ஆசைதான் தீராமலே, உன்னைத்தந்தானம்மா..
Published by யாத்ரீகன் under அனுபவம், மகள்குறள் on செவ்வாய், செப்டம்பர் 29, 2015இசைஞானியின் பாடலின் மூலம் இவளுக்கு இசையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் இவளுக்கு மிகப்பிடித்தது 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... ' பாட்டு. இசைக்கத்துவங்கியதும், speakerகளை தேடத்துவங்கிவிடுவாள். தூக்கி நிப்பாட்டி பிடித்துக்கொண்டால் குதூகலத்தில் குதித்து குதித்து, இவளை பிடித்துக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டி களைப்படைந்தாலும் நிறுத்தமாட்டாள்.
நேற்று அம்மாவைத்தேடி அழுதுகொண்டிருந்தவளை சமாதானப்படுத்தும் பல முயற்சிகள் தோல்வியடைந்ததும், இறுதியாக பாட்டை போட்டதும் சட்டென அவள் கவனம் அதில் திரும்பியது. கையிலிருந்தவளை மெல்ல இறக்கி speaker-இன் முன் உட்காரவைத்து அசந்துபோய், பாடல் வரிகளை இரசிக்கத்தொடங்கினேன்.
எத்தனையோ முறை கேட்டிருந்த பாட்டு, ஆனால் நேற்று ஒவ்வொரு வரியும் பரவசநிலை. பாட்டு முடிந்ததும் வாலிக்கு பெண் குழந்தைகள் எத்தனை என்று பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்.
பாட்டைக்கேட்டுக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து என்னருகே வந்திருக்கிறாள், கால்களை பிடித்து எழுந்து நிற்கப்போவதுபோல் முயன்று முட்டி போட்டு என்மேல் சாய்ந்துவிட்டாள். விழுந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்பா என்றாள்.
அ ப் பா , அப்பாஆஆ சொல்லு அப்பாஆஆ சொல்லு என அரைமணிநேரமாய் கதறினாலும், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அம்ம்ம்ம் அம்ம்ம்ம் என கொஞ்சிக்கொண்டிருப்பவளா இப்படி என நம்பமுடியாமல் பார்த்தால் மறுபடியும் மறுபடியும் அப்பாஆ, அப்பாஅ என கொஞ்சல்.
சட்டென மனதில் ஏதோவொன்று கரைந்தது. கண்களில் கண்ணீர் திரண்டுவிட, அள்ளி அணைத்துக்கொண்டேன். பின்ணனியில்....
ஆகாயம் பூமியெல்லாம்,
இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசைதான் தீராமலே,
உன்னைத்தந்தானம்மா....