யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆயிரம் முத்தங்கள்

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, ஜூலை 31, 2016
நேற்றிரவு திடீரென பயங்கர தலைவலி, பசி, வயிற்று வலி. எங்கிருந்து வந்ததென தெரியவில்லை, ஒருவேளை சரியான தூக்கமில்லாததோடு, வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழியென்று இழுத்துபோட்டுக்கொண்டு நாள் முழுவதும் வேலை செய்ததுதானென நினைக்கிறேன். 5 நிமிடத்தில் சுருண்டு படுத்துவிட்டேன்.

இது தெரியாதவள், வழமைபோல என் முதுகில் குதிரைச்சவாரி செய்வதும், குறும்பாய் எதாவது செய்துவிட்டு அப்பாஆஆ என வம்பிழுப்பதுமாய் விளையாடிக்கொண்டிருந்தாள். "அப்பாவுக்கு பனிடா (காய்ச்சல்) , வையா (உடல் சரியில்லை), மம்மம் சாப்பிடலை, தூங்கட்டும்" என அம்மை சொன்னதும், "தெம்மாமி.... ஊஊஉ(சி)" என சென்ற வாரம் காய்ச்சலிலிருந்து மீண்டவள் தன் வாழ்க்கை [ :-) ] அனுபவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தூங்கும்வரை "அப்பாஆ பனி.." , "அப்பாஅ ஊஊஊ" என infinite loop-இல் ஓடிக்கொண்டிருந்தாள். அம்மைதான் கேட்டுக்கேட்டு tired ஆனாள் :-)

காலையில் எடுத்து வைத்திருந்த தோசையை கவனிக்காமல் வேலை மூழ்கியிருந்தபோது, அந்த சிறு கைக்கேத்த மிகச்சிறிய கவளம் எடுத்து எனக்கு ஊட்டிவிடத்துவங்கினாள். ஒருவேளை அம்மை சொல்லியிருப்பாளோ என திரும்பிப்பார்த்தபோது, அவளும் ஆச்சரியமாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு கவளம் ஊட்டிமுடித்ததும், "அப்பாஆ பசி... (என் வயிற்றை தொட்டுக்காண்பித்துக்கொள்வாள்) அப்பாஆ தப்பாச்சி..." என அம்மையை பார்த்து சொல்லிக்கொண்டே ஒரு 'கோதுமை' தோசையை சப்பாத்தி (தப்பாச்சி) என நினைத்து ஊட்டி முடித்தபோது, ஆயிரம் முத்தங்களாவது கொடுத்திருப்போன்.


டோரியும் ஒரு டப்பா பாப்கார்னும்

Published by யாத்ரீகன் under , , on திங்கள், ஜூலை 18, 2016
முதல் சொல், முதல் நடை என்பதைப்போல் முதல் திரைப்பட அனுபவமும் எவ்வகையிலிலேனும் மறக்கமுடியாததாகிறது. தம்பிக்கு திருமணமாகிவிட்ட பின்பும் , அஞ்சலி (மணிரத்னம்) திரைப்படம் பார்க்கச்சென்றபோது அவன் அடித்த கூத்து பற்றி இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

வருட ஆரம்பத்தில் Finding Dorry trailer வந்ததுமே இந்த படந்தான் என முடிவு செய்துவைத்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல வீட்டருகே உள்ள வண்ண மீன் விற்பனையகத்துக்குப்போய் pish pish, biiiig pish என மீனாளாகியிருந்தாள். Chu Chu TV slotகளுக்கிடையே Finding Dorry Trailerஉம் இடம் பிடிக்க ஆரம்பித்து,   டோதியும் அறிமுகமானாள்

அந்த நாளும் வந்தது.

நகரின் வேறொரு மூலையில் அத்தைகளை மருமகளை காண்பித்துவிட்டு, அடித்துபிடித்து 10 நிமிடம் தாமதமாக நுழைந்தோம். சிறுவர்களுக்கான கண்ணாடியும் காலியாகிவிட்டது.

உட்கார்ந்த சிறிதுநேரத்திலேயே , எதுவும் சொல்லாமலே Dohhhhdhy Dohhhhdhy என கூச்சல். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த மகிழ்ச்சி :-)  , கொஞ்ச நேரம்தான் அப்பா, அம்மே என தாவிக்கொண்டிருந்தால்.

