புத்தகங்கள் பத்து
Published by யாத்ரீகன் under புத்தகம் on புதன், செப்டம்பர் 03, 2014
பூந்தளிர், ராணி காமிக்ஸ் என ஆரம்பித்து மாலைமதி, பாக்கெட் நாவல் என முன்னேறி, சுண்டல் மடித்து கொடுக்கும் பொட்டல காகிதம் வரை வெறித்தனமா ஒரே மூச்சுல படிச்ச காலம் ஒண்ணு, ஆனா இப்போ கையில் ஒரு புத்தகத்தை, சுற்றி வரும் அத்தனை திசைதிருப்பும் நிகழ்வுகளையும் தாண்டி பொறுமையாய் ஒரே மூச்சில் படிப்பதென்பது.. ம்ம்ம்ம்ம்
எதிர்பாராத 2 நண்பர்களிடமிருந்து இந்த மீம்கள் பார்சல் வந்திருக்கு. ரெண்டுபேரும் புத்தகங்களின்மேல் பெரும் வேட்கையுள்ளவர்கள். இருவரின் புத்தக வரிசையில் முதல் 50-ஐக்கூட நான் படித்திருப்பேனாவென சந்தேகம்தான்.
சரி, என்னையும் மதிச்சு கேட்டிருக்காங்கனு பட்டியலிட ஆரம்பிச்சா, 10 வர்றதுக்குள்ள திக்கித்திணறியாச்சு.. இறுதியா 10க்கு ஒண்ணு குறைவாவே வந்தது. பல புத்தகங்கள் படிச்சாலும், மனசை பாதிச்ச, இப்போ நெனச்சாலும் ஒரு சின்ன சிலிர்ப்பை கொண்டு வர்ற புத்தகங்கள் மட்டுமே இது.
- வாண்டுமாமா கதைகள் - குறிப்பிட்டு இதுதான்னு இல்லாம அவரோட எல்லா புத்தகத்துக்கும் இரசிகன் நான். பள்ளிக்கூட வயசுல சேர்த்த புத்தகங்களை பாதுகாக்காம விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ புத்தக கண்காட்சியில் இவர் புத்தகமா தேடும்போது தெரியுது.
- Why i am not a Hindu by Kancha Ilaiah - Stereotyped சிந்தனைகளில்லிருந்து, மாறுபட்ட கோணத்தில் சில விஷயங்களை பார்க்க உணர்த்திய புத்தகம். இன்னும் சில மறுவாசிப்புக்கு உட்படுத்தனும்.
- Not a penny more, Not a penny less by Jeffrey Archer - பள்ளியில் Non-detailed, Tintin/Asterix தவிர, பொடி எழுத்து, தடித்தடியான ஆங்கில புத்தகத்தை கண்டாலே தூர ஓடும் எனக்கு, ஒரு தோழியின் சவாலின் மூலம் முழு மூச்சாய் அறிமுகமானது. பெரிய இலக்கியம் இல்லையெனினும் என்னை ஆங்கில புத்தகமும் படிக்கலாம்னு நினைக்க வைத்த ஆங்கில புத்தகம் :-)
- Alchemist by Paulo Coelho - தன்னம்பிக்கை/சுயமுனேற்ற வகை தாண்டி, தனிப்பட்ட முறையில் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் புத்தகம்.
- துணையெழுத்து by எஸ்.ராமகிருஷ்ணன் - பயணங்களின் மேல் காதல் கொள்ளச்செய்ததில் இதற்கு பெரும் பங்குண்டு.
- கொற்றவை by ஜெயமோகன் - இன்னும் இதை முழுதாய் முடிக்காவிடினும், இதில் வரும் வர்ணனைகளுக்கு மதி மயங்கிப்போயிருந்தேன்.
- புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பு) - ஒவ்வொரு மறுவாசிப்புக்கும் இன்பம்
- உடையார் by பாலகுமாரன் - மந்த்ர தந்த்ர உறுத்தும் இடைச்சொருகல்கள் நிறைய இருந்தாலும். இதை படிக்கும்பொழுதெல்லாம் இராஜ இராஜனாகவே கனவுகண்டுகொண்டிருந்தேன்
- ஓநாய் குலச்சின்னம் (Wolf Toetum) by Lü Jiamin - மொழிபெயர்ப்பு நடையின் கடினத்தை கண்டு ஒதுங்காமல் படிக்கத்துவங்கியதும், படுவேகம். கதைக்களத்திற்கு கட்டாயம் பயணப்படனும் என்று நினைக்கவைத்தது.
வாங்கி வைச்சு படிக்காம, பாதி முடிக்காம இருக்குற பட்டியல் போடச்சொன்னா வேணும்னா 10 என்ன 100ஏ போடலாம் :-( , ஆனா இந்த மீம்ல மக்கள் போட்ட பட்டியல பார்த்ததும், இன்னும் 10 புத்தகம் படிக்கணும்னு ஆ.கோ உண்டாகிருக்குறது என்னமோ உண்மைதான் ;-)
பி.கு: சுஜாதாவின் புத்தகம் எதாவது என யோசித்தேன்.. படித்த சிலவற்றில், நிலா நிழல் பிடித்தமான புத்தகம். கதை, நடை என்பதை தாண்டி, அது என் கையில் கிடைத்த தருணமும் அப்படியானது :-)
பி.கு: சுஜாதாவின் புத்தகம் எதாவது என யோசித்தேன்.. படித்த சிலவற்றில், நிலா நிழல் பிடித்தமான புத்தகம். கதை, நடை என்பதை தாண்டி, அது என் கையில் கிடைத்த தருணமும் அப்படியானது :-)