துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேயன் (நம்மூர் முருகனைத்தான் இப்படி கூப்பிடுறாங்க, வேலுக்கு பதில் வில் ஆயுதம்.. வேல் தமிழர் ஆயுதமாச்சே ;-) சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.
ஒவ்வொரு பந்தல்களிலும் சிலைகள் மட்டுமின்றி, பந்தல்களின் அமைப்பும் அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட தீம் நோக்கி இருக்கும்.
இரவு முழுவதும் பெங்காலிகள் தங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு பந்தல் பந்தலாக சென்று வழிபடுவது மட்டுமின்றி, போகும் வழியெங்கும் குதூகலத்துடன் விளையாடுவதும், விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்வதும் என, ஒரு ஆன்மீக திருவிழாவாய் தெரியவில்லை :-)
துர்கா பூஜையின் போதுதான் அவர்கள் அனைவரும் குளித்து புதுத்துணி அணிவார்கள் என்றொரு வதந்தியும் உண்டு ;-)
இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை.... என்று சந்தேகம் வருகின்றது..
எது எப்படியோ, கொல்கத்தாவே விழாக்கோலம் பூணும் நேரமிது, மக்கள் கூட்டத்தையும், உற்சாகமான ஒரு சூழ்நிலையையும் விரும்புவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடமும் நேரமும் இது.பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம், இதில் முதல் பரிசு பெறுவதென்பது ஒரு பெரும் பெருமை.
மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.
இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)
இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)
பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".