யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முக்கோணம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 19, 2005
மற்றொரு நாள் கழிந்தது, அலுவலகம் சென்று மின்னஞ்சல்கள் படித்து, வலைப்பூக்கள் மேய்ந்து, கொஞ்சம் வேலைப்பார்த்ததுதான் இன்றைய அலுவலக நாட்குறிப்பு.

ஒருவழியாக, தம்பிக்கு கப்பற் (மரைன்) பொறியியற்ப்படிப்பை எடுக்க அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார் நேற்று. இனி, முதல் பருவத்திற்கு 1.5 இலட்சம் ஒரே தவணையில் கட்ட வேண்டுமாம். அதில் சிறிதும் நேரம் தரமாட்டார்களாம்.இங்கே இருந்து உடனடியாக பணத்தை அனுப்ப பல வழிகள் பார்த்து, இன்று அனுப்பித்து விட்டேன்.

ஒழுங்காக முதலிலேயே அனுப்பித்து இருக்க வேண்டும், ம்ஹம்..., தேவை இல்லாமல் கடைசி நேரத்து பதற்றம் இல்லாமல் இருந்த்து இருக்கும். இனி, நேரத்துக்கு கிடைத்து எவ்வித தடங்களும் இன்றி, அவன் சேர வேண்டும்.

நினைத்தை படிக்க அவனால் மட்டுமாவது முடிந்ததை நினைத்து, அதற்கு நான் சிறிது உதவியாக உள்ளேன் என்று நினைக்கையில் மனநிறைவுடன் சிறிது பெருமூச்சும் வந்தது.

உதவி தேவைப்படும் போதுதானே நட்பு, சிறிதே அறிமுகமானவர்கள் முதற்க்கொண்டு, உயிர் நண்பன் வரை, முடிந்ததாலான உதவி செய்ய முற்ப்பட்டது நல்ல நண்பர்கள் சேர்த்துளேன் என்று ஒரு மகிழ்ச்சி. அத்துடன், எதிர்ப்பார்த்த நட்பிடமிறிந்து, தவிர்த்தலே கிடைத்தது.

சில நேரங்களில், சில மனிதர்கள் !!!

உடனிருக்கும் அறை நண்பருடன், உரையாடுகையில் சொல்கிறார், "ராகுல் திராவிட், முதல் பார்ப்பணர் அற்ற, தெந்நிந்திய அணித்தலைவர்" என, தகவல் சரியா என்பது பிரச்சனை அல்ல, இப்படி ஒர் பார்வையும், கருத்துப் தேவைதானா ?. இவர், இயக்குனர் ஷங்கரின் படம் பார்க்காததற்க்கு கூறும் காரணம், அதில் பார்ப்பணர்-களே நல்லவர்கள் என காமிப்பதாலாம். காதலன் படத்தில் எந்த கதாபாத்திரம் பார்ப்பணர் ?, முதல்வனில் கதாநாயகனைவிட நல்ல கதாபாத்திரம் உண்டா, இருந்தால் அதில் பார்ப்பணர் கதாபாத்திரம் இருந்ததாக நினைவு இல்லை, பாய்ஸ் படத்திலும் இத்தகைய பாத்திரம் இல்லை, அதில் இருந்தெல்லாம் கருத்துகளை எடுக்கவில்லை, என்ன ஒரு சிந்தனை, படித்த மனிதரிடம்.

சரி, எல்லா செய்திகளிலும் மூன்று கோணங்கள் உண்டு என சொல்வார்ககள், சரியான கோணம், தவறான கோணம், என் கோணம் என்று, ஒருவேளை அதுதானோ இது ?!

இந்த நண்பர் ஒரு முதிர்கண்ணண், ஆம் அகவை 29 ஆகியும் திருமணம் தகையவில்லை என்ற கோபமும், வெறுப்பும் இவர் பேச்சில் தெரிக்கும். நன்று படித்தவர், மேல்நாட்டில் கடந்த 4 வருடங்களாக இருக்கிறார், கை நிறைய சம்பளம், தாய்நாட்டில் இருக்கும் வீட்டிலும் தேவைகள் இல்லை, என நிறைவான வாழ்க்கை, இருந்தும், அன்று பேசும் போது, என்ன இருந்து என்ன, கல்யாணம் ஆகவில்லையே, என்ன வாழ்க்கை என்றார். திருமணம்தான் வாழ்க்கையின் கடைசி மோட்சமா ? ஒரு மனிதன் மகிழ்வுடன், மனநிறைவுடன் வாழ திருமணம் முக்கியம் தானா ? இல்லை என்றே தோணுகிறது. மனதுக்குப் பிடித்ததை செய்திட சுதந்திரம், அர்த்தமுள்ள வாழ்வு, இவை தானே மனநிறைவுடன் வாழத்தேவை , இதில் திருமணம் எங்கே வந்தது ??

