யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on வியாழன், டிசம்பர் 20, 2007
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவை தான். நிரந்தரம் என்னும் நிலையையே அசோகரியமாக கருதும் பறவை. அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.

நன்றி: (நல்ல) சிவம், மதன்

கற்களின் காவியம் - எல்லோரா - 4

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...

இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..

உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்

சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.

சிலையின் விபரம்:
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?

இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)

எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..

எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..

இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .



இந்த படத்தில் , ஷக்தியின் ஆபரணம் ஒன்றான ஒரு ருத்ராட்ச மாலையை கவனியுங்கள், ஒவ்வொரு ருத்ராட்ச்சத்தையும் சிறிதும் பிசிறில்லாத உருண்டைகளாய் , மொத்த மாலையும் பிறண்டு இருப்பதையும் அச்சு அசலாய் வடித்திருக்கிறார்கள் ..

கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்

எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..


கூர்ந்து கவனியுங்கள், எல்லோரும் விளையாட்டில் மும்முரமாய் இருக்கையில், சிறு குழந்தைகளாய் உருவகப்பட்டிருக்கும் ஷக்த்தியின் பூதகணங்கள் , தங்கள் பக்க வெற்றியை கொண்டாட , சிவனின் நந்தியை சீண்டுவதை பார்க்கலாம் ..

நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,

முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..

மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...

கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..

ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..



மேலே இருக்கும் கடைசி படம், நாங்கள் குகையினுள் இருக்கும்போது பார்க்கும் ஒரு கோணம் .. சிலைகளின் உயரம் தான் உங்களுக்கு தெரியுமே, குகையின் உயரத்தையும், அதிலிருக்கும் தூண்களின் உயரத்தையும் கண்பிக்கவே இந்த புகைப்படம் ..

இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..

கற்களின் காவியம் - எல்லோரா - 3

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
எல்லோராவின் குகைகளில் , இந்த குகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் கருதுகிறேன் .. காரணம்.. நான் இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கும் சிலைகளின் அளவை பார்த்தீர்கள் , அப்படியானால் இவை செதுக்கப்பட்டிருக்கும் / குடையப்பட்டிருக்கும் குகையின் அளவை கற்பனை பண்ணிப்பாருங்கள் ... இருப்பதிலேயே மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் குகை இது. இதிலிருக்கும் சிலைகளும் குகையின் உயரத்திற்கேற்ப இருப்பதால் .. மிகவும் அட்டகாசமாய் இருக்கின்றது .. உள்ளே நுழையும் போது நாம் மிகச்சிறியதாய் தோனுகின்றோம்

எல்லோரவில் செதுக்கப்பட்டிருக்கும் கற்களான காவியங்களை பகிர்ந்து கொள்ளும் தொடரின் அடுத்த பகுதி இது ..

முதல் பகுதி இங்கே

இரண்டாவது பகுதி இங்கே

சென்ற முறை வைத்த சஸ்பென்ஸ் , நான் எந்த ஊர் என தெரிந்தவர்களுக்கு ஒன்றுமில்லாததாக இருக்கும் :-) .. குறைந்த பட்சம் புதியதாய் இந்த பதிவிற்கு வருபவர்களுக்கு .. நச்சென்ற கதைகளுக்கும் , தொடர் கதைகளுக்கும் இடையில் கொஞ்சமாவது சுவாரசியம் அளிக்க வேண்டுமல்லவா .. ;-)

இம்முறை பார்க்கப்போவது "சிவன் - ஷக்தி திருமண வைபவம"

பார்க்கப்போவதற்கு முன் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி , இந்து மத திருமணங்களில் பெண் ஆணுக்கு எந்த பக்கம் நிற்பார்கள் ? (மற்ற மத திருமணங்களில் எப்படி ?) இதை நான் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுத்து கவனித்ததில்லை .. இந்த சிலைகளை கவனிக்கும் வரை...


சூழல் :
சிவன் - ஷக்தி திருமணம் , விஷ்ணு - பிரம்மா முன்னிலையில் , அவரவர் பூதகணங்கள் புடைசூழ ...

