யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

பத்து

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 06, 2008
ப்ரியாவின் இந்த Tag , ஒரு பெரிய ப்ளா(தூ)க்கத்தில இருந்து விழித்து வந்து எழுத வச்சிருக்கு.. நன்றி ப்ரியா :-)

இப்போ இவை இல்லாம வாழ முடியாதுன்னு இருக்குற 10 பொருள்களின் ப்ராண்ட். இந்த ப்ராண்ட் மோகம்னு எதுவும் கிடையாது, எதோ கிடைக்குறத வச்சி ஓட்டிகிட்டு இருந்தேன் .. குறிப்பா இதுதான் வேணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்ததில்ல.. சரி இப்போ இங்க இருக்குற நிலைமையே வேற, என்னதான் அப்படி இல்லாம வாழ முடியாதுன்னு யோசிச்சா, இதோ அடுத்து வருது பாருங்க அவைகள் தான் ...


1. ADIDAS - என்கிட்ட இருக்குற பொருள்களிலேயே, இது இல்லாம இப்போ இருக்கவே முடியாதுனா என்னோட Adidas Supernova Shoe தான், என்னோட தட்டைப்பாதாங்களால் வெகு தூரமோ/ நேரமோ ஒடமுடியாம வலியில் துடிச்ச எனக்கு இது ஒரு வரம். கொஞ்சம் இல்லை, ரொம்பவே விலை அதிகம் தானோ-னு யோசிச்சு யோசிச்சு வாங்குன பொருள் ஆனா இப்போ அதுக்கு கொஞ்சமும் வருந்தவே இல்லை :-)

கொசுறு: All Day I Dream About Sports-னு பரவலா சொல்லப்பட்டாலும் இதோட பெயர்காரணம் வேறு.


2. Himalaya Hair Cream - இந்த பொருள் இல்லாம நான் இப்போ இருக்குற நிலமைல வெளியில தலை காட்ட முடியாது :-) , பின்னே இது இல்லைனா, சிங்கத்தோட பிடறி range-க்கு வெளியில போக எனக்கு விருப்பம் இல்லை :-D
கொசுறு: 78 வருடங்களுக்கு முன்பு மதம் பிடித்த யானைகளுக்கு குடுக்கப்பட்ட வேர்களின் ஆராய்ச்சி இந்நிறுவனத்தின் நிறுவனரின் முதல் முயற்சி


3. Honda Civic என்னோட லட்சுமி :-D , இவுங்க இல்லைனா இந்த ஊர்ல முடமாகித்தான் போயிருப்பேன். திசை தெரியா பயணங்களுக்கு அம்மணி தர்ற வேகமும் சரி, உறுமலும் சரி, அட்டகாசம்
கொசுறு: இந்நிறுவனத்தின் கார் தான் அமெரிக்காவில் தயாரான முதல் ஜப்பான் கார்.
4.Taco Bell என்னோட உணவுப்பழக்கங்களுக்கு ஈடு குடுத்து பன், இலை தழை தவிர ருசியான, வயிறார Bean Chalupa (சாப்பாடு) போடுற அன்னமிட்ட தெய்வம் :-) , எந்த நேரம் போனாலும் (எங்க ஊரைப்போல) சுடச்சுட சாப்பாடு கிடைக்குதுன சும்மாவா
கொசுறு: Chalupa என்றால் "படகு" ஸ்பானிஷில்-இல் ஒரு அர்த்தம், படகு போன்ற உருவில் அந்த fried bread இருப்பதனால் அதற்கு இந்த பெயர்.

5. சண்ட, ATM-னு மொக்க படங்களுக்கு நடுவே, மனதைத்தொடுறதுல இருந்து விறுவிறுப்பா, சட்டுன்னு கண்ணை நனைக்கும், பார்த்ததும் சந்தோஷம் பொங்கும் என பல நாட்டுப்படங்களுக்கு ஒரு திறவுகோல். ஆனந்தவிகடனில் செழியனின் உலக சினிமா படித்து விட்டு, Parris-ல தேடி அலையுறதும் இப்போ ரொம்ப எளிதாயிடிச்சு.
கொசுறு: சென்ற வருடம் தனது 1 Billion-th குறுந்தகடை பயனாளர்களுக்கு அனுப்பியது


