யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நீண்டதொரு பயணம்

Published by யாத்ரீகன் under , on திங்கள், டிசம்பர் 29, 2008
Change is the only thing that doesn't changes in this world என்ற மாற்றமே காணதொரு வாக்கியத்தை
ஒவ்வொரு முறையும் HOD சொல்ல கேட்கும்பொழுது எவ்வளவு கூச்சலிட்டிருப்போம், அதிலும் இறுதிவரை மாற்றமே இருந்ததில்லை.

வேர் விட்டிருக்கும் செடியாயிருக்கட்டும் பெரும் மரமாகட்டும், பிடுங்கி நடப்படுவதென்பது இருவருக்கும் தனித்தனியேயான அனுபவத்தை தரப்போவதில்லை. மாற்றங்களில் சிறிதென்ன பெரிதென்ன ? பார்த்த பார்வைகள், புரிதல்கள் ஒவ்வொரு மண்ணிலிருந்து பிடுங்கப்படும்பொதும் செரிவடைகின்றது. இடம்விட்டு இடம்விட்டுச்செல்ல, எடுத்துச்செல்லும் துகள்களென நட்புகள்.

எந்தவொரு மாற்றம் நடக்கும்போதும், அதன் பொருட்டு எற்படும் அனுபவம் தனியானதொரு recap போலத்தான்.

இத்தகைய மாற்றங்களின்போது செய்யும் பயணங்களுக்கான சுவையே தனி, ஊறவைத்த கள்ளைப்போல நினைவுகள் ஊறவைத்த காலம் அதிகமாக அதிகமாக.

2 மாதங்கள் திருவனந்தபுரத்திலிருந்த கட்டற்ற சூழலிருந்து விடுபட்டு பொறுப்புகள் கூடிய சுதந்திர உலகுக்கான அடியெடுத்த முதல் மாற்றமாகட்டும் (நினைவில் மிகப்பசுமையாய் பதிந்தவற்றுள்), இன்று 3 வார விடுமுறை என நினைத்து ஊருக்கு வந்துகொண்டிருக்கும் சிறு
மாற்றமாகட்டும், ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்துக்கொண்டு நினைவுச்சுழலில் முழ்கிக்கொண்டிருப்பது அவ்வப்பொது கடந்துகொண்டிருக்கும் வருடங்களை தட்டிவிட்டுச்செல்ல உதவுகின்றது.

------------------

இனிய ஆங்கில வாசிப்பனுபவத்தை அறிமுகப்படுத்திய தோழிக்கு 2 வருடங்களுக்கு முன் பிறந்தநாள் பரிசை துழாவும்போது தட்டுப்பட்டது ஜெயமோகனின் கொற்றவை. முதல் இரு அத்தியாயங்களின் சுவையில் மயங்கி பரிசளித்திருந்தேன். அவள் படித்தாலா இல்லையாயென தெரியாது, ஆனால் கொற்றவை அந்நொடியிலிருந்து என்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
அப்படியும், வாங்கி 1 வருடங்கள் கடந்தும் படிக்கும் சூழல் அமைந்திருக்கவில்லை. இன்று 1 முழு நாள் விமானப்பயணமென்று முடிவானதும் கைகள் முதலில் துழாவத்தொடங்கியது
இந்த புத்தகத்தைதான். எஸ்.ராவின் ”கால்முளைத்த கதைகளும்” அயற்ச்சியை தவிர்க்க துணைகொண்டது.

அயற்ச்சி என்று நினைத்ததைவிட, தழும்புதல் என்பதெ சரியான சொல்லாய் இருக்க முடியும். மீண்டும் அந்த முதல் இரு அத்தியாயங்களிலிருந்து தொடங்கியும் சுவாரசியத்திற்கு சற்றும்
குறைவில்லை. கடினமான இலக்கிய மொழிநடை பெரும் தடையாய் இருக்கவில்லை, மாறாக அதிலிருந்த கற்பனை வளம், விடயங்களை சொல்லியிருக்கும் விதம்.. என மிக சுவாரசியமாய் நேரம் செல்லத்துவங்கியது.