அவள் சேட்டைகளுக்கிடையே கோமாளி மீன்கள் வந்ததும்  Neeeno Neeeno என சப்தம்.  இடைவேளைவரை பெரிய தொந்தரவில்லை.

நல்லவேளை பாப்கார்ன் வாங்கியது, சுவையில் பெரிதாய் கவராவிட்டாலும், டப்பாவிற்குள் துளாவிக்கொண்டு, மேலே தூவிக்கொண்டு யாருக்கும் தொந்தரவில்லா விளையாட்டு. அது போரடித்ததும் மீண்டும் Dohhhhdhy Dohhhhdhy, Neeeno Neeeno... பிறகு,  ஆக்டோபஸ், Big Fish (Whales) என்று அம்மேயின் புது பாடங்கள்.

இறுதியில் வரும் குட்டி Dorryயை , அம்மேயின் விவரிப்போடு அப்படி பார்த்துக்கொண்டிருந்தாள்.

படம் பார்த்து ரெண்டு நாட்களாச்சு,

" theatreல யாரடா பார்த்த ?" என்றால்
" Dohhdhy"

"Dorry என்னது ?"
"பிஷ்"

"Dorry friend பேரு என்ன ?"
 "No No, No No"

Buzzlight Yearஐ மூட்டை கட்டிவிட்டு Dorry பொம்மை வாங்கவேண்டும், இன்னும் இரு கவளம் சோறு உள்ளே போகும் :-)

#மகள்குறள்

என் சர்க்கரை பட்டி குட்டி

Published by யாத்ரீகன் under , on சனி, ஜூன் 25, 2016
பட்டி குட்டி என இவளை செல்லமாக கூப்பிடுவதற்கு இன்னொரு காரணம் கோபம், மகிழ்ச்சி, அழுகை, அடம், குழப்பம், தூக்கக்கலக்கம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இவள் 'கடி'.

எங்களிருவரை செல்லக்கடி கடிப்பதுமட்டுமில்லாமல், மெல்ல வெளியாட்களிடமும் அது ஒரு பழக்கமாகத்தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு முறை அவள் கடித்துவிடும்போதும், குரல் உயர்த்தி 'தப்பு' , 'No No' எனச்சொல்வதும், அம்மே கோபித்துக்கொண்டு(கொள்வதுபோல்) அறைக்கதவை மூடிக்கொள்வதும், இருவரும் அவளிடம் பேசாமலிருப்பதும், மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் என சாம, பேத, தண்ட வழிமுறைகளை பின்பற்றத்தொடங்கினோம்.

குரல் உயர்த்தி 'தப்பு' எனச்சொன்னதும் தவறு செய்துவிட்டதை உணர்ந்ததைப்போல், தலை தாழ்ந்து, நம் கண்களை பார்க்கவே மாட்டாள். அப்படியே 'கடிக்கலாமா ? தப்பில்ல ?' என்ற கேள்விக்கு கவனமேயில்லாமல் வேறேதாவது வேலை செய்வதுபோல பாசாங்கைத்துவங்கியிருப்பாள்.

'No, No' என நாம் மெல்ல தலையை வலம்-இடமாக ஆட்டத்துவங்கினால், அவளும் பதிலுக்கு No No என மழலையில் கொஞ்சி மொத்த கோபத்தையும் காலிசெய்திருப்பாள்.

கடி வாங்கிய அம்மே கோபித்துக்கொண்டு அறைக்கதவை மூடிக்கொண்டால், ஒற்றை விரல் கொண்டு அப்பாவை தரதரவென இழுத்து வந்து கதவைத்திறக்கவைத்து, ஓடிச்சென்று அம்மேயை கட்டியணைத்து உம்மா தந்து கவிழ்த்துவிடுவாள்.

Sorry என்ற சொல் பழகும்வரை, சைகை மொழியில் மன்னிப்பை பழக்கியிருந்தோம். அதை கிழித்துவிடும் புத்தகத்திற்கும், கொட்டிவிடும் பாலிற்கும், உடைத்துவிடும் பொம்மைக்கும் என, அஃறிணைப்பொருட்களுக்கு மட்டும் செவ்வனே செய்துவந்தாள்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் கிடைக்கத்துவங்கியது, ஆனால் எல்லாமே அடுத்த உணர்ச்சிப்பெருக்கு வரும்வரைதான். வந்ததும், அனைத்தும் மறந்துபோகும்.