முதல் பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூலை 18, 2005

ஜன்னலின் வெளியே மெல்லிய மழைத்தூறல், கோப்பையில் சுடச்சுட பால், பிண்ணணியில் இளையராஜா-வின் இசை, வெளியே சென்று நனையத்தான் ஆசை. தரை விரிப்பைப் பற்றிய குடியிருப்பின் விதி முறைகள் மனதில் தோன்ற, மீறலாம் என நினைத்தால், உடன் இருக்கும் வீட்டு உரிமையாள நண்பர் முறைக்கிறார். அன்னிய நாட்டில் சுதந்திரம் அவ்வளவு தான் என தேற்றிக்கொண்டேன்.


நல்ல வேளை இணையம் இல்லை, இருந்தால் , வராத மின்னஞ்சலை எதிர்பார்த்து, கிளிக்கிக் கொண்டு இருப்பேன்.


சரி, என்ன புத்தகம் படிக்கலாம் என பெட்டியை திறந்தால், பாரதியாரின் கவிதைக்கும், வாலியின் வள்ளுவத்திற்கும் இடையே சில வழக்கத்திற்கும் மாறான அட்டையுள்ள புத்தகங்கள், என்னவென்று பார்த்தால், முந்தைய வருட டைரிகள். அத்துடன், திருவனந்தபுரத்தில், பயிற்சி முடியும் போது அங்கே அறிமுகமான முகங்களிடம் வாங்கிய கையெழுத்து பதிவுகள்.


சரி இரண்டு வருடங்கள் தான் ஆகி விட்டதே, படித்தால் சிறிது பொழுது போகுமே என்று பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். புரட்டும் போதே, யார் எழுதி இருப்பார் என கீழே பார்க்காமல் கண்டு பிடிப்போம் என ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்திலேயே தோல்வி, அடுத்தடுத்த பக்கங்களிலும் அதே தொடர்ந்தது.

இரண்டு வார்த்தைகளே பேசி இருப்பேன், இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த நண்பன் தான், அனைவருக்குமே வாழ்க்கையில் மறக்க முடியாத நண்பன் தான், இரண்டே மாதங்களே ஆனாலும் உயிர்த்தோழன் தான், நட்ப்பைப்பற்றி மொழி வாரியாக வார்த்தைத் தோரணங்கள் தான், என அனைவருக்கும் பிடித்தவனாய்த்தான் இருந்தேன்.


இதே உயிர்த்தோழர்கள் (?), இனி பதில் மின்னஞ்சல் கூட அனுப்ப இயலாமல் போவார்கள் என அறிந்துதான், பின்னொருநாள் இன்று போல் படித்து சிரிக்கவே இதை அன்று வாங்கினேன்.


அதில், கல்கத்தா நண்பர்கள் சிலரின் கையொப்பங்கள் சிலவற்றை தாண்டி வர வேண்டி இருந்தது. மனம் தானாக பின்னோக்கி பாய்ந்து செல்வதை நிறுத்த முடியவில்லை. அவர்களுடனான நட்பு எப்படி இன்று உருமாறி நிற்கின்றதை அன்று திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் போது துளியளவும் நினைத்து பார்த்ததில்லை.


வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, எத்தனை புத்தகங்களில், எத்தனை பாடல்கள், எத்தனை வலைப்பூக்களில் இந்த சிந்தனையை தாண்டி வந்திருந்தாலும், நாமே உணரும் போது வரும் உணர்வே தனி.


ஒரு கால கட்டதில், நல்ல தோழிகள் என்று கருதப்பட்டவர்கள், பின்னர் நேரில் காணும் போது மட்டும் வார்த்தைகளில் தேன் தடவி பேசும் நிலை வந்தது கூட விசித்திரமாக தோனவில்லை, உயிர்த்தோழி என்று கருதப்பட்டு, கல்லூரி காலத்துக்குப்பிறகு இப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது, என்றெல்லாம் நினைக்கப்பட்டவை சில நொடிகளில் தலை கீழாக உருமாறும் என என்றுதான் நான் நினைத்ததில்லை.


இதில் எத்தனை என் தவறுகள், எத்தனை நியாயமானவை என்று ஆராய்ந்து பார்க்கத்தோனவில்லை


ஆயினும் வாழ்க்கை விசித்திரமானது, இந்நிலை என்று மீண்டும் மாறி பழைய நிலைக்கு மாறும் என்றோ, வேறு எங்கோ போய் நிற்கும் என்றோ யாருக்கு தெரியும்.

எங்கே இந்த பயணம் ?

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, ஜூலை 17, 2005
போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்திரிகன் நான், செல்லும் பயணங்களையும், சந்திக்கும் மனிதர்களையும் பின்னால் என் நினைவுக்காக, என் மொழியில் பதிவு செய்கின்றேன்.