யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

என் சர்க்கரை பட்டி குட்டி

Published by யாத்ரீகன் under , on சனி, ஜூன் 25, 2016
பட்டி குட்டி என இவளை செல்லமாக கூப்பிடுவதற்கு இன்னொரு காரணம் கோபம், மகிழ்ச்சி, அழுகை, அடம், குழப்பம், தூக்கக்கலக்கம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இவள் 'கடி'.

எங்களிருவரை செல்லக்கடி கடிப்பதுமட்டுமில்லாமல், மெல்ல வெளியாட்களிடமும் அது ஒரு பழக்கமாகத்தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு முறை அவள் கடித்துவிடும்போதும், குரல் உயர்த்தி 'தப்பு' , 'No No' எனச்சொல்வதும், அம்மே கோபித்துக்கொண்டு(கொள்வதுபோல்) அறைக்கதவை மூடிக்கொள்வதும், இருவரும் அவளிடம் பேசாமலிருப்பதும், மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் என சாம, பேத, தண்ட வழிமுறைகளை பின்பற்றத்தொடங்கினோம்.

குரல் உயர்த்தி 'தப்பு' எனச்சொன்னதும் தவறு செய்துவிட்டதை உணர்ந்ததைப்போல், தலை தாழ்ந்து, நம் கண்களை பார்க்கவே மாட்டாள். அப்படியே 'கடிக்கலாமா ? தப்பில்ல ?' என்ற கேள்விக்கு கவனமேயில்லாமல் வேறேதாவது வேலை செய்வதுபோல பாசாங்கைத்துவங்கியிருப்பாள்.

'No, No' என நாம் மெல்ல தலையை வலம்-இடமாக ஆட்டத்துவங்கினால், அவளும் பதிலுக்கு No No என மழலையில் கொஞ்சி மொத்த கோபத்தையும் காலிசெய்திருப்பாள்.

கடி வாங்கிய அம்மே கோபித்துக்கொண்டு அறைக்கதவை மூடிக்கொண்டால், ஒற்றை விரல் கொண்டு அப்பாவை தரதரவென இழுத்து வந்து கதவைத்திறக்கவைத்து, ஓடிச்சென்று அம்மேயை கட்டியணைத்து உம்மா தந்து கவிழ்த்துவிடுவாள்.

Sorry என்ற சொல் பழகும்வரை, சைகை மொழியில் மன்னிப்பை பழக்கியிருந்தோம். அதை கிழித்துவிடும் புத்தகத்திற்கும், கொட்டிவிடும் பாலிற்கும், உடைத்துவிடும் பொம்மைக்கும் என, அஃறிணைப்பொருட்களுக்கு மட்டும் செவ்வனே செய்துவந்தாள்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் கிடைக்கத்துவங்கியது, ஆனால் எல்லாமே அடுத்த உணர்ச்சிப்பெருக்கு வரும்வரைதான். வந்ததும், அனைத்தும் மறந்துபோகும்.

இதோ இதை எழுதி முடித்து அமருகையில், 'பா, பா ' என்று அழைத்துவந்த பாட்டியை முதன்முறையாய் 'பாட்ஈ' என அழைத்துவிட்ட உற்சாகத்தில் ஓடிவந்து என்னை கட்டியணைத்துக்கொண்டவள் அதே வேகத்தில் என் தோளில் ஒரு செல்ல கடி. கடித்த அடுத்த நொடி நான் அவளை கோபமாக பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, மெல்ல முத்தங்கொடுத்து விளையாடுவதைப்போல ஓசையெழுப்பி பாசாங்கு செய்துகொண்டே பார்த்த பார்வையும், குறும்புச்சிரிப்புமிருக்கே... என் சர்க்கரை பட்டி குட்டி.

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக