யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - பாகம் 1 (உண்மைச்சம்பவம்)

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 15, 2005
எங்கள் நண்பர் வட்டத்திற்குள், பிறந்தநாளாகட்டும் வேறு எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகட்டும், பொருளுக்கு பதில் பிறருக்கு செய்யும் சேவையை பரிசளிப்பது அரிதானதொன்று அல்ல. சனிக்கிழமை மதியம், திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, நண்பர்கள் நாங்கள் சிலர் சிறுகுழுவாக, கொண்டாட்டங்களிலிருந்து வெளியேறி நான்கு மணிநேரம் நாங்கள் செய்யப்போகும் சேவையை தம்பதியர்களுக்கு பரிசளிக்க முடிவுசெய்தோம்.

திங்களன்று, திருமண நிகழ்ச்சிகள் முடிந்தபின்பு, நண்பர்கள் அனைவரும் நாட்டின், உலகத்தின் பல மூலைகளுக்கு பிரிந்து செல்லும்முன், நடத்தப்படப்போகும் மிகப்பெரும் சேவைப்பரிசு பற்றி அறிந்திருந்தோம். ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் திடீரென பயணத்திட்டங்கள் மாறிவிட, நடந்தால் இப்பொழுது, இல்லையேல் நேரம் இல்லையென சனிக்கிழமை மதியம் உணர்ந்துவிட்டோம். நிகழ்ச்சிகளிடையே கிடைத்த சிலமணிநேர இடைவெளியில், இரவு நேர நிகழ்ச்சிக்கு சிலமணிநேரம் தாமதமாக வந்தால் தவறில்லையென புரிந்துகொண்டு, திட்டமிடத்துவங்கினோம்.

மதுரை, பரந்து விரிந்த நிலப்பரப்பிற்க்கு மட்டுமின்றி, அதன் கலைநுணுக்கத்திற்கும் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலின் இருப்பிடம். இது ஆன்மீக மையம் மட்டுமில்லை, இந்த நகரத்தின் மையம் கூட. திருமணநிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால் மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல, எந்த ஒரு முன்னேற்பாடுமின்றி ஆறு பேர் நாங்கள். தொடங்கிவிட்டால் செயல்கள் உருப்பெறத்தோன்றிவிடும் என்று நம்பினோம், என்றுமே அது நடந்திருந்தது.

நகரின் மையத்திற்கு செல்ல ரிக்ஷாக்களுக்கு காத்திருக்கையில்,எங்களின் முதல் வாய்ப்பை ஜெயேஷ்-பாய் சுட்டிக்காட்டினார்: அன்றைய தினத்தில் சேகரித்த பொருட்களை பிரித்தெடுத்துக்கொண்டிருக்கும், பழையபொருட்களை சேகரிப்பவர்கள். அவர்களை வாழ்த்திவிட்டு, பேப்பர்களை பிளாஸ்டிக் பைகளிலிருந்தும், கண்ணாடிகளிலிருந்தும், இரப்பர்களிலிருந்தும் பிரித்தெடுக்க உதவத்தொடங்கினோம்.

அங்கே சிதறிக்கிடந்த குப்பைகளை கண்டால், யோசனையேயின்றி, சுகாதாரத்தைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், சுற்றுப்புர சீரழிவைப்பற்றி நினைக்காமல் எப்படி இப்படி குப்பை கொட்டுவார்களோ என்று தோண்றும்.இந்த பழையபொருட்கள் சேகரிப்பவர்கள், இந்த சமூகத்தின் அடையாளம் தெரியாத முதுகெலும்பானவர்கள். நகரத்தின் தெருக்களை குப்பை கிடங்காகாமல் சுத்தமாக இருப்பதற்கு இவர்களே காரணம். இவர்களைத்தான், ஜெயேஷ் "குப்பைகளை போடுவதற்கு ஆயிரம் கைகள், ஆனால் அதை எடுப்பதற்கோ இரண்டே கைகள்" என்று குறிப்பிட்டார்.

குப்பைகளை இனம்பிரிப்பது மிகவும் அசுத்தமானதொரு வேலை (இந்த குப்பைகளை சுமக்கும் இதே தெருக்கள்தான் பலருக்கு கழிவறைகளாகவும் பயன்படுகின்றது). இருப்பினும் வறியவர்களிலும் வறியவர்கள் பலர் இதன் மூலம் தங்கள் வாழ்வை சம்பாதிக்கின்றார்கள். உதவிசெய்த எங்களை கண்ட அவர்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்ந்தாலும், பின்னர் உணர்ச்சிவசப்பட்டுப்போனார்கள். அவர்களுடனான எங்கள் கைகுழுக்கள்களும், புன்னைகளுமே அவர்களை பின்னர் இயல்பாக்கியது. ("ஆம்", "இல்லை", "கைகுடுங்கள்" என்பதற்கான எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளே அவர்களுடன் பேச உதவியது).

சுற்றிலும் குழப்பத்தில் ஆழ்ந்த பொதுமக்கள். பழையபொருட்களை சேகரிக்கும் இவர்களின் சேவையை நாங்கள் கண்டு வியக்கிறோம் என்பதை அங்கிருந்த ஆங்கிலமறிந்த ஒருவர் மூலம் அவர்களுக்கு விளங்கச்செய்தோம், மேலும் அவர்களின் இந்த சேவையில், எங்கள் நண்பர்களின் திருமணபரிசாக பங்கு கொள்கின்றோம் எனவும் புரியவைத்தோம். திருமணப்பரிசாக பொருட்களில் தாராளமாய் செலவழிக்கும் பெரும்பாலானோர் இருக்குமிடத்தில் இத்தகைய எங்கள் செயல் குழப்பத்தையே உண்டு பண்ணியது. ஆனால் அதற்குள் அங்கே தோழமையான, மகிழ்வானதொரு சூழ்நிலை நிலவத்தொடங்கியது.


தொடரும்....

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக