மேற்கு, இந்தியாவில் இந்த திசையில் இன்னும் எந்த இடமும் பார்த்திராத குறை வெகு நாளாக உறுத்திக்கொண்டிருந்தது. இம்முறை வேறொரு பயணம் திட்டமிட்டபடி நடக்காததால், மிக சந்தோஷமாய் கிளம்பிவிட்டோம் அஜந்தா-எல்லோரா-பூனே என்று; சிறிது நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தோம்.
அஜந்தா - சிறு வயதில் சரித்திரப்பாட மனனம் மட்டுமே செய்திருந்த இடம். பின்பு என்ன வகையான இடம் என்று தெரிய வந்தபோது வாழ்நாளில் என்றாவது ஒருநாள் சென்று வரவேண்டும் என்றானது.
அவுரங்காபாத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது அஜந்தா குகைகள். இது பல குகைகளை ஒரே இடத்தில் செதுக்கியிருக்கும் இடம்.
குகை என்று ஒருவித எண்ணத்தில் சென்ற எங்களுக்கு இதன் அமைப்பு மிகவும் பிரமிக்கதக்கதாய் இருந்தது. அடர்ந்த கானகத்தினுள், பள்ளத்தாக்கினுள், கீழே ஓடும் ஆறு, அருகே பெரிதாய் இருக்கும் அருவி என.. எப்படி இதை செய்து முடித்திருப்பார்கள் என்று.
இதை முதலில் யோசித்ததிலிருந்து, இறுதியில் செய்து முடித்தவரை எவ்வளவு உழைப்பு, கற்பனை இருந்திருக்கும் என்று பிரமித்தபடியே மயங்கியிருந்தோம். பல கால கட்டங்களில் செதுக்கப்பட்ட குகைள் இவை.
அஜந்தாவில் பெரும்பாலும் பவுத்த குகைகள், இங்கிருக்கும் குகைகள் இதிலிருக்கும் பவுத்த ஓவியங்கள், புத்த விகாரக குகைகள் உலகப்புகழ் பெற்றவை.
இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கவை, இங்கிருக்கும் ஓவியங்கள். இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்க்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருக்கும் குதிரை லாட 'யு' வடிவிலான பள்ளத்தாகின் சுவர்களில் தான் அஜந்தா குகைகள் இருக்கின்றன. கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு தெரிகின்றதா ? எப்படி செதுக்கியிருப்பார்கள் இந்த குகைகளை ???
2. அஜந்தாவின் கடைசி குகைகளில் இருந்து அழகிய ஜன்னல்கள் வேலைப்பாட்டுடன்.
3. அங்கிருக்கும் தூண்களில் உள்ள ஒரு சிறு வேலைப்பாடு. எத்தனை நுணுக்கமான கலைநயம், காலத்தை தாண்டி நிற்கும் கலை.
4. மற்றுமொரு அழகான தூண்.
5. இங்கிருக்கும் தூண்களைப்பார்த்தால் மலையில் செதுக்கியதைப்போலா இருக்கின்றது ? எவ்வளவு நேர்த்தியாய் செதுக்கப்பட்டு, வரிசையாய் கொஞ்சம் கூட அங்கிங்கு விலகாதபடி ஒரே நேர்க்கோட்டில். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அப்படியே இருக்கின்றது ஆச்சர்யம்.