ஆராய்ச்சி இந்நிறுவனத்தின் நிறுவனரின் முதல் முயற்சி


3. Honda Civic என்னோட லட்சுமி :-D , இவுங்க இல்லைனா இந்த ஊர்ல முடமாகித்தான் போயிருப்பேன். திசை தெரியா பயணங்களுக்கு அம்மணி தர்ற வேகமும் சரி, உறுமலும் சரி, அட்டகாசம்
கொசுறு: இந்நிறுவனத்தின் கார் தான் அமெரிக்காவில் தயாரான முதல் ஜப்பான் கார்.
4.Taco Bell என்னோட உணவுப்பழக்கங்களுக்கு ஈடு குடுத்து பன், இலை தழை தவிர ருசியான, வயிறார Bean Chalupa (சாப்பாடு) போடுற அன்னமிட்ட தெய்வம் :-) , எந்த நேரம் போனாலும் (எங்க ஊரைப்போல) சுடச்சுட சாப்பாடு கிடைக்குதுன சும்மாவா
கொசுறு: Chalupa என்றால் "படகு" ஸ்பானிஷில்-இல் ஒரு அர்த்தம், படகு போன்ற உருவில் அந்த fried bread இருப்பதனால் அதற்கு இந்த பெயர்.

5. சண்ட, ATM-னு மொக்க படங்களுக்கு நடுவே, மனதைத்தொடுறதுல இருந்து விறுவிறுப்பா, சட்டுன்னு கண்ணை நனைக்கும், பார்த்ததும் சந்தோஷம் பொங்கும் என பல நாட்டுப்படங்களுக்கு ஒரு திறவுகோல். ஆனந்தவிகடனில் செழியனின் உலக சினிமா படித்து விட்டு, Parris-ல தேடி அலையுறதும் இப்போ ரொம்ப எளிதாயிடிச்சு.
கொசுறு: சென்ற வருடம் தனது 1 Billion-th குறுந்தகடை பயனாளர்களுக்கு அனுப்பியது


6. ரோஷகுல்லா - இதுக்குனே ஒரு பெங்களிப்பெண்ணை கட்டிக்கலாம், 2003-ல பிடிச்ச பைத்தியம், தினமும் பத்து ரூபாய்க்கு 5/6 வாங்கி சாப்பிட்டு பழகிப்போய், சென்னை-ல பிரிஞ்ச இந்த காதலிய, இங்கிருக்குற இந்தியன் கடைகள்ள கண்டுகொண்டேன். தினம் இரண்டுனு, இரவு சாப்பாடு முடிச்சதும் பொறுமையா ருசிக்கும் அந்த நொடி.. அஹா !!!!
கொசுறு: ரோஷகுல்லா உருவானது மேற்கு வங்கத்தில் அல்ல, ஒரிசாவில் என்பது தெரியுமா ?

7. காபி சாப்பிடாத எனக்கு இந்த இடம் பிடிச்சதுக்கான காரணம் இங்க கிடைக்குற Bannana Nut Cake-உம் தனிமையும் தான். ஒரு காபி கப்போட அப்படியே ஒரு புத்தகத்தை எடுத்துகிட்டு ஓரத்துல போய் உட்காந்தா போதும், யாரும் எதுவும் கேட்க்காம எவ்வளவு நேரம் வேணாலும் உட்கார்ந்திருக்கலாம்.
கொசுறு: இவர்கள் முதலில் வைக்க நினைத்த பெயர் Pequod, ஆனால் Pee-quod என சொல்லி விட்டால் அதை குடிக்கப்போவது யார் என நினைத்துதான் பெயரை மாற்றி விட்டார்கள்.
8. Cadbury's Milk Chocolate with Roasted Almonds , ரொம்ப சந்தோஷமா இருக்குற நேரங்களும் சரி, கோபம், வருத்தமான நேரங்களும் சரி, இது ஒரு Stress Buster எனக்கு. தேவை இல்லாம என்னோட கோபத்தையும், வருத்தத்தையும் யார் கிட்டயும் காமிக்கத்தேவை இல்லாம, ஒரு பெரிய சாக்லடே பார் வாங்கிட்டு தனிய எங்கயாவது போய் சாப்ட்டு முடிக்கயில ஒரு நிலையில வந்து நின்னிருப்பேன் :-)
கொசுறு: 1905-இல் இருந்து ஒரு மில்க் சாக்கலேடில் பாரில் 1.5 கப் பால் என்ற அளவு தொடர்கின்றது ..
9. பெப்சி, கோக் மட்டுமில்லாம அவுங்களோட எல்லா பொருள்களையும் புறக்கணிப்புனு பேர்ல குடிக்க மாட்ட அப்போ இந்த ஊர்ல என்னதாண்ட குடிப்பேன்னு திட்டுன நண்பர்களால தேர்ந்தெடுத்த பாணம் :-)

10. மெக்சிக்கோ சலூப்பா போர் அடிச்ச சமயம் கைகுடுக்கும் மற்றொரு தலைவர் இவர் .. இவரின் Veggie Burgers ம்ம்ம்ம்ம்ம்ம் ....
கொசுறு: Burger King was the first fast-food restaurant to offer an enclosed and air-conditioned seating area
என்ன ஹீரோ , இந்த Tag-ஐ எடுத்துக்குரீங்களா ?

அன்புள்ள அப்பாவுக்கு

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மே 04, 2008
அன்புள்ள அப்பாவுக்கு,

எத்தனையோ முறை எனக்கு நீங்க கடிதம் எழுதி இருக்கீங்க. திருவனத்தபுரம், கொல்கத்தா, டெல்லி அப்படீன்னு எட்டாத தூரத்துல இருந்தாலும் சரி, சென்னையில இருந்தாலும் சரி தவறாம எனக்கு வீட்டுல இருந்து கிடைக்குற ஒரு விஷயம்னா உங்க கடிதம் தான்.

நான் பேசும்போது ஒரு தடவை கூட அதை குறிப்பிட்டு , கிடைச்சிருச்சுனு சொல்லக்கூட இல்லாம பேசுவதும் , ஒரு வரி பதில் கூட எழுதாம இருந்ததும், உங்களுக்கு நான் அதை படிச்சேனானு ஒரு சந்தேகத்தோட வருத்தமும் இருந்திருக்கலாம்.

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல.

