யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நாலு இல்ல நாப்பது நாளாச்சு..

Published by யாத்ரீகன் under on புதன், ஏப்ரல் 26, 2006
பிடித்த நான்கு அரசியல்வாதிகள்:

* காமராசர்
- எங்கள் தலைமுறைக்கு முந்திய தலைவராயினும், இவர் வாழ்ந்த வீட்டை சமீபத்தில் கண்டபோது ஏற்பட்ட மன அதிர்வு விவரிக்க இயலாது.
* லெனின் - ஒரு நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிக்காட்டிய மன உறுதி
* மாசேதுங் - சாதரண குடியானவனின் வீட்டில் பிறந்து, பல எதிர்ப்புக்களிடையே ஒரு நாட்டின் நிலையையே உயர்த்திக்காட்டிய மன உறுதி.
* திரு.மோகன் (எங்கள் தொகுதி எம்.பி) - இவரின் எளிமையும், சாதரண மக்களிடம் கொண்ட அணுகுமுறையும், இந்த காலத்திலுமா என்று ஒரு நொடி தோன்ற வைக்கும்.

இதில் தனிப்பட்ட குணங்களுக்காக என்பதை விட ஒரு அரசியல்வாதிகளாக இவர்களின் அணுகுமுறையும், நாட்டுக்கும் மக்களுக்கும் இவர்கள் விட்டுச்சென்றவற்றை வைத்தே குறிப்பிட்டுள்ளேன், இவர்கள் ஒவ்வொருவரும் சாதித்த களங்களின் சூழ்நிலைகள் வேறு, அதலால் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவரில்லை என்பதால் இதில் தர வரிசையொன்றும் இல்லை.

பிடித்த நான்கு படங்கள் (வசனங்களுக்காகவும்):

*தில்லு முல்லு
- "ரெட்டைப்பிறவி என்ன உங்க குடும்ப வியாதியா ?"
*மைக்கேல் மதன காமராஜன் - "நல்லா மீன் பிடிக்க தெரிஞ்சவாளா கூட்டிகிட்டு வரவா ?"
*வீடு - வசனங்கள் அவ்வளவாய் இல்லாததனால்
*குருதிப்புனல் - "வீரம்னா என்ன தெரியுமா ? "

இப்போதான் படங்களை பொறுமையா, நுணுக்கமா இரசிக்க ஆரம்பிச்சிருக்குறேன், இதுக்கு முன்னேயெல்லாம் அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன் படிக்க இருந்த பொறுமை படம் பார்க்கும்போது இருந்ததில்லை :-D

பிடித்த நான்கு உணவு வகைகள்:

*ஆப்பம் தேங்காய்ப்பால் நாட்டுச்சக்கரை
- வீட்டிலிருந்தவரை, ஞாயிறு ஆனா போதும் 10 மணிக்கு ஆரம்பிக்கும் படலம் 12/12:30 ஆகிவிடும், அப்பா திட்டதிட்ட அம்மாவின் அன்பினால் குறைந்தது 30ஆவது உள்ளேபோகும் :-D
*பழையசோறு உப்புக்கல் நல்லெண்ணெய் நீச்சத்தண்ணி - பழையசோற்றை தண்ணிலருந்து பிழிஞ்செடுத்து, கல் உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அம்மா பிசைந்து, ஒவ்வொரு உருண்டையோடு ஒரு மாவடு வைத்து கொடுக்க, ஆஹா..!!! எந்த சுவையும் இதற்கீடாகாது, சைனஸ் இருக்குடா வேணாம்னு தாத்தா திட்ட திட்ட, வயிறு முட்ட இதை சாப்டுட்டு, சொம்பு நெறைய நீச்சத்தண்ணி குடிச்சிட்டு அப்படியே கண்ணு சொருகும் பாருங்க.. சொல்லி வெவரிக்குற சொகமா அது..
*வெந்தயக்களி - சுட சுட தட்டுல வச்சதும், கை பொசுக்குனாலும் பரவாயில்லைனு அதுல ஒரு குழி பறிச்சு, அதுல நல்லெண்ணெய் விட்டு, பக்கத்துல நாட்டுச்சக்கரை தொட்டுகிட்டு சாப்பிடனும்.. தம்பிங்க வேணாம் வேணாம்னு கத்தினாலும் எனக்காக மட்டுமாவது கொஞ்சம் பண்ணும் அம்மா நியாபகம் வருதுங்க..
*முனியாண்டிவிலாஸ் பரோட்டா சால்னா - கல்லூரில நண்பர்கள் ட்ரீட், வேலை கெடச்சாலும் சரி, பல்ப் கெடைச்சாலும் சரி, வித்தியாசம் பார்க்காம பரோட்டாவும் சால்னாவும் கார சாரமா போட்டி போட்டுகிட்டு உள்ள போகும் பாருங்க.. அதுலயும் யார்தட்டுல இருந்து யார் சாப்புடுறானு தெரியாம சாப்பிடுவொம் பாருங்க அது வாழ்க்கை..

இதுல மட்டுமாவது இன்னும் 5/6 கேட்டுருக்கலாம் ;-) ஆனால் ஒண்ணு மட்டும் நெசம்ங்க... இதே உணவுவகைகளை ஹோட்டல்லயோ இல்லை நம்ம தட்டுல இருந்து எடுத்துக்க யாருமில்லாமலும், நாம எடுத்துக்க வேறு தட்டில்லாமலும் சாப்ட்டா அதுல இந்த ருசி இருக்க மாட்டேங்குதுங்க..

விடுமுறைக்கு செல்ல விரும்பும் நான்கு இடங்கள்:

*மானசரோவர்
- அப்படியே அந்த மானசரோவர் ஏரி அருகே அமைதியா உட்கார்ந்து அந்த சுத்தமான தண்ணியில் பிரதிபலிக்கும் ஒளியை அமைதியின் பிண்ணனியில் இரசிக்கவேண்டும்.. இது ஒரு கனவு இடம்..
*இமயமலை - சுற்றுலாவாக இல்லாமல் மலையேற்றமாக செல்ல விரும்புகின்றேன், விஜய் டீவியில் ஒருமுறை இத்தகைய ஏற்றத்திற்கு தேர்ந்தேடுப்பதை பார்க்கும்போது கலந்துகொள்ள முடியாததற்கு எவ்வளவு வருத்தப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும், அதே வருத்தம் கொல்கத்தவிலிருந்தபோது டார்ஜிலிங் சென்றபோது அங்கே இருந்த மலையேற்றப்பயிற்சி பள்ளியை பார்க்கும்போது சிறிது எட்டிப்பார்த்தது..
*கோனார்க் சூரிய கோவில் - யாருடைய தொந்தரவில்லாமல் பல விருப்பப்பட்ட கோணங்களில் ஸ்கெட்ச் போட
*தஞ்சை பெரிய கோவில் - மேற்கூறிய அதே காரணங்களுக்காக..

இவற்றை வெறும் கனவுகளாக, ஆசைகளாக இல்லாமல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றத்தொடங்கியுள்ளேன், இந்த வரிசையின் முதலிரண்டு நிறைவேறும் நாளை எதிர்பார்த்திருக்கின்றேன்

நான் அழைக்க விரும்பும் நால்வர்:
அட நான் உட்கார்ந்து எழுதுறதுக்குள்ள எல்லோரும் எல்லாத்தையும் அழைச்சு முடிச்சிட்டாங்க, அழைக்கப்படவுங்களும் எழுதிமுடிச்சு மேலும் சிலரை அழைச்சு.. எல்லாம் ஓஞ்சு போச்சு.. ஆக இத்தோட முடிச்சுகிறேங்க.. (மன்னிச்சிருங்க சுதர்சன்)