யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஐந்தே நாட்கள்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், நவம்பர் 29, 2005

நிரம்பிவழியும் மின்னஞ்சல்கள்

செய்ய மறந்த வேலைகள்

செய்ய வேண்டிய வேலைகள்

படிக்க இயலா பக்கங்கள்

பேச இயலா சந்தர்ப்பங்கள்

வலம் வர முடியா வலைப்பூக்கள்

சிறிது நாட்களில் அனைத்தும் நிலை வரும்

காரணம்

ஐந்தே நாட்கள்,

கணிப்பொறியில் சிக்கவில்லை, வலைத்தளங்களிலும் மாட்டவில்லை :-)

உடனே அனுப்ப இயலா பதில்களுக்கு மன்னியுங்கள்

தோள்களிரண்டு

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 16, 2005
மனதின் குடும்பக்கவலையை சிறிதே இறக்கிவைத்தார் அப்பா..
படிப்பின் கவலையை கொஞ்சம் இறக்கிவைத்தான் தம்பி..
குறைவதாய் நினைத்து பாசத்தின் கவலையை கொஞ்சம் தாத்தாவும்
சாப்பாட்டுக் குறையை நிறையவே இறக்கிவைத்தார் உடனிருக்கும் அன்பர்

தன் கவலையை இறக்கிவைத்தாள் தோழி..

இவர்களில் யாருமே அறியவில்லை

நட்பும் அறியவில்லை

அவன் தலையும் இரு தோள்களை தேடுகின்றதென்று..

சாய்ந்து கொள்ள உன்னிரன்டு தோள்கள் தவிர வேறொன்றும் நிரந்தரமில்லை என்று

முதலில் இருந்தே கூவிக்கொண்டிருக்கின்றது அவன் மனம்..

ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை பழங்களும்

Published by யாத்ரீகன் under on வியாழன், நவம்பர் 10, 2005



சில நாட்களுக்கு முன் வீட்டுக்கதவைத்தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவர் ஆப்பிரிக்க அமேரிக்கர், மேலும் மிகவும் வயதானவர். சாதாரண நாட்களில் பக்கத்து வீடுகளில் யாரிருக்கின்றார் என்று தெரியாது, ஆனால் அன்று வீட்டுக்கதவை தட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


என்ன விஷயமாக இருக்கும் என்று யோசிக்கையில், "எனக்கு உடல் சரியில்லை, மருந்து வாங்கி வர வேண்டும்,எனக்கு வாங்கித்தர யாரும் இல்லை, வாங்கி வர இயலுமா பணம் தந்து விடுகின்றேன்", என்றார். ஆஹா, "ஹே மை மேன் !!!, டு யூ ஹாவ் 5 டாலர்ஸ்" என்று கேட்கும் கருப்பண்ணனை சொல்லி பலர் பயமுறுத்தி இருந்ததால் ஒரு நொடி என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

இதே பெண்மணிதான், நான் லாண்டரி ரூம் சாவியை உள்ளே வைத்துப்பூட்டியபின் உதவி கேட்க கதவைத்தட்டியபோது, கையில் கத்தியுடன் (பாதுகாப்புக்கு) வந்து கதவைத்திறந்து, என்னை ஒரு நொடி திகிலடயச்செய்தவர்.

பிறகு வயசானவர் தானே என்று சரியென்று சொல்லி மருந்து சீட்டை வாங்கி வால்கிரீன்ஸ் சென்றால், அங்கே அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை, நாலு மருந்த்துக்கு, சீட்டை இங்கே குடு, மருந்தை அங்கே வாங்கு, 15 நிமிடம் கழித்து வா.. (மதுரை இராமகிருஷ்ணா மருந்து கடையில் 5 நிமிடம்தான்)

அங்கே மருந்துக்கு பணம் செலுத்த தேவையில்லை, அவர் ஆயுள் காப்பீடு பார்த்துக்கொள்ளும் என அவர்கள் சொல்லி விட, பிறகு எதற்கு பிறகு பணம் தருகிறேன் என்று சொன்னார் என யோசித்தேன். கடைசியில் அதில் ஒரு மருந்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்றதும், சரியென செலுத்திவிட்டேன், உடனிருந்த நண்பர், வேண்டாம் வேண்டாத வேலை என்பதையும் மீறி.
மருந்து கொண்டு வந்து கொடுக்கையில், பணம் செலுத்தியது சொன்னதும், இந்த மருந்து வேண்டாம் என்றுவிட்டார், திருப்பி போய், கொடுத்து,என அது ஒரு தனி கூத்து.