இதோ இதை எழுதி முடித்து அமருகையில், 'பா, பா ' என்று அழைத்துவந்த பாட்டியை முதன்முறையாய் 'பாட்ஈ' என அழைத்துவிட்ட உற்சாகத்தில் ஓடிவந்து என்னை கட்டியணைத்துக்கொண்டவள் அதே வேகத்தில் என் தோளில் ஒரு செல்ல கடி. கடித்த அடுத்த நொடி நான் அவளை கோபமாக பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, மெல்ல முத்தங்கொடுத்து விளையாடுவதைப்போல ஓசையெழுப்பி பாசாங்கு செய்துகொண்டே பார்த்த பார்வையும், குறும்புச்சிரிப்புமிருக்கே... என் சர்க்கரை பட்டி குட்டி.

தலைகீழ் இரவு

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, நவம்பர் 29, 2015


       'தல்வார்' திரைப்படத்தை மாலை பார்க்கத்துவங்கியபோது இருந்த சாதாரண மனநிலை வேறு, ஒரு இடைவேளைக்குப்பிறகு அந்த நிகழ்வை நினைத்துப்பார்க்கும் அசாதாரண மனநிலை வேறு. இது இரண்டுக்கும் இடையில் நடந்த கூத்து, மகளின் திருவிளையாடல், எங்களின் கவனக்குறைவு.

      நாள் முழுதும் அலைந்து திரிந்து, ஆசையாசையாய் வாங்கிய உடையில், வீட்டையே அவள் பெரும் சிரிப்பில் நிறைத்துக்கொண்டிருந்த வேளை. சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் திடீரென புரையேறி இருமினாள். விளையாட்டு ஆர்வத்தில் அவ்வப்போது நடப்பதென்பதால் முதுகை தட்டி, தடவிக்கொண்டிருக்க, மெல்ல மூச்சுவிடத்திணறுவது போலத்தோன்றியது.

    முதுகை இன்னும் கொஞ்சம் வேகமாக தட்டி, தடவிக்கொடுத்தும் பலனில்லை, அழுகத்துவங்கிவிட்டாள். அழுவதும் சாதரணமாயில்லாமல், மூச்சுவிடத்திணறித்திணறி அழுகை. குழந்தை ஒன்றின் தொண்டையில் திராட்சைப்பழம் சிக்கிய செய்தி நினைவுக்கு வந்துபோக, கலங்கிப்போனேன்.

  அழுகையும், மூச்சுத்திணறலோடுயிருக்கும் இவளை சமாளிப்பதா, பயந்து அழுதுகொண்டிருக்கும் அம்மாவை சமாளிப்பதா. தோசை அடைத்துக்கொண்டிருக்குமென வாயினுள் விரலைவிட்டு எடுக்க முயற்சி செய்தால் மேலும் அழுகிறாள், வாயை இறுக மூடிக்கொள்கிறாள், பயந்துபோய் அம்மாவிடம் தவ்வுகிறாள். அதையும் மீறி செய்தால் சளி மட்டும் கோழை கோழையாய் வருகிறது. தலைகீழாக மடியில்போட்டு முதுகை வேகமாக தட்டியும் பார்த்தாயிற்று, திணறல் நிற்பதாக தெரியவில்லை.வீட்டில் எல்லோரும் பதறிப்போய் கைபிசைந்து சுற்றிக்கொள்ள, பதட்டம் அதிகரித்துதான் போனது.

 மீண்டும் விரல்விட்டு எடுக்க, ரோஸ் நிறத்தில் ஏதோ கண்ணில்தென்பட்ட நொடி காணாமல் போனது. உணவுப்பொருளில்லை, வேறேதோதான் என உறுதியானதும் பதட்டத்தோடு எல்லோர் மேலும் கோபமும் சேர்ந்துகொண்டது. அடுத்தடுத்த முயற்சியிலும் ஏதும் சிக்கவில்லை, பால் கொடுத்துப்பார்க்கலாமென முயற்சித்தால் அதற்கும் அவள் ஒத்துழைப்பதாயில்லை.

ஒரு கட்டத்திற்குமேல், தவறாய் ஏதேனும் செய்யப்போய் பெரிய பிரச்சனையாய் ஆவதற்குள், நேரத்தை அறைகுறை அறிவில் வீணாக்கவேண்டாமென மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடினோம்.

