யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நிறைந்த நினைவுகள்

Published by யாத்ரீகன் under , on திங்கள், மார்ச் 16, 2009
என்ன சொல்வதென தெரியவில்லை, பலநாளாய் படிக்கவேண்டுமென நினைத்திருந்த “வெயிலோடு போய்” சிறுகதை “பூ” என்ற படமாக வந்தபொழுதும், அதைப்பற்றிய நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதும் கட்டாயம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த ஒரு தோழியின் நெகடிவ் விமர்சனத்தையும் மீறி இன்று பார்க்கத்துவங்கினேன். பார்த்ததும் தோன்றியதுதான் இந்த பதிவின் முதல் வரி. என்ன சொல்வதென தெரியவில்லை.

மனது நிறைய ஒரு வகையான, என்னவென்று நேரடியாக பெயரிட முடியாதொரு ஒரு உணர்வு மனமெங்கும் நிறைந்திருக்கின்றது. மாரியின் கள்ளங்கபடமில்லாத அன்பா, அந்த இறுதிமுடிவா, வாழ்வின் நிதர்சனத்தில் அடிபட்டுப்போகும் எல்லாமா, எளிதாய் காணவியலாத இப்படியொரு எதிர்பார்ப்பில்லாத அன்பா.. என எல்லாவற்றையும் ஒன்றாய் கண்டதொரு ஒரு உணர்வுதான் அது.

சுருக்கமாய் சொல்வதென்றால் மிக மிக மிக பிடித்தபடங்களுள் ஒன்றாக இருக்குமென்று நினைக்கவேயில்லை. ஆனால் அவ்வளவு சுருக்கமாய் முடித்துவிட தோன்றவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும், பாத்திரப்படைப்பையும், வசனங்களையும் நுணுக்கமாய் இரசித்து இரசித்து சந்தோஷப்பட்டு, வருத்தப்பட்டு பார்த்துக்கொண்டிடுருந்தேன்.

ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கலாம், பெயர் போட்டு முடித்ததும் வரும் அந்த கிராமத்தின் அறிமுகக்காட்சிகளில் வரும் பாளம் பாளமாய் வெடித்திருக்கும் மண்ணும், அடுத்து வரும் முகமெங்கும் சுறுக்கம் கொண்ட பாட்டியின் க்ளோசப் காட்சிகளில் போடும் அட, இறுதிவரை வரும் ஒவ்வொரு காமெரா கோணங்களிலும் நெஞ்சை அள்ளுகிறது, கிராமமென்றாலெ பசுமைதான் அழகென்பதை உடைத்து, சிவகாசியனருகே இருக்கு ஒரு வரண்டமண்ணுமொரு அழகுதான் என காட்டும் காட்சிகள் அட்டகாசம். இதை சத்யம் தியேட்டரில் பார்க்கத்தவறிவிட்டேனே !!!

சின்ன சின்னதாய் வரும் சில விஷயங்களை பார்த்து பார்த்து மனசு ஏனோ படமெங்கும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் சட்டென 10-15 வருடங்கள் சரேலென பின்னாலிலுத்துக்கொண்டிடுருந்தது. கடையில் தேங்காய் சில்லு வாங்க வரும் சிறுவன் (இப்போதெல்லம் தேங்காய் சில்லு தருகிறார்களா ?! :-) , அதை உடைத்து அதன் தண்ணீரை உடைத்து அப்படியே ஊற்றிவிடுவதும், மண்டைவெல்லம் கேட்டதற்கு தேங்காய்தண்ணீர் குடித்ததை சொல்லுவதும்.. வீட்டினெதிரே இருக்கும் செட்டியார் கடையில் அடித்த கூத்துதான் நியாபகம் வருது. புது சேலை பார்த்ததும் எடுத்தியாடி, எடுப்பாதானிருக்குனு சொல்லும் சிறு வசனம்தான், பலரின் கவனத்தை கவரும் அளவுக்கு முக்கியத்துவமானதுமில்லை, ஆனால் கண்முன் நடமாடிய பல பாட்டிமார்களை ஒரு நொடியில் நியாபகப்படுத்திவிட்டது. சாப்பிட மாரி உட்காரும் முறையிலாரம்பித்து, ஒவ்வொரு மானரிஸங்களிலும் மாரியாகவே உலாவியிருக்கும் பார்வதி அடுத்த முத்தழகுதான்.

