யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

புத்தகக்கண்காட்சி

Published by யாத்ரீகன் under , on ஞாயிறு, ஜனவரி 11, 2015


ஒவ்வொரு முறை எதாவது புத்தக விமர்சனத்தை கண்டதும் pocket, bookmark, favorite என ஏகப்பட்ட இடங்களில் நினைவுவைத்துக்கொள்வதும், கொஞ்சம் சுவாரசியமான தலைப்பைக்கொண்ட மின்னூல் எதைக்கண்டாலும் தரவிறக்கிக்கொள்வதும், torrentகளிலும், நண்பர்களிடத்திலும் கிடைக்கும் audiobook-களையும் சேர்த்துக்குவிப்பதும் என ஆர்வக்கோளாறு கொண்ட கடைக்கோடி வாசகன். இதில் எத்தனை படிப்பேன்/கேட்ப்பேனென்பது கேள்விக்கப்பாற்பட்டவை.

இதையெல்லாம் மீறி புத்தகக்கண்காட்சிக்கு செல்வதென்பது , superhero படங்கள் பார்த்தவுடன்  நரம்புமுறுக்கேறி, கைக்கு கிடைக்கும் யாரையாவது அடித்து உதைக்கவேண்டும் என்பதைப்போல. புது புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ, புதுப்புது சுவாரசியமான தலைப்புகள், கதைக்களன்கள், கைநிறைய புத்தகங்களை (படிக்கிறார்களோ இல்லையோ) அள்ளிச்செல்லும் இளைஞர்கள் என கண்காட்சிக்கு சென்று வந்த 1 வாரம், புத்தகங்களோடேதான் நாள் செல்லும். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, இதெல்லாம் அடுத்த வருசத்துக்குள்ள படிப்பியா மாட்டியானு தங்கமணி நக்கல் செய்யும் கிளைக்கதைக்குள்ளெல்லாம் இப்போது செல்லவேண்டாம்.

நல்லவேளை, போனமுறை ஆசைப்பட்டு வாங்கிய பெரிய தலையணை புத்தகம் (ஓநாய் குலச்சின்னம்) முதற்கொண்டு எல்லாம் படித்து முடித்ததால், இந்த வருடத்துக்கான budget வீட்டில் approve ஆனது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாய் 5/6 மணிநேரம் நடக்கவிட்டு நொந்துபோயிருந்ததால், இம்முறை வெறும் 30 நிமிடத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது, அதுவும் கண்காட்சி வாசலை கடந்து சென்றுவிடவிருந்த கடைசி நொடியில்.

கிடைத்தவரை லாபம்னு உள்ளே புகுந்தாச்சு. பதிப்பக-அரங்கு எண் பட்டியல் இல்லாததாலும், இணையத்தில் சேமித்துவைத்திருந்த புத்தகப்பட்டியலை அரங்கினுள்ளிருந்து தரவிறக்க முடியாததாலும், அந்த கணநேர மனப்பாய்ச்சலை வைத்து புத்தகங்களை தேர்வுசெய்துகொள்ளலாமென தோன்றியது.

மின்னூல்களில் படிப்பெதென்பது எனக்கு ஒத்துவராத காரியமென்று, ஆர்வக்கோளாறில் தரவிறக்கிப்பார்க்காத படங்களைவிட, படிக்காத புத்தகங்கள் அடைத்துக்கொண்டிருக்கும் GBகளை கண்டதும் நிறுத்திக்கொண்டேன்.

500 பதிப்பக அரங்கங்கள், இந்தந்த பதிப்பகங்களென திட்டமுமில்லை, சுவாரசியத்தலைப்புகள், பிடித்த எழுத்தாளர்கள் என கண்ணில்பட்ட பக்கமெல்லாம் ஓட்டம். அவ்வப்போது தங்கமணியை கூப்பிட்டழைத்து சுவாரசியமானவைகளை பற்றி ஒரு குதூகலத்துடன் விவரிப்பு. பாவம், மொத்த கண்காட்சியில் பேருக்கு ஒரேயொரு மலையாள புத்தக stallளென்பதால் வேறொன்றும் புரியாமல் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

கும்பலாக சுற்றுபவர்களைக்கண்டாலே, twitter கோஷ்டியாயிருக்குமோவென, யார் என்ன handleஓவென கூர்ந்து கேட்டுக்கொண்டே கடந்தேன்.

சென்றமுறைபோலவே பாலகுமாரனின் 'கங்கைகொண்ட சோழன்' தொகுப்பை கையிலெடுத்து, விலை கண்டே விலகினேன். ரொம்ப பாசக்கார அம்மணிக்கோ அது தாங்கவில்லை. அவளை சமாதானப்படுத்த ஒருவழியாகிவிட்டேன். உடையார் பிடித்திருந்தது, ஆனாலும் அதில் கருவூராரை ஏதோ மந்திரவாதியைப்போல அதீதமாய் காமித்திருந்தல், கதையிலும் மந்திர-தந்திர விவரிப்பு என உறுத்தலிருந்ததால், ஓசியில் கிடைத்தால் படிக்கலாமென சமாதானம் சொல்லி கிளம்பியாச்சு.