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்), ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

எத்தனையோ சாதரண பசங்க போல நானும் , சின்ன வயசுல எங்க அப்பாவைப்போல யாருமே இல்லைன்னு பெருமைபடுறதுல ஆரம்பிச்சு, விடலை பருவத்தில எங்க அப்பாவைப்போல கெட்டவர் யாருமே இல்லைன்ற அளவுக்கு போய், இப்போ என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில எங்க அப்பாவைப்போல யாருமே இல்லைன்னு பெருமையா சொல்லுற இடத்துக்கு மறுபடியும் வந்திருக்கேன். இது எல்லாமே எந்த ஒரு அப்பா மகன் உறவுக்குமான வளர்ச்சியும் முதிர்ச்சியும்தானே தவிர, அந்த சந்தர்ப்பத்தில வர்ற எண்ணத்தை வச்சு அவ்வளவுதானா நம்ம பசங்க நம்மளை புரிஞ்சிகிட்டதுனு எண்ணத்துக்கு வந்திடாதீங்க, பசங்க அந்த அந்த வயசுக்கான மாற்றங்களை கடந்து வரட்டும்.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

எந்த ஒரு நபரும் செய்யும் தவறுக்கு தண்டிக்கப்படலாம் , ஆனா செய்யாத தவறுக்காக, செய்யும் நல்ல விஷயத்துக்காக, செய்யும் விதம் காரணமா நீங்க எல்லோர் முன்னாடியும் வில்லனா ஆக வேண்டாம்ப்பா. என்னடா நமக்கே புத்திமதி சொல்றானானு மட்டும் எந்த ஒரு சந்தர்பத்திலயும் நினச்சிறாதீங்க, உங்க மேல உள்ள அன்பு காரணமாத்தான் சொல்றேன், எல்லோரும் உங்களை தப்பா புரிஞ்சிகிறாங்கனு நீங்க வருத்தப்படுறதை என்னால பார்க்க முடியலை.

அம்மா நல்லதுக்கு நீங்க சொல்றதை அவுங்க கேட்க்காம பசங்களுக்கு பண்றாங்கனு பார்கிறதை விட, அது அம்மாவுக்கு எங்க மேல இருக்குற ஒரு வகை அன்பின் வெளிப்பாடுனு பாருங்க. எப்பவும் கிடைக்கும் அந்த வகையான பாதுகாக்கும் அன்பு கட்டாயம் எங்களை எங்களோட வாழ்க்கைக்கு தயார் பண்ணாது தான், இருந்தாலும் வீட்டுக்கு வந்ததும் (நான் உள்பட) நாங்க எங்களையும் அறியாம தேடுறது அது. எப்படி சொல்றதுன்னு தெரியல, இப்படிப்பட்ட அம்மாவோட அன்பு தப்புன்னு சொல்லவும் முடியல, இது வேண்டாம்னும் சொல்ல முடியல.

சின்ன வேலை கூட தானா செய்யாம அம்மாவையே எதிர்பாக்குறாங்க, பின்னாடி இதுனால கஷ்டப்பட கூடாதுன்னு உங்களோட கோணம் பசங்களுக்கு புரியிற வயசில்லை, கொஞ்சம் அவகாசம் குடுங்க அவுங்களுக்கு. இந்த சமயத்தில கோபப்பட்டா , உங்க நோக்கத்தை விட அந்த கோபம்தான் அவுங்களுக்கு பெருசாப்படும்.

சரி சின்னப்பசங்களை விடு , உங்க அம்மா கூட இதை புரிஞ்சிகாம நடக்குராளேனு நீங்க உடனே நினைக்குறது புரியுது. எனக்கும் அந்த வருத்தம் கொஞ்சம் உண்டு, அம்மாவோட ஆதரவு சில நேரங்களில் பசங்களுக்கு கிடைக்காம இருக்குறது நல்லதுன்னு தோணும், ஆனா பசங்களுக்கு அது தேவைப்படுறதே உங்க கோபத்தில இருந்து தப்பிக்குறதுக்குத்தானே ? அம்மாவுக்கும் நீங்க பொறுமையா எடுத்து சொல்லுங்க , இன்னி வரைக்கும் நீங்க சத்தம் போட்டே அதை சொல்லிஇருக்கீங்க, எனக்காக, அம்மாகிட்ட ஒரு பத்து முறையானாலும் பரவாயில்லை, அந்த சந்தர்பத்தில பொறுமையா திருப்பி திருப்பி சொல்லுங்க, உங்களோட அந்த ஒரு மாற்றத்திற்காவது மதிப்பு குடுத்து அம்மா கட்டாயம் மாறுவாங்க.

அதையும் மீறி உங்களுக்கு கோபம் வந்ததுனா, அந்த இடத்தை விட்டு போயிடுங்க , எதையும் விசிறியடிக்காம , யாரையும் திட்டாம , எந்த ஒரு வார்த்தையும் கோபத்தில உதிர்க்காம, சொல்லிலையும் , செயலிலையும் அமைதியா அந்த இடத்தை விட்டு நகர்ந்திருங்க.

கோபத்தோட மதிப்பும், பலனும் , பாதிப்பும் அது எத்தனை முறை வருதுன்றதால கிடையாது, அது எப்படி வெளிப்படுதுன்றதால தான்.

நொடிக்கொரு முறை வரும் கோபத்தை விட என்றோ வரும் கோபம் தான் சரியான பலன் தரும். நொடிக்கொருமுறை வந்தால் அதனால் பயம் வருவதை விட்டுட்டு, அட இந்த வழக்கமான கோபம் தானேனு அலட்சியம் தான் வரும். இப்போ பிரசன்னா கிட்டயும் , கமல் கிட்டயும் நான் பாக்குறது அதுதான். இது வேணா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம், ஆனா அதுதான்பா உண்மை.

உங்களோட கோபமான தருணங்களை , அம்மாவோ தம்பிகளோ , அந்த தருணத்தை பல்லை கடிச்சிகிட்டு, கண்ணை மூடிகிட்டு ஒரு வித சலிப்போட கடந்து போக நினைப்பாங்கலே தவிர, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்க்கமாட்டாங்கபா.

நீங்க சொல்றதை அவுங்க கேட்க்கனும்னா, அவுங்களோட கவனத்தை உங்க பக்கம் திருப்பனுமே தவிர, உங்களை விட்டு திருப்பக்கூடாது. அதுக்கு உங்களோட அணுகுமுறையை மாத்திக்கனும்னு என்பது என்னோட விருப்பம்.

உங்களுக்கே தெரியும், நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு நினைவு படுத்தவே தவிர, உங்களுக்கு சொல்லித்தர இல்லை. இதெல்லாத்தையும் விட நான் உங்க கிட்ட சொல்லனும்னு இன்னைக்கு நினச்ச விஷயங்கள்ல ஒன்னு உங்க tone. தமிழ்ல எப்படி சரியா சொல்றதுன்னு தெரியல, சொல்லும் (அ) பேசும் விதம்னு சொல்லலாம்னு நினைக்குறேன். இதுல நான் எதாவது தப்பா சொன்னா மன்னிச்சிருங்க.