6. ரோஷகுல்லா - இதுக்குனே ஒரு பெங்களிப்பெண்ணை கட்டிக்கலாம், 2003-ல பிடிச்ச பைத்தியம், தினமும் பத்து ரூபாய்க்கு 5/6 வாங்கி சாப்பிட்டு பழகிப்போய், சென்னை-ல பிரிஞ்ச இந்த காதலிய, இங்கிருக்குற இந்தியன் கடைகள்ள கண்டுகொண்டேன். தினம் இரண்டுனு, இரவு சாப்பாடு முடிச்சதும் பொறுமையா ருசிக்கும் அந்த நொடி.. அஹா !!!!
கொசுறு: ரோஷகுல்லா உருவானது மேற்கு வங்கத்தில் அல்ல, ஒரிசாவில் என்பது தெரியுமா ?

7. காபி சாப்பிடாத எனக்கு இந்த இடம் பிடிச்சதுக்கான காரணம் இங்க கிடைக்குற Bannana Nut Cake-உம் தனிமையும் தான். ஒரு காபி கப்போட அப்படியே ஒரு புத்தகத்தை எடுத்துகிட்டு ஓரத்துல போய் உட்காந்தா போதும், யாரும் எதுவும் கேட்க்காம எவ்வளவு நேரம் வேணாலும் உட்கார்ந்திருக்கலாம்.
கொசுறு: இவர்கள் முதலில் வைக்க நினைத்த பெயர் Pequod, ஆனால் Pee-quod என சொல்லி விட்டால் அதை குடிக்கப்போவது யார் என நினைத்துதான் பெயரை மாற்றி விட்டார்கள்.
8. Cadbury's Milk Chocolate with Roasted Almonds , ரொம்ப சந்தோஷமா இருக்குற நேரங்களும் சரி, கோபம், வருத்தமான நேரங்களும் சரி, இது ஒரு Stress Buster எனக்கு. தேவை இல்லாம என்னோட கோபத்தையும், வருத்தத்தையும் யார் கிட்டயும் காமிக்கத்தேவை இல்லாம, ஒரு பெரிய சாக்லடே பார் வாங்கிட்டு தனிய எங்கயாவது போய் சாப்ட்டு முடிக்கயில ஒரு நிலையில வந்து நின்னிருப்பேன் :-)
கொசுறு: 1905-இல் இருந்து ஒரு மில்க் சாக்கலேடில் பாரில் 1.5 கப் பால் என்ற அளவு தொடர்கின்றது ..
9. பெப்சி, கோக் மட்டுமில்லாம அவுங்களோட எல்லா பொருள்களையும் புறக்கணிப்புனு பேர்ல குடிக்க மாட்ட அப்போ இந்த ஊர்ல என்னதாண்ட குடிப்பேன்னு திட்டுன நண்பர்களால தேர்ந்தெடுத்த பாணம் :-)

10. மெக்சிக்கோ சலூப்பா போர் அடிச்ச சமயம் கைகுடுக்கும் மற்றொரு தலைவர் இவர் .. இவரின் Veggie Burgers ம்ம்ம்ம்ம்ம்ம் ....
கொசுறு: Burger King was the first fast-food restaurant to offer an enclosed and air-conditioned seating area
என்ன ஹீரோ , இந்த Tag-ஐ எடுத்துக்குரீங்களா ?

அன்புள்ள அப்பாவுக்கு

Published by யாத்ரீகன் under on ஞாயிறு, மே 04, 2008
அன்புள்ள அப்பாவுக்கு,

எத்தனையோ முறை எனக்கு நீங்க கடிதம் எழுதி இருக்கீங்க. திருவனத்தபுரம், கொல்கத்தா, டெல்லி அப்படீன்னு எட்டாத தூரத்துல இருந்தாலும் சரி, சென்னையில இருந்தாலும் சரி தவறாம எனக்கு வீட்டுல இருந்து கிடைக்குற ஒரு விஷயம்னா உங்க கடிதம் தான்.

நான் பேசும்போது ஒரு தடவை கூட அதை குறிப்பிட்டு , கிடைச்சிருச்சுனு சொல்லக்கூட இல்லாம பேசுவதும் , ஒரு வரி பதில் கூட எழுதாம இருந்ததும், உங்களுக்கு நான் அதை படிச்சேனானு ஒரு சந்தேகத்தோட வருத்தமும் இருந்திருக்கலாம்.

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல.

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்), ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

எத்தனையோ சாதரண பசங்க போல நானும் , சின்ன வயசுல எங்க அப்பாவைப்போல யாருமே இல்லைன்னு பெருமைபடுறதுல ஆரம்பிச்சு, விடலை பருவத்தில எங்க அப்பாவைப்போல கெட்டவர் யாருமே இல்லைன்ற அளவுக்கு போய், இப்போ என்னோட வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில எங்க அப்பாவைப்போல யாருமே இல்லைன்னு பெருமையா சொல்லுற இடத்துக்கு மறுபடியும் வந்திருக்கேன். இது எல்லாமே எந்த ஒரு அப்பா மகன் உறவுக்குமான வளர்ச்சியும் முதிர்ச்சியும்தானே தவிர, அந்த சந்தர்ப்பத்தில வர்ற எண்ணத்தை வச்சு அவ்வளவுதானா நம்ம பசங்க நம்மளை புரிஞ்சிகிட்டதுனு எண்ணத்துக்கு வந்திடாதீங்க, பசங்க அந்த அந்த வயசுக்கான மாற்றங்களை கடந்து வரட்டும்.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

எந்த ஒரு நபரும் செய்யும் தவறுக்கு தண்டிக்கப்படலாம் , ஆனா செய்யாத தவறுக்காக, செய்யும் நல்ல விஷயத்துக்காக, செய்யும் விதம் காரணமா நீங்க எல்லோர் முன்னாடியும் வில்லனா ஆக வேண்டாம்ப்பா. என்னடா நமக்கே புத்திமதி சொல்றானானு மட்டும் எந்த ஒரு சந்தர்பத்திலயும் நினச்சிறாதீங்க, உங்க மேல உள்ள அன்பு காரணமாத்தான் சொல்றேன், எல்லோரும் உங்களை தப்பா புரிஞ்சிகிறாங்கனு நீங்க வருத்தப்படுறதை என்னால பார்க்க முடியலை.

அம்மா நல்லதுக்கு நீங்க சொல்றதை அவுங்க கேட்க்காம பசங்களுக்கு பண்றாங்கனு பார்கிறதை விட, அது அம்மாவுக்கு எங்க மேல இருக்குற ஒரு வகை அன்பின் வெளிப்பாடுனு பாருங்க. எப்பவும் கிடைக்கும் அந்த வகையான பாதுகாக்கும் அன்பு கட்டாயம் எங்களை எங்களோட வாழ்க்கைக்கு தயார் பண்ணாது தான், இருந்தாலும் வீட்டுக்கு வந்ததும் (நான் உள்பட) நாங்க எங்களையும் அறியாம தேடுறது அது. எப்படி சொல்றதுன்னு தெரியல, இப்படிப்பட்ட அம்மாவோட அன்பு தப்புன்னு சொல்லவும் முடியல, இது வேண்டாம்னும் சொல்ல முடியல.

சின்ன வேலை கூட தானா செய்யாம அம்மாவையே எதிர்பாக்குறாங்க, பின்னாடி இதுனால கஷ்டப்பட கூடாதுன்னு உங்களோட கோணம் பசங்களுக்கு புரியிற வயசில்லை, கொஞ்சம் அவகாசம் குடுங்க அவுங்களுக்கு. இந்த சமயத்தில கோபப்பட்டா , உங்க நோக்கத்தை விட அந்த கோபம்தான் அவுங்களுக்கு பெருசாப்படும்.

சரி சின்னப்பசங்களை விடு , உங்க அம்மா கூட இதை புரிஞ்சிகாம நடக்குராளேனு நீங்க உடனே நினைக்குறது புரியுது. எனக்கும் அந்த வருத்தம் கொஞ்சம் உண்டு, அம்மாவோட ஆதரவு சில நேரங்களில் பசங்களுக்கு கிடைக்காம இருக்குறது நல்லதுன்னு தோணும், ஆனா பசங்களுக்கு அது தேவைப்படுறதே உங்க கோபத்தில இருந்து தப்பிக்குறதுக்குத்தானே ? அம்மாவுக்கும் நீங்க பொறுமையா எடுத்து சொல்லுங்க , இன்னி வரைக்கும் நீங்க சத்தம் போட்டே அதை சொல்லிஇருக்கீங்க, எனக்காக, அம்மாகிட்ட ஒரு பத்து முறையானாலும் பரவாயில்லை, அந்த சந்தர்பத்தில பொறுமையா திருப்பி திருப்பி சொல்லுங்க, உங்களோட அந்த ஒரு மாற்றத்திற்காவது மதிப்பு குடுத்து அம்மா கட்டாயம் மாறுவாங்க.

