யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா துர்கா பூஜா - 1

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 06, 2006
துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேயன் (நம்மூர் முருகனைத்தான் இப்படி கூப்பிடுறாங்க, வேலுக்கு பதில் வில் ஆயுதம்.. வேல் தமிழர் ஆயுதமாச்சே ;-) சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு பந்தல்களிலும் சிலைகள் மட்டுமின்றி, பந்தல்களின் அமைப்பும் அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட தீம் நோக்கி இருக்கும்.

இரவு முழுவதும் பெங்காலிகள் தங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு பந்தல் பந்தலாக சென்று வழிபடுவது மட்டுமின்றி, போகும் வழியெங்கும் குதூகலத்துடன் விளையாடுவதும், விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்வதும் என, ஒரு ஆன்மீக திருவிழாவாய் தெரியவில்லை :-)

துர்கா பூஜையின் போதுதான் அவர்கள் அனைவரும் குளித்து புதுத்துணி அணிவார்கள் என்றொரு வதந்தியும் உண்டு ;-)

இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை.... என்று சந்தேகம் வருகின்றது..

எது எப்படியோ, கொல்கத்தாவே விழாக்கோலம் பூணும் நேரமிது, மக்கள் கூட்டத்தையும், உற்சாகமான ஒரு சூழ்நிலையையும் விரும்புவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடமும் நேரமும் இது.


பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம், இதில் முதல் பரிசு பெறுவதென்பது ஒரு பெரும் பெருமை.


மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.


இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)

இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)



பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".

10 மறுமொழிகள்:

கைப்புள்ள சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 11:34:00 AM

நல்ல படங்கள் யாத்ரீகன். படம் பிடித்தது நீங்களா?

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 12:02:00 PM

படங்கள் முதல்ல போட்டுட்டு, சரி இந்த முறையாவது கொஞ்சம் விளக்கம் குடுபோம்னு மாத்தீட்டு வர்றதுக்குள்ளே வந்துட்டீங்க.. :-) நன்றி...ஆமாம் கைப்புள்ள, இப்போ ஒரிசாவில இருக்கேன், 4 நாள் விடுமுறை வந்தது, கல்கத்தாவில் இருந்த நாட்களின் நினைவுகளை கிளறிப்பார்ப்பதர்கும், பூஜாவின் போது கல்காத்தாவை சுற்றுவது தனி ஆனந்தம், அதற்காகவே இந்த விடுமுறையில் அங்கே போயிருந்தேன். அப்போ எடுத்த படங்கள், எல்லாம் இரவில் எடுத்தவை, பலவற்றில் பூஜை நடந்து கொண்டிருக்கும் போது எடுத்ததால் புகை மூட்டம் இருக்கும் :-(

Sud Gopal சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 12:09:00 PM

படங்கள் எல்லாம் அட்டகாசமா வந்திருக்கு.

--- பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம்,---

என்.டீ.டிவியில் கூட இந்த மேட்டரைக் கவர் செஞ்சாங்க(ஹி..ஹி..கவரேஜுக்கு அங்கிதா வரலை அன்னைக்கு.யாரோ மொனுதீபா பட்டாச்சர்யா தான்)

வாழ்க்கையைக் கொண்டாட்டத்துடன் வாழ்வதை இலட்சியமாக வைத்து வாழும் இம்மக்களைப் பார்த்தாவது, மூன்றாம் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதிலேயே வாழ்வின் பெரும் பங்கினைக் கழிக்கும் இங்கத்த ஆளுங்க திருந்த மாட்டாங்களான்னு ஒரு ஆதங்கம் வருது.

அங்கத்த சாப்பாட்டு ஐட்டங்கள் பத்தியும் கொஞ்சம் எழுதறது...

துளசி கோபால் சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 12:36:00 PM

நல்ல விவரமான பதிவு.

நன்றிங்க.