எண்ணங்கள் தான் வாழ்க்கை, நம் எண்ணங்கள் தான் நம் குணத்தை, நம்முடைய வாழ்வை தீர்மானிக்கும்னு நீங்க எவ்வளவு தூரம் நம்புறீங்கனு தெரியாது, ஆனா நான் ரொம்ப தீவிரமா நம்புறேன். ஒருவன் அவனுடைய கனவை அடைய, அந்த கனவை நினைவாக்கும் எண்ணங்களிலேயே திளைக்கணும், அவன் வெற்றி அடைவான்னு அவனோட ஒவ்வொரு நொடி எண்ணத்திலயும் அவன் முழுமையா நம்பனும். அந்த எண்ண அலைகளுக்கு, அவனை மட்டும் அல்ல, அவனை சுற்றி இருக்கும் சூழலையும், சுற்றி இருக்கும் மற்ற மனிதர்களையும் அவனோட வெற்றிக்கு தயார் படுத்தும். பாசிடிவ் எண்ணங்கள்னு குறிப்பிடுகிறது இது தான்.

எங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனி எங்களுக்கு என்ன, நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க, நல்ல படியா அமைத்துக்கோங்க அப்படீன்னு நீங்க சொல்லும்போது அதில இருக்கும் எங்க நலன் பத்தி சிந்திக்கும் நல்ல கோணத்தை விட, அதிலிருக்கும் சலிப்பான எண்ணம் தான் அதிகம்.

அந்த சலிப்பான எண்ணங்கள், உங்களோட செயல்களை பாதிப்பதில் தொடங்கி, உங்கள் வாழும் சூழல், உங்களை சுற்றி, உங்களை பார்த்து வளரும் எங்களின் எண்ணங்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கும் வாழ்க்கையை பற்றி இத்தகைய கோணம் தான் தோன்றுமே தவிர, வாழ்கையில் எதையாவது சாதிக்கணும், வாழ்வு முறையை முன்னேத்திக்கனும்னு தோணுவது கஷ்டம்.

அப்படீனா வாழ்க்கையில வெற்றி பெற்றவர்கள சுத்தி இருக்குறவுங்க எல்லோரும் இப்படியா பாசிடிவா மட்டும் நெனச்சாங்கனு கேட்டா, இல்லை, சுத்தி இருக்கும் நெகடிவ்வான எண்ணங்களை தாண்டியே பலரும் வந்திருக்காங்க, அதுக்காக நீங்க அத்தகைய தடைகற்களை உருவாக்கனுமா ? நீங்க அறிஞ்சே பண்றீங்கன்னு சொல்ல வரலை, ஆனா இப்படி ஒரு கோணத்திலயும் உங்க சலிப்பான பதிலை பார்க்கலாமேன்னு சொல்ல வர்றேன்.

இந்த வெளிநாட்டிலே மொத்தமா கிட்டத்திட்ட ஒரு வருசத்துக்கும் மேல இருந்திருப்பேன், இங்க இருக்கும் பல விஷயங்கள் பிடிக்கலைனாலும், இந்த ஊர்ல இருக்கும் மக்கள் கிட்ட பிடிச்ச ஒரு விஷயம், நாமும் கடைபிடிக்கணும்னு நினைக்குற ஒரு விஷயம், வாழ்க்கையை பார்க்கும் விதம்.

இந்த வாழ்க்கையை பார்க்கிற விதத்தில ரெண்டு நாட்டுக்கும் ஒரு கலாச்சார மாற்றம் இருக்குதுனாலும், இவர்களுடையது தவறும் கிடையாது, நம்முடையது மிகவும் சரியும் கிடையாது.

நான் எதை சொல்ல வர்ரேனா, நம்ம நாட்டை பொருத்த வரைக்கும் பெரும்பான்மையா , ஒருத்தரோட வாழ்க்கை என்பதின் நேரம் அவுங்களோட வயசு கிடையாது, முதல் 20 வயசு வரைக்கும் நம்ம வாழ்க்கை என்பது நம்ம பெற்றவுங்க தீர்மானிக்குறதா இருக்கு, அதுக்கு அப்புறமான ஒரு 6/7 வருடங்கள் என்பது family commitments-ஐ மீறி அந்த தனி நபரோட வாழ்வா இருக்கு, அதற்கு அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும், அந்த இருவருக்கும் தனிப்பட்ட வாழ்வுனு இருக்குறதில்ல, அது அவர்கள் இருவருக்கு நடுவில பங்கு போடப்பட்டு , மிச்சம் அந்த இருவரின் குடும்பத்தாரிடையும் பங்கு போடப்படும். அடுத்து குழந்தை பிறந்துட்டா, அதுக்கு அப்புறம் இருக்கும் வாழ்நாள் முழுவதும் அவர்களின் குழந்தைக்கே கேட்கப்படாமலே தாரை வார்த்துக்குடுக்கப்படும்.

ஆக மொத்தம் அதிக பட்சம் 7 வருடங்கள் தான் ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கை என்பது. இது ஏன்னு பார்த்தா, அன்பு தான் காரணம், முதல்ல தன்னை சார்ந்தவுங்களோட வாழ்க்கை நல்லா அமையனும்ன்ற அன்பு. அதை தப்பு சொல்லவே இல்லை, ஆனா அதற்கிடையில் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கான வாழ்க்கை தொலைஞ்சு போகுது.

இப்போ இந்த நாட்டுல பார்த்தீங்கனா, ஒருத்தர் தனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தன்னோட தனிப்பட்ட வாழ்வு இருக்குறதை நம்புறாங்க, அதை கிழடு தட்டி போகின்ற கடைசி நொடி வரைக்கும் நம்பிக்கையோட பிடிச்சிட்டு இருக்காங்க. பிள்ளைகளை பெத்துட்டதினால தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையை மறப்பதில்லை. இதுல சுயநலம் இருக்குன்னு சொன்ன, அது முழு உண்மையில்ல, காரணம், அவுங்க யாரும் பிள்ளைகளை முழுமையா மறந்திறதும் இல்லை, பிள்ளைகளும் அவுங்களை முழுமையா மறந்திறதில்லை. 55 வயசுல இனி என்ன வாழ்க்கை எங்களுக்கு இருக்குனு சொல்ற சமயத்தில , சின்ன வயசுல அவுங்க செய்ய நினைச்சதை , தங்களால முடிஞ்ச சமுதாயத்துக்கான நல்லா விஷயங்கள்ல ஆரம்பிச்சு, அவுங்களோட தனிப்பட்ட ஆசை வரைக்கும் செஞ்சு சந்தோஷப்படுக்கிறாங்க.