போகும் வழியிலேயே திணறல் குறைந்தும், உறுதி செய்துகொள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம். மருத்துவர் பரிசோதித்து வாயில் ஏதுமில்லை, விழுங்கியிருந்தால் பிரச்சனையில்லை, வெளியில் வந்துவிடும் என்று உறுதியளித்தும், சித்தப்பாவிற்கு திருப்தியேயில்லை. கிளம்பும்வரை நல்லா பார்த்துட்டீங்களா என மறுபடியும், மறுபடியும் கேட்டுக்கொண்டிருந்தான்.

சளி கோழையை எடுத்துவிட்டதா, இல்லை அதை அவள் விழங்கிவிட்டதாவென தெரியவில்லை,  அழுகையும் திணறலும் முற்றிலும் நின்று தங்கமீன்களை விரல்கொண்டு துரத்திக்கொண்டிருந்தாள்.

அத்தனையும் 7-8 நிமிடங்களே நடந்திருக்கும், ஆனால் ஆயுளுக்குமான பயத்தை விதைத்துவிட்டாள். அத்தனைக்கும் எல்லோர் கண்பார்வையிலும், கவனத்திலுந்தான் விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு நொடியில் அந்த இரவு தலைகீழாய் மாறிப்போனது.

ஆருசி தல்வார், பரபரப்பான தினத்தந்தி வகையிலான செய்தியாகத்தான் இந்த நிகழ்வு எனக்கு அறிமுகம். பலவிதமான ஆருடங்கள், திட்டமிட்ட கவனக்குவிப்பு, புலனாய்வில் அநியாய கவனக்குறைவு, மக்களின்/ஊடகங்களின் கிசுகிசு பசிக்கு என பல பரிணாமங்கள். அத்தனையும் மீறி என்னை பெரிதும் உறுத்தாத ஒன்று, தாய்-தந்தையே எப்படி மகளைக்கொல்ல முடியுமென்பது. உறுத்தாதற்கு காரணம், தாய்-தந்தை-தாத்தா-அண்ணன் போன்ற உறவுகள் செய்யும் அ'கெளரவ'க்கொலைகள் பற்றி நிறைய செய்திகள் கேள்விப்பட்டிருந்ததாலிருக்கலாம்.

ஆனால் நேற்று நிகழ்விற்கு பிறகு, குழந்தை உட்பட எல்லோரும் ஆசுவாசமாய் தூங்கச்சென்றுவிட்ட பிறகும், ஏனோ ஒரு பதட்டம். தல்வார் தம்பதியினர் அதை செய்திருக்கக்கூடுமா, செய்திருந்தால் அந்த நொடியின் நினைவே ஆயுளுக்குமான மிகப்பெரும் தண்டனையாய்த்தான் இருந்திருக்கும். அவ்வப்போது மகளின் நெஞ்சில் காதுவைத்து சுவாசம் இயல்புக்கு மாறி இருக்கிறதாவென பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

இவள் விபத்தாய் மூச்சுத்திணறுவதையே தாங்க முடியவில்லையே, தன் ஆயுளுக்கு முன்னேயே, கண்முன்னேயே குழந்தைகளை பரிகொடுப்பவர்களின் நிலையை அன்றுதான் உணர்ந்ததுபோலிருந்தது. சிறுவயதில் தவறிப்போன மகளை தோளில்போட்டுக்கொண்டு நள்ளிரவில் அலைந்த அப்பாவின் நினைவு மனதை என்னமோ செய்யத்துவங்கிவிட்டது.

ஆசைதான் தீராமலே, உன்னைத்தந்தானம்மா..

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், செப்டம்பர் 29, 2015



இசைஞானியின் பாடலின் மூலம் இவளுக்கு இசையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் இவளுக்கு மிகப்பிடித்தது 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... ' பாட்டு. இசைக்கத்துவங்கியதும், speakerகளை தேடத்துவங்கிவிடுவாள். தூக்கி நிப்பாட்டி பிடித்துக்கொண்டால் குதூகலத்தில் குதித்து குதித்து, இவளை பிடித்துக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டி களைப்படைந்தாலும் நிறுத்தமாட்டாள்.

நேற்று அம்மாவைத்தேடி அழுதுகொண்டிருந்தவளை சமாதானப்படுத்தும் பல முயற்சிகள் தோல்வியடைந்ததும், இறுதியாக பாட்டை போட்டதும் சட்டென அவள் கவனம் அதில் திரும்பியது. கையிலிருந்தவளை மெல்ல இறக்கி speaker-இன் முன் உட்காரவைத்து அசந்துபோய், பாடல் வரிகளை இரசிக்கத்தொடங்கினேன்.

