யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நெருங்கியவர்களின் மரணம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், டிசம்பர் 04, 2007
இதுவரை கடந்து வந்த பாதையில் சந்தித்த மரணங்கள் வெகு சில. அதிலும், மிக நெருங்கிய மரணங்களை அருகிலிருந்து சந்தித்ததே இல்லை.. இது மரணத்தின் வலி அறியா வரமா, இல்லை மரத்துப்போன மனதிற்கான சாபமா என்று வகைப்படுதிப்பார்க்க முடியவில்லை.

சிறிய வயதில் தவறிய தங்கையின் மரணத்தின் நினைவு நூலிழையில் ஒட்டிக்கொண்டிருகின்றது. நானறிந்த முதல் மரணம் அது. நினைவு தெரியும் வயதில் கடந்து வந்த முதல் மரணம் அப்பாவின் அப்பாவுடயது; அதிகம் பழகியிராத மனிதர், அதனாலோ எனவோ துக்கத்தை விட அவரின் உடலை குளிப்பாட்டுகையில் மடிந்து விழுந்த கைகளையும், அதன் தலையில் எண்ணை தடவும் போது உண்டான பெயரிட முடியாத உணர்வும் தான் இன்னும் நினைவிருகின்றது.

கல்லூரி பருவம் கடக்கும் வயதில் நிகழ்ந்த ஆயாவின் (பாட்டியின்) மரணம் கொஞ்சமும் நியாபகம் இல்லாதது ஏனோ தெரியவில்லை கொஞ்சமும் உறுத்தவில்லை. இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை சார்பில் பெங்களூர் உள்ள ரெஜிமேண்டில் உள்ளிருந்து பயிலும் பயிற்சியில் இருந்திருந்தேன். மிகவும் விருப்பப்பட்டு சென்றிருந்தேன். முதலில் ஆயாவின் உடல் நிலை கருதி போகாமல் இருக்க, எனக்காகவே சரியானதை போல அதிசயத்தை போல மிகவும் நன்றாகி என்னை வழியனுப்பிவைத்து விட்டு, அங்கிருகையில் நிகழ்ந்த மரணம். அவரின் ஆசைப்படி எனக்கு தகவலே சொல்லாமல், 15 நாட்கள் சென்று திரும்புகையில், புதிதாய் அடித்திருந்த சுவரின் வண்ணமே காரணத்தை சொல்லியது. ஆயாவின் மாலையிட புகைப்படத்தை காணும்போது கூட ஏனோ கண்ணீரே வரவில்லை.

இடையில், பள்ளி உயிர் நண்பனின் மரணத்தை விட, அவன் பெற்றோரின் கண்ணீர், கதறல் கொஞ்சம் கலங்க வைத்தது. அத்தையின் சிசு ஒன்றின் மரணமும், அதன் பஞ்சு போல உடலை மண் போட்டு மூடிய தருணமும் நினைவில் அந்த ரோஜாப்பூவின் வாசத்தோடு முட்டிக்கொண்டிருகின்றது. அதன் பின், கல்லூரி நண்பன் ஒருவனின் மரணத்தில் கதறிய பெற்றோர் கண்டு பதறிய மனம்.

இம்முறை தாத்தாவின் மரணம். இதுவும் நான் அருகிலிருக்க இயலாத மரணம். 84 வயது முதுமையினால் என்பதாலேயே இம்மரணம் மற்றுமொரு மரணமாகிவிடப்போவதில்லை. ஆனாலும் ஒன்றும் செய்யவியலாத சூழ்நிலை. விதி என்று எளிதாய் காரணங்கள் தட்டிவிட இயலாது, இந்த சூழலை தேர்வு செய்தது நான் தானே.

பல நினைவுகள் மேலேலும்புகின்றன. உத்தமர், அவரை போல ஒருவர் இல்லை என்பதற்கும் மோசமானவர் என வெறுத்து தள்ளுவதற்கும் உள்ள மெல்லிய நூலிழை இடையில் ஊசலாடிக்கொண்டே வாழ்வை நகர்த்திச்சென்ற ஒரு சாதரண மனிதர்.

சிறு வயதில் அவர் கைப்பிடித்து கதை கேட்டு வளர்ந்த நாட்களே அதிகம். அவர் வாழ்வின் முதிர்ச்சியில், என் வாழ்வின் தொடக்கத்தில் , வாழ்கை முரண் பிறழ, கருத்து வேறுபாடுகள் என்பதோடு நில்லாமல் வெறுப்பு என்று வரை சென்றது. காலம் அனைத்தையும் மாற்றிச்சென்றது எனது புரிதல்கள், விருப்புகள், வெறுப்புகள் எல்லாவற்றையும் ஆனால் அவரின் என்மீதான அன்பு தவிர.

நான் காட்டிய வெறுப்பை பல மடங்குக்கு மாற்றி அன்பாக காட்டி, மிகப்பெரும் புரிதல்களை எளிதாய் புரிய வைத்தார். எல்லா மனிதரிடமும் ஒரே விதமாய் பழகும் விதத்தை அறிவுரையாய் இன்றி செயல் முறையாய் எங்களிடையே பதிய விதத்தில் இன்னும் என்னுளே தான் இருப்பார்.