நான் ஏன் இதை இப்போ சொன்னேன் அப்படீன்னு நீங்க யோசிச்சா, காரணம், நீங்க உங்களுக்குன்னு தனிப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்ததில்லை, தங்கைகளுக்கு, அம்மாவுக்கு, குடும்பம்ன்ற கட்டுபாடிற்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்குனு மத்தவுங்களோட நல்லதுக்குனு யோசிச்சி இருந்து இருக்கீங்க. உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குப்பா. இதுக்கு மேல எனக்கு என்ன வாழ்க்கை இருக்குன்னு நெனைக்காதீங்க, இனி மத்தவுங்கள நாங்க பாத்துகிறோம், நீங்களும் பார்த்துகோங்க, அதே நேரத்துல உங்களோட வாழ்க்கையும் இருக்கு, அதையும் சந்தோஷமா, ஒரு குழந்தையின் உற்சாகத்தோட வாழ ஆரம்பிங்கப்பா.

இன்னைக்கு காலையில நான் உங்க கிட்ட கேட்ட அந்த விரக்தியான, சலிப்பான வார்த்தைகளே அத்தகைய வார்த்தைகளில் கடைசியா இருக்கணும் என்பது என்னோட ஆசை.
எதையும் ஒரு உற்சாகத்தோட அணுகுங்க, 55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை.

நமக்கு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் , அதன் இறுதி வரை சந்தோஷத்தோட கழிப்போமே அப்பா. எனக்கு இருக்குறது எத்தனை நொடிகள்னு எனக்கு தெரியாது , யாரு யாருக்கு அப்புறம் இருப்பான்னு யாருக்குமே தெரியாது, இதில என்னோட வாழ்வு அவ்வளவு தான்னு நீங்க முடிவு பண்றது சரியா ?

நான் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமா பேசிட்டேனோ-னு தோணுது, ஆனா ஏன் மனசில இருந்ததை உங்க கிட்ட எந்த வித சங்கோஜமும், பாசாங்கும் இல்லாம பகிர்ந்துகிறதுக்கு என்னால முடிஞ்சதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். அந்த ஒரு comfortness நமக்கிடையே கொண்டு வந்ததுக்கு.

இதை எல்லாத்தையும் ஏனோ தெரியல phone-ல சொல்ல முடியல, அதை பொறுமையா கேட்க்குற நிலையில் நீங்களும் இல்லைன்னு தோணுச்சு. அதான் இந்த முறை.
இதில நான் தப்பா எதாவது சொல்லி இருந்தேன்னு உங்களுக்கு தோணுச்சுனா மன்னிச்சிருங்க. இல்லை, நான் நீ சொல்ற அர்த்தத்தில நான் நடந்துகலைனு நெனச்சீங்கனா என்னோட தப்பான புரிதலா இருக்கும், மன்னிச்சிருங்க.

உங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சி பண்றேன்னு நினச்சிறாதீங்க, இதெல்லாம் நான் உங்க கிட்ட இருந்து, படிச்ச புத்தகங்கள் கிட்ட இருந்து, பார்த்த மனிதர்கள் கிட்ட இருந்து, கிடைத்த அனுபவாங்கல்ல இருந்து தோணியதை தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதை உங்களுக்கு நியாபகப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன்.

என்ன சொல்றதுன்னு தெரியாம, எங்கயோ ஆரம்பிச்சு, எதிலோ போய், எதிலோ முடிச்சிட்டேன் .. எண்ணங்களை கோர்வையா எழுதலைனாலும் , நான் சொல்ல வந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.

என்றும் அன்புடன்,
செந்தில்

Those were the best days of my life

Published by யாத்ரீகன் under , on புதன், ஏப்ரல் 23, 2008


I got my first real six-string
Bought it at the five-and-dime
Played 'til my fingers bled
It was summer of '69

Me and some guys from school
Had a Band and we tried real hard
Jimmy quit and Jody got married
I shualda known we'd never get far

Oh when I lock back now
That was seemes to last forever
And if I had the choice
Ya - I'd always wanna be there
Those were the best days of my life

(CHORUS)

Ain't no use in complainin'
When you got a job to do
Spent my evenin's down at the drive in
And that's when I met you

Standin on a mama's porch
You told me that you'd wait forever
Oh and when you held my hand
I knew that it was no or never
Those were the best days of my life

(Chorus) Back in Summer of '69

Man we were killin' time
We were young and restless
We needed to unwind
I guess nothin' can last forever, no

And now the times are changin'
Look at everything that's come and gone
Somethimes when I play that old six-string
I think about ya wonder what went wrong

Standin' on a mama's porch
You told me it would last forever
Oh the way you held my hand
I knew that it was now or never
Those were the best days of my life

(Chorus) Back in summer of '69
Still Humming ...........!!!!
Lyrics Courtesy: Lyrics007

Turtles Can Fly

Published by யாத்ரீகன் under on சனி, மார்ச் 15, 2008
போரின் கொடுமைகளை , குழந்தைகளின் மேல் / அடுத்த தலைமுறையின் மேல் அதன் பாதிப்பை , போரின் பெயரால் நியாயப்படுத்த முயலும் அல்லது மறைக்கப்படும் கொடுமைகள் என.. அத்தனை விஷயங்களையும் .. உச்சஸ்தாயில் கதறி கதறி சொல்லாமல், மவுனத்தாலேயே உணர வைத்த திரைப்படம் .. அங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவை தூறல்கள், கட்டாயம் உங்கள் நாளை மிகவும் சோகமாக்காது .. இணையத்தில் தோழி ஒருவர் தரவிறக்கி கொடுத்தது .. ஆங்கில சப் டைட்டில் உடன் கிடைத்தது நல்லதாய்போனது ..



விமர்சனம் செய்யுமளவுக்கு ஞானம் இல்லாததால், பார்ப்பவர்கள் பிறருடைய Perspective-ஐ கொண்டு பார்க்காமல், அவரவர் புரிதலோடு இரசிக்க வேண்டுமென்பது என் விருப்பம் .. அதனால் "நோ விமர்சனம்"


பார்த்தவர்கள், படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்கினால் திருப்தியடைவேன் :-) ..

Coooool

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மார்ச் 09, 2008

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)

Published by யாத்ரீகன் under , , , , , , on புதன், பிப்ரவரி 27, 2008
சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும் பொறியியல் முறையிலும் நம்மை அசத்த வைக்கும்.

இங்கே பொறுமையாய் காண பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதால் இதை தனி தொடராக பதிய நினைத்திருந்தேன் .. படித்து, பகிர்ந்து மகிழ்வோம் :-)

கிழே இருப்பது தான் கைலாச நாதர் கோயில் எனப்படும் குகைக்கோயில். மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் இதன் உருவத்தை படத்தில் புள்ளியென தெரியும் மக்களை பார்த்தால் தெரியும். இத்தனை பிரமாண்டத்திலும் இதன் கலை நயம் சிறிதும் குறைந்ததில்லை.






சரி இவ்வளவு பில்டப் கொடுத்தாச்சே, அப்படியென்ன இந்த குகையில் ?