பேனாக்காரர் கதாபாத்திரம் இன்னொரு அட்டகாசம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியங்களையும் பக்கம் பக்கமான வசனங்களில் விளக்காமல் காட்சியமைப்புகளாலயே (வண்டிக்காரர் பேனாக்காரர் என்பது வெறும் வார்த்தை வித்தியாசமில்லை என்பதில் வரை) அசத்தியிருக்கிறார் சசி.

வயல்வெளிகளில் கைகளை கோர்த்துக்கொள்ளும் கற்பனை கவிதை, அதுவும் படத்தில் முக்கியமாய் பயன்பட்டிருப்பது அருமை.

சின்ன சின்ன கதாபாத்திரங்களை அறிமுகமான முகங்களாய் விடாமல் புதியவர்களை அதுவும் கிராமத்தினரையே உலாவ விட்டிருப்பது பெரும் பலம், அண்ணன் தங்கையிடையே நடைபெறும் வசனங்கள், மாரிக்கும் அவள் அண்ணனுக்கும் நடக்கும் முறையும், மாரியின் அம்மாவுக்கும் அவர்களின் அண்ணனுக்கும் நடக்கும் வசனம் (ஆரம்பகட்டத்திலும் - குடுகுடுக்குப்பைக்காரனை விரட்டசொல்வதும், வயதானவர்களானதும் - சாபம்விடுவதும்) காட்டப்படும் இயல்பு, வித்தியாசம்.. அப்படியே கண்முன் நடந்த எத்தனையே விஷயங்களை நியாபகப்படுத்தியது.

புது கிளாசில் மாணவர்களின் அதிகபட்சக்கனவும், மாணவிகளின் குறைந்தபட்ச கனவின்மையும், மெலிதாய் வந்து போவது பலருக்கு சிரிப்பாயிருந்திருக்கலாம், ஆனால் யோசிக்கையில் இப்படித்தானே இருந்திருக்கிறோம், இன்னும் இப்படித்தானே இருக்கு என்று நினைக்கையில் என்னமோபோலிருந்தது. அங்கு ஆரம்பிக்கும் மாரியின் அந்த வெள்ளந்திதனமான, கள்ளமில்லாத அன்பு படமெங்கும் விரவிக்கிடக்கின்றது, நம் மனமெங்கும் நிறைந்துகொள்கிறது. படுக்கையில் , ஆமா மோண்டேன் , கோயில்ல சாமிகிட்டயும் சொல்லிக்கோனு தைரியமாய் சொல்பவள், அழுவதென்று கவிதையாய் நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கும் தருணம், எத்தனை முறை நாமும் இப்படி பிடித்தமானவர்கள் முன் விளையாட்டுக்குக்கூட அவமானப்படுவதை கண்டு எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்போம்.

பருத்திவீரனில் டக்ளஸ் அண்ணனென்றால் இங்கெ ஒரு அலோ.. இறுதியில் வரும் ஒரு முக்கியமான justification-க்கும் இந்த பாத்திரம் பயன்படுத்தப்படும்போது, படத்தில் எதுவுமே தேவையில்லாமல் இல்லை என்பதை உணர்ந்து, சிறுகதையையும், அதை திரைக்கதையில் பிசராமல் கொண்டுவந்தவரின் உழைப்பும் அட்டகாசம்.

அந்த முதலாளியின் பாத்திரமும், வசன உச்சரிப்பில் ஆரம்பித்து எல்லாவகையிலும் (தங்கராசை பார்க்கும்பொழுது அப்பா சொன்னாரு என சொல்லும் சின்ன வசனத்திலேயும் அட்டகாசம்) பார்த்த மனிதர்களையே நினைவுபடுத்தும் மனசில் தங்கிய இன்னொரு சின்ன கதாபாத்திரம்.