சிலையின் விபரங்கள்:

சிவனும் ஷக்தியும் கைகோர்த்து திருமண மேடையில் இருக்கும் நிகழ்வு இது..

கிழே பிரம்மா யாகம் வளர்த்துக்கொண்டிருப்பதும் , இடது புறம் விஷ்ணு இருப்பதும் (விஷ்ணு என்று கையிலிருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் :-) தெரிகின்றதா ?

மேலே முதல் வரிசையில் தேவர்களும், அதற்கு அடுத்த வரிசையில் யக்ஷர்களும் (யானையின் மீது இருப்பவர்கள்) .. மலர் தூவி வாழ்த்த ..

மணமக்களின் நகைகளும், மணமகளின் நாணமும் மிக அருமையாய் வந்திருக்கும் சிலை ..

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விரல்களும்,மூக்கும், கண்களும் மிக மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றது ..

சிலையின் மொத்த பிரமாண்டத்தை காண்பிக்கும் வகையில் எடுத்த புகைப்படம் ஒன்று கிழே

இந்த சிலையில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று உள்ளது.. முன்பு பார்த்த சிலைகளின் Detail பார்த்தோமே அது தவிர வேறு எதாவது உங்கள் கண்களுக்கு தென்படுகின்றதா ?

இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?



இன்னும் இல்லையெனில், கிழே உள்ள புகைப்படத்தை பாருங்கள், மேலே உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள் ..


இப்பொழுது வித்தியாசம் தெரிகின்றதா ? .. எந்த கற்சிலைகளை பார்த்தாலும் எனக்கு எழும் முதல் கேள்வி.. இதில் தவறு நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று .. தவறு என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது அங்க ஹீனமான ஒரு சிலையைத்தான் ,

அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..

இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..



மேலே உள்ள இரு புகைப்படங்களில் இருக்கும் இந்த சிலையில் , ஷக்தியின் நாணத்தை காண்பிக்க , உடல் வளைத்து , தலை சாய்த்து, கால் கட்டை விரலால் மண்ணைக்கீறும் வகையில் செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..

யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(

நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....

அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)



கற்களின் காவியம் - எல்லோரா - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, டிசம்பர் 09, 2007
மேலும் சில எல்லோரவின் மிக அழகான சிலைகளை பற்றிய படங்களும் குறிப்புகளையும் பதிவதாக சொல்லியிருந்தேன், இதோ அதன் தொடர்ச்சி ....

பகுதி ஒன்று - 1 இங்கே

இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும் குறைவில்லாதது. சென்ற சிலையில் இருந்த சூழலில் மூன்றே கதாபாத்திரங்கள் தான், ஆனால் இங்கே பலர் இருப்பதால், நிகழ்வை காட்ட வந்த கலைஞனுக்கு நுணுக்கமாய் பார்த்து பார்த்து வடிக்க எத்தனையோ விடய௩கள் இருக்கின்றன ... நாங்கள் கவனித்தவற்றை பார்ப்போம்....

சூழல்:
சிவனும், ஷக்தியும் கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருவரின் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, இராவணன் சிவனின் மேல் கொண்ட அதீத பக்தியால் சிவனை கயிலை மலையோடு இலங்கை கொண்டு செல்ல முயற்சிக்கிறான். ஷக்தி பயப்பட, சிவன் தன் ஒர்றைக்காலால் மலையை அழுத்த இராவணனால் பாரத்தை தாங்க இயலாமல் தவிக்கின்றான்.

விபரங்கள்:
மேலிருந்து வருவோம் ...

இராவணன் கயிலையை அசைத்தும், பயந்த சில சிவகணங்கள் சிவனை வணங்குவதும், பலர் கீழே இராவணனுக்கு நிகழ்ந்திருப்பதை கண்டு வியந்து சிரிப்பதும் என சிலையில் மேலே உள்ளன ..

சில பூதகணங்கள் நடக்கும் செயலை கண்டு வியந்து போய் நெஞ்சில் கைவைத்து வியப்பை தெரிவிப்பதும் ...

