ஆயிரம் முத்தங்கள்
Published by யாத்ரீகன் under மகள்குறள் on ஞாயிறு, ஜூலை 31, 2016
நேற்றிரவு திடீரென பயங்கர தலைவலி, பசி, வயிற்று வலி. எங்கிருந்து வந்ததென தெரியவில்லை, ஒருவேளை சரியான தூக்கமில்லாததோடு, வீட்டை சுத்தம் செய்கிறேன் பேர்வழியென்று இழுத்துபோட்டுக்கொண்டு நாள் முழுவதும் வேலை செய்ததுதானென நினைக்கிறேன். 5 நிமிடத்தில் சுருண்டு படுத்துவிட்டேன்.
இது தெரியாதவள், வழமைபோல என் முதுகில் குதிரைச்சவாரி செய்வதும், குறும்பாய் எதாவது செய்துவிட்டு அப்பாஆஆ என வம்பிழுப்பதுமாய் விளையாடிக்கொண்டிருந்தாள். "அப்பாவுக்கு பனிடா (காய்ச்சல்) , வையா (உடல் சரியில்லை), மம்மம் சாப்பிடலை, தூங்கட்டும்" என அம்மை சொன்னதும், "தெம்மாமி.... ஊஊஉ(சி)" என சென்ற வாரம் காய்ச்சலிலிருந்து மீண்டவள் தன் வாழ்க்கை [ :-) ] அனுபவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தூங்கும்வரை "அப்பாஆ பனி.." , "அப்பாஅ ஊஊஊ" என infinite loop-இல் ஓடிக்கொண்டிருந்தாள். அம்மைதான் கேட்டுக்கேட்டு tired ஆனாள் :-)
காலையில் எடுத்து வைத்திருந்த தோசையை கவனிக்காமல் வேலை மூழ்கியிருந்தபோது, அந்த சிறு கைக்கேத்த மிகச்சிறிய கவளம் எடுத்து எனக்கு ஊட்டிவிடத்துவங்கினாள். ஒருவேளை அம்மை சொல்லியிருப்பாளோ என திரும்பிப்பார்த்தபோது, அவளும் ஆச்சரியமாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு கவளம் ஊட்டிமுடித்ததும், "அப்பாஆ பசி... (என் வயிற்றை தொட்டுக்காண்பித்துக்கொள்வாள்) அப்பாஆ தப்பாச்சி..." என அம்மையை பார்த்து சொல்லிக்கொண்டே ஒரு 'கோதுமை' தோசையை சப்பாத்தி (தப்பாச்சி) என நினைத்து ஊட்டி முடித்தபோது, ஆயிரம் முத்தங்களாவது கொடுத்திருப்போன்.