யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

உயிரின் விலை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 09, 2013



                      தூக்க கலக்கத்தில், காலையின் முதல் கடமையாக தங்கமணியை அலுவலக பேருந்து ஏற்றிவிட்டு க்குள் திரும்பிக்கொண்டிருந்தேன். எப்போதும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் பூனையொன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு காருக்கு அடியில் பதுங்கியது. சாதரணமாய் இருந்தால் கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன், ஆனால் சட்டென ஒரு நொடி  பதறி நின்றதற்கு காரணம் அதன் வாயில் இன்னும் துடித்துக்கொண்டிருந்த சிறகு.

                    டிஸ்கவரி அலைவரிசையில் எத்தனையோ முறை இந்த காட்சியை, வெவ்வேறு மிருகங்கள் version-இல் உணர்ச்சியே இல்லாமல்  பார்த்திருந்தும் இன்று நேரில் கண்டதும் ஏனென்று தெரியவில்லை, ஒரு நொடி பதறிவிட்டேன்.

                   'ஓநாய் பார்வையில் நியாயம், மானின் பார்வையில் நியாயம்.. ' என்றெல்லாம் சினிமா வசனங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. என்னதான் நடக்குதுனு பார்க்கலாமா, எனக்கு ஏனிந்த குரூரம், பூனையை விரட்டி புறாவை காப்பாத்தலாமா, பூனை பசிக்குதானே பிடிச்சிருக்கு, இப்போ புறாவை காப்பாத்தி அது பறக்க முடியாம துடிச்சு சாகனுமா... ஏகப்பட்ட கேள்விகள், தயக்கம். பூனை பதுங்கியிருந்த காரை சில அடிகள் கடந்துவிட்டிருந்தேன், ஆனால் திரும்பி ஓடிவந்து பட படவென்று கால்களை தரையில் உதைத்து பூனையை விரட்டிவிட்டேன்.

                    சிறகுகள் அடித்துக்கொண்ட ஓசை மட்டும் கேட்டது, காரைச்சுற்றிச்சுற்றி வந்து குனிந்து பார்த்தேன், பார்க்கிங்கையும் சுற்றிப்பார்தேன் பூனையும் கண்ணில் தென்படவில்லை, சிறு நம்பிக்கையோடு அண்ணாந்து பார்த்தேன் புறாவையும் காணவில்லை.

                  லிப்ட் கீழே வருவதற்கு காத்திருக்கும்போது எனக்கு நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன், இது கனவுமில்லை.