அதையும் மீறி உங்களுக்கு கோபம் வந்ததுனா, அந்த இடத்தை விட்டு போயிடுங்க , எதையும் விசிறியடிக்காம , யாரையும் திட்டாம , எந்த ஒரு வார்த்தையும் கோபத்தில உதிர்க்காம, சொல்லிலையும் , செயலிலையும் அமைதியா அந்த இடத்தை விட்டு நகர்ந்திருங்க.

கோபத்தோட மதிப்பும், பலனும் , பாதிப்பும் அது எத்தனை முறை வருதுன்றதால கிடையாது, அது எப்படி வெளிப்படுதுன்றதால தான்.

நொடிக்கொரு முறை வரும் கோபத்தை விட என்றோ வரும் கோபம் தான் சரியான பலன் தரும். நொடிக்கொருமுறை வந்தால் அதனால் பயம் வருவதை விட்டுட்டு, அட இந்த வழக்கமான கோபம் தானேனு அலட்சியம் தான் வரும். இப்போ பிரசன்னா கிட்டயும் , கமல் கிட்டயும் நான் பாக்குறது அதுதான். இது வேணா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம், ஆனா அதுதான்பா உண்மை.

உங்களோட கோபமான தருணங்களை , அம்மாவோ தம்பிகளோ , அந்த தருணத்தை பல்லை கடிச்சிகிட்டு, கண்ணை மூடிகிட்டு ஒரு வித சலிப்போட கடந்து போக நினைப்பாங்கலே தவிர, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்க்கமாட்டாங்கபா.

நீங்க சொல்றதை அவுங்க கேட்க்கனும்னா, அவுங்களோட கவனத்தை உங்க பக்கம் திருப்பனுமே தவிர, உங்களை விட்டு திருப்பக்கூடாது. அதுக்கு உங்களோட அணுகுமுறையை மாத்திக்கனும்னு என்பது என்னோட விருப்பம்.

உங்களுக்கே தெரியும், நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு நினைவு படுத்தவே தவிர, உங்களுக்கு சொல்லித்தர இல்லை. இதெல்லாத்தையும் விட நான் உங்க கிட்ட சொல்லனும்னு இன்னைக்கு நினச்ச விஷயங்கள்ல ஒன்னு உங்க tone. தமிழ்ல எப்படி சரியா சொல்றதுன்னு தெரியல, சொல்லும் (அ) பேசும் விதம்னு சொல்லலாம்னு நினைக்குறேன். இதுல நான் எதாவது தப்பா சொன்னா மன்னிச்சிருங்க.

எண்ணங்கள் தான் வாழ்க்கை, நம் எண்ணங்கள் தான் நம் குணத்தை, நம்முடைய வாழ்வை தீர்மானிக்கும்னு நீங்க எவ்வளவு தூரம் நம்புறீங்கனு தெரியாது, ஆனா நான் ரொம்ப தீவிரமா நம்புறேன். ஒருவன் அவனுடைய கனவை அடைய, அந்த கனவை நினைவாக்கும் எண்ணங்களிலேயே திளைக்கணும், அவன் வெற்றி அடைவான்னு அவனோட ஒவ்வொரு நொடி எண்ணத்திலயும் அவன் முழுமையா நம்பனும். அந்த எண்ண அலைகளுக்கு, அவனை மட்டும் அல்ல, அவனை சுற்றி இருக்கும் சூழலையும், சுற்றி இருக்கும் மற்ற மனிதர்களையும் அவனோட வெற்றிக்கு தயார் படுத்தும். பாசிடிவ் எண்ணங்கள்னு குறிப்பிடுகிறது இது தான்.

எங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனி எங்களுக்கு என்ன, நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க, நல்ல படியா அமைத்துக்கோங்க அப்படீன்னு நீங்க சொல்லும்போது அதில இருக்கும் எங்க நலன் பத்தி சிந்திக்கும் நல்ல கோணத்தை விட, அதிலிருக்கும் சலிப்பான எண்ணம் தான் அதிகம்.