எத்தனையோ முறை கேட்டிருந்த பாட்டு, ஆனால் நேற்று ஒவ்வொரு வரியும் பரவசநிலை. பாட்டு முடிந்ததும் வாலிக்கு பெண் குழந்தைகள் எத்தனை என்று பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

பாட்டைக்கேட்டுக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து என்னருகே வந்திருக்கிறாள், கால்களை பிடித்து எழுந்து நிற்கப்போவதுபோல் முயன்று முட்டி போட்டு என்மேல் சாய்ந்துவிட்டாள். விழுந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்பா என்றாள்.

அ ப் பா , அப்பாஆஆ சொல்லு அப்பாஆஆ சொல்லு என அரைமணிநேரமாய் கதறினாலும், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அம்ம்ம்ம் அம்ம்ம்ம் என கொஞ்சிக்கொண்டிருப்பவளா இப்படி என நம்பமுடியாமல் பார்த்தால் மறுபடியும் மறுபடியும் அப்பாஆ, அப்பாஅ என கொஞ்சல்.

சட்டென மனதில் ஏதோவொன்று கரைந்தது. கண்களில் கண்ணீர் திரண்டுவிட, அள்ளி அணைத்துக்கொண்டேன். பின்ணனியில்....

ஆகாயம் பூமியெல்லாம்,
இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசைதான் தீராமலே,
உன்னைத்தந்தானம்மா....


இனிய இரவு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, செப்டம்பர் 04, 2015
மாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது, அவள் என்றும் தூங்கும் நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகமாகிவிட்டது. சில நிமிடங்கள் தாண்டினாலே சிணுங்குபவள் அழத்துவங்கிவிட்டாள். அம்மாவைத்தவிர யாரிடமும் நிற்கவில்லை. வெளியே சென்ற இடத்திலும் , அம்ம்ம்... அம்ம்ம்.. அம்ம்ம்... என அவளிடமே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் மருந்து, பால் எல்லாம் கொடுத்து, விளக்கணைத்து, அவள் தூங்குவதற்கான சூழலை உருவாக்கி எங்கள் நடுவே படுக்கவைத்ததும், அம்மா பக்கம் உருண்டுபோய் அவள் கழுத்தை அந்த சின்னஞ்சிறு கைகளால் வளைத்து கட்டிக்கொண்டாள். 

சில நிமிடங்கள்தான், என்ன நினைத்தாலோ தெரியவில்லை, என் மனதில் ஒரு நொடி மின்னி ,மறைந்த ஏக்கத்தை உணர்ந்ததைப்போல என் பக்கம் உருண்டு வந்து என் கழுத்தையும் அந்த பிஞ்சுக்கரங்கள் கட்டிக்கொண்டன. எப்படி உணர்ந்தேன் என உவமை சொல்வதற்கு இதற்கிணையாய் வேறேதும் கண்டதுமில்லை, உணர்ந்ததுமில்லை.

இந்த உணர்விலிருந்து வெளியே வருவதற்குள், மீண்டும் அம்மா பக்கம் உருண்டுபோய் கட்டிக்கொண்டாள். என்னடா இது சோதனை என நினைக்கத்துவங்கும்வேளையில், மீண்டும் என்னிடம். இதை ஒரு விளையாட்டைப்போல மாறி மாறி உருண்டு, இருவர் கழுத்தையும் கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

அப்பாவிடம் ஒட்டவேயில்லையே என்றிருந்த மிகச்சிறிய ஏக்கத்தோடு முடியவிருந்த இந்த இரவு, இதற்குமேல் இனிமையானதாக அமைந்துவிடாது...

புத்தகக்கண்காட்சி

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2015


ஒவ்வொரு முறை எதாவது புத்தக விமர்சனத்தை கண்டதும் pocket, bookmark, favorite என ஏகப்பட்ட இடங்களில் நினைவுவைத்துக்கொள்வதும், கொஞ்சம் சுவாரசியமான தலைப்பைக்கொண்ட மின்னூல் எதைக்கண்டாலும் தரவிறக்கிக்கொள்வதும், torrentகளிலும், நண்பர்களிடத்திலும் கிடைக்கும் audiobook-களையும் சேர்த்துக்குவிப்பதும் என ஆர்வக்கோளாறு கொண்ட கடைக்கோடி வாசகன். இதில் எத்தனை படிப்பேன்/கேட்ப்பேனென்பது கேள்விக்கப்பாற்பட்டவை.