நினைவிலிருக்கும் போன் நம்பர் ஒரு சின்ன க்ளிஷே ஆனாலும் நல்ல கலகல :-) , அடுத்து அந்த தோசை முத்தம் :-)))))))))))))) வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் :-)))))))

உயரம் பார்ப்பதும், மொந்த செருப்பிலும் எம்பி எம்பி உயரத்தில் திருப்திபட்டுக்கொள்வதும் :-))) , அந்த போர்மென் கதாபாத்திரமும் பச்சக்.. (கண்ணாடியில்லாமல் கண் தெரியாமலிருப்பது வழக்கமான கதாநாயகியின் மதிப்பைக்குறைக்காத செயல் எனினும்)
கள்ளிப்பழம் சிதறிப்போகும் கனவை குறிப்பால் காட்டும் காட்சியாயிருக்கலாம், ஆனால் மாரியின் குணத்தை காட்டும் அந்த காட்சியை மறக்கவே முடியாது, மாரியையும் மறக்கவே முடியாது :-) , இப்படி அன்பை பொழியும் நபர்களை பார்பதும் சரி, வாழ்வின் அங்கமாய் கொள்வதும் சரி, எளிதில் வாய்த்துவிடுவதில்லை.

ஒவ்வொரு சமயமும் இன்னாரு மகனா நீயி, இன்னாரு மக போல இருக்காளே என்ற சின்ன சின்ன வசனங்கள் கூட.. miss பண்ணும் எத்தனையோ பெயர் தெரியாத சுற்றுப்புறத்தவர்கள் கொண்ட விழாக்களை நியாபகப்படுத்திக்கொண்டிருந்தது.

நல்லவேளை, பட்டணத்து தோழி காதலை சொல்லவில்லை, தோழியாகவே விட்டுருப்பது இயல்பாகவே இருந்தது.

900 ரூபாய்க்கு விற்க்கப்படும் கறுப்பி கூட படத்தின் முக்கியமான கதாபாத்திரம், அதுவும் முடிவை எளிதாய் நம்முன் வைக்க உதவும் ஒரு கதாபாத்திரமாயிருப்பது அட்டகாசம்.  அதே போல் மாரியின் கணவனும் ப்ளாஷ்பேக் நினைவுகளில் அவர்களிடையே உலாவுவதும் சொல்லும் நிஜங்கள் பல :-)

கருப்பசாமியிலிருந்து பெருமாளுக்கு மாறுவது நுண்ணரசியல் விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம் ஆனால் கோவிந்தா கோவிந்தாவென ஒலிக்கும் அந்த குரல் செம டைமிங் :-))))))))))) , அதோட சேர்ந்து “தங்கராசு வேணும்”-னு மாரி கேட்கும்போது நம்மை அறியாமல் மனமெங்கும் பொங்க்கும் ஒரு மகிழ்சிக்கு அந்த கதாபாத்திரத்துக்கான நம் மகிழ்ச்சி மட்டும்தான் என வெறுமென ஒதுக்கி விடமுடியுமா ? ;-)

சட்டென்ற கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வதும், சாகாமல் வெறுமென வாழ்வதுமட்டுமின்றி சந்தோஷமாய் வாழப்போவதற்கான காரணத்தை மாரி சொல்லும்போது, அதுவே இறுதியில் முடியும் ப்ரேமில் வரும் மாரியின் ரியாக்‌ஷனை நெஞ்சை பிசையும் சோகமாய் மாற்றுவது, அழகிக்குபின்னும், காதலுக்குபின்னும் வரும் கனத்த சோகத்தை கொண்டு இதுவரை படமெங்கும் சின்னசின்னதாய் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவர்களை அசைத்துவிடுகின்றது.

படத்தின் முடிவைப்பற்றி எத்தனையோ விதமான விமர்சனங்கள் வந்துவிட்டன, அத்தனையும் அவரவரின் பார்வை, சரியென்றும், தவறென்றும் ஒன்றுமில்லை, ஆனால் இந்த படத்தை இத்தனை ஆழமாய் பதியவைத்தது எதுவென யோசித்துக்கொண்டிருந்தேன்...