ஷக்தி பயன்திருப்பதும், அவரை அமைதிப்படுத்த சிவன் ஷக்த்தியை அணைத்துக்கொண்டு தன் பக்கம் இழுத்துக்கொள்வதும்..

சிவனின் வலது கால் கிழே அழுத்தியிருப்பதை போல் தோற்றம் கொடுப்பதும்

பாரம் தாங்காத இராவணன் முகத்தில் உள்ள வலி தத்ரூபமாய் இருந்தது, மேலும் கூடின எடையை தாங்க இயலாமல் அவன் கழுத்து திரும்பி முகம் முதுகுப்பக்கம் வந்திருப்பதையும் காணலாம்

ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..



ராவணனின் இடதும் வலதும் உள்ளது ஷக்தியின் பூதகணங்கள்..

சில பூதகணங்கள் ராவணனின் நிலை கண்டு எள்ளி நகையாடுவதும் ॥ குறிப்பாய் ராவணனின் நீட்டியிருக்கும் வலது காலின் அருகில் இருக்கும் பூதகனத்தின் முகத்திலும் , கைக்குரிப்பிலும், முகம் சுழித்து நாக்கை துருத்தி கிண்டல் பண்ணுவது தெளிவாய் தெரியுது .....

அந்த பூதகனத்திற்கு மேல் உள்ளதுகள் ராவணனின் மேல் கற்களை வீசுவதும்,

அதற்கு பின் புறம் இருப்பவன் கையில் பாம்பை வைத்து ராவணனை பயமுறுத்திவிலக்க முயற்சிப்பதும் (இதை இரண்டாவது படத்தில் காணலாம்)


Shivas poothaganas laughing and teasing at raavana, originally uploaded by யாத்திரீகன்

ராவணனின் இடது புறமுள்ள பூதகணங்களில் ஒன்று, திரும்பிக்கொண்டு , தன் ஆடையை விலக்கி , பின்புறத்தை காட்டி அவனை அவமானப்படுத்துகின்றது॥ :-)

அதற்கு அடுத்து உள்ளது கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு ராவணனை அடிக்க, அதற்கு பின்புறமுள்ளதுகள் சங்கு, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உரக்க வாசித்து ராவணனை பயமுறுத்த முயற்சிக்கின்றன ...


சிலையின் உயரம், ருத்ர தாண்டவத்தின் உயரத்தை போலவே பிரமாண்டத்துக்கு குறைச்சலில்லை

இப்படி அசந்து போகச்செய்த படைப்புகளின் வரிசையில் ஒன்று இந்த சிலை ....

அடுத்து பார்க்க போவது, எங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு நிகழ்வுக்கான சிலை :-)

கற்களின் காவியம் - எல்லோரா - 1

Published by யாத்ரீகன் under , , , , , on சனி, டிசம்பர் 08, 2007
எல்லோரா குகைச்சிற்பங்கள் ! நம்மில் பலரால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படிக்கப்பட்டு மறக்கப்பட்ட இடம். அசோகர் மரம் நட்டார் என்பதோடு, அஜந்தா எல்லோரா சிற்பங்களுக்கு புகழ் போனது என படித்து மட்டும் கண்ணில் காணாமல், அதன் அழகு பலருக்கு தெரியாமல் போன இடம்.

சில மாதங்களுக்கு முன், அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு சென்ற பயணத்தின்போது எடுத்த படங்கள், இங்கே செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்காகவும், இந்தியாவிலிருந்தே இங்கே போகாமலிருப்பவர்களுக்கும் இந்த பதிவுத்தொடர்.....

(டெம்ப்லெட்-ஐ) வார்புருவை சரி படுத்தி மறுபடியும் தமிழ்மணத்தோடு இணைய உதவி புரிந்த சி.வி.ஆர்-க்கு நன்றி..