இதையெல்லாம் மீறி புத்தகக்கண்காட்சிக்கு செல்வதென்பது , superhero படங்கள் பார்த்தவுடன்  நரம்புமுறுக்கேறி, கைக்கு கிடைக்கும் யாரையாவது அடித்து உதைக்கவேண்டும் என்பதைப்போல. புது புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ, புதுப்புது சுவாரசியமான தலைப்புகள், கதைக்களன்கள், கைநிறைய புத்தகங்களை (படிக்கிறார்களோ இல்லையோ) அள்ளிச்செல்லும் இளைஞர்கள் என கண்காட்சிக்கு சென்று வந்த 1 வாரம், புத்தகங்களோடேதான் நாள் செல்லும். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, இதெல்லாம் அடுத்த வருசத்துக்குள்ள படிப்பியா மாட்டியானு தங்கமணி நக்கல் செய்யும் கிளைக்கதைக்குள்ளெல்லாம் இப்போது செல்லவேண்டாம்.

நல்லவேளை, போனமுறை ஆசைப்பட்டு வாங்கிய பெரிய தலையணை புத்தகம் (ஓநாய் குலச்சின்னம்) முதற்கொண்டு எல்லாம் படித்து முடித்ததால், இந்த வருடத்துக்கான budget வீட்டில் approve ஆனது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாய் 5/6 மணிநேரம் நடக்கவிட்டு நொந்துபோயிருந்ததால், இம்முறை வெறும் 30 நிமிடத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது, அதுவும் கண்காட்சி வாசலை கடந்து சென்றுவிடவிருந்த கடைசி நொடியில்.

கிடைத்தவரை லாபம்னு உள்ளே புகுந்தாச்சு. பதிப்பக-அரங்கு எண் பட்டியல் இல்லாததாலும், இணையத்தில் சேமித்துவைத்திருந்த புத்தகப்பட்டியலை அரங்கினுள்ளிருந்து தரவிறக்க முடியாததாலும், அந்த கணநேர மனப்பாய்ச்சலை வைத்து புத்தகங்களை தேர்வுசெய்துகொள்ளலாமென தோன்றியது.

மின்னூல்களில் படிப்பெதென்பது எனக்கு ஒத்துவராத காரியமென்று, ஆர்வக்கோளாறில் தரவிறக்கிப்பார்க்காத படங்களைவிட, படிக்காத புத்தகங்கள் அடைத்துக்கொண்டிருக்கும் GBகளை கண்டதும் நிறுத்திக்கொண்டேன்.

500 பதிப்பக அரங்கங்கள், இந்தந்த பதிப்பகங்களென திட்டமுமில்லை, சுவாரசியத்தலைப்புகள், பிடித்த எழுத்தாளர்கள் என கண்ணில்பட்ட பக்கமெல்லாம் ஓட்டம். அவ்வப்போது தங்கமணியை கூப்பிட்டழைத்து சுவாரசியமானவைகளை பற்றி ஒரு குதூகலத்துடன் விவரிப்பு. பாவம், மொத்த கண்காட்சியில் பேருக்கு ஒரேயொரு மலையாள புத்தக stallளென்பதால் வேறொன்றும் புரியாமல் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

கும்பலாக சுற்றுபவர்களைக்கண்டாலே, twitter கோஷ்டியாயிருக்குமோவென, யார் என்ன handleஓவென கூர்ந்து கேட்டுக்கொண்டே கடந்தேன்.

சென்றமுறைபோலவே பாலகுமாரனின் 'கங்கைகொண்ட சோழன்' தொகுப்பை கையிலெடுத்து, விலை கண்டே விலகினேன். ரொம்ப பாசக்கார அம்மணிக்கோ அது தாங்கவில்லை. அவளை சமாதானப்படுத்த ஒருவழியாகிவிட்டேன். உடையார் பிடித்திருந்தது, ஆனாலும் அதில் கருவூராரை ஏதோ மந்திரவாதியைப்போல அதீதமாய் காமித்திருந்தல், கதையிலும் மந்திர-தந்திர விவரிப்பு என உறுத்தலிருந்ததால், ஓசியில் கிடைத்தால் படிக்கலாமென சமாதானம் சொல்லி கிளம்பியாச்சு.

