யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நாலு இல்ல நாப்பது நாளாச்சு..

Published by யாத்ரீகன் under on புதன், ஏப்ரல் 26, 2006
பிடித்த நான்கு அரசியல்வாதிகள்:

* காமராசர்
- எங்கள் தலைமுறைக்கு முந்திய தலைவராயினும், இவர் வாழ்ந்த வீட்டை சமீபத்தில் கண்டபோது ஏற்பட்ட மன அதிர்வு விவரிக்க இயலாது.
* லெனின் - ஒரு நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிக்காட்டிய மன உறுதி
* மாசேதுங் - சாதரண குடியானவனின் வீட்டில் பிறந்து, பல எதிர்ப்புக்களிடையே ஒரு நாட்டின் நிலையையே உயர்த்திக்காட்டிய மன உறுதி.
* திரு.மோகன் (எங்கள் தொகுதி எம்.பி) - இவரின் எளிமையும், சாதரண மக்களிடம் கொண்ட அணுகுமுறையும், இந்த காலத்திலுமா என்று ஒரு நொடி தோன்ற வைக்கும்.

இதில் தனிப்பட்ட குணங்களுக்காக என்பதை விட ஒரு அரசியல்வாதிகளாக இவர்களின் அணுகுமுறையும், நாட்டுக்கும் மக்களுக்கும் இவர்கள் விட்டுச்சென்றவற்றை வைத்தே குறிப்பிட்டுள்ளேன், இவர்கள் ஒவ்வொருவரும் சாதித்த களங்களின் சூழ்நிலைகள் வேறு, அதலால் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவரில்லை என்பதால் இதில் தர வரிசையொன்றும் இல்லை.

பிடித்த நான்கு படங்கள் (வசனங்களுக்காகவும்):

*தில்லு முல்லு
- "ரெட்டைப்பிறவி என்ன உங்க குடும்ப வியாதியா ?"
*மைக்கேல் மதன காமராஜன் - "நல்லா மீன் பிடிக்க தெரிஞ்சவாளா கூட்டிகிட்டு வரவா ?"
*வீடு - வசனங்கள் அவ்வளவாய் இல்லாததனால்
*குருதிப்புனல் - "வீரம்னா என்ன தெரியுமா ? "

இப்போதான் படங்களை பொறுமையா, நுணுக்கமா இரசிக்க ஆரம்பிச்சிருக்குறேன், இதுக்கு முன்னேயெல்லாம் அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன் படிக்க இருந்த பொறுமை படம் பார்க்கும்போது இருந்ததில்லை :-D

பிடித்த நான்கு உணவு வகைகள்:

*ஆப்பம் தேங்காய்ப்பால் நாட்டுச்சக்கரை
- வீட்டிலிருந்தவரை, ஞாயிறு ஆனா போதும் 10 மணிக்கு ஆரம்பிக்கும் படலம் 12/12:30 ஆகிவிடும், அப்பா திட்டதிட்ட அம்மாவின் அன்பினால் குறைந்தது 30ஆவது உள்ளேபோகும் :-D
*பழையசோறு உப்புக்கல் நல்லெண்ணெய் நீச்சத்தண்ணி - பழையசோற்றை தண்ணிலருந்து பிழிஞ்செடுத்து, கல் உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அம்மா பிசைந்து, ஒவ்வொரு உருண்டையோடு ஒரு மாவடு வைத்து கொடுக்க, ஆஹா..!!! எந்த சுவையும் இதற்கீடாகாது, சைனஸ் இருக்குடா வேணாம்னு தாத்தா திட்ட திட்ட, வயிறு முட்ட இதை சாப்டுட்டு, சொம்பு நெறைய நீச்சத்தண்ணி குடிச்சிட்டு அப்படியே கண்ணு சொருகும் பாருங்க.. சொல்லி வெவரிக்குற சொகமா அது..
*வெந்தயக்களி - சுட சுட தட்டுல வச்சதும், கை பொசுக்குனாலும் பரவாயில்லைனு அதுல ஒரு குழி பறிச்சு, அதுல நல்லெண்ணெய் விட்டு, பக்கத்துல நாட்டுச்சக்கரை தொட்டுகிட்டு சாப்பிடனும்.. தம்பிங்க வேணாம் வேணாம்னு கத்தினாலும் எனக்காக மட்டுமாவது கொஞ்சம் பண்ணும் அம்மா நியாபகம் வருதுங்க..
*முனியாண்டிவிலாஸ் பரோட்டா சால்னா - கல்லூரில நண்பர்கள் ட்ரீட், வேலை கெடச்சாலும் சரி, பல்ப் கெடைச்சாலும் சரி, வித்தியாசம் பார்க்காம பரோட்டாவும் சால்னாவும் கார சாரமா போட்டி போட்டுகிட்டு உள்ள போகும் பாருங்க.. அதுலயும் யார்தட்டுல இருந்து யார் சாப்புடுறானு தெரியாம சாப்பிடுவொம் பாருங்க அது வாழ்க்கை..

இதுல மட்டுமாவது இன்னும் 5/6 கேட்டுருக்கலாம் ;-) ஆனால் ஒண்ணு மட்டும் நெசம்ங்க... இதே உணவுவகைகளை ஹோட்டல்லயோ இல்லை நம்ம தட்டுல இருந்து எடுத்துக்க யாருமில்லாமலும், நாம எடுத்துக்க வேறு தட்டில்லாமலும் சாப்ட்டா அதுல இந்த ருசி இருக்க மாட்டேங்குதுங்க..

விடுமுறைக்கு செல்ல விரும்பும் நான்கு இடங்கள்:

*மானசரோவர்
- அப்படியே அந்த மானசரோவர் ஏரி அருகே அமைதியா உட்கார்ந்து அந்த சுத்தமான தண்ணியில் பிரதிபலிக்கும் ஒளியை அமைதியின் பிண்ணனியில் இரசிக்கவேண்டும்.. இது ஒரு கனவு இடம்..
*இமயமலை - சுற்றுலாவாக இல்லாமல் மலையேற்றமாக செல்ல விரும்புகின்றேன், விஜய் டீவியில் ஒருமுறை இத்தகைய ஏற்றத்திற்கு தேர்ந்தேடுப்பதை பார்க்கும்போது கலந்துகொள்ள முடியாததற்கு எவ்வளவு வருத்தப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும், அதே வருத்தம் கொல்கத்தவிலிருந்தபோது டார்ஜிலிங் சென்றபோது அங்கே இருந்த மலையேற்றப்பயிற்சி பள்ளியை பார்க்கும்போது சிறிது எட்டிப்பார்த்தது..
*கோனார்க் சூரிய கோவில் - யாருடைய தொந்தரவில்லாமல் பல விருப்பப்பட்ட கோணங்களில் ஸ்கெட்ச் போட
*தஞ்சை பெரிய கோவில் - மேற்கூறிய அதே காரணங்களுக்காக..

இவற்றை வெறும் கனவுகளாக, ஆசைகளாக இல்லாமல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றத்தொடங்கியுள்ளேன், இந்த வரிசையின் முதலிரண்டு நிறைவேறும் நாளை எதிர்பார்த்திருக்கின்றேன்

நான் அழைக்க விரும்பும் நால்வர்:
அட நான் உட்கார்ந்து எழுதுறதுக்குள்ள எல்லோரும் எல்லாத்தையும் அழைச்சு முடிச்சிட்டாங்க, அழைக்கப்படவுங்களும் எழுதிமுடிச்சு மேலும் சிலரை அழைச்சு.. எல்லாம் ஓஞ்சு போச்சு.. ஆக இத்தோட முடிச்சுகிறேங்க.. (மன்னிச்சிருங்க சுதர்சன்)

மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளை கூட கிடையாதா..

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 09, 2006

"பருப்பு வைக்குற குக்கர்ல பாம் வைக்கிறாங்க படுபாவிங்க..." இத்தகைய கமெண்டுடன் ஒரு கவர்ச்சிப்படம்

இதை வெளியிடுவது சமீபகாலத்தில் முளைத்த ஒரு மாலை தினசரி.

விற்பனையைக்கூட்ட, தவறான தகவல்களும், பரபரப்பு பொய் செய்திகளும், பாதி தலைப்புச்செய்திகளும்,அருவருக்கத்தக்க படங்கள் மட்டுமின்றி அதற்கு அருவருக்கத்தக்க கமெண்டுகளும் வெளியிட்டது போதாதா...