இந்த படத்திலிருக்கும் சிவனின் ருத்ர தாண்டவத்தை பற்றியே ஒரு பதிவுத்தொடர் எழுதலாம், அந்த அளவுக்கு என் உள்ளம் கொள்ளை கொண்ட சிலை. மிகவும் பிரமாண்டமாய், தத்ரூபமாய், உயிருடன் எழுந்து வந்துவிடுமோ என ஒரு நொடியாவது நினைக்க வைத்த சிலை. இத்தனை பிரமாண்டத்திலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும், நுணுக்கமாக கவனித்து கவனித்து செதுக்கியிருக்கும் சிலை. வழக்கமான நகைகள் மட்டுமின்றி, அந்த காட்சியின் உணர்வுகள், அந்த காட்சியில் இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் பங்கும்.. என பொன்னியின் செல்வனின் வரும் கல்கியின் வர்ணனை போன்று, மிக மிக அனுபவித்து, விலாவரியாய் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.

இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..

சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.

அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.

தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.

வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,

சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..

சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..

சிவனின் புலித்தோலாடையும்,

எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥



இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....


ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 5

Published by யாத்ரீகன் under , , on புதன், டிசம்பர் 05, 2007

அஜந்தா குகைகளின் ஐகானாக கருதப்படும் ஓவியம். இது இருப்பது முதல் குகையில் ஆனால் நாங்கள் கடைசி குகையிலிருந்து வந்ததால் இதை மிக கடைசி நேரத்தில் தான் காண முடிந்தது. குகைளை மூடும் தருணத்தில் விளக்குகளை அணைத்து விட்ட பொழுது எடுத்த படம். ஒரு நிமிடம் விளக்குகள் இருக்கட்டும் என எவ்வளவு கேட்டும் அணைத்து விட்டார்கள் :-(



ஜட்க்கா கதைகள் எனப்படும் புத்தர் கதைகள்இலிருந்து சில நிகழ்வுகளை படம் பிடித்திருந்த ஓவியங்கள். ஆபரணங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள், உடல் அங்கங்களின் வளைவுகள், உடல் நிறங்கள் வரையில் நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள்.


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...



ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...


மேலிருக்கும் ஓவியத்தை கூர்ந்து கவனியுங்கள், பின்னாலிருக்கும் பெண்ணின் மார்பகத்தைப்பாருங்கள், தொடையில்/முட்டியில் அமுங்கியிருகும் விதத்தை பாருங்கள்.. இத்தனை நுணுக்கமாய் யாராலும் கவனிக்க முடியாத ஒரு விஷயத்தை அந்த ஓவியன் எப்படி அருமையாய் வரைந்திருக்கின்றான் ..

நெருங்கியவர்களின் மரணம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், டிசம்பர் 04, 2007
இதுவரை கடந்து வந்த பாதையில் சந்தித்த மரணங்கள் வெகு சில. அதிலும், மிக நெருங்கிய மரணங்களை அருகிலிருந்து சந்தித்ததே இல்லை.. இது மரணத்தின் வலி அறியா வரமா, இல்லை மரத்துப்போன மனதிற்கான சாபமா என்று வகைப்படுதிப்பார்க்க முடியவில்லை.

சிறிய வயதில் தவறிய தங்கையின் மரணத்தின் நினைவு நூலிழையில் ஒட்டிக்கொண்டிருகின்றது. நானறிந்த முதல் மரணம் அது. நினைவு தெரியும் வயதில் கடந்து வந்த முதல் மரணம் அப்பாவின் அப்பாவுடயது; அதிகம் பழகியிராத மனிதர், அதனாலோ எனவோ துக்கத்தை விட அவரின் உடலை குளிப்பாட்டுகையில் மடிந்து விழுந்த கைகளையும், அதன் தலையில் எண்ணை தடவும் போது உண்டான பெயரிட முடியாத உணர்வும் தான் இன்னும் நினைவிருகின்றது.