மசால்தோசை தொங்கிய ஸ்டால் வாசலில் வா.மணிகண்டன் கையெழுத்துத்திட்டுக்கொண்டிருந்தார். அவரின் எழுத்துக்கு பெரிய இரசிகனில்லையெனினும், நிசப்தம் அறக்கட்டளைக்கான முன்னெடுத்தலை பாராட்டலாமென நினைத்தால், புத்தகம் வாங்காமல் பாராட்டுபவனை அடுத்த வார பதிவில் குதறிவிட்டால் என்னசெய்வதென மெல்ல நகர்ந்தாச்சு.

Ambedhkar Foundation stallஐ கடக்கும்போது, அவரைப்பற்றி நுனிப்புல்தானே தெரியும், எதாவது படிக்க ஆரம்பிக்கலாமவென நீல நிறம் நிறைந்திருந்த அரங்கினுள் நுழைந்தேன். நிறைந்திருந்ததெல்லாம் அவரின் நூல்தொகுப்பு (கட்டுரை, வாழ்க்கை வரலாறு..என). முதல் தொகுதி எங்கிருக்கென நான் கேட்டதைவைத்தே அவருக்கு புரிந்திருக்கும். 37-வது தொகுதியிலிருந்து ஆரம்பியுங்க தம்பி, அதான் சரியாயிருக்கும்னு சொன்னதும் அதை எடுத்தாச்சு.

எது வாங்குகிறேனோ இல்லையோ, சிறுவயதில் சேமிக்காத வாண்டுமாமா, காமிக்ஸ் புத்தகங்களை ஒன்றிரண்டு எடுத்துக்கொள்வேன். வானதி பதிப்பகத்துக்கும், முத்து காமிக்ஸுக்கும் ஒரு நடை.

4/5 மணிநேரம் கூடயே வரும் மொதலாளியம்மாவுக்கு ஒன்றிரண்டு புத்தகம்.

மாதொருபாகன் சர்ச்சையில் பெருமாள்முருகனை (அவர் மன்னிப்பு கேட்டபொழுதிலும்)  ஆதரிக்கும்பொருட்டு (திரைப்படமோ, புத்தகங்களோ, எதிர் கருத்துக்களை சரியான முறையில் வைக்காத மக்கள், மாக்கள்) அவரின் சில புத்தகங்கள். அவரின் 'நிழல் முற்றத்து நினைவுகள்', 'ஏறுவெயில்' , இரண்டும் படித்து இரசித்திருந்ததால் இன்னும் தைரியமாய் எடுக்க முடிந்தது.

'வேங்கையின் மைந்தனை' பல அரங்களில் கேட்டுக்கேட்டு களைத்திருந்தேன்,  கிட்டத்திட்ட அரங்கிலிருந்து வெளியேறவிருந்தபோது, தான் கேட்டுப்பார்க்கிறேன் என களமிறங்கிய தங்கமணியின் நல்ல நேரம் முதல் கடையிலேயேயிருந்தது. என் நேரம், கையில் காசில்லை, கடையில் card-உம் வேலை செய்யவில்லை, படிக்காதவன் படத்து ரஜினி மாதிரி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் காசு தேற்றி வாங்க முடிந்ததில் என்னைவிட அவளுக்குத்தான் மிகுந்த மகிழ்ச்சி.

பேருவச்சியே, சோறுவச்சியாவென யாரும் கேட்டுவிடக்கூடாதென கொஞ்சம் தீனி, திருவிழா கலாச்சாரத்தை மீறிவிடக்கூடாதென டெல்லி அப்பளம் என 30 நிமிடம் 3:30 மணிநேரமாய் 'இனிதே' கரைந்தது.

கைவரை வந்த பல புத்தகங்கள் பைவரை வந்துசேரவில்லை, budget ஒரு limit என்றிருந்தபோதிலும், சில புத்தகங்களை வாங்கவில்லை. அப்புறம் வாங்கிக்கொள்ளலாம், நண்பனிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம், இது படித்து முடிக்கவேமுடியாது, இது புரியுமா, இதற்குப்போய் புத்தகமா என ஒவ்வொன்றுக்கும் ஒரு எண்ணம், எதைப்பற்றிய புத்தகங்களை வாங்குவார்களென்பது , எந்த திரைப்படங்கள் வெற்றிபெரும் என்பதுபோன்ற இரகசியம். அது என்னவென்று வாங்குபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்குமே தெரியாது.