பின்னர் ஒருநாள், அன்று சென்று வந்ததற்காக கார் எரிபொருளுக்கு பணம் தருகின்றேன் என்றவரை தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

திடீரென, மறுபடியும் இருநாட்களுக்கு முன் வீட்டுக்கதவை தட்டிய அவர், கையில் ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு பெரிய பை நிறைய பழங்கள். என் மகள் எனக்கு வாங்கி வந்தாள், உங்களுக்கு நன்றி சொல்ல இது என்று கையில் திணித்து விட்டார். சிறிது நேரத்துக்கு முன்தான், ஒரு பெண், கையில் நிறைய பைகளுடன் வந்து, அந்த வீட்டுக்கதவை ஓங்கி உதைத்து திறந்து உள்ளே சென்று வேக வேகமாக, வைத்து விட்டுச்சென்றதை நான் பார்த்ததை அவர் அறியவில்லை.




மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் அந்த வாழ்த்து அட்டை....

உடல் சரியில்லாத நீங்கள்தான் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறி, வேண்டுமானால் சிறு கோப்பையில் வேண்டுமானால் நிரப்பிக்குடுங்கள் என்றேன். நீங்களே வேண்டுமானதை எடுத்துவிட்டு மீதம் தாருங்கள் என்று கூறி விட்டார்.
எல்லாம் முடிந்தபின் எனக்கு என்னவென்று சொல்ல இயலா உணர்வு !!!!
15 வயதில் வீட்டை விட்டு தனியே சென்று சொந்தக்காலில் நிற்கத்தொடங்கி படிக்கும் இவர்களின் வாழ்வு முறையை மெச்சுவதா, இல்லை 50 வயதில் யாருமின்றி ஞாயிறானால் சர்ச், மற்ற நேரங்களில் TV, கதவைத்தட்டிய சத்தம் கேட்டால், கையில் கத்தியுடன் திறக்க என்று இருக்கும் வாழ்வு முறையை கண்டு வருந்துவதா என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் எல்லா வீட்டிலும் இப்படியில்லைதான், ஆனாலும் பெரும்பான்மை இப்படித்தானே ?!

எதையோ உருப்படியாக செய்த நிறைவைத் தந்தது அந்த ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு கோப்பை நிறைய பழங்களும்.

பைசா பெறாத பதிவு அல்ல !!

Published by யாத்ரீகன் under on புதன், நவம்பர் 09, 2005












எத்தனையோ பழைய நாணய வகைகள் இருந்தாலும், இங்கே இருப்பவைகளை கண்டவுடன்என்னவென்று சொல்ல இயலா ஒரு சந்தோஷம் :-D

அடிக்கடி உடைத்த உண்டியல்கள், பெரும் போராட்டத்துக்குப்பின் உடைக்காமல் எடுத்த சில்லறைகள்,நண்பர்களுடனான பரிமாற்றங்கள், பாட்டியிடமிருந்து கிடைக்கும் சின்ன சின்ன லஞ்சங்கள், கடைக்குச்சென்றுவருகையில் சுருட்டிவிட்ட மிச்ச சொச்சங்கள், சேர்த்து வைத்து வாங்கிய காரம்போர்ட்டு, சேர்த்து வைத்துவாங்காமல் போன சைக்கிள் என எல்லாவற்றையும் நினைவு படுத்தியதாலா ?

பி.கு: நல்ல வேலை இதை யாரும் பைசா பெறாத பதிவுனு சொல்ல முடியாது ;-)


ஓய்ந்தது பட்டாசுச்சத்தம், என்று ஓயும் கனவுகளின் கதறல் ?

Published by யாத்ரீகன் under on திங்கள், நவம்பர் 07, 2005
அயல்நாட்டில், பட்டாசுச்சத்தமின்றி, எண்ணெய்க்குளியலின்றி, இனிப்பு கலந்த அம்மாவின் திகட்டும் அன்பின்றி, நண்பர்களுடன் ஊர்சுத்தலின்றி, இரவுநேர மத்தாப்புகளின்றி, தெருவில் இறையும் தீபாவளி புதுப்பாடல்களின்றி, தீபாவளி அன்று மட்டும் தெருவில் கூடும் நண்பர்கள் (?) அன்புக்குழுவின் அலும்புகளின்றி... நிசப்தத்தில் கடந்தது இந்த வருட தீபாவளி..

தீபாவளி கொண்டாடும் அர்த்தங்கள் ஆராய்ந்து கொண்டாட வேண்டாமென்று சிலரும், ஆராய வேணாம் அனுபவிக்கனும் என்று சிலரும், அயல்நாட்டில் தீபாவளி அனுபவங்கள் என்று சிலரும்...எல்லாவற்றிற்கு மேல் குழந்தைத்தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளைத்தவிர்ப்போம் என்றும் கூவிக்கொண்டிருக்கின்றார்கள்...