கல்லூரி பருவம் கடக்கும் வயதில் நிகழ்ந்த ஆயாவின் (பாட்டியின்) மரணம் கொஞ்சமும் நியாபகம் இல்லாதது ஏனோ தெரியவில்லை கொஞ்சமும் உறுத்தவில்லை. இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை சார்பில் பெங்களூர் உள்ள ரெஜிமேண்டில் உள்ளிருந்து பயிலும் பயிற்சியில் இருந்திருந்தேன். மிகவும் விருப்பப்பட்டு சென்றிருந்தேன். முதலில் ஆயாவின் உடல் நிலை கருதி போகாமல் இருக்க, எனக்காகவே சரியானதை போல அதிசயத்தை போல மிகவும் நன்றாகி என்னை வழியனுப்பிவைத்து விட்டு, அங்கிருகையில் நிகழ்ந்த மரணம். அவரின் ஆசைப்படி எனக்கு தகவலே சொல்லாமல், 15 நாட்கள் சென்று திரும்புகையில், புதிதாய் அடித்திருந்த சுவரின் வண்ணமே காரணத்தை சொல்லியது. ஆயாவின் மாலையிட புகைப்படத்தை காணும்போது கூட ஏனோ கண்ணீரே வரவில்லை.

இடையில், பள்ளி உயிர் நண்பனின் மரணத்தை விட, அவன் பெற்றோரின் கண்ணீர், கதறல் கொஞ்சம் கலங்க வைத்தது. அத்தையின் சிசு ஒன்றின் மரணமும், அதன் பஞ்சு போல உடலை மண் போட்டு மூடிய தருணமும் நினைவில் அந்த ரோஜாப்பூவின் வாசத்தோடு முட்டிக்கொண்டிருகின்றது. அதன் பின், கல்லூரி நண்பன் ஒருவனின் மரணத்தில் கதறிய பெற்றோர் கண்டு பதறிய மனம்.

இம்முறை தாத்தாவின் மரணம். இதுவும் நான் அருகிலிருக்க இயலாத மரணம். 84 வயது முதுமையினால் என்பதாலேயே இம்மரணம் மற்றுமொரு மரணமாகிவிடப்போவதில்லை. ஆனாலும் ஒன்றும் செய்யவியலாத சூழ்நிலை. விதி என்று எளிதாய் காரணங்கள் தட்டிவிட இயலாது, இந்த சூழலை தேர்வு செய்தது நான் தானே.

பல நினைவுகள் மேலேலும்புகின்றன. உத்தமர், அவரை போல ஒருவர் இல்லை என்பதற்கும் மோசமானவர் என வெறுத்து தள்ளுவதற்கும் உள்ள மெல்லிய நூலிழை இடையில் ஊசலாடிக்கொண்டே வாழ்வை நகர்த்திச்சென்ற ஒரு சாதரண மனிதர்.

சிறு வயதில் அவர் கைப்பிடித்து கதை கேட்டு வளர்ந்த நாட்களே அதிகம். அவர் வாழ்வின் முதிர்ச்சியில், என் வாழ்வின் தொடக்கத்தில் , வாழ்கை முரண் பிறழ, கருத்து வேறுபாடுகள் என்பதோடு நில்லாமல் வெறுப்பு என்று வரை சென்றது. காலம் அனைத்தையும் மாற்றிச்சென்றது எனது புரிதல்கள், விருப்புகள், வெறுப்புகள் எல்லாவற்றையும் ஆனால் அவரின் என்மீதான அன்பு தவிர.

நான் காட்டிய வெறுப்பை பல மடங்குக்கு மாற்றி அன்பாக காட்டி, மிகப்பெரும் புரிதல்களை எளிதாய் புரிய வைத்தார். எல்லா மனிதரிடமும் ஒரே விதமாய் பழகும் விதத்தை அறிவுரையாய் இன்றி செயல் முறையாய் எங்களிடையே பதிய விதத்தில் இன்னும் என்னுளே தான் இருப்பார்.

தைரியமாய் இரு, கலங்கிவிடதே, நாங்கள் இருக்கின்றோம்... என கூறிசெல்லும் தந்தைக்கும், தாய்க்கும் எப்படி புரிய வைப்பேன்......