ஆச்சர்யம் #1:
எந்த ஒரு குகைக்கோயிலோ அல்லது குகைச்சிற்பமோ எப்படி செதுக்கப்பட்டிருக்கும் ?


முதலில், குகைப்பாறையின் பக்க வாட்டில் தொடங்கி, குடைந்து கொண்டே உள்ளே சென்று சிற்பங்களும், கோயில் போன்ற அமைப்பும் பாறையினுள் செதுக்கத்தொடங்குவார்கள்.


இயல்பான இந்த முறைக்கு நேர்மாறாய் செதுக்கப்பட்டது தான் இந்த குகை. எப்படி ? , ஒரு பெரும் பாறையை, அதன் மேல் அமர்ந்து கொண்டு செதுக்கத்தொடங்கி உள்ளே இறங்கி, மேலிருந்து கீழ் எல்லா சிற்பங்களையும், கோயில் அமைப்பையும் செதுக்கத்தொடங்கினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்த குகைக்கோயிலும், அதன் உள்ளே இருக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாய் பார்த்தால் வித்தியாசம் மிகவும் எளிதாய் தெரியலாம், ஆனால் மேலே பாறையை குடைய ஆரம்பிக்கும் போது, எவ்வளவு கிழே செல்ல வேண்டும், ஒவ்வொரு உயரம் கிழே செல்ல செல்ல எவ்வளவு பாறை எடுத்து விட வேண்டும் என கணக்கிடுவதும், என்ன செதுக்கப்போகின்றோம் என உருவகப்படுத்தி பார்ப்பதிலும் உள்ள கஷ்டங்கள் மிக மிக அதிகம். சாதரண முறையில், கரியை வைத்து கோட்டுருவம் வரைந்து விட்டு எளிதாய் செதுக்கி விடலாம் , ஆனால் இங்கே உள்ளே சென்று குடைவதற்கு எப்படி அளவுகளை குறித்துக்கொள்வது ?


இங்கிருந்து தொடங்குகிறது ஆச்சரியம்...




ஆச்சர்யம் #2:

மொத்த கோயிலின் நிலப்பரப்பு எதேன்சில் உள்ள பார்த்தேனான் ஐ விட இரு மடங்கு பெரிது என்ற போதிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட கோயில் இது.


ஆச்சர்யம் #3:

5 வருடம் , 10 வருடம் என முடியவில்லை இந்த கோயில். கிட்டதிட்ட 100 வருடங்கள் எடுத்திருக்கின்றன. 2 இலட்சம் டன் எடையுள்ள பாறை அகற்றப்பட்டிருக்க வேண்டுமென கணிக்கப்படுகின்றது.





ஆச்சர்யம் #4:

இத்தனை களேபரத்திலும், எவ்வளவு நுணுக்கமாய், இரசித்து இரசித்து செதுக்கப்பட்டிருக்கும் என என்ன வைக்கும் வேலைப்பாடுகள், அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் தெரியும்.





உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப்பட்டு நிமிர வைக்கும் ஒரு கோபுரம்




சாதரணமாக ஒரு குகைக்கோயிளுக்குள் செல்லும் போது இருட்டு, குறைந்த காற்று, வவ்வால்களின் எச்சம் என பல விடயங்கள் நம்மை அங்கிருக்கும் அழகை இரசிக்க விடாது. ஆனால் இந்த குகையின் வித்தியாசமான குடைந்த முறை, வெளிச்சத்தை மேலிருந்து கொண்டு வருவதால், உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமாய் இருக்கின்றது.


ஏதோ ஒரு கல்லின் உள்ளே மேலிருந்து ஓட்டை போட்டு, அதனுள் நிறைய சிற்பங்களாய் செய்துவிட்டு, அதனுள் நம்மை இறக்கி விட்டு சென்றது போல் ஒரு உணர்வு .. எங்கு நோக்கினும் சிற்பங்கள் , மேலிருந்து வரும் வெளிச்சம் அத்தனையும் அழகாய் காட்ட .. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை .. அனுபவித்து பார்க்க வேண்டிய தருணம் அது ...



உள்ளிருக்கும் ஒரு கோபுரத்தின் க்ளோஸ் அப் ஷாட் , அதன் வேலைப்பாடுகளைக்காட்ட ..


அடுத்த பகுதியில், உள்ளிருக்கும் சிற்பங்களையும் .. மேலும் சில ஆச்சர்யங்களையும் பார்க்கலாம்...

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், பிப்ரவரி 26, 2008
எங்கேயோ பார்த்த மயக்கம் ...

கருப்பு தினம்

Published by யாத்ரீகன் under on வியாழன், பிப்ரவரி 14, 2008
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

கவுஜ கவுஜ

Published by யாத்ரீகன் under on வியாழன், பிப்ரவரி 14, 2008
முகவரி இல்லாத சாலை
விடுபட்டுப் போன உலக வாழ்க்கை
நானும் ஓர் யாத்ரிகன்!!

நன்றி:
திவ்யா, ஹமீத்

அட்டகாசம்

Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 04, 2008
அட்டகாசம் !!!!!!


என்றாவது ஒரு டிரக்கை வேகமாக முந்தி சென்று பின்னர் வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?

கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி

Published by யாத்ரீகன் under , , , , , on புதன், ஜனவரி 16, 2008
"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன்.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி

நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.



பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)

அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..

கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .

நீண்ட மலைத்தொடரில், பல வருடங்களாக தொடர்ந்து நடந்த கடின உழைப்பு தான் அஜந்தா - எல்லோரா குகைகள் (சிலைகள் / ஓவியங்கள் ). அருகே நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்கும், அடர்ந்த கானகமும் என நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பார்ப்பவர்க்கு அருமையான சூழல்கள், ஆனால் இதை உருவாக்கியவர்களுக்கு ? அந்த முகம் / பெயர் தெரியாத கலைஞர்களுக்கும், இது சாத்தியமாயிருந்த அனைவருக்கும் நன்றிகள்.

வெளிநாட்டில் எல்லாம் ஊர் சுற்றி விட்டு, நம் ஊருக்கு வந்த உடன், சத்யம் , சிட்டி சென்டர் , பெசன்ட் நகர் , பெரிய விடுமுறை விட்டால் உடனே சொந்த ஊருக்கு போவது என பழக்கம் குறைந்து விட்டாலும், அப்படி இருக்கும் சிலரை இந்தியாவிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளது என நினைக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே ..

பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான ஆசிரியர் ஆசான் (நன்றி : இராம.கி ஐயா) இல்லாத நிலையில்). கோடை சுற்றுலாதலங்கள் தவிர்த்து உங்கள் மகன்/ மகள்களை இப்படி சுற்றுலா கூட்டிச்செல்லுங்கள், வெளிச்சத்தை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், இருட்டை விட்டு வெளியே சீக்கிரம் வருவார்கள் ..

புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.

வாருங்கள் பயணிக்கலாம் .... :-)

பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.

கற்களின் காவியம் - எல்லோரா - 5

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, ஜனவரி 13, 2008
நம் நாட்டிலேயே உள்ள கலைச்செல்வங்களை பலரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தொடர்களில் , எல்லோரா குகைச்சிற்பங்களைப்பார்த்தோம். பல நாள் கழித்து மீண்டும் இந்த தொடரை தூசி தட்டி , அடுத்த தொடருக்கான வழி வகுக்க வேண்டிய நேரம் இது.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி


இதற்கு முன் சிவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்திருந்தோம் , இங்கே பார்ப்பது சிவனின் ஆனந்த தாண்டவம். சிலையின் முகத்தில் இருக்கும் சிரிப்பிலிருந்தே அதை நீங்கள் புரிந்து கொண்டிருபீர்கள்.

குகைக்குள்ளிருக்கும் மிகக்குறைந்த ஒளியுடன் , என்னிடமிருந்த சாதரண பாயிண்ட் அன்ட் சூட் காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( ] , இந்த புகைப்படம் பயங்கர ஆட்டம் கண்டிருக்கின்றது மன்னித்துக்கொள்ளுங்கள்.

எட்டு கரங்களுடன் நடனமாடும் சிவன். ஒவ்வொரு கையிலிருக்கும் பொருளுக்கும், முத்திரைக்கும் பல விளக்கங்கள் பல இடங்களில் படித்திருப்போம், அவை மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாய் தலையில் சூட்டியிருக்கும் கிரீடம், மிகவும் நுணுக்கமாய் கலையம்சம் கொண்டதாய் செதுக்கப்பட்டிருக்கின்றது.

சுற்றி இருக்கும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொருவரும் பல வகையான வாகனங்களில் இருப்பதும், சிலர் இசைக்கருவிகள் மீட்டுவதும், சிவனுக்கு சாமரம் வீசுவதும் என நீள்கின்றது இந்த சிற்பம்.


நாம் கோயில் வாசல்களில் துவாரக பாலகர்கள் எனப்படும் வாயில் காவலர்களின் சிலைகளை பார்த்திருப்போம். என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஏன் பெண் சிலைகள் வாயிற் காவலர்களாய் இல்லையென்று ?

இங்கே கிழே இருப்பது அங்கிருக்கும் லிங்கத்தின் சன்னதியில் வாயிற் காவலர்களை இருக்கும் நந்தினிகள் அங்கிருக்கும் துவாரக பாலர்களுக்கு சிறிதும் குறையாதவர்கள். நாங்கள் இவர்களின் முட்டியளவு கூட இல்லை .



இவர்களின் சிகையலங்காரத்தை பாருங்கள் எவ்வளவு அலங்காரங்கள் , சிலையை விட காதணியே பெரிதாய் இருக்கின்றது ;-)

இவ்வளவு பிரமாண்டமான குகைச்சிற்பங்கள் இருக்குமிடத்தை காக்கும் நிஜ காவலர்கள் எவ்வளவு கம்பீரமாய் , கவனமாய் இருக்க வேண்டும் , காவலிருக்கும் மற்ற காவலர்களுடன் எவ்வளவு Synchronize செய்து காவல் செய்ய வேண்டும். அவையெல்லாமே இந்த சிங்க காவலர்கள் செய்து விடுகின்றார்கள்.

எப்படி என்று கேட்கிறீர்களா ? ஒரு வாயிலில் சிங்கத்தின் சிலையருகே இருந்து இன்னொரு வாயிலைப்பார்த்தால் எந்த ஒரு தூணும் பார்வையை மறைக்காமல் இதற்கு குறுக்கே (Diagonal) இருக்கும் வாயிலில் உள்ள சிங்கத்தை பார்க்க இயலும். இத்தனை பருமனான , உயரமான தூண்களை , பரந்து விரிந்த இடத்தில் நிறுவும் போது இத்தகைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செதுக்கியிருப்பது அவர்களின் கலை நுணுக்கம் மட்டுமின்றி, அறிவியல்/பொறியியல் அறிவையும் ஆற்றலையும் காட்டுகின்றது.



இங்கே கீழிருப்பது இந்திரனின் மனைவியான இந்திராணியின் மரம். ஒரே மரத்தில் பல வகையான கனிகளும் , அதை பார்த்து உண்ண வந்திருக்கும் மந்திகளும் , பறவைகளும் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா ?



இந்தரலோகம் என பெயரிடப்பட்ட குகையொன்று , அதன் உச்ச கட்டத்தில் மிகவும் வண்ண மயமாய் இருந்திருக்க வேண்டும் .. அதிலிருக்கும் தூண்களின் வேலைப்பாடுகளும் , இன்னும் மறையாமலிருக்கும் வண்ணங்களும் என இன்னும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்பதற்கு முன் இந்திரலோகத்தில் எங்கள் சீனி :-)



80 டன் எடையுள்ள கற்கள் மிக உயரமுள்ள கோபுரத்தின் மேலிருப்பதும் , ஆயிரம் வருடங்களில் அழியாத வண்ணங்களும், நேரத்தை துல்லியமாய் கணக்கிட சூரிய கடிகாரத்தை கோயிலின் / தேரின் சக்கரமாய் வடிவமைப்பது .. என .. சொல்லிக்கொண்டே போகலாம் , இந்த நாட்டில் இருந்த அறிவும், ஆற்றலும், கலை நுணுக்கமும் .. எங்கே போனது அவையெல்லாம் ? பரம்பரை அறிவாய்கூட வழி வரவில்லையா ? இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என இப்பொழுதுதான் கேள்வி எழுகின்றது , அதற்கு முழுதாய் பதிலளிக்கவும் என் தந்தையால்/தாயால் முடியவில்லை ..

மிகப்பெரும் அடையாளங்களை விட்டுச்சென்ற தலைமுறைக்கே இந்த கதி என்றால் , வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 20, 2007
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவை தான். நிரந்தரம் என்னும் நிலையையே அசோகரியமாக கருதும் பறவை. அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.

நன்றி: (நல்ல) சிவம், மதன்

கற்களின் காவியம் - எல்லோரா - 4

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...

இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..

உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்

சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.

சிலையின் விபரம்:
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?

இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)

எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..

எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..

இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .



இந்த படத்தில் , ஷக்தியின் ஆபரணம் ஒன்றான ஒரு ருத்ராட்ச மாலையை கவனியுங்கள், ஒவ்வொரு ருத்ராட்ச்சத்தையும் சிறிதும் பிசிறில்லாத உருண்டைகளாய் , மொத்த மாலையும் பிறண்டு இருப்பதையும் அச்சு அசலாய் வடித்திருக்கிறார்கள் ..

கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்

எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..


கூர்ந்து கவனியுங்கள், எல்லோரும் விளையாட்டில் மும்முரமாய் இருக்கையில், சிறு குழந்தைகளாய் உருவகப்பட்டிருக்கும் ஷக்த்தியின் பூதகணங்கள் , தங்கள் பக்க வெற்றியை கொண்டாட , சிவனின் நந்தியை சீண்டுவதை பார்க்கலாம் ..

நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,

முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..

மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...

கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..

ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..



மேலே இருக்கும் கடைசி படம், நாங்கள் குகையினுள் இருக்கும்போது பார்க்கும் ஒரு கோணம் .. சிலைகளின் உயரம் தான் உங்களுக்கு தெரியுமே, குகையின் உயரத்தையும், அதிலிருக்கும் தூண்களின் உயரத்தையும் கண்பிக்கவே இந்த புகைப்படம் ..

இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..

கற்களின் காவியம் - எல்லோரா - 3

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
எல்லோராவின் குகைகளில் , இந்த குகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் கருதுகிறேன் .. காரணம்.. நான் இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கும் சிலைகளின் அளவை பார்த்தீர்கள் , அப்படியானால் இவை செதுக்கப்பட்டிருக்கும் / குடையப்பட்டிருக்கும் குகையின் அளவை கற்பனை பண்ணிப்பாருங்கள் ... இருப்பதிலேயே மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் குகை இது. இதிலிருக்கும் சிலைகளும் குகையின் உயரத்திற்கேற்ப இருப்பதால் .. மிகவும் அட்டகாசமாய் இருக்கின்றது .. உள்ளே நுழையும் போது நாம் மிகச்சிறியதாய் தோனுகின்றோம்

எல்லோரவில் செதுக்கப்பட்டிருக்கும் கற்களான காவியங்களை பகிர்ந்து கொள்ளும் தொடரின் அடுத்த பகுதி இது ..

முதல் பகுதி இங்கே

இரண்டாவது பகுதி இங்கே

சென்ற முறை வைத்த சஸ்பென்ஸ் , நான் எந்த ஊர் என தெரிந்தவர்களுக்கு ஒன்றுமில்லாததாக இருக்கும் :-) .. குறைந்த பட்சம் புதியதாய் இந்த பதிவிற்கு வருபவர்களுக்கு .. நச்சென்ற கதைகளுக்கும் , தொடர் கதைகளுக்கும் இடையில் கொஞ்சமாவது சுவாரசியம் அளிக்க வேண்டுமல்லவா .. ;-)

இம்முறை பார்க்கப்போவது "சிவன் - ஷக்தி திருமண வைபவம"

பார்க்கப்போவதற்கு முன் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி , இந்து மத திருமணங்களில் பெண் ஆணுக்கு எந்த பக்கம் நிற்பார்கள் ? (மற்ற மத திருமணங்களில் எப்படி ?) இதை நான் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுத்து கவனித்ததில்லை .. இந்த சிலைகளை கவனிக்கும் வரை...


சூழல் :
சிவன் - ஷக்தி திருமணம் , விஷ்ணு - பிரம்மா முன்னிலையில் , அவரவர் பூதகணங்கள் புடைசூழ ...

சிலையின் விபரங்கள்:

சிவனும் ஷக்தியும் கைகோர்த்து திருமண மேடையில் இருக்கும் நிகழ்வு இது..

கிழே பிரம்மா யாகம் வளர்த்துக்கொண்டிருப்பதும் , இடது புறம் விஷ்ணு இருப்பதும் (விஷ்ணு என்று கையிலிருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் :-) தெரிகின்றதா ?

மேலே முதல் வரிசையில் தேவர்களும், அதற்கு அடுத்த வரிசையில் யக்ஷர்களும் (யானையின் மீது இருப்பவர்கள்) .. மலர் தூவி வாழ்த்த ..

மணமக்களின் நகைகளும், மணமகளின் நாணமும் மிக அருமையாய் வந்திருக்கும் சிலை ..

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விரல்களும்,மூக்கும், கண்களும் மிக மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றது ..

சிலையின் மொத்த பிரமாண்டத்தை காண்பிக்கும் வகையில் எடுத்த புகைப்படம் ஒன்று கிழே

இந்த சிலையில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று உள்ளது.. முன்பு பார்த்த சிலைகளின் Detail பார்த்தோமே அது தவிர வேறு எதாவது உங்கள் கண்களுக்கு தென்படுகின்றதா ?

இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?



இன்னும் இல்லையெனில், கிழே உள்ள புகைப்படத்தை பாருங்கள், மேலே உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள் ..


இப்பொழுது வித்தியாசம் தெரிகின்றதா ? .. எந்த கற்சிலைகளை பார்த்தாலும் எனக்கு எழும் முதல் கேள்வி.. இதில் தவறு நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று .. தவறு என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது அங்க ஹீனமான ஒரு சிலையைத்தான் ,

அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..

இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..



மேலே உள்ள இரு புகைப்படங்களில் இருக்கும் இந்த சிலையில் , ஷக்தியின் நாணத்தை காண்பிக்க , உடல் வளைத்து , தலை சாய்த்து, கால் கட்டை விரலால் மண்ணைக்கீறும் வகையில் செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..

யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(

நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....

அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)



கற்களின் காவியம் - எல்லோரா - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, டிசம்பர் 09, 2007
மேலும் சில எல்லோரவின் மிக அழகான சிலைகளை பற்றிய படங்களும் குறிப்புகளையும் பதிவதாக சொல்லியிருந்தேன், இதோ அதன் தொடர்ச்சி ....

பகுதி ஒன்று - 1 இங்கே

இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும் குறைவில்லாதது. சென்ற சிலையில் இருந்த சூழலில் மூன்றே கதாபாத்திரங்கள் தான், ஆனால் இங்கே பலர் இருப்பதால், நிகழ்வை காட்ட வந்த கலைஞனுக்கு நுணுக்கமாய் பார்த்து பார்த்து வடிக்க எத்தனையோ விடய௩கள் இருக்கின்றன ... நாங்கள் கவனித்தவற்றை பார்ப்போம்....

சூழல்:
சிவனும், ஷக்தியும் கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருவரின் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, இராவணன் சிவனின் மேல் கொண்ட அதீத பக்தியால் சிவனை கயிலை மலையோடு இலங்கை கொண்டு செல்ல முயற்சிக்கிறான். ஷக்தி பயப்பட, சிவன் தன் ஒர்றைக்காலால் மலையை அழுத்த இராவணனால் பாரத்தை தாங்க இயலாமல் தவிக்கின்றான்.

விபரங்கள்:
மேலிருந்து வருவோம் ...

