யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.
750 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
750 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Dream of Pi

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், நவம்பர் 27, 2012
ஏனோ இன்று மனம் முற்றிலும் ஆராவாரமற்றிருக்கின்றது. Life Of Pi -இல் சொல்லப்படும் அந்த french swimming pool போல தெளிவான மனம். குறிப்பிடத்தக்க நிகழ்வேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடியற்காலையிலிருந்து மதியம் வரை, 20-30 பேர் கொண்ட உறவினர் குழு சூழ அதீத ஓசையுடனிருந்த சூழலிருந்து விடுபட்டதாலா ? இல்லை வேலை ஏதுமில்லாததாலா ? எனக்கென்னவோ, இவையெல்லாம் just environment மட்டுமே, ஆனால் அமைதியை தூண்டிவிட்ட catalyst, Cinema Paradiso & The Legend of 1900 இரண்டிற்குமான பின்னணியிசை தொகுப்புதானென தோன்றுகிறது.

நம்மூர் இசையராசா இசையில் இல்லாத அமைதியா என்று துடிக்கும் இரசிகர்கள் அமைதி காக்கவும், ஏனோ அவரின் திரையிசையை கேட்கும்போது, அங்கிங்கு நினைவிருக்கும் பாடல் வரிகள், காட்சிகள், பாடல் நினைவுபடுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் என பல கலக்கங்க ள். மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுக்குமான வசதி, என் மறதி + 1 முறை மட்டுமே பார்த்தது.

மறதி என் வரமென்றால், கனவுகள் என் மற்றொரு வரமென்பேன். நேற்று முதல் முறை சந்தித்த நண்பர்கள் சிலரை, என் கனவின் சாகசப்பயணங்களில் (நேற்று கண்ட Life Of Pi படம் போன்ற) சந்தித்ததை மனைவியிடம் சொன்னபோது, "அதெப்படி நேற்றுதானே முதல் முறை சந்தி த்தீர்கள், நெசமாத்தான் சொல்றீங்களா.. " என கற்றது தமிழ் அஞ்சலியாய் மாறி கேட்கும்போது, நானும் Pi போல மாறி, "So you want a story that you can believe ? .. " என கேட்கலாமென நினைத்து அமைதியானேன்.

Life Of Pi பலருக்கு என்ன வாழ்க்கை தத்துவம் சொல்லித்தந்ததோ தெரியவில்லை, பலரும் அதை குறிப்பிட்டு சொன்னதால்தான் இந்த கேள்வி. கல்கத்தாவிலிருந்தபோது இதன் புத்தக வடிவத்தை பார்த்த நினைவு. புலி-புல்லுக்கட்டு கதையோ என்றெண்ணி படிக்காமலே போனது. இதற்கு ஏன் புதுச்சேரியில் zoo அமைக்கவேண்டுமென தெரியவில்லை, ஒருவேளை இந்(து)திய மத பின்னணிக்காகவா ?

193 வார்த்தைகளுக்கே தள்ளுது. சோம்பேறித்தனம் என பழிபோட்டு தப்பிக்க விரும்பவில்லை, திமிர் என்றே சொல்லுவேன். வெட்டி முறித்த வேலை என்றோ அடங்கிப்போனது, இருந்தும் ஒவ்வொரு தினமும் எழுதவதற்கான inspiration வரி தோன்றுவதும், அதை அப்புறம்-அப்புறம்-அப்புறம் என கடத்திவிட்டு, அடுத்த நாளுக்கான குற்றவுணர்வை, குற்றவுணர்வில்லாமல் கடந்து செல்ல கற்றுக்கொண்டிருந்தேன்.

இவ்வளவு நாளாய் இல்லாத அக்கறை, இன்றைக்கென்ன புதிதாய் என தோன்றலாம். இதே திமிரென்ற ஒட்டகத்தின் திமில் ஓட்டத்திலும் நுழைந்து வேலையைக்காட்டிவிட்டது. வரும் ஞாயிறு 10k ஓட பதிவு செய்திருந்தும், தொடர்சியாய் 2k கூட ஓடமுடியாத நிலையில்தான் என் பயிற்சி இருக்கின்றது. 4 நாட்களில் என்ன செய்ய முடியுமென தெரியவில்லை, ஆனால் இதை வளரவிட்டால், வேறெங்கோ வளர்ச்சி வெளிப்படையாய் தெரிகின்றது. குனிந்து shoe lace போட முடிவதில்லையென lace-less shoe வாங்குவதற்கு பதில், ஓட்டத்தை அதிகரிக்கவேண்டும்.

இத்தனைக்கும் நடுவே மனதை அறுத்த அந்த facebook மின்னஞ்சலை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. முதல் முறை, தெரியாமல் செய்வது மட்டுமே தவறு, அதன் பின்.....

எழுத்து நடை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 30, 2011
இரு நாட்களுக்கு முன் குளிரும், பனிசார்ந்த இடமாக இருந்த சென்னை நேற்றுமுதல் புயல் காற்றும், மழை சார்ந்த நிலமாக உருவெடுத்திருக்கிறது. நேற்று இரவே மின்சாரம் போய்விட்டது, எவ்வளவு எரிபொருள்தான் apartment-இல் சேர்த்து வைத்திருப்பார்கள், அதுவும் தீர்ந்துபோய்விட இரவின் இருளோடு, apartment இருளும் கரைந்துவிட்டது.

தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பதை பற்றி நேற்று அலுவலகம் செல்லும்போது யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கே எழுதுவது என்ற வினைச்சொல்லை தட்டச்சுவது என்று கருதிக்கொண்டு படிக்க மறந்துவிடாதீர்கள்.

முதலில், எழுதிக்கொண்டிருக்கும்போதே வரும் பிழைகள். இவற்றில் பெரும்பாலும் 'அஞ்சல்' முறை பயன்படுத்தி எழுதிக்கொண்டிருக்கும்போது வரும் பிழைகள். எழுதும்போதே கண்டுகொண்டு அவ்வப்போது சரிசெய்துவிட்டாலும், பாறைகளின் இடுக்கே கசியும் நீரைப்போல தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்து வருவது, comma, semi-Colan, ஆச்சரியக்குறி போன்றவைகளின் சரியான  பயன்பாடு. முன்பே இவற்றின் பயன்பாடு பற்றி ஐய்யம் இருப்பினும், நாம் எழுதுவதென்ன இலக்கியமா, கிறுக்கல்தானேவென்று கண்டுகொள்வதில்லை. ஆனால், 750 எழுத ஆரம்பித்தவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த குறையை சரிபடுத்திக்கொள்ளலாமென நினைத்திருக்கிறேன். இதோடு தொடர்புடைய ஒரு கேள்வி, கல்வெட்டுக்களில்/ஓலைகளில் என பழங்கால தமிழ்மொழிப்பயன்பாட்டில் இத்தகைய குறிகள் இருக்காதென கேள்விப்பட்டிருக்கிறேன், அது உண்மையா ? இல்லை, இந்த குறிகளுக்கு இணையான வேறு பயன்பாடு இருக்கிறதா ? அதுவும் இல்லையெனில் பின்னர் எப்படி வாசித்தார்கள் ? யாராவது வாசகர்கள் (இதை படித்தால்) எதாவது சுட்டி கொடுத்தால் நன்றி நவில்வேன்.

இவற்றுக்கு அடுத்து அதிகம் இருக்கும் பிழைகள், சந்திப்பிழைகள். இது குறைவாகவே இருக்கென நினைக்கிறேன். முதல் இரண்டு வாசிப்பிலும் விடுபட்டுப்போகின்றன, காரணம் ஒரு வார்த்தையை கண்டதும் மூளை அதை உடனே அடையாளம் கண்டுகொண்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு வாசித்துவிடுகிறது. சில சமயம், 4/5 வாசிப்புக்கு பிறகும் சரிபார்த்த ஒன்றை, 2 நாட்களுக்கு பிறகு பார்க்கும்போது கண்ணில் படும் பிழைகளை கண்டால், என்னை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிறகு, பிறமொழிக்கலப்பு. ஆங்கிலம், கிரந்தம் என முடிந்தவரை தவிர்த்து, அதே நேரம், படிக்க இலகுவானதாய் எழுத்து இருக்கவேண்டுமென்பது என் எண்ணம். சில நேரங்களில் தமிழில் இணை சொற்கள் இல்லாத வார்த்தைகளை அப்படியே எழுதுவது வாசிப்புக்கு இலகுவானதாக இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். நான் இன்னும், ஒரு மதில் மேலிருக்கும் பூனையின் நிலையை ஒத்திருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் அடுத்து, நடை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவமான எழுத்து நடை உண்டு. 10 நாட்கள் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை படித்தால் அவரின் அடுத்த எழுத்து எப்படி இருக்குமென எளிதில் ஊகித்துவிடலாம். நாம் படிக்கும் பலவற்றிலிருந்து ஒரு நடை தனித்து தெரிந்து நம்மை கவராவிட்டால், பத்தோடு பதினொன்றான குப்பைபோல, படிக்காமல் subscribe செய்து குவிந்துவிட்ட rss/atom feed-களாகின்றது. இந்த இறுதி விஷயமே வெற்றிக்காண காரணம். இல்லாவிட்டால், எழுதும் அத்தனைபேருமே ஒரு எஸ்.ரா-வாகவோ, ஜெ.மோ-வாகவோ,சாருவாகவோ பலரை சேர்ந்துவிடலாமே.

ஒவ்வொருவரும் தங்களுக்கான எழுத்துநடையை செயற்கையாக உருவாக்காமல் இருப்பதிலும்  வெற்றி இருக்கிறது, செயற்கையானது எளிதாக யாரையும் கவர்ந்துவிடாது, மேலும் அதை தக்கவைத்துக்கொண்டிருப்பதும் கடினமானதொன்று.

முன்பு ஒருகட்டத்தில், எஸ்.ரா போலவே இருக்கனுமென்று முயற்சி செய்து மொக்கையாய்போனது நினைத்தால் சிரிப்புத்தான் வருது.

தனித்துவமான எழுத்துநடை என்று சொன்னதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இவை (இவற்றில் பல, நான் அதிகம் படித்த/தொடர்ந்து படிக்கும் இணைய எழுத்தாளர்கள்)

பாலகுமாரன் - முன்/பின் என இவரின் நடை மாறும் காலகட்டத்தையும் சொல்லலாம். 'இரும்பு குதிரைகள்' மூலம் இவரின் வசீகரம் உருவானது. சமீபத்தில், 'உடையார்'-இல் அந்த வசீகரம் சிதைந்துபோனது.

எஸ்.ரா - இவரின் 'துணையெழுத்து' தொடரே என்னை மறுபடியும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தியது. அப்போது படித்தக்கொண்டிருந்தவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. முக்கியமாக அவரின் உவமைகள். நிகழ்வுகளையும், உணர்வுகளையும் சொல்ல அவர் கையாளும் வித்தியாசமான உவமைகள் திரும்பிப்படிக்க வைத்தது. பயணம் சார்ந்த எழுத்து அதற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கலாம் :-)

இளவஞ்சி - அருகிலிருந்து பேசும் இயல்பான நகைச்சுவை மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். முன்னால் இணைய எழுத்தாளர், இப்போது என்ன செய்கிறாரென தெரியவில்லை. என்னுடைய reader feed-களையும் நான் பார்க்காததால் இவர் எழுதிகிறாரவெனவும் தெரியவில்லை.

டுபுக்கு/உருப்படாதது/kg jawarlal/பாரா/சொக்கன் - சுதாஜா touch இருப்பினும், அதை உணராமல் படிக்கச்செய்துகொண்டிருப்பார்கள். இதில் 'உருப்படாதது' மற்றவர்களைவிட serious-ஆன பலவற்றை, நமக்கு தெரிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்றை சுவாரசியமாக-நகைச்சுவையோடு சொல்லி இவ்வளவு இருக்குதடாவென நினைக்கவைத்துவிடுவார். தனியேயின்றி, இந்த வரிசையில் பாரா-சொக்கன் இருவரையும் சேர்த்தற்கு பலரும் எதிர்க்கலாம், நான் இவர்களின் வலைத்தளத்தை மட்டும் படித்த அனுபவத்தை வைத்து சேர்த்துள்ளேன்.
மேலே சொன்ன வகையில் பல பதிவர்கள் இருக்கிறார்கள், உடனே தோன்றியது மேலுள்ளவர்கள்.

அ.முத்துலிங்கம் - சமீபத்தில்தான் இவரின் வலைத்தளம் அறிமுகமானது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நகைச்சுவைதான் இவரின் வலிமை. இவரின் கட்டுரை வாழைப்பழம் முழுக்க ஊசிகள்தான்.

அக்கரைச்சீமை 'பாலா'/hollywood bala - எனக்கு தெரிந்து வலைத்தளங்களில் பலரும் திரைவிமர்சனங்களை குவிப்பதற்கு ஒரு காரணமாக இவர் இருக்கலாம்.

மரு. புரூனோ - பலருக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இவர் ஒரு தகவல் சுரங்கம் என்பதில் வேறுபாடு இருக்காது :-)  , எழுத்தில் தெரியும் அசாத்திய பொறுமையும், எளிமையோடு கொண்ட தகவல் செழுமையும் அருமை.

வினவு (ஒருகாலத்தில்) - சொல்லவந்ததை மனதில் மற்றுமல்ல இரத்தத்திலும் சூடேற்றுவதில் இவர்கள் எழுத்து மிக வேகமானதாய் இருந்தது. தற்போது அதை செயற்கையாக செய்வதைப்போலதொரு தோற்றம் வந்துவிட்டதால் இரசிக்க முடியவில்லை.

750 எழுதிக்கொண்டிருக்கையில், எனக்கான எழுத்து நடையை அடையாளம் கொண்டுகொள்வேணாவென தெரியாது, ஆனால் அதை செயற்கையாய் புகுத்தக்கூடாது என்று மட்டும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

இளையராஜா - Confessions - 678 - தமிழ் திரைப்படங்கள்

Published by யாத்ரீகன் under , on வியாழன், டிசம்பர் 29, 2011
சென்னையில் மழைச்சாரலோடு கூடிய குளிரா என வியப்போடு சொல்வதே இப்போது வழக்கமாகிவிட்டது. இன்றும் என்றுமில்லாமல் சில degree குளிர் அதிகம், காரணம் அந்த இன்னும் பெயரிடப்படாத புயல்தான் போல.

நேற்று இளையராஜா இசை நிகழ்ச்சி பற்றி சென்றிருந்த எல்லா இரசிகர்களும் வரம், வாழ்வு என சிலாகித்துவிட்டார்கள். இசை, குறிப்பாக தமிழ் திரைப்பட இசை மட்டுமே கேட்டுத்தலையாட்டும் இரசிகன் நான், எனக்கு இளையராஜாவோ, இல்லை குறிப்பிட்ட பாடல்கள் மேலோ, அடாடா அந்த prelude-இல் வயலின் கேளு, இந்த orchestration அருமையா வந்திருக்கு என பிரித்து மேயத்தெரியாது. நேற்று நடந்த இசை நிகழ்ச்சிக்கு இதுதான் முதல் விதிமுறை என்பதுபோலத்தான் நண்பர்கள் tweet-இல் கொடுத்த நேரடி வர்ணனை இருந்தது. வீட்டில் ஒரு நல்ல headset-இல்/home-theatre-இல் கேட்டுவிடுவதை விட நேரில் கேட்பது என்ன வித்தியாசம் வந்துவிடப்போகுது என்றெண்ணி, புல்லரித்து அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.

750words-இல் ஒரு மிகப்பெரும் பலம், இதுதான் எழுதவேண்டுமென இல்லாதிருப்பது. இதில் எழுதுவதை வலைதளத்தில் பதியவேண்டுமென நினைத்தாலே ஒரு bloggers block வந்துவிடுகிறது (எதோ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரென நினைப்புதான் ;-)

பிறமொழிப்படங்கள் பார்த்து வெகுநாளாகிவிட்டபடியாலும், சென்னையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாத குறையை போக்கும்விதமாகவும், அங்கே திரையிடப்பட்ட படங்களாக தேர்வுசெய்து பார்க்கத்துவங்கியிருக்கிறேன். வீட்டிலேயே movie marathon ஓட்டி எவ்வளவு நாளாகிவிட்டது :-(

Confessions:
ஜப்பானிய படங்களை அதிகம் பார்த்ததில்லை என்ற போதிலும், இதை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த காரணம், இதை ஒரு கொரிய படமென்று நான் குழப்பிக்கொண்டதனால்தான் :-). பொதுவாக கொரியப்படங்கள், காதலாகட்டும், நகைச்சுவையாகட்டும், வன்முறையாகட்டும் எதிலும்  ஏமாற்றமளிப்பதில்லை.



இதை thriller, horror, mystery எனவும் வகைப்படுத்தமடியவில்லை. படம் ஆரம்பித்த 15-20 நிமிடங்களில் முழு கதையையும் போட்டுடைத்துவிடுகிறார்கள். இதற்குமேல் எப்படி 1:30 மணிநேரம் ஓட்டப்போகிறார்களென யோசித்தால் Roshoman சுவாரசியத்தாலும், அற்புதமான camera கோணங்களாலும், பின்ணனி இசையாலும் நம்மை எங்கும் அசையவிடுவதில்லை. படம் முழுக்க slow motion sequenceகளாலே நிரம்பியிருக்கின்றது.

படத்தை பார்க்கும்போதே, பள்ளி/கல்லூரி படிக்கும்போது எப்பேர்ப்பட்ட மகான்களாக இருந்திருக்கிறோமென நம்மைப்பற்றியே பெருமைகொள்ளச்செய்யுமளவுக்கு இருக்கிறது  அவர்களின் சேட்டை. நல்லவேளை, படத்தின் வரும் அனைவரும் முகவெட்டும் ஒரேமாதிரியிருந்து குழப்பியடிக்காமல் சிறிதுவித்தியாசமாயிருந்து காப்பாற்றிவிடுகிறார்கள். இருந்தும், கொஞ்ச நேரத்துக்கு 2 lead -ve கதாபாத்திரங்களில் வருபவர்களை வித்தியாசம் கண்டுகொள்வது கடினம்தான்.

இப்படி ஒரு genreக்கு அட்டகாசமாய் camera கோணங்களை தேர்வுசெய்யும் சுவை இவர்களுக்குத்தான் வரும்போல. படத்தில் கொஞ்சம் psycho analysis-உம் செய்துவிடுகிறார்கள். செல்வராகவனுக்கு நல்ல தீனியாய் இந்த பட remake அமையலாம் :-) 

நேரமும், பொறுமையும் இருந்தால் இந்த படத்தை பார்க்க அமருங்கள்.

678:

பெண்கள் உள்ளாகும் பாலியல் தொல்லைகளை பற்றி எடுக்கும் படங்களிலேயே, 'காளை மாடு ஒண்ணு, கறவை மாடு மூணு......' என பாட்டெழுதி சொல்ல வந்ததை நீர்த்துப்போகச்செய்ய நம்மால் மட்டும்தான்.

இந்த படமும், இப்படி தொல்லைகளுக்கு உள்ளாகும் 3 பெண்கள் பற்றிய கதைதான், ஆனால் நடப்பது எகிப்தில், இதுவரை பெண்களால் பாலியல் புகார் பதிவு செய்யப்படாத நாடாக காண்பிக்கிறார்கள்.

பொதுவாக பாலியல் புகார்களுக்கும், பெண்கள் அணியும் உடைக்கும் தொடர்பு செய்து பேசுவது ஆண்களிடம் (எந்த மதத்தவராயினும்) இயல்பாக இருக்கும். அதையும், மதத்தோடு சம்பந்தப்படுத்தி பேசுவது மிகவும் delicate-ஆனதொன்று. படத்தில் அதை மிக நுணுக்கமாக மூன்று வேறு வேறு கோணங்களை கொண்ட, வேறு வேறு வாழ்க்கை முறைகளிலும், தளங்களில் இருக்கும் பெண்களை கொண்டு கையாண்டிருப்பது அருமை.

இறுதி 30 நிமிடங்களில், நம்மிடம் இருக்கும் எல்லா கேள்விகளையும் (உ.தா. கவர்ச்சியாக உடையணிந்ததால்தான் ஆண்கள் தூண்டப்படுகிறார்கள் , (அல்லது) எப்படி உடையணிந்தாலும் அத்துமீறுபவன் மீறிக்கொண்டுதான் இருப்பான்) அந்த 3 பெண் கதாபாத்திரங்கள் மூலமே எழுப்பியிருப்பதுமட்டுமில்லாமல் அதற்கான பதில்களை நம்மையே அதில் தேடி உணரவைப்பதுதான் படத்தை மனதில் படியச்செய்கிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், தமிழ்த்திரையுலகின் ஒரு முக்கிய இயக்குநரின் முதல் வெற்றிப்படமான 'புது வசந்தம்' ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அவரின் 'புரியாத புதிர்' commercial-ஆக வென்றிருந்தால் தமிழிலும் Confessions original-ஆக வந்திருக்குமா ?

இந்த குளிரிலும் சீக்கிரம் எழுந்து 750 type செய்யும் என்னை பாராட்டுவீர்கள்தானே ? நீங்கள் பாராட்டாவிட்டால் என்ன, 750words.com என் கணக்கில் ஒரு புள்ளி ஏற்றுகிறார்கள் :-)

750 வார்த்தைகள்

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 28, 2011

இன்றோடு 3 நாட்களாகிவிட்டது இந்த 750 வார்த்தைகள் தளத்தில் சேர்ந்து. சக twit புலிகளை கண்டு சூடு போட்டுக்கொண்ட பூனை கதையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு அலுவலகத்துக்கு நேரமானாலும், மனைவி பின்னாடியிருந்து கடிகார நொடி முள்ளைப்போல  சுற்றி சுற்றி வந்து நேரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்தாலும், கடமை உணர்ச்சி பொங்க, twit அரட்டைகளையும் மீறி ஒருவழியாக ஆரம்பித்துவிட்டேன்.

Boxing Day என்று cricket-ஐப்பற்றி எங்கும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில் என் ஆர்வம் எங்கு தொலைந்து போனது என்று தேடோ தேடோவென தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பைத்தியம் பிடிக்கத்துவங்கியது 1996 உலகக்கோப்பை என்று நினைக்கிறேன், அதன் பின்னர், வீட்டில், தெருவில், அத்தை வீட்டில் என சென்ற இடமெல்லாம் எதையாவது உடைப்பது, சண்டை என வெறித்தனமாய் விளையாண்ட நாட்கள் அது. மூன்று cricket வெறியர்களை பெற்ற அம்மா ஞாயிற்று கிழமைகளிலும், கோடைக்கால விடுமுறைகளிலும் பட்ட பாடு சொல்லி மாளாது :-)

எங்களுக்கு என்று ஒரு புத்தகம், அதுதான் எங்களுடைய wisden database. நாங்க விளையாடும் எல்லா match-களும் (?) , அதைப்பற்றிய வரலாற்று குறிப்புகளும் அதில் இடம்பெறும். சின்னப்பசங்களாய் இருக்கும் தம்பிகளை ஏமாற்றுவதா பெரிய காரியம் ? :-) , அதில் நான்தான் leading record maker

அத்தை வீட்டின் பெரிய மொட்டை மாடியாகட்டும், எங்கள் வீட்டின் குறுகலான ரேழியாகட்டும், மூன்று கோடுகளை chalk piece-ஆல் வரைந்துவிட்டாலே எங்கள் மைதானம் தயார். நாட்டில் மற்ற விளையாட்டுகள் அழிந்துகொண்டிருக்க, cricket மட்டும் வாழ்வாங்கு வாழ இதுவே காரணமென்று யாருக்குமே புரியவில்லையா ?