மஹாராஷ்ட்ராவுலே கணபதிக்கு இதே போலத்தான் எல்லாம்.
காளிக்கு பதிலா கணேஷ்

அம்மாவுக்கு பதிலா புள்ளை:-)

படங்கள் அருமை.

கைப்புள்ள சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 12:48:00 PM

குறிப்புகளுடன் புகைப்படங்களைப் பார்த்தது இன்னும் சுவாரசியமா இருந்துச்சு. நீங்க சொல்ற இந்த பந்தல்ங்கிற சொல்லை இங்கெல்லாம் "பண்டால்"னு சொல்லறாங்க. தமிழ்லேருந்து தான் ஒரு வேளை போயிருக்குமோ? ஆங்கிலத்துல கூட அது ஒரு accepted சொல் ஆயிடுச்சு.

உண்மையிலேயே ரொம்ப வண்ணமயமான பண்டிகை தான். சிலைகளை வடிவமைத்தை கைவினைஞர்களின் திறமையையும் பாராட்டியே தீர வேண்டும்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 1:04:00 PM

@சுதர்சன்:
பாராட்டுக்கு ரொம்ப நன்றீங்கண்ணா.. டீவி பொட்டீல பந்தலை பாருங்கனா எத்தை பாத்துகிட்டு இருந்தீங்க.. (அது சரி பந்தலுக்கு வந்த கூட்டத்தை கவர் பண்ணாங்களா.. கண்ணுக்கு விருந்துதான் போங்க :-D

ஹீம்... நீங்க சொல்றது ஒரு விதத்துல சரிதான், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்ற ரேஞ்சுக்கு, இருப்பதே போதும் இதை வைச்சு சந்தோஷமா இருப்போம்னு மன நிலை.. ஆனால் சில நேரங்கள்ல்ல அதுவே ரொம்ப அதிகமா ஆகிடும், அதாவது என்னடா வாழ்க்கையில ஒரு மாற்றமே இல்லாம அப்படியே போய்கிட்டு இருக்குதே இவுங்களுக்குனு கடுப்பாகிடும்...

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 1:17:00 PM

@துளசி:
அதேதாங்க... ஆனா அங்க கணபதிக்கு சதுர்த்து அன்னிக்கு மட்டும்தான் விசேஷம், இங்கே காளி எப்பவுமே டிர்பில டாப் :-) .. நன்றீங்க...

@கைப்பு:
ஆமாம் கைப்பு.. நானும் அதையே யோசிச்சிருக்கேன்... இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா குறைந்தது 5/6 மாதங்கள் முன்னாடியே எல்லாமே ஆரம்பிச்சு.. கடைசியில அத்தனை உழைப்பும் கலையும் கடல்ல கரையுறது.. விசர்ஜன் அப்போ பார்க்க கஷ்டமா இருக்கும்... நம்மூர்ல சும்மா விநாயகர் சிலையை செய்றாங்களே தவிர.. இத்தனை கலைநயம் கிடையாது.. பெங்காலிகளுக்கு கலை நயம் ஜாஸ்தினு ஒரு சில நேரம் ஒத்துகிட்டுதான் தீரணும்..

@சுதர்சன்:
சாப்பாடுதானே.. எழுதனும்னு ஆசையா இருக்கு.. முயற்சி பண்றேன்... (ஆனா செம கட்டு கட்டியாச்சு... கல்கத்தாவில.. முக்கியமா.. மிஷ்டி..)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 1:27:00 PM

மன்னிச்சிருங்க ஆப்பு... உங்க மறுமொழியிலிருந்த லிங்கை எடுத்தமைக்கு...

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, அக்டோபர் 06, 2006 1:28:00 PM

அருமையான பதிவு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

வடுவூர் குமார் சொன்னது… @ திங்கள், அக்டோபர் 09, 2006 11:04:00 AM

படங்கள் அருமை.
கலைஞனின் கற்பனைத்திறன் & கை வண்ணம் வியக்க வைக்கிறது.

கருத்துரையிடுக