நாட்டில் தற்போது நிலவும் நிலையில், மக்கள் பலர் பலியான சம்பவத்தை இப்படி ஒரு அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தி விளம்பரமும், இலாபமும் தேடவேண்டுமா ?

இதற்கு யோசனை கொடுத்தவருக்கு/அதை அப்ரூவ் பண்ணியவருக்கு மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளையாவது கிடையாதா ?

ஊடகங்களின் நிலமை இவ்வளவு மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது..

சிறிது அமைதிவேண்டும்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பேசிடும் முன் கேட்டிடு
எழுதும் முன் யோசித்திடு
செலவழித்திடும் முன் சம்பாதித்திடு
விமர்சிக்கும் முன் பொறுமை காத்திடு
பிரார்த்திக்கும் முன் மன்னித்திடு
கைவிடும் முன் முயற்சித்திடு

கற்றுக்கொள்ளவேண்டியவை பல
கற்றுக்கொண்டவற்றை
வாழ்வில் அதை பயன்படுத்தவேண்டிய பல
தேவையற்ற சஞ்சலங்கள் பல

தனிமையும், இசையுமே இப்போது தேவை, கடலலையே இசையானால் அதைவிட இனிமை எதுவுமே இல்லை....

தேவையில்லாத மகளிர் தினம்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டாம்

உயர்த்தி, வாழ்த்தி கவிதைகள் படைக்க வேண்டாம்

தனியே இட ஒதுக்கீடு என்ற பிச்சை இட வேண்டாம்

பெண்ணுக்கும் கல்வி உரிமை உண்டு என அரசாங்கமே பிரச்சாரம் பண்ண வேண்டாம்

பெண் குழந்தையை கருவிலேயே கலைக்க வேண்டாம் என பிரச்சாரம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று சிறப்புத்திரைப்படம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று தெரிந்த பெண்களை கவர பரிசுப்பொருட்கள் வேண்டாம்

மகளிர் தினமென்று தனியே கொண்டாடவே வேண்டாம்

ஆணைப்போலவே பெண்ணும் பூமியில் வாழ்ந்திட வந்த இன்னொரு உயிரினமென்று மதித்திட்டாலே போதுமே....

அதை இனிவரும் தலைமுறையிடத்தும் விதைத்தால் போதுமே..

அதிமுக Vs திமுக

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மார்ச் 07, 2006

ஹீம்... அதிமுகவா, திமுகவானு எல்லோரும் அடிச்சிகிறாங்க...

கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா..

இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான ஆண்டு அனுபவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிய கட்சிகளிடமிரிந்து மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...


அரசியலில் நேர்மை, கொள்கை, சுயமரியாதை என்று பேசும் எத்தனை பேர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை பிடிப்பை பாராட்டுவார்கள், மதிமுகவிற்கு திமுக கூட்டணியிலிருந்தால் ஓட்டு போட்டிருப்பர் ?


ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், அதற்கு கடிவாளம் வைகோ போடுவதற்கு வாய்ப்பும் அமையலாம் அல்லவா ?

அல்லது தேர்தலில் அதிக இடம் வைகோ ஜெயித்தபின், மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் அல்லவா ?

என்ன சொல்றீங்க.. ?!

இரத்ததானம் செய்வோம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 06, 2006
பாருங்கள் !!! ஒரு நல்ல காரியத்திற்கு சிறிது இரத்தம் இழப்பது பெரிய விஷயமில்லை...

பட உதவி: நன்றி அரவிந்த்

தானத்திலே சிறந்ததெது ?

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006



நண்பர்: நான் ஒல்லியா இருக்கேன், நான் இரத்தம் குடுக்க மாட்டேன்பா
நான்: குண்டாயிருந்தா நிறையவும், ஒல்லியா இருந்தா கொஞ்சமும் எடுக்க மாட்டாங்க, ஆரோக்கியமா இருந்தா போதும், கொஞ்சம்தான் எடுப்பாங்க
மனசாட்சி: மவனே, தின்னு கொழுத்து போயிருக்க, உன்னை கடத்திட்டு போய் ஒரு பாரல் எடுக்கலாமேடா, அவனுக்கென்னடானா 10 பாட்டில் இரத்தம் தேவை நீங்க ரெண்டு பேரும் இந்த பேச்சா பேசுறீங்க...

நண்பர்: ஹைய்யோ, இரத்தம் குடுக்குறது, எங்க மதத்துல தப்புங்க
நான்: இதுல தப்பு என்னங்க இருக்கு, ஒருத்தருக்கு உதவிதானே பண்றோம்..
மனசாட்சி: !%^&!@!@#

நண்பர்: நிறைய இரத்தம் எடுக்க மாட்டங்கள்ல ?
நான்: இல்லீங்க நம்ம உடம்புல சராசரியா 5 முதல் 6 லிட்டர் இருக்கும் அதில் 300 மிலி மட்டும்தாங்க எடுப்பாங்க.
மனசாட்சி: இவர் அன்பே சிவம் படம் பார்க்கலையா?

நண்பர்: நீங்க இதுதான் முதல் முறையா ?
நான்: இல்லீங்க இதுக்கு முன்னாடி குடுத்திருக்குறேன்
மனசாட்சி: கிட்னியாங்க கேட்டாரு, கொஞ்சம் இரத்தம் தானே...

நண்பர்: டயாலிசிஸ்னா என்னங்க ?
இன்னொரு நண்பர்: அதுவா... உடம்புல இருக்குற இரத்தத்தை மாத்துவாங்க.
நான்: இல்லீங்க, சிறுநீரகம் வேலை செய்யலைல, அதுனால இரத்தத்தை சுத்தப்படுத்த உடம்பால முடியாது, அதுனால ஒரு மிஷின் வச்சி இரத்தத்திலருந்து அசுத்தத்தை பிரிச்சு எடுப்பாங்க..
மனசாட்சி: நமீதாவோட லேட்டஸ்ட் படம் கேளு அவனுக்கு தெரியும், ஒக்காமக்க வெளுக்கனுமடா ஒன்னை...

நண்பர்: அப்போ எதுவரைக்கும் இது பண்ணவேண்டி இருக்கும் ?
நான்: மாற்று சிறுநீரகம் பொருத்துறவரைக்கும் பண்ணவேண்டி இருக்கும். மாற்று சிறுநீரகமும் யாராலயும் குடுக்கமுடியாது, டிஸ்யூ மாட்ச் ஆகவேண்டும் அதுவும் பெற்றோருக்கு மாட்ச் ஆகும் என்று சொல்ல முடியாது, பின்னர் மருத்துவ கவுன்சில் ஒன்றின் முன் தானம் செய்பவர் ஆஜராகி மனமுவந்து குடுப்பதை தெளிவுபடுத்தவேண்டும், என பல பார்மாலிட்டீஸ் உண்டுங்க...

இதையெல்லாம் கேட்டவர் யாருனு நினைக்குறீங்க, மருத்துவமனையில் அருகிலிருந்த ஒரு கிராமத்தவர் ? இல்லை !!!, சாதாரண ஒரு பாமரர் ? இல்லை !!!,

கேட்டது, சென்ற வருடம் பொறியியல் படித்து முடித்து, தற்போது கணிப்பொறி மென்பொறியாளராய் பணி புரிகின்றார்....

ஆச்சரியமாய் இருக்கின்றதல்லவா ? எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது... படித்தவர்களே இப்படியா என்று :-(

தேவையறிந்ததும் உடனே இரத்ததானம் அளிக்க வந்த அவருடைய மனப்பான்மையை பாரட்டுகின்றேன் அதே நேரத்தில் அவருடைய அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.....

இரத்ததான தகவல்கள்:
1) 18 வயதுக்குமேல், 45 கிலோவுக்கு மேலிருந்தால் போதும்
2) சராசரியாக 5 முதல் 6 லிட்டர் இரத்தம் நம் உடம்பில் உண்டு
3) யாராயிருந்தாலும், எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தாலும் 300 மி.லி மட்டுமே எடுப்பார்கள்
4) 24/48 மணி நேரத்துக்குள் இரத்தம் சுரந்துவிடும்
5) இரத்ததானத்துக்கு பிறகு சிறப்பு உணவுப்பழக்கமோ, சிறப்பு உணவோ தேவையில்லை
6) 48 மணி நேரத்துக்கு முன் எந்தவித மருந்தும் உட்கொண்டிருக்க கூடாது
7) கடந்த மூன்று வருடங்களில் ஜான்டிஸ் இருந்திருக்க கூடாது
8) தானம் செய்பவர்களுக்கு அனீமியா, சர்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்க கூடாது

இதோடு சுத்தமான ஊசிகள் பயன்படுத்துவதை நாமும் உறுதிப்படுதிக்கொள்ளவேண்டும், காரண்ம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமலிருக்க.

