தயவு செய்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள் !!!
Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 06, 2006சென்னை வந்த உடன் நண்பர்களுடன் நேரம் களிக்கவேண்டுமென்று நினைத்தது உண்மைதான் அதற்க்காக இப்படியா :-( , சென்னை வந்ததிலிருந்து மருத்துவமனையிலேயே நண்பர்களுடன் நேரம் களிப்பதாய் அமைந்துவிட்டது...
இதைப்படிக்கும் அதிவேக விரும்பிகளே, அதிவேகத்தை துணிகரமான வீரச்செயலென்று நினைப்பவர்களாய் இருந்தால் சுவற்றில் சென்று முட்டிக்கொள்ளுங்கள்..
சென்ற வாரம் என் நண்பன் சீனியின் இந்த பதிவை படித்ததும்,மிகவும் உற்சாக வேகத்திலிருந்தேன், ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு பதிவை பதிப்பேனென்று எதிர்பார்க்கவில்லை....
நேற்று சென்னையில் என் மற்றொரு கல்லூரித்தோழனுக்கு ஓர் விபத்து...
அதிவேகத்தில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்து, மோதிய வேகத்தில் நசுங்கிய வாகனத்திலிருந்து அவனை மீட்பதே கஷ்டமாயிருந்ததாம்..
கால் முட்டியிலும், முட்டிக்கு மேலும் பட்ட அடியில் கிரிக்கெட் பந்து வைக்கும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது,காலில் பல இடங்களில் சிக்கலான எழும்பு முறிவு, கையில் ஐந்து இடங்களில் எழும்பு முறிவு, நெஞ்செலும்பில் காயம், முகத்திலும் கண்ணாடி தெரித்ததில் காயம், புருவம் ஒன்று முழுவதுமாய் காணாமல் போய்விட்டது, மூளையின் உள் இரத்தக்கசிவு, அது இரத்தக்கட்டானால் கோமாவிற்கு சென்றுவிடும் அபாயம் என எவ்வளவு சிக்கல்கள்..
நேற்று இரவு அறுவைசிகிச்சை நல்லபடியாய் முடிய, காலில் பல இரும்பு தகடுகள், நட்டுகள் பொருத்தப்பட்டன.., இன்று மதியம் செய்யப்போகும் Cற்T ஸ்கேனில் இரத்தக்கசிவுன் நிலவரம் தெரிந்துவிடும்.
ப்ளேட்டுகள் பொருத்தப்பட்டதால் 12 நாட்கள் மருத்துவமனையிலும், 3 மாதங்கள் மருத்துவமனையிலும் இருக்க வேண்டும்.. அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... உடைந்த எலும்புகள் ஒட்டவேண்டும்,அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... பொருத்திய இரும்பு ப்ளேட்டுகள் அகற்றப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை...நட்டுகளின் ஓட்டைகள் நிரப்பப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... முழுவதுமாய் முன்பு போல் இயல்பாக இல்லாமல் ஒருவித கவனத்துடனேயே இருக்கவேண்டும்..
வேறு என்ன நடந்துகொண்டிருக்கின்றது ?
நிர்வாகவியல் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியிருந்த நேரம், நல்ல அனுபவங்கள் கிடைத்துக்கொண்டிருந்த நேரம், தன் கனவுகள், எதிர்காலம் என தெளிவாக திட்டமிட்டு போய்க்கொண்டிருந்த நேரம், நல்ல நண்பனாக, அன்புள்ள அண்ணனாக, நல்ல பிள்ளையாக இருந்தான்..
இன்று அவனையும் உடலால் காயப்படுத்திக்கொண்டு,அனைவரையும் மனதால் வருத்தப்படவைத்து, இந்த ஆறு மாதங்களில் அவன் வளர்ச்சியை ஈடுகட்டப்போவது எது ?
நல்ல வேளை நல்லபடியாகவே அறுவைசிகிச்சையும் நடந்து முடிந்துவிட்டது...
இவையெல்லாம் ஒரே செயலால் தவிர்க்கப்பட்டிருக்கலாம், சீட் பெல்ட் அணிந்திருக்கலாம், நள்ளிரவு நேர, குதூகலத்துக்கான அதிவேக பயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் வாழ்வில் இத்தகைய விஷயங்கள் இல்லாவிடில் சுவாரசியமேது என்பவர்களுக்கும், வாழ்வில் எதில்தான் ஆபத்து இல்லையென்பவர்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.. போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள்...
இந்த சின்ன விஷயத்துக்கு நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படவேணாமென்று பலர் நினைக்கலாம், நான் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை, இதை இவ்வளவு விலாவாரியாக விவரித்துக்கூறியதற்கு காரணம், இதைப்படிக்கும் சிலரில் ஒருவருக்காவது இதன் இயல்பு நிலவரம் புரிந்து கவனமோடிருக்கலாம் என்ற நம்பிக்கையில்...
வேகம் விவேகம் அல்ல
சீட்பெல்ட் அணியுங்கள், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுங்கள்... ப்ளீஸ் !!!!