மசால்தோசை தொங்கிய ஸ்டால் வாசலில் வா.மணிகண்டன் கையெழுத்துத்திட்டுக்கொண்டிருந்தார். அவரின் எழுத்துக்கு பெரிய இரசிகனில்லையெனினும், நிசப்தம் அறக்கட்டளைக்கான முன்னெடுத்தலை பாராட்டலாமென நினைத்தால், புத்தகம் வாங்காமல் பாராட்டுபவனை அடுத்த வார பதிவில் குதறிவிட்டால் என்னசெய்வதென மெல்ல நகர்ந்தாச்சு.

Ambedhkar Foundation stallஐ கடக்கும்போது, அவரைப்பற்றி நுனிப்புல்தானே தெரியும், எதாவது படிக்க ஆரம்பிக்கலாமவென நீல நிறம் நிறைந்திருந்த அரங்கினுள் நுழைந்தேன். நிறைந்திருந்ததெல்லாம் அவரின் நூல்தொகுப்பு (கட்டுரை, வாழ்க்கை வரலாறு..என). முதல் தொகுதி எங்கிருக்கென நான் கேட்டதைவைத்தே அவருக்கு புரிந்திருக்கும். 37-வது தொகுதியிலிருந்து ஆரம்பியுங்க தம்பி, அதான் சரியாயிருக்கும்னு சொன்னதும் அதை எடுத்தாச்சு.

எது வாங்குகிறேனோ இல்லையோ, சிறுவயதில் சேமிக்காத வாண்டுமாமா, காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றிரண்டு எடுத்துக்கொள்வேன். வானதி பதிப்பகத்துக்கும், முத்து காமிக்ஸுக்கும் ஒரு நடை.

4/5 மணிநேரம் கூடயே வரும் மொதலாளியம்மாவுக்கு ஒன்றிரண்டு புத்தகம்.

மாதொருபாகன் சர்ச்சையில் பெருமாள்முருகனை (அவர் மன்னிப்பு கேட்டபொழுதிலும்)  ஆதரிக்கும்பொருட்டு (திரைப்படமோ, புத்தகங்களோ, எதிர் கருத்துக்களை சரியான முறையில் வைக்காத மக்கள், மாக்கள்) அவரின் சில புத்தகங்கள். அவரின் 'நிழல் முற்றத்து நினைவுகள்', 'ஏறுவெயில்' , இரண்டும் படித்து இரசித்திருந்ததால் இன்னும் தைரியமாய் எடுக்க முடிந்தது.

'வேங்கையின் மைந்தனை' பல அரங்களில் கேட்டுக்கேட்டு களைத்திருந்தேன்,  கிட்டத்திட்ட அரங்கிலிருந்து வெளியேறவிருந்தபோது, தான் கேட்டுப்பார்க்கிறேன் என களமிறங்கிய தங்கமணியின் நல்ல நேரம் முதல் கடையிலேயேயிருந்தது. என் நேரம், கையில் காசில்லை, கடையில் card-உம் வேலை செய்யவில்லை, படிக்காதவன் படத்து ரஜினி மாதிரி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் காசு தேற்றி வாங்க முடிந்ததில் என்னைவிட அவளுக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.

பேருவச்சியே, சோறுவச்சியாவென யாரும் கேட்டுவிடக்கூடாதென கொஞ்சம் தீனி, திருவிழா கலாச்சாரத்தை மீறிவிடக்கூடாதென டெல்லி அப்பளம் என 30 நிமிடம் 3:30 மணிநேரமாய் 'இனிதே' கரைந்தது.

கைவரை வந்த பல புத்தகங்கள் பைவரை வந்துசேரவில்லை, budget ஒரு limit என்றிருந்தபோதிலும், சில புத்தகங்களை வாங்கவில்லை. அப்புறம் வாங்கிக்கொள்ளலாம், நண்பனிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம், இது படித்து முடிக்கவேமுடியாது, இது புரியுமா, இதற்குப்போய் புத்தகமா என ஒவ்வொன்றுக்கும் ஒரு எண்ணம், எதைப்பற்றிய புத்தகங்களை வாங்குவார்களென்பது , எந்த திரைப்படங்கள் வெற்றிபெரும் என்பதுபோன்ற இரகசியம். அது என்னவென்று வாங்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்குமே தெரியாது.