இராவணன் கயிலையை அசைத்தும், பயந்த சில சிவகணங்கள் சிவனை வணங்குவதும், பலர் கீழே இராவணனுக்கு நிகழ்ந்திருப்பதை கண்டு வியந்து சிரிப்பதும் என சிலையில் மேலே உள்ளன ..

சில பூதகணங்கள் நடக்கும் செயலை கண்டு வியந்து போய் நெஞ்சில் கைவைத்து வியப்பை தெரிவிப்பதும் ...

ஷக்தி பயன்திருப்பதும், அவரை அமைதிப்படுத்த சிவன் ஷக்த்தியை அணைத்துக்கொண்டு தன் பக்கம் இழுத்துக்கொள்வதும்..

சிவனின் வலது கால் கிழே அழுத்தியிருப்பதை போல் தோற்றம் கொடுப்பதும்

பாரம் தாங்காத இராவணன் முகத்தில் உள்ள வலி தத்ரூபமாய் இருந்தது, மேலும் கூடின எடையை தாங்க இயலாமல் அவன் கழுத்து திரும்பி முகம் முதுகுப்பக்கம் வந்திருப்பதையும் காணலாம்

ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..



ராவணனின் இடதும் வலதும் உள்ளது ஷக்தியின் பூதகணங்கள்..

சில பூதகணங்கள் ராவணனின் நிலை கண்டு எள்ளி நகையாடுவதும் ॥ குறிப்பாய் ராவணனின் நீட்டியிருக்கும் வலது காலின் அருகில் இருக்கும் பூதகனத்தின் முகத்திலும் , கைக்குரிப்பிலும், முகம் சுழித்து நாக்கை துருத்தி கிண்டல் பண்ணுவது தெளிவாய் தெரியுது .....

அந்த பூதகனத்திற்கு மேல் உள்ளதுகள் ராவணனின் மேல் கற்களை வீசுவதும்,

அதற்கு பின் புறம் இருப்பவன் கையில் பாம்பை வைத்து ராவணனை பயமுறுத்திவிலக்க முயற்சிப்பதும் (இதை இரண்டாவது படத்தில் காணலாம்)


Shivas poothaganas laughing and teasing at raavana, originally uploaded by யாத்திரீகன்

ராவணனின் இடது புறமுள்ள பூதகணங்களில் ஒன்று, திரும்பிக்கொண்டு , தன் ஆடையை விலக்கி , பின்புறத்தை காட்டி அவனை அவமானப்படுத்துகின்றது॥ :-)

அதற்கு அடுத்து உள்ளது கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு ராவணனை அடிக்க, அதற்கு பின்புறமுள்ளதுகள் சங்கு, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உரக்க வாசித்து ராவணனை பயமுறுத்த முயற்சிக்கின்றன ...


சிலையின் உயரம், ருத்ர தாண்டவத்தின் உயரத்தை போலவே பிரமாண்டத்துக்கு குறைச்சலில்லை

இப்படி அசந்து போகச்செய்த படைப்புகளின் வரிசையில் ஒன்று இந்த சிலை ....

அடுத்து பார்க்க போவது, எங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு நிகழ்வுக்கான சிலை :-)

கற்களின் காவியம் - எல்லோரா - 1

Published by யாத்ரீகன் under , , , , , on சனி, டிசம்பர் 08, 2007
எல்லோரா குகைச்சிற்பங்கள் ! நம்மில் பலரால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படிக்கப்பட்டு மறக்கப்பட்ட இடம். அசோகர் மரம் நட்டார் என்பதோடு, அஜந்தா எல்லோரா சிற்பங்களுக்கு புகழ் போனது என படித்து மட்டும் கண்ணில் காணாமல், அதன் அழகு பலருக்கு தெரியாமல் போன இடம்.

சில மாதங்களுக்கு முன், அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு சென்ற பயணத்தின்போது எடுத்த படங்கள், இங்கே செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்காகவும், இந்தியாவிலிருந்தே இங்கே போகாமலிருப்பவர்களுக்கும் இந்த பதிவுத்தொடர்.....

(டெம்ப்லெட்-ஐ) வார்புருவை சரி படுத்தி மறுபடியும் தமிழ்மணத்தோடு இணைய உதவி புரிந்த சி.வி.ஆர்-க்கு நன்றி..


இந்த படத்திலிருக்கும் சிவனின் ருத்ர தாண்டவத்தை பற்றியே ஒரு பதிவுத்தொடர் எழுதலாம், அந்த அளவுக்கு என் உள்ளம் கொள்ளை கொண்ட சிலை. மிகவும் பிரமாண்டமாய், தத்ரூபமாய், உயிருடன் எழுந்து வந்துவிடுமோ என ஒரு நொடியாவது நினைக்க வைத்த சிலை. இத்தனை பிரமாண்டத்திலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும், நுணுக்கமாக கவனித்து கவனித்து செதுக்கியிருக்கும் சிலை. வழக்கமான நகைகள் மட்டுமின்றி, அந்த காட்சியின் உணர்வுகள், அந்த காட்சியில் இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் பங்கும்.. என பொன்னியின் செல்வனின் வரும் கல்கியின் வர்ணனை போன்று, மிக மிக அனுபவித்து, விலாவரியாய் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.

இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..

சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.

அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.

தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.

வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,

சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..

சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..

சிவனின் புலித்தோலாடையும்,

எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥



இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....


ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 5

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 05, 2007

அஜந்தா குகைகளின் ஐகானாக கருதப்படும் ஓவியம். இது இருப்பது முதல் குகையில் ஆனால் நாங்கள் கடைசி குகையிலிருந்து வந்ததால் இதை மிக கடைசி நேரத்தில் தான் காண முடிந்தது. குகைளை மூடும் தருணத்தில் விளக்குகளை அணைத்து விட்ட பொழுது எடுத்த படம். ஒரு நிமிடம் விளக்குகள் இருக்கட்டும் என எவ்வளவு கேட்டும் அணைத்து விட்டார்கள் :-(



ஜட்க்கா கதைகள் எனப்படும் புத்தர் கதைகள்இலிருந்து சில நிகழ்வுகளை படம் பிடித்திருந்த ஓவியங்கள். ஆபரணங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள், உடல் அங்கங்களின் வளைவுகள், உடல் நிறங்கள் வரையில் நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள்.


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...



ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


மேலிருக்கும் ஓவியத்தை கூர்ந்து கவனியுங்கள், பின்னாலிருக்கும் பெண்ணின் மார்பகத்தைப்பாருங்கள், தொடையில்/முட்டியில் அமுங்கியிருகும் விதத்தை பாருங்கள்.. இத்தனை நுணுக்கமாய் யாராலும் கவனிக்க முடியாத ஒரு விஷயத்தை அந்த ஓவியன் எப்படி அருமையாய் வரைந்திருக்கின்றான் ..