பயப்படாமல் இரத்ததானம் செய்திடுங்கள், ஓர் உயிரை காத்திடுவோம்..

மேலும் தகவல்களுக்கு:

1) http://members.rediff.com/bloodbank/bloodbanking.htm
2) http://www.iisc.ernet.in/medicare/bld.htm
3) http://www.google.co.in/search?hl=en&q=blood+donation+facts&meta=cr%3DcountryIN

உடலினை உறுதி செய்

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006
ஒன்பது வயது குழந்தை ஒன்றுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலை எந்த வகை இரத்தமாயினும் பரவாயில்லை, ஆனால் சில உடல்நலக்குறைபாடுகள் இல்லாமலிருக்க வேண்டும் என்று ஒரு மின்னஞ்சல் கிடைத்தவுடன்,

அதில் குறிப்பிட்டிருந்தவர்களை கூப்பிட்டு என் விருப்பத்தை சொல்லிவிட்டேன், சிறிது நேரத்தில் வந்து கூட்டிச்செல்வதாக சொன்னார்கள்.

விடாத இருமலும், சளியும் நேற்றுதான் குறைந்திருந்ததாக தோன்றியது, ஆனாலும் ஒரு சின்ன தயக்கம், மருத்துவமனை சென்றபின் இந்த உடல்நலக்குறைவை காரணம் காட்டி என்னை மறுத்துவிடுவார்களா என்று...

உடனே ஜீவிக்கு கூப்பிட்டு உறுதிசெய்துகொண்டேன், இந்த உடல்நலக்குறைவு எந்த வகையிலும் இரத்ததானம் செய்வதை பாதிக்காது என்று.. நல்லவேளை..

அங்கே சென்றபின் இந்த காரணத்தை காட்டி மறுத்திருந்தால் மனது மிகவும் கஷ்டமாயிருந்திருக்கும், இதற்காவது நம் உடல்நிலையை நல்லபடியாக வைத்திருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்....

காதல் ரோஜாக்களிலிடையே நசுங்கிப்போன ஒரு கொடுமை

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 15, 2006

காதல், உயிர், இதயம், ரோஜா, ஜென்மம், பந்தம் எனும் வார்த்தை ஜாலங்களிடையேயும்....

" இருபதாம் நூற்றாண்டுங்க இது , சாதியாவது மண்ணாவது, அதெல்லாம் இப்போ யாருங்க பாக்குறா, சும்மா அரசியல் பண்றதுக்கும் பொழப்பு நடத்துறதுக்கும்தான் இன்னும் சில பேர் அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க... இன்னைக்கு பாருங்க உயர்ந்த சாதினு சொல்றாங்கள்ல அவுங்கள்ல எத்தனை பேரு தகுதியான திறமையிருந்தும் ஒண்ணுமே இல்லாம இருக்காங்க, தாழ்ந்த சாதினு சொல்றாங்கலே அவுங்களப்பாருங்க சலுகைமேல சலுகை வாங்கிகிட்டு எவ்வளவோ உயர்ந்த நிலையில இருக்காங்க.. காலம் மாறிப்போச்சுங்க, இன்னும் அதே பழைய உழுத்துப்போன சட்டங்களையும், சலுகைகளையும் வைச்சிருக்க கூடாது, அப்படி இருந்தா அடுத்து அடக்கப்பட்டு வைச்சிருக்குற அவுங்க போராடுவோம்னு கொரலு விட ஆரம்பிச்சிட்டாங்க...."


அங்கங்கே இந்த தலைப்பில் சண்டைகளிடையேயும், வாக்குவாதங்களிடையேயும்...

சப்தமின்றி அமுங்கிப்போனது ஒரு செய்தி....


செய்தி: இராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில், உயர்சாதியினர் எனப்படுபவர்களின் பெண்ணை கீழ்சாதியினர் எனப்படுபவர்களில் ஒரு ஆண் காதலித்ததற்காக, அந்த ஆணின் தங்கையை பட்டப்பகலில், ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தியுள்ளனர் உயர்(?)சாதி எனப்படுவோர், இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த/இருந்த உயர்சாதி எனப்படும் அவர்களில் பெண்கள், இந்த கொடுமையை தடுக்காமல், இந்த பரிதாபத்திற்கு உரிய பெண்ணை வண்புணர்ந்துவிடுங்கள் என்று கோஷமிட்டதுதானாம்.


யாருங்க காரணம் ?

பணம்,பதவி,சமூகம் என அனைத்திலும் பலம் பெற்றுவிளங்கும் உயர்சாதி எனப்படுவோரா ? இல்லை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடையாளம் கொண்டு சலுகைகள் பெற்று பணம்,பதவி,சமூகம் என்பனவற்றில் பலம் பெற்று, தன் மக்களை, தன் இனத்தை உயர்த்த வழிமுறைகாணாத மக்களா ?


இது புரிஞ்சா ஏங்க இந்த கொடுமையெல்லாம் நடக்குதுனு யாரோ இங்க சொல்றாங்க.. ஹீம் :-( வெறுமன வருத்தப்படுறதவிட, நம்ம குழந்தைகள், நம்ம கட்டுப்பாடின் கீழ் வளர்கின்ற குழந்தைகள் கிட்ட இந்த வேற்றுமைகளை புகுத்தாம வளர்க்கலாமே... உணவகத்தில் வேலை செய்ற சிறுவனை குழந்தைகள் முன் விரட்டாம நன்றாக நடத்துவது போன்ற செயல்கள் மூலம் நாம செயல்காட்டியாவும் இருக்கலாமுல்ல ?


நேத்து இந்த செய்தி NDTV செய்தி சானல்ல கேட்டதிலருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது, முன்பின் தெரியாத அந்த மனிதர்கள் மீதும், இவர்களை இப்படி பிரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீதும் பயங்கர கோபம்,ஆத்திரம்.... அதற்கு வடிகாலே இந்த பதிவு, மத்தபடி யாரையும் தாக்குறதுக்கோ, தமிழ்மணத்துல புகழடைஞ்ச உள்குத்து,வெளிக்குத்துக்காகவோ கிடையாது... ரொம்ப சென்சிடிவ்வான விஷயம் இதுனு தெரியும், இருந்தாலும் மனசை குடைஞ்சுகிடு இருந்தது

கறுப்புதினம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், பிப்ரவரி 14, 2006
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

தாவணி போட்ட தீபாவளி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 10, 2006
நேத்துதான் 16 வயதினிலே படம் எதோ ஒரு சேனல்ல ஓடிக்கிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பையில பக்கத்து ரூம்லருந்து சத்தம்.. "நான் சப்பாணி இல்ல கோவாலகிருஸ்ணன்"னு.. அட நம்ம பரட்டை அடிவாங்குற காட்சினு வேகவேகமா ரூமுக்கு போய் பார்த்ததுக்கப்புறம்தான் திருப்தியாச்சு :-)

சரி அதுல என்ன Splனு கேட்குறீங்களா.. அதுல ஒரு காட்சில நம்ம கதாநாயகியும் அவுங்க பட்டணத்து தோழிகளும் தாவணியோட சுத்திகிட்டு இருந்தாங்க..

அட எவ்ளோ அழகான உடை, இரசனையானது இப்போ எங்கே இதை பார்க்க முடியுது, சினிமாவில கூட எப்பயாவது நம்ம கதாநாயகனுக்கு காதல் ஆரம்பிக்குற காட்சில மட்டும் கதாநாயகி தாவணில வருவாங்க, அதுகப்புறம் ஒரே நாகரீகம்தான் ;-)

ஹைய்யோ ஆத்தா !! நான் ஒண்னும் பெண்விடுதலைக்கு எதிரி இல்லீங்க... , "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே"னு பாடுற காட்சில மட்டும் வேட்டி மடிச்சி கட்டுற புரட்சித்தமிழன் இல்லீங்க.. எதோ என் ரசனையையும் ஏக்கத்தையும் சொன்னேங்க.. (நம்ம தமிழ் வலைப்பூ பெண் நண்பர்கள் யாரும் நம்மல தப்பா புருஞ்சிகிட்டு விலாசிரக்கூடாது பாருங்க.. அதான் அந்த சுய விளக்கம்..)

