யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆசைதான் தீராமலே, உன்னைத்தந்தானம்மா..

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், செப்டம்பர் 29, 2015



இசைஞானியின் பாடலின் மூலம் இவளுக்கு இசையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம். அதில் இவளுக்கு மிகப்பிடித்தது 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... ' பாட்டு. இசைக்கத்துவங்கியதும், speakerகளை தேடத்துவங்கிவிடுவாள். தூக்கி நிப்பாட்டி பிடித்துக்கொண்டால் குதூகலத்தில் குதித்து குதித்து, இவளை பிடித்துக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டி களைப்படைந்தாலும் நிறுத்தமாட்டாள்.

நேற்று அம்மாவைத்தேடி அழுதுகொண்டிருந்தவளை சமாதானப்படுத்தும் பல முயற்சிகள் தோல்வியடைந்ததும், இறுதியாக பாட்டை போட்டதும் சட்டென அவள் கவனம் அதில் திரும்பியது. கையிலிருந்தவளை மெல்ல இறக்கி speaker-இன் முன் உட்காரவைத்து அசந்துபோய், பாடல் வரிகளை இரசிக்கத்தொடங்கினேன்.

எத்தனையோ முறை கேட்டிருந்த பாட்டு, ஆனால் நேற்று ஒவ்வொரு வரியும் பரவசநிலை. பாட்டு முடிந்ததும் வாலிக்கு பெண் குழந்தைகள் எத்தனை என்று பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

பாட்டைக்கேட்டுக்கொண்டிருந்தவள் மெல்ல தவழ்ந்து என்னருகே வந்திருக்கிறாள், கால்களை பிடித்து எழுந்து நிற்கப்போவதுபோல் முயன்று முட்டி போட்டு என்மேல் சாய்ந்துவிட்டாள். விழுந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அப்பா என்றாள்.

அ ப் பா , அப்பாஆஆ சொல்லு அப்பாஆஆ சொல்லு என அரைமணிநேரமாய் கதறினாலும், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அம்ம்ம்ம் அம்ம்ம்ம் என கொஞ்சிக்கொண்டிருப்பவளா இப்படி என நம்பமுடியாமல் பார்த்தால் மறுபடியும் மறுபடியும் அப்பாஆ, அப்பாஅ என கொஞ்சல்.

சட்டென மனதில் ஏதோவொன்று கரைந்தது. கண்களில் கண்ணீர் திரண்டுவிட, அள்ளி அணைத்துக்கொண்டேன். பின்ணனியில்....

ஆகாயம் பூமியெல்லாம்,
இறைவன் உண்டாக்கி வைத்து,
ஆசைதான் தீராமலே,
உன்னைத்தந்தானம்மா....


இனிய இரவு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, செப்டம்பர் 04, 2015
மாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்பொழுது, அவள் என்றும் தூங்கும் நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகமாகிவிட்டது. சில நிமிடங்கள் தாண்டினாலே சிணுங்குபவள் அழத்துவங்கிவிட்டாள். அம்மாவைத்தவிர யாரிடமும் நிற்கவில்லை. வெளியே சென்ற இடத்திலும் , அம்ம்ம்... அம்ம்ம்.. அம்ம்ம்... என அவளிடமே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் மருந்து, பால் எல்லாம் கொடுத்து, விளக்கணைத்து, அவள் தூங்குவதற்கான சூழலை உருவாக்கி எங்கள் நடுவே படுக்கவைத்ததும், அம்மா பக்கம் உருண்டுபோய் அவள் கழுத்தை அந்த சின்னஞ்சிறு கைகளால் வளைத்து கட்டிக்கொண்டாள். 

சில நிமிடங்கள்தான், என்ன நினைத்தாலோ தெரியவில்லை, என் மனதில் ஒரு நொடி மின்னி ,மறைந்த ஏக்கத்தை உணர்ந்ததைப்போல என் பக்கம் உருண்டு வந்து என் கழுத்தையும் அந்த பிஞ்சுக்கரங்கள் கட்டிக்கொண்டன. எப்படி உணர்ந்தேன் என உவமை சொல்வதற்கு இதற்கிணையாய் வேறேதும் கண்டதுமில்லை, உணர்ந்ததுமில்லை.

இந்த உணர்விலிருந்து வெளியே வருவதற்குள், மீண்டும் அம்மா பக்கம் உருண்டுபோய் கட்டிக்கொண்டாள். என்னடா இது சோதனை என நினைக்கத்துவங்கும்வேளையில், மீண்டும் என்னிடம். இதை ஒரு விளையாட்டைப்போல மாறி மாறி உருண்டு, இருவர் கழுத்தையும் கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

அப்பாவிடம் ஒட்டவேயில்லையே என்றிருந்த மிகச்சிறிய ஏக்கத்தோடு முடியவிருந்த இந்த இரவு, இதற்குமேல் இனிமையானதாக அமைந்துவிடாது...