என்னவென்று எனக்கே புரியவில்லை, கண்கள் காய்ந்தே போனதாவென தெரியவில்லை, மனம் கல்லாய் போனதா என தெரியவில்லை, மீண்டு வர முடிய மரணத்தை பற்றிய புரிதலா என புரியவில்லை,

எதுவாயினும் சரி, என் பிரியமானவர்களின் மரணங்களுக்காய் ஒரு முறையேனும் ஒரு துளி கண்ணிர் வேண்டிக்கொண்டிருகின்றேன்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 19, 2007
கண்ணாடிப்பெட்டகத்தினுள் நான் வைரம் ஒன்றைப்பார்த்தேன்
வைரம் ஒன்றைப்பார்த்ததும் அவள் கண்கள் நியாபகம் வந்ததடா
வைரம் வாங்கப்பணமில்லை
இருந்தும் எனக்குப்பயமில்லை
கடைக்காரனை கொன்றுவிட்டேன்
கையில் எடுத்து வந்து விட்டேன்.....

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், அக்டோபர் 16, 2007
களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி புகைப்படபோட்டிக்கும் சேர்த்து கொஞ்ச நேரம் பட்டனி போட்டு போட்டி போட்ட அம்மணிகளுக்கும்,நாம் சமைத்ததை நாமே சாப்பிடாவிட்டால் & நாமே புகைப்படமெடுக்காவிட்டால் வேறு யார் செய்வார் என்று மனம்தளராத பேச்சிலர் உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!


PiT குழுவினர் நடத்தும் புகைப்பட போட்டி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வலைத்தளத்தில் வரும் பாடங்களை படிப்பவர்களுக்கு, களத்தில் இறங்கி படித்ததை பயன்படுத்திப்பார்க்க வாய்ப்பாய் மட்டுமின்றி, மேலும் முயற்சிகள் செய்து பார்க்க படிப்பவர்களை ஊக்கமூட்டுவதாகவே செயல்படுகின்றது.


இதுவரை வந்த புகைப்பட தலைப்புகளும் சரி, புகைப்படங்களும் சரி, தங்களிடையே இருக்கும் தொகுப்பிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதையே அதிகமாக கொண்டிருந்தது (என்னையும் சேர்த்துதான் ;-) , இதில், படித்ததை பயன்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.


இம்முறை சர்வேசன்/ஆனந்த்/சிவிர்/நாதன் அவர்களின் தேர்வுகளில் "உணவு" என்ற தினமும் நாம் காணும் காட்சி தேர்வானது. அட உணவுதானே என்றில்லாமல் அதிலும் வித்தியாசங்கள் காட்ட தேவையானதை சிவிர்-இன் பதிவு சரியான நேரத்தில் அமைந்தது, பங்கேற்பாளர்களுக்கு போட்டியின் நோக்கத்தை புரியச்செய்தது.


பழைய புகைப்படங்களை எடுத்து போடும்போதே அசத்தும் நம் மக்கள், இம்முறை கற்றதை பயன்படுத்தி அசத்தியுள்ளார்கள். சென்ற முறை போன்று அதிக அளவில் போட்டியாளர்கள் இல்லாதபோதும் படங்களின் தரம் நடுவர்களின் தேர்வை சென்ற முறை போலவே கடினமாக்கியிருந்தது.


போட்டியாளராய் மட்டுமின்றி நடுவராக பணி புரிதலும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. முக்கியமாய் முதல் பத்து படங்கள் தேர்வு செய்தபோது கவனிக்கவேண்டிய விஷயங்கள், எதில் எல்லாம் சாதரண விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதில் எல்லாமும் கவனம் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பாடம்.


போட்டிக்கான இறுதிப்படங்கள் தேர்வு செய்யும் நிலையில் இருப்பதால், கொஞ்ம் சுவாரசியத்தை உண்டாக்க, இந்த டாப் ட்வெல்வ் + ஒன் புகைப்படங்கள். (அட இல்லிங்க, இதை தேர்வு செய்யும் போது கோர்ட் சூட் போட்டு நாற்காலியெல்லாம்... அந்த கூத்தெல்லாம் இல்லீங்க..) இதில் இருக்கும் வரிசை நிலை எதையும் குறிப்பதில்லை.