பட்டாசுத்தொழிற்ச்சாலைகள் என்பது பிஞ்சுக்குழந்தைகளின் கனவுகள் கதறக் கதற கொல்லப்படும் கொலைக்களம் என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தேன், குழந்தை தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளை ஒதுக்குவதின் மூலம் எதிர்ப்பைக்காமிக்கலாம், அதுவே தீர்வைத்தரும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தேன்.. என் வயது அப்படி, நான் வளர்ந்த சூழல் அப்படி, பிரச்சனையின் வேர் அறியாக்காலம் அது.

பின்னர் குழந்தை தொழிலாளர்கள் பற்றி, அவர்களின் படிப்பு பற்றி பல்வேறு இடங்களில் படிக்க, கேட்க... நிறைய தெரிந்தது.

அந்த குழந்தைகளின் குடும்பத்தை காப்பாற்றுவது அந்த வேலையே என்று பல இடங்களில் தெரியவந்தது, ஆகவே அவர்கள் தொழில் செய்வதை தடுப்பதைவிட, தொலைநோக்கு பார்வை வேண்டும் என்று தோன்றியது, அதன் மூலம் தோன்றியதே அவர்களுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்ற எண்ணம்..

அதன் பயனாக சென்ற தீபாவளிக்கு,நம்மால் முடிந்த உதவியை படிக்க ஆர்வம் இருந்து, பணவசதியில்லாக்குழந்தைகளுக்கு பண்ணவேண்டும் என்றென்னி, கல்லூரி நண்பர்களையும் கலந்தாராய்ந்து கல்கத்தாவிலிருந்து கொண்டே மின்னஞ்சல்களின் மூலம் திட்டமிட்டோம்,.

இதில் முதல் தடைக்கல்லாக நாங்கள் சந்தித்தது, யாருக்கு இது சென்றடையவேண்டும் என்று ?

குழந்தைகள் பலர் வெடி வெடிப்பதை கண்டு வருத்தப்படுவர் ஆகவே அவர்களுக்கு வெடியும், மத்தாப்பும் வாங்கித்தரவேண்டும் என்று சிலர் கூற..,

அவர்களுக்கு அன்று நல்ல உணவளிக்க வேண்டும் என்று மற்றொரு குழுவினர்

பல மின்னஞ்சல்களிடையே, உணவளிக்க பலர் உண்டு, மத்தாப்புகள் நிஜ மகிழ்ச்சியைத்தர போவதில்லை, கல்விக்கு உதவுவதே நிரந்தர தீர்வு என்று முடிவு செய்து முன்னேறினோம்.

பின்னர் எங்கே இந்த உதவியை செய்யவேண்டும் என்ற குழப்பம், CRY, சிவானந்த குருகுலம், உதவும் கரங்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இருந்தும், இவர்களுக்கு பண உதவி செய்ய பலர் உண்டு, நிஜமாகவே பண உதவி தேவைப்படும் நிறுவனங்கள் கண்டுபிடிக்க சென்னையிலிருந்த நண்பர்கள் சிலர் முனைய, சில ஏமாற்று நிறுவனங்களைத்தாண்டியபின்..

சிறகுகள் என்று சென்னையில் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்கு பாடம் சொல்லித்தரும் நிறுவனம் ஒன்றை கண்டு அவர்களின் உடனடித்தேவையை அறிந்து பணமாக இன்றி, அந்த உதவியை செய்தோம்.

மீதி இருந்த பணத்தை, அப்பொழுது வந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற கல்லூரி நண்பர்களிடம் அளித்தோம்.

அதோடு நில்லாமல் ஒவ்வொரு மாதமும் சிறு அளவாவது அனைவரும் பணத்தை ஒதுக்கி, கல்வியாண்டின் தொடக்கத்தில் அதன்மூலம் உதவிகள் பண்ணலாம் என்றும் எண்ணம் தோன்றியது, வேலைப்பளு, தொடர்ந்து இதற்காக நண்பர்களை தொடர்பு கொள்ளமுடியாமை என்று பல காரணங்களால் விட்டுப்போனது சிறிது மனக்கஷ்டமாகவே இருந்தது.

அதற்கு இந்தாண்டு விடிவு பிறக்கும்போல் தெரிகின்றது, பணம் சேர்த்து வைக்க வங்கியில் தனிக்கணக்கு தொடங்கிவிட்டோம், கல்லூரி நண்பர்கள் அனைவரிடமும் பணம் சேர்ப்பதற்குள் மழை, ஆனால் இம்முறை கட்டாயம் செய்து விடவேண்டும் !!!!