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட அடுத்தநாள், அதாங்க இன்னைக்கு காலைல அலுவலகத்துக்கு பஸ்ல வரும்போது ஒரு நிறுத்தத்துல ஒரு பொண்னு ஏறுனாங்க, ஒரே பார்வையில ஆள அசத்துற அழகொன்னும் இல்லீங்க, பளிச்சுனு கண்ணை உறுத்துற மாதிரி பஞ்சுமிட்டாய் கலர் உடையும் இல்லீங்க,

சாதரணமான மெரூன் நிறத்துல மேலாடை, வெள்ளை நிறத்துல தாவணி அதுல மெரூன் நிறத்துல ஓரம், பெரும் வேலைப்பாடலெல்லாம் இல்லிங்க, ரொம்ப எளிமையா ....

அட பளிச்சுனு இருந்தாங்க அந்த உடையில

எனக்கோ சந்தோசம் கொல்லல, ஜெமினில இறங்குற வரைக்கும் கிடைச்ச சிறு சிறு சந்தர்பங்கள்ல அவுங்கள பார்த்தேனோ இல்லையோ, அந்த தாவணி உடையை இரசிச்சேங்க....

ஹீம் இனி எப்போ பாக்கப்போறோமோனு பெருமூச்சோட...

ஏங்க நீங்க எப்போ பாத்தீங்க கடைசியா ?!!?!

தமிழ் வலைப்பூ உலகிற்கு இது புதுசு

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 08, 2006
வருங்கால சந்ததிக்கு வாழ இடமளிப்போம்

ஆங்கில வலையுலகத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் TAG, நாம் ஒரு விஷத்தைப்பற்றி பதிவு பண்ணிவிட்டு பின்னர் நாம் யாரிடமிருந்தும் அதைப்பற்றிய கருத்தை அறிய விரும்புகின்றோமோ அவர்களை TAG செய்வதன் மூலம் அவரும் அதைப்பற்றி கட்டாயம் பதிவு பண்ணவேண்டும் என்பது பதிவு செய்யப்படாத வலையுலக சட்டம்.

அதை மீறுபவர்கள் "அந்நியனிடம் மன்னிப்பு கேட்டு நூறு பின்னூட்டங்கள்" இடனும், இடாதவுங்க வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதாங்க இன்னும் எளிமையா சொல்லனும்னா விட்டகொற தொட்டகொற :-)

சரி எதுக்கு இவ்வளவு அறிமுகம் ? சக வலைப்பதிவு நண்பர் ப்ரியா கேட்டுக்கொண்டத்துக்கு இணங்க இந்த பதிவு.

சரி விஷயத்துக்கு வருவோம்..

1) மரம் வளர்ப்போம்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்பதென்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிட்ட இன்றைய கான்கிரீட் கலாச்சாரத்தில், பிறந்தநாள் கேக்குகளிடையே ஓர் மரம் நட்டு அதை மறக்காமல் பாதுகாப்போம். எங்கங்க மரம் வளர்குறதுக்கு இடம்னு நீங்க கேக்குறது புரியுது, பள்ளிக்கூடங்கள்ள, கல்லூரிகள்ளனு நடலாம்.. வேறு மாற்று (ப்ராக்டிகலான) யோசனைகள் இருக்கா ?!

2) அன்பு வளர்ப்போம்:
வாழும் வகையில் பூமியை விடவேண்டுமென்றால், அதில் உடன் அமைதியாய் வாழ மனிதர்களும் வேண்டும், ஆக குழந்தைகளிடம் வேற்றுமை பாராமல் அன்பை செலுத்தும் குணத்தை பெரியவர்களாகிய நாம் வளர்க்க வேண்டும்.

3) ப்ளாஸ்டிக் குறைப்போம்:
மனித கண்டுபிடிப்புகளில் மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நோக்கி செல்லத்தொடங்கி உள்ளது. தேவையற்ற ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம். உதாரணம், தேவையற்ற நேரங்களிலும், சிறு,சிறு பொருட்கள் வாங்குகையிலும், துணிப்பைகளோ (அது பழைய பேஷனாக தோன்றினால்), கட்டை கைப்பிடிகள் வைத்த அலங்கரிக்கப்பட்ட பைகள் பயன்படுத்தலாம்.

4) பேப்பர் டிஷ்யூக்கள்:
இப்பொழுது பேஷனாகிவிட்ட காகித டிஷ்யூக்கள், இதற்கு பதில் துணி கைக்குட்டைகளை பயன்படுத்தினால், மரம் நடாவிட்டாலும், இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் காப்பாற்றலாம்.

5) விலங்குகளை காப்போம்:
விலங்குகள் இயற்கை உணவுச்சங்கிலியின் முக்கியமான ஓர் பகுதி. விலங்குகளை நேரடியாக காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, வளர்க்க முடியாவிட்டாலும் சரி, விலங்குகளின் தோல்,கொம்பு.. போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள பொருட்களை தவிர்ப்போம்.

6) மக்கும் குப்பை, மக்காத குப்பை:
மக்களுக்கும், அதை கையாளும் பணியாளர்களுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி மேலும் விழிப்புணர்ச்சி வேண்டும், அவைகளை தனித்தனியே பிரித்து கையாளுவதில் தொழில்நுட்பரீதியில் உயரவேண்டும்.

7) மறு சுழற்சி:
மறு சுழற்சி பற்றி மக்களுக்கும், பொருட்கள் தயாரிப்பவர்களுக்குமான விழிப்புணர்ச்சி கூடி, அதை அதிநவீன முறையில் நடைமுறைப்படுத்தி, அதில் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.

8) கல்வி:
இவையனைத்தும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இதை வெறும் மனனப்பாடம் செய்யும் நோக்கில் கற்பிப்பதைவிட தொலைநோக்கு பார்வையில் ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும்.

இதில் சொன்னவற்றை என்னால் இயன்றவரை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றேன், முக்கியமாக 1 முதல் 5 வரையிலானவற்றை கட்டாயமாக கடைபிடிக்கின்றேன், 6,7 பற்றி அதிகமாக தெரியவில்லை, யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.

இந்த விட்டகுறை தொட்டகுறையை (அதாங்க TAG), ப்ரியன் தன் எண்ணங்களை ஒரு கவிதையாக வடிக்க வேண்டும்.

தயவு செய்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள் !!!

Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 06, 2006

சென்னை வந்த உடன் நண்பர்களுடன் நேரம் களிக்கவேண்டுமென்று நினைத்தது உண்மைதான் அதற்க்காக இப்படியா :-( , சென்னை வந்ததிலிருந்து மருத்துவமனையிலேயே நண்பர்களுடன் நேரம் களிப்பதாய் அமைந்துவிட்டது...


இதைப்படிக்கும் அதிவேக விரும்பிகளே, அதிவேகத்தை துணிகரமான வீரச்செயலென்று நினைப்பவர்களாய் இருந்தால் சுவற்றில் சென்று முட்டிக்கொள்ளுங்கள்..


சென்ற வாரம் என் நண்பன் சீனியின் இந்த பதிவை படித்ததும்,மிகவும் உற்சாக வேகத்திலிருந்தேன், ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு பதிவை பதிப்பேனென்று எதிர்பார்க்கவில்லை....


நேற்று சென்னையில் என் மற்றொரு கல்லூரித்தோழனுக்கு ஓர் விபத்து...


அதிவேகத்தில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்து, மோதிய வேகத்தில் நசுங்கிய வாகனத்திலிருந்து அவனை மீட்பதே கஷ்டமாயிருந்ததாம்..


கால் முட்டியிலும், முட்டிக்கு மேலும் பட்ட அடியில் கிரிக்கெட் பந்து வைக்கும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது,காலில் பல இடங்களில் சிக்கலான எழும்பு முறிவு, கையில் ஐந்து இடங்களில் எழும்பு முறிவு, நெஞ்செலும்பில் காயம், முகத்திலும் கண்ணாடி தெரித்ததில் காயம், புருவம் ஒன்று முழுவதுமாய் காணாமல் போய்விட்டது, மூளையின் உள் இரத்தக்கசிவு, அது இரத்தக்கட்டானால் கோமாவிற்கு சென்றுவிடும் அபாயம் என எவ்வளவு சிக்கல்கள்..


