யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

வாழ்வின் மிச்சம்

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஏப்ரல் 16, 2013


                     சூடான சாதத்தோடு எலுமிச்சை பழத்தை பிழிந்து, பிசைந்து கொண்டிருக்கையில் பாதியில் அம்மா நகர்ந்தபோது, குளிக்க போன நான், அம்மா பார்க்கும்முன் அவசர அவசரமாய் ஒரு விள்ளல் சாதத்தை எடுத்து, சூடு தாங்காமல் உருட்டி வாயில் போட்டுக்கொண்டு விலகினேன்.

                    கொஞ்சமும் உப்பேயில்லையென எரிச்சல்படத்துவங்குகையில், மெல்ல எலுமிச்சையின் புளிப்பு படரத்துவங்குகிறது, அந்த சுவையை இரசிக்கத்துவங்கி சில நொடிகளில் கரைந்த உப்பின் சுவை. மென்றுகொண்டேயிருக்கையில், சிறு பச்சை மிளகாய்த்துண்டொண்று பல்லிடுக்கில் அரைந்துவிட, அவசர அவசரமாய் காரம் பரவுகிறது. புளிப்பும் காரமும் கலந்து புலன்களை சுழற்றி அடிக்கின்றது. இந்த உணவு இத்தனை சுவையா ? கொஞ்சம் கூட பிடிக்காத உணவான (உப்புமாவை நான் உணவாகவே கருதுவதில்லை) எலுமிச்சை சாதம் இவ்வளவு சுவையை  விட்டுச்சென்றதேயில்லை. மற்ற நாட்களுக்கும் இன்றுகும்மான வேற்றுமை, எந்த சுவையும் கண்டிராத,  தூக்கத்திலிருந்து எழுந்த நாக்காவென தெரியவில்லை.

                   காலையில் Indian Express பத்திரிக்கை நிருபர்களின் தரம் திரு. P.B.சிரினிவாஸ் அவர்களின் மரணச்செய்தியில் பல்லிளித்துக்கொண்டிருந்தது. திடீரென அவளைக்கண்டு 'காலங்களில் அவள் வசந்தம்... ' என காதல் பொங்க பாட ஆரம்பித்தேன். வெட்கத்தை மறைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே என்னாச்சு என்றாள். எத்தனை பேருக்கு இப்படியான அருமையான நினைவுகளை உருவாக்கித்தந்திருப்பார். எங்கோ FMயில் 'அவள் பறந்து போனாளே...' என்று பாடிக்கொண்டிருந்தார். எத்தனை இளைஞர்களின் இனிமையான, மோசமான தருணங்களில் துணைக்கிருந்திருப்பார்.

                 மரணம் அவரை தன் துணைக்கு அழைத்துக்கொண்டபொழுது 82 வயதென்று படித்தேன், அவ்வப்போது கேட்ட/படித்த அவரை சந்தித்தவர்களின் அனுபவமும், நல்ல வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என சிறு நிம்மதியைத்தந்தது. இறந்துவிட்டார் என்ற துக்கம் என்பதைவிட, எவ்வளவு பேரின் நல்ல நினைவுகளுக்கு காரணமாயிருந்திருக்கிறார் என்பது போன்ற எண்ணங்களே இருந்தன. வாழ்ந்துவிட்ட அவரின் முதுமையா, மரத்துப்போன என் மனதா, சுயநலமான ஆசைகளுடனே வாழத்துவங்கிவிட்ட என் இயந்திர வாழ்க்கையா.. வராத கண்ணீருக்கும், வருத்தப்படாத மனதுக்கும் எது காரணமென யோசித்து களைத்துப்போனேன்.

                ஆனால் அவரின் மரணச்செய்தி wikipedia-விலிருந்து copy-paste செய்யப்பட்டு, வேறொருவடன் குழப்பிக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த அவசர வாழ்வில் மரணத்துக்கான மரியாதை. இதைவிட, அவருக்காக சிந்தப்படும் கண்ணிரைவிட, இன்று முழுவதும், அவரின் பாடல்கள் கேட்டு மனமெங்கும் பரவிய மகிழ்ச்சியே அவருக்கான மரியாதை.

                     இதோ, இதை தட்டச்சிக்கொண்டிருக்கையில் மறுபடியும் 'காலங்களில் அவள் வசந்தம்.. " பாடல் கானாபிரபாவின் ரேடியோஸ்பதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.