அந்த சலிப்பான எண்ணங்கள், உங்களோட செயல்களை பாதிப்பதில் தொடங்கி, உங்கள் வாழும் சூழல், உங்களை சுற்றி, உங்களை பார்த்து வளரும் எங்களின் எண்ணங்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கும் வாழ்க்கையை பற்றி இத்தகைய கோணம் தான் தோன்றுமே தவிர, வாழ்கையில் எதையாவது சாதிக்கணும், வாழ்வு முறையை முன்னேத்திக்கனும்னு தோணுவது கஷ்டம்.

அப்படீனா வாழ்க்கையில வெற்றி பெற்றவர்கள சுத்தி இருக்குறவுங்க எல்லோரும் இப்படியா பாசிடிவா மட்டும் நெனச்சாங்கனு கேட்டா, இல்லை, சுத்தி இருக்கும் நெகடிவ்வான எண்ணங்களை தாண்டியே பலரும் வந்திருக்காங்க, அதுக்காக நீங்க அத்தகைய தடைகற்களை உருவாக்கனுமா ? நீங்க அறிஞ்சே பண்றீங்கன்னு சொல்ல வரலை, ஆனா இப்படி ஒரு கோணத்திலயும் உங்க சலிப்பான பதிலை பார்க்கலாமேன்னு சொல்ல வர்றேன்.

இந்த வெளிநாட்டிலே மொத்தமா கிட்டத்திட்ட ஒரு வருசத்துக்கும் மேல இருந்திருப்பேன், இங்க இருக்கும் பல விஷயங்கள் பிடிக்கலைனாலும், இந்த ஊர்ல இருக்கும் மக்கள் கிட்ட பிடிச்ச ஒரு விஷயம், நாமும் கடைபிடிக்கணும்னு நினைக்குற ஒரு விஷயம், வாழ்க்கையை பார்க்கும் விதம்.

இந்த வாழ்க்கையை பார்க்கிற விதத்தில ரெண்டு நாட்டுக்கும் ஒரு கலாச்சார மாற்றம் இருக்குதுனாலும், இவர்களுடையது தவறும் கிடையாது, நம்முடையது மிகவும் சரியும் கிடையாது.

நான் எதை சொல்ல வர்ரேனா, நம்ம நாட்டை பொருத்த வரைக்கும் பெரும்பான்மையா , ஒருத்தரோட வாழ்க்கை என்பதின் நேரம் அவுங்களோட வயசு கிடையாது, முதல் 20 வயசு வரைக்கும் நம்ம வாழ்க்கை என்பது நம்ம பெற்றவுங்க தீர்மானிக்குறதா இருக்கு, அதுக்கு அப்புறமான ஒரு 6/7 வருடங்கள் என்பது family commitments-ஐ மீறி அந்த தனி நபரோட வாழ்வா இருக்கு, அதற்கு அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும், அந்த இருவருக்கும் தனிப்பட்ட வாழ்வுனு இருக்குறதில்ல, அது அவர்கள் இருவருக்கு நடுவில பங்கு போடப்பட்டு , மிச்சம் அந்த இருவரின் குடும்பத்தாரிடையும் பங்கு போடப்படும். அடுத்து குழந்தை பிறந்துட்டா, அதுக்கு அப்புறம் இருக்கும் வாழ்நாள் முழுவதும் அவர்களின் குழந்தைக்கே கேட்கப்படாமலே தாரை வார்த்துக்குடுக்கப்படும்.

ஆக மொத்தம் அதிக பட்சம் 7 வருடங்கள் தான் ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கை என்பது. இது ஏன்னு பார்த்தா, அன்பு தான் காரணம், முதல்ல தன்னை சார்ந்தவுங்களோட வாழ்க்கை நல்லா அமையனும்ன்ற அன்பு. அதை தப்பு சொல்லவே இல்லை, ஆனா அதற்கிடையில் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கான வாழ்க்கை தொலைஞ்சு போகுது.