நேற்று இரவு அறுவைசிகிச்சை நல்லபடியாய் முடிய, காலில் பல இரும்பு தகடுகள், நட்டுகள் பொருத்தப்பட்டன.., இன்று மதியம் செய்யப்போகும் Cற்T ஸ்கேனில் இரத்தக்கசிவுன் நிலவரம் தெரிந்துவிடும்.


ப்ளேட்டுகள் பொருத்தப்பட்டதால் 12 நாட்கள் மருத்துவமனையிலும், 3 மாதங்கள் மருத்துவமனையிலும் இருக்க வேண்டும்.. அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... உடைந்த எலும்புகள் ஒட்டவேண்டும்,அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... பொருத்திய இரும்பு ப்ளேட்டுகள் அகற்றப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை...நட்டுகளின் ஓட்டைகள் நிரப்பப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... முழுவதுமாய் முன்பு போல் இயல்பாக இல்லாமல் ஒருவித கவனத்துடனேயே இருக்கவேண்டும்..
வேறு என்ன நடந்துகொண்டிருக்கின்றது ?


நிர்வாகவியல் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியிருந்த நேரம், நல்ல அனுபவங்கள் கிடைத்துக்கொண்டிருந்த நேரம், தன் கனவுகள், எதிர்காலம் என தெளிவாக திட்டமிட்டு போய்க்கொண்டிருந்த நேரம், நல்ல நண்பனாக, அன்புள்ள அண்ணனாக, நல்ல பிள்ளையாக இருந்தான்..


இன்று அவனையும் உடலால் காயப்படுத்திக்கொண்டு,அனைவரையும் மனதால் வருத்தப்படவைத்து, இந்த ஆறு மாதங்களில் அவன் வளர்ச்சியை ஈடுகட்டப்போவது எது ?


நல்ல வேளை நல்லபடியாகவே அறுவைசிகிச்சையும் நடந்து முடிந்துவிட்டது...


இவையெல்லாம் ஒரே செயலால் தவிர்க்கப்பட்டிருக்கலாம், சீட் பெல்ட் அணிந்திருக்கலாம், நள்ளிரவு நேர, குதூகலத்துக்கான அதிவேக பயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் வாழ்வில் இத்தகைய விஷயங்கள் இல்லாவிடில் சுவாரசியமேது என்பவர்களுக்கும், வாழ்வில் எதில்தான் ஆபத்து இல்லையென்பவர்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.. போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள்...


இந்த சின்ன விஷயத்துக்கு நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படவேணாமென்று பலர் நினைக்கலாம், நான் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை, இதை இவ்வளவு விலாவாரியாக விவரித்துக்கூறியதற்கு காரணம், இதைப்படிக்கும் சிலரில் ஒருவருக்காவது இதன் இயல்பு நிலவரம் புரிந்து கவனமோடிருக்கலாம் என்ற நம்பிக்கையில்...


வேகம் விவேகம் அல்ல


சீட்பெல்ட் அணியுங்கள், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுங்கள்... ப்ளீஸ் !!!!

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - என் பார்வை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 03, 2006

நண்பர் மார்க்கின் வலைப்பூவில் இந்த திருமணப்பரிசை முதன் முதலில் பார்த்த போது, அதில் ஏற்கனவே சிலர் மறுமொழி இட்டிருந்தனர். அவையெல்லாம் இவர்கள் அளித்த பரிசை, மிகவும் சிறந்த செயல் என பாராட்டியிருந்தனர். ஆனால் எனக்கு முதலில் தோன்றிய எண்ணமே, ஏன் ஒருவேளை உணவு இட்டதும், சிறிது நேரம் சாலையோரங்களை சுத்தப்படுத்தியதுமே அது மிகவும் சிறந்த செயலாகிவிடுமா ?


ஏன் காலம் காலமாய் ஒருவேளை உதவிசெய்தலே முன்னிறுத்தப்பட்டது...


"தர்மம் தலைகாக்கும்" என்ற சிந்தனையை விட "ஒருவனுக்கு மீன் பிடித்து குடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடு" என்ற சீனப்பழமொழியே என்னை மிகவும் கவர்ந்தது....


ஏன் அனைவரும் ஓர் குறுகிய காலத்துக்கான உதவியே அளிக்கவேண்டும், தொலைநோக்குப்பார்வையுடன், அவர்கள் இதற்குப்பின்னர் யாரிடமும் கையேந்திப்பிழைப்பு நடத்த வேண்டாமென்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையா ? , தான் தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள இவர்களைப்போன்றோர் தேவையென்ற எண்ணமா ?

இதற்காக பொருளாதார ரீதியா நடுத்தரக்குடும்பங்களில் இருப்போர், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போர் உதவி செய்ய நினைக்கையில், உதவி பெறுவோருக்கு நீண்டகால பலன் தரும் உதவிகளை மட்டுமே செய்ய வேண்டுமென்று கூறவில்லை, அவர்களால் முடிந்தவற்றை செய்யலாம், இங்கே செய்யும் உதவியை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை, உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் மிகவும் மதிப்பிற்குரியது.


நான் முக்கியமாய் சுட்டிக்காட்டி கோபப்படுவது , பொருளாதார ரீதியாய் இயன்றவர்கள், உதவி செய்கின்றேன், சேவை செய்கின்றேன் என்ற பேர்வழியாய் தையல் மிஷின் வழங்குவதும், அயர்ன் பெட்டி வழங்குவது, இலவச வேட்டி சேலை வழங்குவதுமான அரசியல்வாதிகள் , ஏழை மக்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அதை படம் எடுத்துச்செல்லும், அதை கதை சொல்லும் வெளிநாட்டவர்கள் என்று...


எங்கள் நாட்டில் வறுமை உண்டுதான், அதை நீக்க எங்கள் தலைமுறை முடிந்தவற்றை செயல் படுத்திக்கொண்டு இருக்கின்றோம், நீங்கள் உங்கள் புண்ணியம் தேடிக்கொள்ள சேவை புரியும் இடமல்ல இது, பரிசு பெற பஞ்சத்தையும் தரித்திரத்தையும் படம் பிடிக்கும் இடமல்ல இது...


இதை சிலர் ஒன்றுக்கும் உதவாத வரட்டுக்கவுரமென்று சொல்லக்கூடும், ஆனால் நம்மை தாழ்ந்தநிலையிலே வைத்திருக்கப்பார்க்கும் மனப்பான்மை என்றே தோன்றியது...


மார்க்கின் வலைப்பூவில் இதை காரசாரமாக பதிவு செய்ய நேரமில்லாவிடினும் அதை சிறிதே மறுமொழியிட்டேன்.


அதற்கு நண்பர் மார்க்கின் பதிலும், அவர்களின் பார்வையும் வித்தியாசமாய் அமைந்தது..


இதோ மார்க்கின் பதில் பதிவு ஆங்கிலத்தில் -

அதன் சுருக்கத்தை கீழே குறிப்பிடுகின்றேன்...


"நான் ஒப்புக்கொள்கின்றேன், தற்சமயம் நொடிப்பொழுதில் மறைந்துவிடக்கூடிய வகையிலான, அன்று மதியம் நாங்கள் ஆற்றிய செயலைவிட, என்றும் நிலைக்கூடிய மதிப்புவாந்த செயல்கள் பல உள்ளன.

.......

.....

.....
அந்த திருமணப்பரிசின் முக்கிய நோக்கமானது, அன்று சிலர் தங்கள் நேரத்தையும், சக்தியையும் கொண்டு, தங்கள் கண்முன் கண்ட உலகத்தின் ஒரு சிறிய பகுதியை முன்னேற்ற முயற்சிகொண்டனர்.முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டுவந்திட செய்யப்படும் ஒர் முயற்சி எவ்வளவு மதிப்பு வாந்ததோ, அதன் அளவிற்கு அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்தது.


சேவையின்பால் நம்பிக்கை கொண்ட ஒருவராயிருப்பின், தன்னலமற்ற எண்ணம் உதவுவதோடு மட்டுமின்றி, பிறரை தன்னலமற்ற சேவை நோக்கி ஈர்ப்பதும் அதன் நோக்கமென்பதை அவர் புரிந்துகொள்வார், உதாரணம் அன்று எங்களுக்கு உதவிய நண்பர் வீரப்பன். இத்தகைய ஈர்ப்பும், செயலும் என்றுமே பிறரை நோக்கியே பரவும். அன்னை தெரசா சொல்கிறார் "நாமால் எந்த ஒரு மகத்தான செயலையும் செய்யமுடியாது, ஆனால் மகத்தான அன்பு நிறைந்த சிறிய செயல்களை செய்ய இயலும்".