ஒவ்வொரு படங்களுக்கும் கமெண்டுகளை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம், சிறிது தாமதமானதுக்கு மன்னிக்கவும் மக்களே !!!!


விரைவில் முடிவுகளை !!! அதுவரை கெஸ் செய்வது ஒரு போட்டியாக நடக்கட்டுமே... சர்வேசன் ஒரு சர்வே ? ;-)

முதல் சுற்றுக்கு தேர்வானவை













ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 4

Published by யாத்ரீகன் under , , on திங்கள், அக்டோபர் 01, 2007

















ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 3

Published by யாத்ரீகன் under , , on திங்கள், அக்டோபர் 01, 2007
அஜந்தா, பவுத்த குகைகளில் புத்தர் மற்றும் புத்தரின் வாழ்க்கைச்சம்பவங்கள்.

1. புத்தரின் மரணப்படுக்கை (?) என்று சொல்வது தவறு, புத்தர் இறுதி நிர்வாண நிலை அடைந்த தருணம்.



2. புத்தரின் பாதத்தின் வழியே அவரின் ஆன்மா மேலுலகத்திற்கு செல்வதைப்போன்று செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம், மேலே உள்ள சிற்பத்தின் தொடர்ச்சி இது, படத்தில் தோன்றுவதை விட மிகவும் நீளமான சிலை. இன்னும் கூர்ந்து நோக்கினால், மேலுலகத்தில் உள்ளவர்கள் புத்தரின் வருகையால் மகிழ்ந்திருப்பதை மேலுள்ள மற்ற சிலைகளின் முக உணர்ச்சிகளில் காணலாம்.



3. அதே தருணத்தில், பூலோகத்தில் உள்ள மக்கள், புத்தரின் பிரிவால் அழுவதைக்காணலாம்.


people weaping for budhas death, originally uploaded by யாத்திரீகன்.

4. போதிக்கும் நிலையில் உள்ள புத்தரின் அனைத்து சிலைகளிலும் காணப்பட்ட முத்திரை. விரல்களும் , முத்திரையும் சிறப்பாய் செதுக்கப்பட்டிருப்பதை காணலாம்.


Budha with Teaching Mudhra, originally uploaded by யாத்திரீகன்.


5. புத்தவிகாரங்களினுள் காணப்படும் புத்தரின் சிலை.அங்கிருக்கும் ஓவியங்களுக்கு பாதிப்பு வராதவகையில் சிறப்பான விதத்தில் ஒளியமைப்பு செயப்பட்டிருந்தது.




6. விஸ்வகர்மா குகை எனக்கூறப்பட்ட மிகவும் அழகான ஒரு குகையின் வாயிலில் இருந்த புத்தர் சிலை ஒன்று. பாதத்தினருகே புத்தர் அணிந்திருக்கும் ஆடையை செதுக்கியிருப்பதை பாருங்கள்.




7. சாவில்லாத வீட்டிலிருந்து ஒரு தாயை கடுகைக்கொண்டு வரச்சொல்லி, தவிர்க்க முடியாத வாழ்வியல் அங்கம் சாவு என்று உலகுக்கு உணர்த்தும் ஒரு காட்சி.




8. மஹாயனா எனப்படும் காலகட்டங்களில், புத்தர் என்பவர் உருவ வழிபாடில்லாமல், தூண்களாய், ஸ்தூபங்களாயும் உருவகப்படுத்தப்பட்டிருந்தார்.




9. ஹனாயனா எனப்படும் அதற்கு அடுத்து வந்த காலகட்டங்களில், புத்தரின் உருவ வழிபாடு தோன்றியது. இந்த இருவகை விஹாரங்களே, அஜந்தா குகைகள் என்பவை, ஒரு மூச்சில் செதுக்கப்பட்டவையல்ல, பல காலகட்டங்களில் செதுக்கப்படவை என்பதற்கான ஆதாரம்.






ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 2

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருந்த குகை ஒன்றின் மேற்பரப்பில் இருந்த ஒரு சிறு தேவதையின் ஓவியம் ஒன்று. என்னமாய் கொழுக்மொழுகென்று இருக்கின்றது.

2. மேலிருந்த வண்ணப்பூக்களின் ஓவியம் ஒன்று, இதிலிருந்த நீல நிறம் இன்னும் வரையப்பட்டபோதிருந்த வனப்பிருந்ததைபோன்றிருந்தது.

3. மற்றுமொரு மேற்கூரை ஓவியம். இந்த ஓவியம் சிறிது சிதைந்திருந்தாலும், அதன் அழகும்,நேர்த்தியும் சிறிதும் குறைவின்றி இருந்தது.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 1

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
மேற்கு, இந்தியாவில் இந்த திசையில் இன்னும் எந்த இடமும் பார்த்திராத குறை வெகு நாளாக உறுத்திக்கொண்டிருந்தது. இம்முறை வேறொரு பயணம் திட்டமிட்டபடி நடக்காததால், மிக சந்தோஷமாய் கிளம்பிவிட்டோம் அஜந்தா-எல்லோரா-பூனே என்று; சிறிது நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அஜந்தா - சிறு வயதில் சரித்திரப்பாட மனனம் மட்டுமே செய்திருந்த இடம். பின்பு என்ன வகையான இடம் என்று தெரிய வந்தபோது வாழ்நாளில் என்றாவது ஒருநாள் சென்று வரவேண்டும் என்றானது.

அவுரங்காபாத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது அஜந்தா குகைகள். இது பல குகைகளை ஒரே இடத்தில் செதுக்கியிருக்கும் இடம்.

குகை என்று ஒருவித எண்ணத்தில் சென்ற எங்களுக்கு இதன் அமைப்பு மிகவும் பிரமிக்கதக்கதாய் இருந்தது. அடர்ந்த கானகத்தினுள், பள்ளத்தாக்கினுள், கீழே ஓடும் ஆறு, அருகே பெரிதாய் இருக்கும் அருவி என.. எப்படி இதை செய்து முடித்திருப்பார்கள் என்று.

இதை முதலில் யோசித்ததிலிருந்து, இறுதியில் செய்து முடித்தவரை எவ்வளவு உழைப்பு, கற்பனை இருந்திருக்கும் என்று பிரமித்தபடியே மயங்கியிருந்தோம். பல கால கட்டங்களில் செதுக்கப்பட்ட குகைள் இவை.

அஜந்தாவில் பெரும்பாலும் பவுத்த குகைகள், இங்கிருக்கும் குகைகள் இதிலிருக்கும் பவுத்த ஓவியங்கள், புத்த விகாரக குகைகள் உலகப்புகழ் பெற்றவை.

இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கவை, இங்கிருக்கும் ஓவியங்கள். இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்க்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருக்கும் குதிரை லாட 'யு' வடிவிலான பள்ளத்தாகின் சுவர்களில் தான் அஜந்தா குகைகள் இருக்கின்றன. கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு தெரிகின்றதா ? எப்படி செதுக்கியிருப்பார்கள் இந்த குகைகளை ???


2. அஜந்தாவின் கடைசி குகைகளில் இருந்து அழகிய ஜன்னல்கள் வேலைப்பாட்டுடன்.



3. அங்கிருக்கும் தூண்களில் உள்ள ஒரு சிறு வேலைப்பாடு. எத்தனை நுணுக்கமான கலைநயம், காலத்தை தாண்டி நிற்கும் கலை.




4. மற்றுமொரு அழகான தூண்.



5. இங்கிருக்கும் தூண்களைப்பார்த்தால் மலையில் செதுக்கியதைப்போலா இருக்கின்றது ? எவ்வளவு நேர்த்தியாய் செதுக்கப்பட்டு, வரிசையாய் கொஞ்சம் கூட அங்கிங்கு விலகாதபடி ஒரே நேர்க்கோட்டில். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அப்படியே இருக்கின்றது ஆச்சர்யம்.