அழகி, ஆட்டோகிராப் போன்ற திருமணமான ஆண்களின் காதல் நினைவுகளை, நினைவுகள் என்று கவுரமாய் பெயரிடும் முறை, இதே நினைவுகள் பெண்களின் வழியே வரும்போது, அதிர்ந்து போகும் மாரியின் அம்மாவிலிருந்த்து, ”இன்னுமா நியாபகம் வைச்சிருக்க--” எனக்கேட்கும் தோழியின் குரலில் இருக்கும் தொனியில்வரை, வேறு வகையில்தான் நிஜ வாழ்க்கையில் classify செய்யப்படுகின்றது.

ஆனால் படம் முடிந்ததும் “மாரி” அப்பாவி சிறுமியிலிருந்து மிக உயர்ந்த கதாபாத்திரமாய் மாறிய்போவதை அந்த பனைமரத்தின் கீழ்வரும் காமிரா கோணத்திலிருந்து காமிப்பதில் மனம் எளிதாய் வேறு விவாதங்களின்றி ஒத்துக்கொள்கின்றது.

சாதரணமாய் இத்தகைய நிகழ்வுகளை நண்பர்களிடையேயான தண்ணிபார்ட்டியில் ஒரு பேச்சுக்கூட தவறாய் நினைக்கமுடியும் மனம், கொஞ்சம் கூட மாரியை பற்றிய அபிப்பிரயாத்தை களங்கப்படுத்த முடியாதே கதையின் பலம், கதாபாத்திரங்களின் வெற்றி.

ச.தமிழ்ச்செல்வன், சசி, ஷ்ரீகாந்த், பார்வதி, பெயர் தெரியாமல் படமெங்கும் பரவிகிடக்கும் அத்தனை கதாபாத்திரங்கள், காமிரா, வசனம், தயாரிப்பாளர்கள் என அத்தனைபேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

It made my weekend.

அவ்வளவு சந்தோஷமாய் துள்ளித்திரியும் அந்த சூ..சூ... மாரி பாடலே இறுதியில் மனதை அறுக்கும் வரிகளாய் வரும்போது கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒன்றை நம் மனது திட்டித்தீர்ப்பதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.





சேர்த்து வெச்ச நெனவெல்லாம் நெருஞ்சிமுள்ளா அறுக்குது .. சூ.. சூ... மாரி...

27 மறுமொழிகள்:

குடுகுடுப்பை சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 9:07:00 AM

நானும் நேற்றிரவுதான் பார்த்தேன். அடுத்த வாரமும் பார்ப்பேன். மிக அருமையாக எடுக்கப்பட்ட படம்.

பாபு சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 10:55:00 AM

எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஆளை எப்படி இவ்வளவு அருமையாக
தேர்வு செய்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது'

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 11:13:00 AM

@குடுகுடுப்பை:
ஓ நீங்களுமா சூப்பர்.. நானும் அதையே நெனச்சிருந்தேன் அடுத்தவாரம் மறுபடியும் பார்க்கனும்னு :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 11:14:00 AM

@பாபு:
அமா பாபு, எல்லாருமே சரியா பொருந்தியிருந்தாங்க உருவம், நடிப்பு, வசனம் எல்லாத்துலயும்..

ஆயில்யன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 1:17:00 PM

படம் பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே ஆர்வத்தை கொண்டு வந்து விட்டிருக்கிறது :)

உங்களோட டீடெயில்டு விமர்சனம் படம் பார்த்துப்புடணும்ன்னு நினைக்க வைக்கிது!

ச்சூ ச்சூ மாரி இந்த விடுமுறையில் ரொம்ப புடிச்ச ஃபேவரைட் பாட்டாகி போயிடுச்சு :)))

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 8:02:00 PM

@ஆயில்யன்:
வர்றான் வர்றான் பூச்சாண்டி-க்கு அப்புறம் பெரியவுங்களுக்கும் பிடிச்சுபோன குழந்தைங்க பாட்டுன்னு நெனைக்குறேன் :-)

பெயரில்லா சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 8:57:00 PM

உண்மைதான் யாத்ரீகன்.ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் நன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்(ஸ்ரீகாந்த் தேர்வு மட்டும் எனக்கு சரியாய் படவில்லை.)