இப்போ இந்த நாட்டுல பார்த்தீங்கனா, ஒருத்தர் தனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தன்னோட தனிப்பட்ட வாழ்வு இருக்குறதை நம்புறாங்க, அதை கிழடு தட்டி போகின்ற கடைசி நொடி வரைக்கும் நம்பிக்கையோட பிடிச்சிட்டு இருக்காங்க. பிள்ளைகளை பெத்துட்டதினால தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையை மறப்பதில்லை. இதுல சுயநலம் இருக்குன்னு சொன்ன, அது முழு உண்மையில்ல, காரணம், அவுங்க யாரும் பிள்ளைகளை முழுமையா மறந்திறதும் இல்லை, பிள்ளைகளும் அவுங்களை முழுமையா மறந்திறதில்லை. 55 வயசுல இனி என்ன வாழ்க்கை எங்களுக்கு இருக்குனு சொல்ற சமயத்தில , சின்ன வயசுல அவுங்க செய்ய நினைச்சதை , தங்களால முடிஞ்ச சமுதாயத்துக்கான நல்லா விஷயங்கள்ல ஆரம்பிச்சு, அவுங்களோட தனிப்பட்ட ஆசை வரைக்கும் செஞ்சு சந்தோஷப்படுக்கிறாங்க.

நான் ஏன் இதை இப்போ சொன்னேன் அப்படீன்னு நீங்க யோசிச்சா, காரணம், நீங்க உங்களுக்குன்னு தனிப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்ததில்லை, தங்கைகளுக்கு, அம்மாவுக்கு, குடும்பம்ன்ற கட்டுபாடிற்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்குனு மத்தவுங்களோட நல்லதுக்குனு யோசிச்சி இருந்து இருக்கீங்க. உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குப்பா. இதுக்கு மேல எனக்கு என்ன வாழ்க்கை இருக்குன்னு நெனைக்காதீங்க, இனி மத்தவுங்கள நாங்க பாத்துகிறோம், நீங்களும் பார்த்துகோங்க, அதே நேரத்துல உங்களோட வாழ்க்கையும் இருக்கு, அதையும் சந்தோஷமா, ஒரு குழந்தையின் உற்சாகத்தோட வாழ ஆரம்பிங்கப்பா.

இன்னைக்கு காலையில நான் உங்க கிட்ட கேட்ட அந்த விரக்தியான, சலிப்பான வார்த்தைகளே அத்தகைய வார்த்தைகளில் கடைசியா இருக்கணும் என்பது என்னோட ஆசை.
எதையும் ஒரு உற்சாகத்தோட அணுகுங்க, 55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை.

நமக்கு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் , அதன் இறுதி வரை சந்தோஷத்தோட கழிப்போமே அப்பா. எனக்கு இருக்குறது எத்தனை நொடிகள்னு எனக்கு தெரியாது , யாரு யாருக்கு அப்புறம் இருப்பான்னு யாருக்குமே தெரியாது, இதில என்னோட வாழ்வு அவ்வளவு தான்னு நீங்க முடிவு பண்றது சரியா ?

நான் கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமா பேசிட்டேனோ-னு தோணுது, ஆனா ஏன் மனசில இருந்ததை உங்க கிட்ட எந்த வித சங்கோஜமும், பாசாங்கும் இல்லாம பகிர்ந்துகிறதுக்கு என்னால முடிஞ்சதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். அந்த ஒரு comfortness நமக்கிடையே கொண்டு வந்ததுக்கு.

இதை எல்லாத்தையும் ஏனோ தெரியல phone-ல சொல்ல முடியல, அதை பொறுமையா கேட்க்குற நிலையில் நீங்களும் இல்லைன்னு தோணுச்சு. அதான் இந்த முறை.
இதில நான் தப்பா எதாவது சொல்லி இருந்தேன்னு உங்களுக்கு தோணுச்சுனா மன்னிச்சிருங்க. இல்லை, நான் நீ சொல்ற அர்த்தத்தில நான் நடந்துகலைனு நெனச்சீங்கனா என்னோட தப்பான புரிதலா இருக்கும், மன்னிச்சிருங்க.

உங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சி பண்றேன்னு நினச்சிறாதீங்க, இதெல்லாம் நான் உங்க கிட்ட இருந்து, படிச்ச புத்தகங்கள் கிட்ட இருந்து, பார்த்த மனிதர்கள் கிட்ட இருந்து, கிடைத்த அனுபவாங்கல்ல இருந்து தோணியதை தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதை உங்களுக்கு நியாபகப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன்.

என்ன சொல்றதுன்னு தெரியாம, எங்கயோ ஆரம்பிச்சு, எதிலோ போய், எதிலோ முடிச்சிட்டேன் .. எண்ணங்களை கோர்வையா எழுதலைனாலும் , நான் சொல்ல வந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.

என்றும் அன்புடன்,
செந்தில்