இதுவே http://www.charityfocus.org/ இயக்கத்தின் அடிப்படைத்தத்துவமாகும் . இத்தகைய குணாதிசயத்தையே என்றும் சேவை செய்யும் உண்மையான Hero-க்களிடையே காண்கின்றேன்.."


மார்க்கின் பதில் முழுமையாக திருப்தியளிக்காத போதும், அவர் கூறிய கோணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.


அதனால் தான் என் தோழியின் குடும்பத்தினரின் செயல்கள் பல தலைமுறைகள் தாண்டி தொடர்கின்றனவா ?, அது இல்லாததால் தான் பல பெரும் மனிதர்களின் செயல்களும் தத்துவங்களும் பாடங்களாக்கப்பட்டு அவர்கள் தெவங்களாக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் சமாதி கட்டப்படனவா ?


தனி ஒரு மனிதனை விட, நோக்கம் மிகப்பெரியது. நம் பெயர் புகழ்பெறவேண்டும் என செய்யப்படும் செயல்களைவிட, இன்னும் பலரை ஈர்த்து நாம் செயல்படும் நோக்கம் நிறைவேறவேண்டும் என செய்யப்படும் செயல்கள் மிகவும் மகத்துவமானவை..


ஒருவேளை இதைத்தான் நண்பர் மார்க் எனக்கு புரிய வைக்க முயன்றாரோ ?!?!


நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ???

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 4 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
இரவு உணவுதயாரகிவிட, நமது நடைபாதைசுத்தப்படுத்தும் நண்பர்கள் வரத்துவங்கினர், அவர்களைத்தொடர்ந்து மதியம் நாங்கள் உதவிய மற்ற நண்பர்கள். இறுதியில் மொத்தமாக 75 சாப்பாடு. வந்திருந்த விருந்தினர்களில் சிலர், மேலும் சாப்பிடஇயலாத சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டிருக்க, சிலர் சிரிக்கநேரமில்லாததுபோல் விரைவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த உற்சாகம், உணவுச்சாலையின் ஊழியர்களையும் தொற்றிக்கொண்டது, சாதம், சாம்பார், காய்கறிகள்,ரசம் மற்றும் தயிர்ரென மாறி, மாறி சுழன்றனர். ஜானும், அஞ்சலியும் தண்ணீருடன் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர். நிராலி,ஜெயேஷ்பாயுடன் நானும், விருந்தினர்களுடன் கலந்து உணவு உண்ணத்தொடங்கினோம்.

பின் வேகமாக முகம் கழுவிவிட்டு,உடைகளை மாற்றிக்கொண்டு திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் திருமணநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்து சேர்கையில், சிலமணி நேரங்கள் தாமதமாயிருந்தோம். சற்றே வேர்வைகலந்த வித்தியாசமானதொரு வாசனையுடன் நாங்களிருந்தபோதிலும், அந்த நாளின் இரண்டாவது கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.

பி.கு:
மன்னிக்கவும், அன்றைய சேவையின் புகைப்படங்கள் என்னிடமில்லை, அப்பொழுது காமிரா கொண்டுசெல்லத்தோன்றவில்லை, இருப்பினும் அப்பொழுது எங்கள் கைகள் வேறு வேலைகளில் மும்முரமாய்த்தானே இருந்தது.

ம.பி.கு:
அன்றைய தினத்திற்கு அடுத்தநாள் மதியம், வேறு ஒரு நண்பர்கள் குழுவுடன் - அஞ்சலி, ஜெயேஷ்பாய்,நிராலி,ஜான்,டிம்,ப்ரியா,ப்ரியாவின் அம்மா மற்றும் யோ-மி உடன் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்று ஒருமணிநேர தியானத்தை புதுமணதம்பதியர்களுக்கு சமர்ப்பித்தோம்.

இந்த பதிவானது வேறு நாட்டைச்சேர்ந்த ஒரு நண்பரின் பார்வையில் விவரிப்பதாய் எழுதப்பட்டிருக்கின்றது, இந்த சம்பவம் நடந்த இடம், சூழ்நிலை, நண்பர்கள் என சில விளக்கங்களை அடுத்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 3 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005

எங்களின் உணர்ச்சிகரமான புதிய நண்பரின் பெயர் வீரப்பன், தான் கேள்விப்பட்ட செய்திகளிலேயே இதுதான் மகத்தானதொரு செயலென்று தனக்குத்தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் எங்களிடம் உரையாட ஆரம்பிக்கிரார்.


திடீரென உதித்தது மற்றுமொரு யோசனை, இங்கிருக்கும் நடைபாதையில் வாழ்பவர்களுக்கும், இந்த தெருவை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கும் ஓர் இனிய விருந்தளித்தாலென்னவென்று. சாப்பாடு பறிமாறுவதற்கான வாழைஇலை எங்கு கிடைக்கும், சாதம்,சாம்பார் பறிமாற பாத்திரங்கள் எங்கு கிடைக்கும் என்று எனக்குத்தெரியும், ஆனால் நல்ல சுவையான சாப்பாட்டிற்கான இடத்திற்கு வீரப்பனின் சிபாரிசு தேவை. குப்பைபெருக்குவதில் கலந்துகொள்ளாவிடினும், எங்களுடன் சிறிதும் தாமதிக்காமல் கலந்துகொண்டு, எங்களின் நோக்கத்தைப்புரிந்து கொண்டு உதவத்தொடங்கினார்.


இவர்களுக்கு இங்கு சாப்பாடு பறிமாறுவதைவிட, நல்லதொரு உணவுச்சாலைக்கு கூட்டிச்செல்வது நன்றாக இருக்குமென்பது அவரின் சிபாரிசு. ஜெயேஷ்பாயையும், தீப்தியையும் உரிமையுடன் கைகளால் பிடித்து சிறிது தூரத்திலிருந்த "ஷ்ரீ ஷங்கர் பவன்"-க்கு கூட்டிச்சென்றார். கொஞ்சம் கருப்படைந்த, இருட்டான சின்னதொரு உணவுச்சாலை அது, இருப்பினும் இந்த சாலையில் உள்ளதொரு நல்ல உணவுச்சாலை என அறிமுகம் செய்தார்.


நல்லவேளை அதன் உரிமையாளர் நாங்கள் பேசுவதை புரிந்துகொண்டார், ஜெயேஷ்பாய் அவரிடம் 50 பேருக்கான இரவு உணவைதயாரிக்க சொன்னபோது அவரால் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை போலிருந்தது. ஆனால், சாப்பிட வரப்போவபர்கள் யாரென அறிந்தபோது வியாபாரத்துக்கான அந்த உற்சாகம் முழுவதும் வடிந்துபோனது. ஜெயேஷ்பாயின் விடாமல் வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து, அந்த 50 பேரும் இரவு உணவு அங்கே உண்ண ஏற்பாடானது.


சுத்தமாகிவிட்ட எங்களின் அந்த நடைபாதை நண்பர்களிடம் சென்று, இரவு உணவுக்கான அழைப்பைவிடுக்க ஆரம்பித்தோம்.வீரப்பனால் உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலாமல், அவரே முன்வந்து மேலும் ஒரு நடைபாதைவாசியை அழைக்க ஆரம்பித்தார், அப்படியே அங்கிருந்த அனைவருக்கும் பெரிதாக சப்தமிட்டு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார். "சரியான செய்தி, ஆனால் தவறான வெளிப்பாடு", என்று அவருக்கு புரியவைக்க முயற்சிசெய்கின்றேன்,


அவரின் முகத்திலருகில் சென்று, "நீங்களும் எங்களுடன் உணவருந்த வாருங்க்கள்", என்று உச்சஸ்தாயில் கத்தினேன், அடுத்து உடனே ஒரு அடி பின் சென்று, மெதுவாக என் கைகள் இரண்டையும் நீட்டி அவரை வரவேற்கும் விதமாக வைத்து, அமைதியாக "எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவதின் மூலம் எங்களுக்கு உதவுவீர்களா", என்று கேட்க, அடுத்த நபரிடம் சென்று கத்தியழைப்பதற்கு பதிலாக அவரின் கைகளைப்பற்றி அழைக்கச்செல்வதற்குமுன், பெரியதொரு புன்சிரிப்புடன், வியர்த்துவழிய உண்ர்ச்சி மேலிட என்னை கட்டியணைத்துக்கொண்டார் :-).


இரவு உணவு ஆரம்பிப்பதற்கு இன்னும் 1 மணிநேரம் உள்ளது, அதற்குமுன் கோவிலுக்குச்செல்ல எங்களுக்கு வீரப்பன் அழைப்பு விட ஆரம்பித்தார். கோவிலின் வெளிப்பிரகாரங்களில் ஓர் சின்ன சுற்றுலா (கோவிலின் உள்ளே இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி) முடிந்தபின், கோவிலுள் தெற்குவெளி வீதியில் சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பார முடிவெடுத்தோம்.


எங்களினருகில் அமர்ந்திருந்தது ஓர் வயதான கிழவர், கடைசிக்காலத்தை கோவிலில் பிச்சையெடுத்துப்பிழைத்துக்கொள்ள அவரின் குடும்பத்தினரால் இங்கு விடப்பட்டவர். அவரருகே சென்ற ஜெயேஷ்பாய் "அருகில் வாருங்கள் சகதோரா",என்று கூற. அவருக்கு ஹிந்தி புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஜெயேஷ்பாயிடம் இந்தவொரு அற்புதமான ஒரு திறன் உண்டு,எவரிடமும் மொழியின் எல்லைகள்தாண்டி பரிசுத்தமான அன்புடன் செயல்முறையில் உரையாடும் திறன்தான் அது.


உடனே வேகமாக தன்னுடைய பலவீனமான மெலிந்த தேகத்தை எங்களை நோக்கிதிருப்பத்தொடங்கினார் அந்த வயதானவர். ஜெயேஷ்பாய் எங்களிடமிருந்த ஈரமான துண்டையெடுத்து, அந்த வயதானவரின் வாயினருகே ஒட்டியிருந்த உணவுப்பருக்கையை துடைத்துவிட்டு, அவரை திரும்பச்சொல்லி, சின்ன எண்ணெய் பாட்டிலை எடுத்து அவரின் தலையில் தடவி பிடித்துவிடத்தொடங்கினார். அவரிடமிருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லை, ஜெயேஷ்பாயின் கைகள், கைதேர்ந்த ஓர் தலைமுடிதிருத்துவரைப்போல இந்த வயதான அன்பரின் தலையில் விளையாடத்துவங்க, அவரின் முகம் மலரத்தொடங்கியது. பின் ஓர் சீப்பையெடுத்து மெதுவாக சீராக வாரத்துவங்கினார். இப்பொழுது அவரின் கந்தல் ஆடைமட்டுமே அவரை நடைபாதையில் வாழ்பவரென காட்டியது.


இதைக்கண்ட வீரப்பனால், தன்னுடைய உற்சாகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, அவர் ஜெயேஷ்பாயருகில் வந்து, தலையில் விளையாடத்துவங்கினார். ஆரம்பிக்கும்போதிருந்த அளவைவிட முடிக்கும்போது சிறிது அதிகமாகவே கம்மியாகவே ஆனது ஜெயேஷ்பாயின் தலைமுடி ;-). அந்த வயதான அன்பர் பெற்றது மென்மையானதென்றால், தான் பெற்றது கொஞ்சம் முரட்டுத்தனமான அன்புகலந்திருந்தது என்று பின்னர் சொன்னார் :-). அதேநேரத்தில் அஞ்சலி பொறுமையாக அங்கிருந்த மற்றொரு வயதானவரின் தலைமுடிக்கும் இந்த எண்ணெய் வைத்தியத்தை நிகழ்த்த, நிராலி அங்கிருந்த பல வயதான பெண்மணிகளுக்கு விரல்நகங்களை வெட்டிவிட, இவர்களுடன் ஜானும், தீப்தியும் பலூன்களை வாங்கி ஊதி அங்கிருந்த சிறுவர்களுடன் கோவிலின் உள்வீதியில் விளையாடத்துவங்கினார்கள்.

தொடரும்.....

பாகம் 1 , பாகம் 2

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 2 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
பாகம் 1

குப்பை பிரித்தெடுக்கப்பட்டு ஓர்வண்டியிலேற்றப்ப்பட்டவுடன் ஆட்டோக்கள் பிடித்து மீனாட்ச்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஜெயேஷ்பாயும்-ஜானும் சேர்ந்து எங்களின் அடுத்த திட்டத்தை வகுக்க தொடங்கினார்கள். கோவிலின் சுவரைச்சுற்றியிருக்கும் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், அவர்களிடையே இருக்கும் குழந்தைகளுக்கும் வளர்ந்திருக்கும் அசுத்தமான விரல்நகங்களை வெட்டிசுத்தப்படுத்தி, அவர்களிடையே புன்னகையையும், மகிழ்ச்சிதரும் இதமான வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்தோம்.

ஜான் பசித்திருபவகளுக்கு பிஸ்கட் வாங்கித்தரத்தொடங்க, தெரு வியாபாரியிடமிருந்து ஒரு துண்டை வாங்கிய நான், பொதுக்குழாயில் நீரில் நனைத்து, அங்கிருக்கும் குழந்தைகளின் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கைகளையும், முகங்களையும் துடைத்துவிடத்தொடங்கினேன். இதை தொடர்ந்துகொண்டே, 300 மீட்டர் செல்வதற்குள் ஒருமணிநேரம் சென்றுவிட்டது.

தென்கிழக்கு மூலைநோக்கி நகர்ந்துசெல்கையில், அவ்வழியிலிருந்த தெருசுத்தம் செய்பவர்களைக்கண்டோம். இந்தியாவிலிருக்கும் இவர்களுக்கும், அமெரிக்காவிலிருக்கும் இதே வேலை செய்பவருக்கும் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் உண்டு. முதலில், கூட்டுதலும், குப்பையை பெருக்குதலும் வெறும் கையாலையும், குச்சிகளால் செய்யப்பட்ட விளக்கமாறுகளாலும் செய்யப்படும். இந்த விளக்கமாறுகளால் கூட்டப்படும்போது, குனிந்து தரைக்கலருகில் கூட்டவேண்டும், ஆதலால் முதுகெழும்பை முறிப்பது மட்டுமின்றி, தூசுகளால் மூச்சு முட்டும் வேலையிது. இதுவே அடுத்த வித்தியாசத்தை கூறிவிடும், ஆம் இந்த வேலையை செய்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள்.

அத்தனை கடினமான வேலைசெய்யும் இந்த பெண்கள் அணிந்திருக்கும் நேர்த்தியான உடையான புடவை , அவர்கள் செய்யும் வேலைக்குச்சம்பந்தமில்லாதமிடிலும் அவர்கள் வசதியிலிருக்கும் தாழ்வுநிலையின்றி அவர்களின் பண்பாட்டையும், கண்ணியத்தையும் எடுத்துக்காட்டியது.

பெண்மையின் வெளிப்பாடாக தென்னிந்தியாவில் நான் கண்ட மற்றுமொரு சின்னம் தலையில் சூடும் மல்லிகைப்பூக்கள். தெருவின் எதிர்த்த வரிசையில் அமர்ந்திருந்த பூக்கள் விற்பவர்களிடம் பூக்கள் வாங்கி, இந்த சுத்தம் செய்பவர்கள் மூவருக்கு பூக்கட்ட உதவுகின்றேன்.

அப்பொழுது அங்கே வந்த ஜெயேஷ்பாய் மற்றும் ஜான், இவர்களிடமிருந்து சிறிதும் யோசனையின்றி, அந்த விளக்கமாறுகளை வாங்கி கோவிலின் தெற்கு பகுதியை சுத்தப்படுத்தத்துவங்கினர். இந்த நேரத்தில் அஞ்சலியும், நானும் அவர்கள் கூட்டிவைத்த குப்பையை அள்ளி சைக்கிள்களில் ஏற்றத்தொடங்கினோம். அப்பொழுது தீப்தியும், நிராலியும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களின் விரல்நகங்களையும், முகங்களையும் சுத்தப்படுத்துக்கொண்டிருந்தனர்.