தமிழிலில் வந்த மிக நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

திஸ்கி : யாவரும் நலம் பார்த்தாச்சா?! லாஜிக் கொஞ்சம் உதைத்தாலும் நல்ல திரைக்கதை, பாருங்க...

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், மார்ச் 16, 2009 10:15:00 PM

@பிரியன்:
நேத்து தான் பார்த்து முடிச்சேன் அதுவம் நல்லா இருந்துச்சு.. தியேட்டர் -ல பார்க்க முடியலைனு நெனச்ச படங்கள்ல ஒண்ணு.. வெண்ணிலா கபடி குழு, நான் கடவுள், யாவரும் நலம் இப்போ பூ... ரொம்ப ரிஸ்க் எடுக்காம (வில்லு, பெருமாள், தீ இல்லாம.. ) தேர்ந்தெடுத்து பார்க்குறேன்...

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது… @ வியாழன், மார்ச் 19, 2009 11:51:00 AM

உங்களுக்கு பூ பிடிச்சா கண்டிப்பா The Road Home சீனப் படம் ரொம்ப பிடிக்கணும். பார்த்திருக்கீங்களா? பூ திரையாக்கத்தில் The Road Homeன் பாதிப்பு நிறைய தெரியும். பூ படத்தில் பெயர் போடும் போது The Road Homeன் இயக்குநர் zhang yimouவுக்கு நன்றி கூட போடுறாங்க !!

முடிந்தால் என்னுடைய வலைத்தளத்தில் The Road Home பதிவேற்றப் பார்க்கிறேன்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, மார்ச் 20, 2009 6:22:00 AM

@ரவி:
ஓ அப்படியா.. கட்டாயம் பார்க்குறேன்.. அதானா zhan yimou-னு பெயர் வந்தது.. நான் என்னடானு யோசிச்சிட்டு இருந்தேன்.. உங்க கலெக்‌ஷன் -ல தான் “The Way Home" மற்றும் “March of the Penguins" பார்த்தேன்.. உங்களுக்கு நன்றிகள் பல ரவி :-)

சாரதி சொன்னது… @ சனி, மார்ச் 21, 2009 9:09:00 PM

வணக்கம் நண்பரே...
மிக நல்ல பதிவு...

நீங்கள் கேட்ட sms சமாச்சாரம்...
அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.. மிக எளிதாக செய்யலாம்...
www.way2sms.com ல் நுழைந்து பாருங்கள்...

உங்கள் வலைப்பூ மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்....

Muruganandan M.K. சொன்னது… @ வெள்ளி, ஏப்ரல் 03, 2009 3:55:00 PM

அண்மையில் மிக நல்ல படங்களில் இதுவும் ஒன்று.
ச்சூ ச்சூ மாரி இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரவிசங்கர் எழுதிய The Road Home சீனப் படம் புதிய செய்தி.

sarathy சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 14, 2009 11:45:00 PM

மார்ச் 15 போய் ஏப்ரல் 15 வந்துட்டு தல... இன்னும் அடுத்த பதிவ காணோம்.....

மந்திரன் சொன்னது… @ வியாழன், ஏப்ரல் 16, 2009 1:21:00 PM

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ....
மிக நுண்ணிய விமர்சனம் ...
நீங்கள் உங்கள் வலைப்பூவில் Follower Widget சேர்க்கலாமே ..
அது என்னை போன்றோர் அடிக்கடி வந்து படிக்க உதவி புரியும்

ஆர்வா சொன்னது… @ வெள்ளி, மே 08, 2009 3:42:00 PM

மிக அருமையாக விமர்சம் செய்திருக்கிறீர்கள்.அற்புதம்

Vetirmagal சொன்னது… @ வெள்ளி, ஜூன் 12, 2009 11:20:00 PM

Hi,

Stumbled into your blog, enjoyed reading. So much more to read. The style, the honest tone and the thoughtful words.. amazing.