மக்களின் மொழி, மரபுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை, புரிதல்கள், பயங்கள் என அத்தனையும் காலவெளியில் பயணித்திருக்கையில் எப்படித்தொடங்கியிருக்கும், அதன்
பரிணாம வளர்ச்சியெப்படியிருந்திருக்கும் என்ற பார்வையில், இதுவரை கடந்திருக்கும் 50 பக்கங்கள் அற்புதமென்ற ஒருசொல்லில் அடைக்கவியலாது. இவ்வளவு மணிநேரங்களில்,
சாதரணமாய் பல பக்கங்களை கடந்திருக்கலாம், ஆனால் முதல் வரியான “” -லிருந்து தொடங்குகிறது தேடல். ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் மீண்டும் மீண்டும் வாசிக்க, பிரமிப்பாய் இருக்கின்றது, இயல்பாய் நாமும் கடந்துவந்திருந்த நிகழ்விலிருந்து, கேள்வியே பட்டிராத தகவல்களென, ஒரு அற்புதமான வாசிப்பானுபவத்தை தந்துகொண்டிருக்கின்றாள் கொற்றவை.
----------------------------

சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு புதிய இடத்திலும் தெரிந்த முகங்களிலிருந்து, நண்பர்கள் என்ற அடைமொழியில் அடைபட்டிருக்கும் முகங்கள் வரை சங்கிலியின் கோர்வை கூடிக்கொண்டே போகின்றது. இதில், நெருக்கமாய் பலவற்றும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் எங்கோ தொலைந்துகொண்டிருக்க, புதிய நபர்களை பழக்கப்படுத்திக்கொள்ள தயக்கங்கள் கூடிக்கொண்டிருக்கின்றது. பொருட்களின் மேலிருக்கும் மோகமும், நட்பின் மீதிருக்கும் பிடிப்பும் (hold என்பதின் சரியான பயன்பாடு இங்கே என்னவாயிருக்க முடியும்?) வெகு வேகமாய் குறைந்துகொண்டிருக்கின்றது. இதனால் நண்பர்களிடமேலிருக்கும் நம்பிக்கைக்கு/அன்புக்கு குறையில்லை ஆனால் அதன் இடைவெளிக்கு பெரிதாய் கவலைப்பட்டுக்கொள்வதில்லை. என்றொ ஒரு நாள் சந்தித்துக்கொண்டாலும் அந்த நிமிடங்கள் மீட்டுத்தரும் மலர்ச்சி போதும்.

-----------------------------

இருட்டின் மீதான மெல்லிய வெளிச்சத்தில், பக்கத்திலிருக்கும் பெண்ணின் கைகள் அவள் புரண்டுகொண்டு தூங்குகையில் மிருதுவாய் உரசிக்கொண்டிருக்க, பல ஆயிரம் அடி உயரத்தில்
இதை தட்டிக்கொண்டிருக்கின்றேன். நாட்குறிப்பெழுதி மாதக்கணக்கில் முடிந்து வருடக்கணக்கில் ஆகத்துவங்கப்போகுது. இப்படி வலையில் தட்டி எவ்வளவு தூரம் தான் பதிந்து வைத்துக்கொள்வது..

---------------------

இந்த பதிவைப்போல, ஒரு கோர்வையின்றி தறிகெட்டு ஓடுகின்றது இந்த நினைவுக்குதிரை, மூச்சிரைத்து நிற்குமிடமெங்கிலும் மீண்டும் காலம் தன் சவுக்கை
சொடுக்கிக்கொண்டு தொடர்கின்றது.

பி.கு: சென்ற மாதத்தின் இந்திய பயணத்தின் போது, விமானத்தில் தட்டச்சியது, இத்தனை நாள் கழித்து பல வேலைகள் முடித்து மீண்டும் இணையத்தில் சேரும் வரையில் தங்கையின் கணிப்பொறியில் உறங்கிக்கொண்டிருந்தது.