ஒரு bangalore one-day match, srikanth-உம் kumbley-யும் அவரவர் அம்மாக்கள் stadium-இல் பார்க்க ஒரு விறுவிறுப்பான போட்டியை வென்று கொடுக்க, நாங்கள் எங்கள் அம்மாவுடன் அதே தீவிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.  எங்களோடு சேர்ந்து அம்மாவுக்கும் cricket  ஆர்வத்தை உருவாக்கிவிட்டோம். இதில் பெரும்பங்கு கடைசி தம்பியினுடயதுதான். இன்றுவரை தம்பிகளுக்கு ஈடுகொடுத்து விமர்சனம் செய்வதாகட்டும், அவ்வப்போது நடக்கும் போட்டிகளை பார்ப்பதாகட்டும் என அம்மா தன் consistency-ஐ இன்றும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

 தமிழனின் கலாச்சாரப்படி காசிருக்கும்போது rubber பந்து, கொஞ்சம் காசிருக்கும்போது plastic பந்து, காசே இல்லாதபோது பழைய காகிதத்தினிடையே சிறு கல்லை வைத்து சுருட்டி, ஆவின் கவரில் திணித்து, முற்றிலும் சைக்கிள் tube-ஐ வெட்டி செய்த rubber band-களால் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தோம். Cork/Stitch பந்து என்பது bet matchகளில் மட்டுமே எங்களுக்கு சாத்தியப்பட்டது. இன்று நினைத்துப்பார்த்தால் நாங்கள் தொலைத்த பந்துகளின் காசில் ஒரு cricket kit-டே வாங்கி விடலாம்.

இந்த ஆர்வத்துக்கு தீனி போட கொல்கத்தாவிலிந்தபோது  Eden-Garden  மைதானத்தில் நடந்த இந்திய - தென்னாப்பரிக்கா டெஸ்ட் போட்டியைக்கான அடிதடி, சிபாரிசுகளிடையே ஒரு நுழைவுச்சீட்டு வாங்கி சென்றிருந்தேன். போட்டியை நேரில் பார்ப்பது ஒருவித சுவாரசியமேன்றாலும், அவ்வப்போது வரும் கடி விளம்பரங்கள், replay-கள் இல்லாமல் பார்க்க, பாட்டே இல்லாத தமிழ் மசாலா படம் பார்த்த ஒரு உணர்வு.

அப்போது தாதா அப்போது மெல்ல உருண்டு வரும் பந்தை எடுத்தாலே மைதானமே ஆர்ப்பரிக்க, மற்ற வீரர்கள் விழுந்து தடுத்தாலும் ஒரு ஏகத்தாலக்கூச்சல் செய்வதும் சிரிப்பைத்தான் இருந்தது, ஆனால் மைதானத்திலிருந்தபோது  மறந்தும் தாதா பற்றி பக்கத்திலிருந்த பெங்காலி நண்பனிடம் ஏதும் சொல்லிவிடவில்லை.

இப்படி வெறியனாயிருந்தவனுக்கு, எதோவொரு நாளென்று தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல மொத்த ஆர்வமும் போய்விட்டது. அசாருதீன், Hansie Cronje என ஒவ்வொரு கதையாய் வெளியே வர காரணமா என தெரியவில்லை, கடைசியா நான் முழுவதும் அமர்ந்து பார்த்த போட்டி என்னவென்றுகூட நினைவு இல்லை.

வேலை காரணமாக பல இடங்கள் மாறியபோது, tennis, volleyball என அப்பாடக்கராக மாறியபோது cricket சுத்தமாய் நினைவிலிருந்து அழிந்தது.

இந்தியா வென்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி இறுதி overகளை ஆர்வமே இல்லாமல், தம்பிகள் channel-ஐ மாற்றவிடாததால் பார்க்கவேண்டியதாகிவிட்டது.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கையில் 4 ஆஸ்திரேலிய wicket-கள் வரிசையாய் சரிந்துகொண்டிருக்க அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்க ஆர்வமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

போனவாரம் @rgokul -ஐ காணச்சென்றிருந்தபோது @rajeshpadman cricket விளையாடுவியா ? என கேட்டபோது ஒரு நொடி யோசித்து ஆமா என சொன்னதுக்கு என்ன காரணமென தெரியவில்லை.