Felt good reading your thoughts. somewhat like reading jeyamohan?..

Trying to figure out.

Congratulaions.

Muruganandan M.K. சொன்னது… @ சனி, ஜூன் 13, 2009 8:06:00 AM

மிகவும் இரசித்த படங்களில் ஒன்று. மிகவும் அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். அருமையான பதிவு

பா.ராஜாராம் சொன்னது… @ புதன், ஜூன் 17, 2009 4:30:00 AM

முன்பே பூ படம் பார்த்திருந்தேன் யாத்ரீகன். வெகு நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து பார்த்த படம் அது!உங்கள் விமர்சனத்தில் மீண்டும் ஒரு முறை படம் பார்த்த நிறைவு எனக்கு!முனை உடையாது விமர்சனத்தை செதுக்கி இருந்தீர்கள். நாம் எழுத நினைப்பதை வேறு யாராவது எழுதுவது பேரானந்தம் யாத்ரீகன்! வாழ்த்துக்கள் யாத்ரீகன்!....

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது… @ புதன், ஜூன் 24, 2009 2:03:00 AM

ரொம்ப பாதித்து விட்டதோ? நல்லவை பாதிப்பதும் நன்மைக்கே!!

Maayaa சொன்னது… @ திங்கள், ஜூன் 29, 2009 4:52:00 AM

yaathrigan..
epdi irukeenga..romba naalukrpom varen..blog pakkam..nenga poo pathi vimarsanam poduveengannu nenakave illa..neenga sonna almost anaithum naanum feel pannen.. oru solla mudiyaadha ganam manasula..loved it like anything.thaniya ukkandhu aazhudhen..en? nnu kooda theriyala...paathu pala naal aanaalum, ippo edhavadhu padam irukaannu kekaravangalukku idha paarunnu solren..avlo superb!
indha post pottadhukku paaratukkal

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது… @ சனி, ஜூலை 18, 2009 10:56:00 AM

நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் எனது மருமகளுக்கு சூ சூ மாரி பாட்டு நிரம்பப் பிடிக்கும். அவளுக்குப் போட்டுக்காட்டி போட்டுக்காட்டியே கை ஓய்ந்துவிட்டது.

நேசமித்ரன் சொன்னது… @ சனி, ஜூலை 25, 2009 12:19:00 AM

A good review kinders a feel for
another screening

அன்புடன் அருணா சொன்னது… @ புதன், ஜூலை 29, 2009 4:05:00 PM

என்னால இப்போதன் படிக்கமுடிந்தது....அருமையாக விமரிசித்திருக்கிறீர்கள்!

Sanjai Gandhi சொன்னது… @ வியாழன், ஆகஸ்ட் 20, 2009 9:35:00 PM

படம் ஓரளவு நல்லா தான் இருந்தது. சமீபத்தில் டிவியில் பார்த்தேன்.

பதிவு நல்ல அலசல்.

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, செப்டம்பர் 20, 2009 4:14:00 PM

one of people acted natually identified in following blog:you may like it read. good evaluation! atb
http://mathavaraj.blogspot.com/2009/05/blog-post_09.html

பின்னோக்கி சொன்னது… @ திங்கள், அக்டோபர் 05, 2009 10:47:00 AM

ரொம்ப அனுபவித்து எழுதியிருக்குறீர்கள். மறு முறை இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது.

கதாநாயகி சில இடங்களில், ரொம்ப வெட்கப்படுவதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி நடிப்பு அருமை. கதாநாயகியின் தோழியாக வருபவர் அவ்வளவு இயல்பான நடிப்பு.

kamalraj சொன்னது… @ செவ்வாய், மார்ச் 29, 2011 1:08:00 AM

poo is very good move i see the this movie in 42 times i am vary appset in this movie thanku for sasi vary good job and fisert tank in werter tamil selvanan

கருத்துரையிடுக