ஆச்சரியத்துடன் அங்கே கூட்டம் கூடத்துவங்கியது, ஒருவழியாக ஆங்கிலம் பேசத்தெரிந்த நபர் ஒருவரை கண்டு, நாங்கள் நாளை நடக்கவிருக்கும் எங்கள் நண்பர்களின் திருமணப்பரிசாக இந்த சேவையை செய்கின்றோமென்று அங்கே கூடியிருந்தவர்களிடம் விளக்கச்சொன்னோம். இதை அவர் விளக்கமுயற்சிக்க, மற்றவர்கள் மேலும் குழப்பத்திலேயே ஆழ்ந்தனர். இறுதியில் இதை ஒருவர் புரிந்துகொண்டார்: கூட்டத்திலிருந்து, தன் நெற்றியிலிருக்கும் தழும்பைவிட அகலமான ஒரு புன்சிரிப்புடன் தோன்றிய அவர், ஒரு முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஓர் ஆட்டோ ஓட்டும் இளைஞர்.

உரக்கவாழ்த்தியபடி வந்த அவரின் சிரிப்பிலிருந்த உற்சாகமும், கண்களிலிருந்த அன்பும் காணாவிட்டால் அது எங்களை அடிக்கவந்திருப்பதாகவே புரிந்துகொண்டிருப்போம்.

தொடரும்...

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 1 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
எங்கள் நண்பர் வட்டத்திற்குள், பிறந்தநாளாகட்டும் வேறு எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகட்டும், பொருளுக்கு பதில் பிறருக்கு செய்யும் சேவையை பரிசளிப்பது அரிதானதொன்று அல்ல. சனிக்கிழமை மதியம், திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, நண்பர்கள் நாங்கள் சிலர் சிறுகுழுவாக, கொண்டாட்டங்களிலிருந்து வெளியேறி நான்கு மணிநேரம் நாங்கள் செய்யப்போகும் சேவையை தம்பதியர்களுக்கு பரிசளிக்க முடிவுசெய்தோம்.

திங்களன்று, திருமண நிகழ்ச்சிகள் முடிந்தபின்பு, நண்பர்கள் அனைவரும் நாட்டின், உலகத்தின் பல மூலைகளுக்கு பிரிந்து செல்லும்முன், நடத்தப்படப்போகும் மிகப்பெரும் சேவைப்பரிசு பற்றி அறிந்திருந்தோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் திடீரென பயணத்திட்டங்கள் மாறிவிட, நடந்தால் இப்பொழுது, இல்லையேல் நேரம் இல்லையென சனிக்கிழமை மதியம் உணர்ந்துவிட்டோம். நிகழ்ச்சிகளிடையே கிடைத்த சிலமணிநேர இடைவெளியில், இரவு நேர நிகழ்ச்சிக்கு சிலமணிநேரம் தாமதமாக வந்தால் தவறில்லையென புரிந்துகொண்டு, திட்டமிடத்துவங்கினோம்.

மதுரை, பரந்து விரிந்த நிலப்பரப்பிற்க்கு மட்டுமின்றி, அதன் கலைநுணுக்கத்திற்கும் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலின் இருப்பிடம். இது ஆன்மீக மையம் மட்டுமில்லை, இந்த நகரத்தின் மையம் கூட. திருமணநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல, எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி ஆறு பேர் நாங்கள். தொடங்கிவிட்டால் செயல்கள் உருப்பெறத்தோன்றிவிடும் என்று நம்பினோம், என்றுமே அது நடந்திருந்தது.

நகரின் மையத்திற்கு செல்ல ரிக்ஷாக்களுக்கு காத்திருக்கையில்,எங்களின் முதல் வாய்ப்பை ஜெயேஷ்-பாய் சுட்டிக்காட்டினார்: அன்றைய தினத்தில் சேகரித்த பொருட்களை பிரித்தெடுத்துக்கொண்டிருக்கும், பழையபொருட்களை சேகரிப்பவர்கள். அவர்களை வாழ்த்திவிட்டு, பேப்பர்களை பிளாஸ்டிக் பைகளிலிருந்தும், கண்ணாடிகளிலிருந்தும், இரப்பர்களிலிருந்தும் பிரித்தெடுக்க உதவத்தொடங்கினோம்.

அங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை கண்டால், யோசனையேயின்றி, சுகாதாரத்தைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், சுற்றுப்புர சீரழிவைப்பற்றி நினைக்காமல் எப்படி இப்படி குப்பை கொட்டுவார்களோ என்று தோண்றும்.இந்த பழையபொருட்கள் சேகரிப்பவர்கள், இந்த சமூகத்தின் அடையாளம் தெரியாத முதுகெலும்பானவர்கள். நகரத்தின் தெருக்களை குப்பை கிடங்காகாமல் சுத்தமாக இருப்பதற்கு இவர்களே காரணம். இவர்களைத்தான், ஜெயேஷ் "குப்பைகளை போடுவதற்கு ஆயிரம் கைகள், ஆனால் அதை எடுப்பதற்கோ இரண்டே கைகள்" என்று குறிப்பிட்டார்.

குப்பைகளை இனம்பிரிப்பது மிகவும் அசுத்தமானதொரு வேலை (இந்த குப்பைகளை சுமக்கும் இதே தெருக்கள்தான் பலருக்கு கழிவறைகளாகவும் பயன்படுகின்றது). இருப்பினும் வறியவர்களிலும் வறியவர்கள் பலர் இதன் மூலம் தங்கள் வாழ்வை சம்பாதிக்கின்றார்கள். உதவிசெய்த எங்களை கண்ட அவர்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்ந்தாலும், பின்னர் உணர்ச்சிவசப்பட்டுப்போனார்கள். அவர்களுடனான எங்கள் கைகுழுக்கள்களும், புன்னைகளுமே அவர்களை பின்னர் இயல்பாக்கியது. ("ஆம்", "இல்லை", "கைகுடுங்கள்" என்பதற்கான எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளே அவர்களுடன் பேச உதவியது).

சுற்றிலும் குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள். பழையபொருட்களை சேகரிக்கும் இவர்களின் சேவையை நாங்கள் கண்டு வியக்கிறோம் என்பதை அங்கிருந்த ஆங்கிலமறிந்த ஒருவர் மூலம் அவர்களுக்கு விளங்கச்செய்தோம், மேலும் அவர்களின் இந்த சேவையில், எங்கள் நண்பர்களின் திருமணபரிசாக பங்கு கொள்கின்றோம் எனவும் புரியவைத்தோம். திருமணப்பரிசாக பொருட்களில் தாராளமாய் செலவழிக்கும் பெரும்பாலானோர் இருக்குமிடத்தில் இத்தகைய எங்கள் செயல் குழப்பத்தையே உண்டு பண்ணியது. ஆனால் அதற்குள் அங்கே தோழமையான, மகிழ்வானதொரு சூழ்நிலை நிலவத்தொடங்கியது.


தொடரும்....

ஐந்தே நாட்கள்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், நவம்பர் 29, 2005

நிரம்பிவழியும் மின்னஞ்சல்கள்

செய்ய மறந்த வேலைகள்

செய்ய வேண்டிய வேலைகள்

படிக்க இயலா பக்கங்கள்

பேச இயலா சந்தர்ப்பங்கள்

வலம் வர முடியா வலைப்பூக்கள்

சிறிது நாட்களில் அனைத்தும் நிலை வரும்

காரணம்

ஐந்தே நாட்கள்,

கணிப்பொறியில் சிக்கவில்லை, வலைத்தளங்களிலும் மாட்டவில்லை :-)

உடனே அனுப்ப இயலா பதில்களுக்கு மன்னியுங்கள்

தோள்களிரண்டு

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 16, 2005
மனதின் குடும்பக்கவலையை சிறிதே இறக்கிவைத்தார் அப்பா..
படிப்பின் கவலையை கொஞ்சம் இறக்கிவைத்தான் தம்பி..
குறைவதாய் நினைத்து பாசத்தின் கவலையை கொஞ்சம் தாத்தாவும்
சாப்பாட்டுக் குறையை நிறையவே இறக்கிவைத்தார் உடனிருக்கும் அன்பர்

தன் கவலையை இறக்கிவைத்தாள் தோழி..

இவர்களில் யாருமே அறியவில்லை

நட்பும் அறியவில்லை

அவன் தலையும் இரு தோள்களை தேடுகின்றதென்று..

சாய்ந்து கொள்ள உன்னிரன்டு தோள்கள் தவிர வேறொன்றும் நிரந்தரமில்லை என்று

முதலில் இருந்தே கூவிக்கொண்டிருக்கின்றது அவன் மனம்..