தைரியமாய் இரு, கலங்கிவிடதே, நாங்கள் இருக்கின்றோம்... என கூறிசெல்லும் தந்தைக்கும், தாய்க்கும் எப்படி புரிய வைப்பேன்......

என்னவென்று எனக்கே புரியவில்லை, கண்கள் காய்ந்தே போனதாவென தெரியவில்லை, மனம் கல்லாய் போனதா என தெரியவில்லை, மீண்டு வர முடிய மரணத்தை பற்றிய புரிதலா என புரியவில்லை,

எதுவாயினும் சரி, என் பிரியமானவர்களின் மரணங்களுக்காய் ஒரு முறையேனும் ஒரு துளி கண்ணிர் வேண்டிக்கொண்டிருகின்றேன்.

18 மறுமொழிகள்:

Dany சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 04, 2007 6:03:00 PM

a very interesting and thought provoking post. it touched me.

CVR சொன்னது… @ புதன், டிசம்பர் 05, 2007 4:57:00 AM

நல்ல பதிவு! :-)

பெயரில்லா சொன்னது… @ புதன், டிசம்பர் 05, 2007 5:26:00 AM

Do you have an english version?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், டிசம்பர் 05, 2007 7:57:00 AM

@dan:
நன்றி

@சிவிஆர்:
நன்றி

@Noorul:
sorry machan .. i couldn't be more expressive in english .. and thanks for checking my blogs for updates..

Sud Gopal சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 12:10:00 AM

காலம் எல்லாக்காயங்களையும்,வலிகளையும் ஆற்றட்டும்.

உங்கள் தாத்தாவே அவருக்குக் கொள்ளுப்பேரனாய்ப் பொறந்து வரப்போறாரு பாருங்களேன்...

சீனு சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 1:34:00 AM

//நான் காட்டிய வெறுப்பை பல மடங்குக்கு மாற்றி அன்பாக காட்டி, மிகப்பெரும் புரிதல்களை எளிதாய் புரிய வைத்தார்.//

இது நெசங்க. என் தாத்தா இருந்த வரை அவரை மதிக்கவே மாட்டேன். அவர் இல்லாத போது தான் அவரின் அருமை தெரிந்தது.

துளசி கோபால் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 2:17:00 AM

'கொசுவத்தி' ஏத்தவச்சுட்டீங்க.

மரணம் இன்னும் ஒரு புரியாத புதிராத்தான் இருக்கு. நெருங்கிய சொந்தம் மரணிக்கும்போது வராத துக்கம் சிலசமயம் யாரென்றே தெரியாத ஒருத்தருக்கு ஏற்படும்போது அப்படியே நெஞ்சைக் கிழிச்சிருது.

ரொம்ப வருசங்களுக்கு முன்னாலே சென்னையில் ஒரு நர்சரிப்பள்ளிக்கூடத்தில் (மூணுநாள் லீவில்)தனியா விட்டுப்போன குழந்தையின் மரணத்தைக் கேள்விப்பட்டுக் கதறிக்கதறி அழுதுருக்கேன். ப்ச்.....

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 6:15:00 AM

@அண்ணாத்தே:
நன்றி.. ஆமாங்க காலத்தை போன்ற காயத்தை ஆற்றும் நண்பன் இல்லை...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 6:21:00 AM

@சீனு:
நாம் எப்படி கருதப்பட போகின்றோம் என்று யோசிக்க வேண்டி இருக்கு .. கூட்டுக்குடும்பமா வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கே இப்படினா , அடுத்த தலைமுறை ? எது எப்படியோ தலை முறை இடைவெளி என்பது 10 வருடங்கள் என்பது போய் ... சில வருடங்களுக்கே வந்து விடுகின்றது ...

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 9:43:00 AM

@delphine:

hmmmmmmmm....

Athi சொன்னது… @ வியாழன், டிசம்பர் 06, 2007 11:49:00 AM

தாத்தா இறந்துட்டாரா... sorry'da மச்சான்...

BTW, நல்ல பதிவு... கொஞ்ச காலம் முன்னாடி யாரு கிட்டயோ சொல்லிட்டு இருந்தேன்.... என்னோட தாத்தாவும் போன வருஷம் இறந்தப்போ, ஊருக்குப் போயிருந்தேன்ல? எனக்கும் அப்போ, பெருசா துக்கம் எதுவும் வரலை... அது ஏனோ தெரியலை... சொல்லப்போனா, அந்த மாதிரி துக்க வீட்டுல என்ன பண்ணனும்னு கூட தெரியலை.. முகத்தை சோகமா வச்சிக்கனுமா? இல்லைன்னா, நல்லா வாழ்ந்து அனுபவிச்சுட்டு போன தாத்தா தானேன்னு normal'ஆ இருக்கனுமா தெரியலை... Even, என்னோட அப்பா, பெரியப்பா கூட ரொம்பல்லாம் சோகமா இல்லை. ரொம்ப கஷ்டப்படாம தாத்தா போய் சேர்ந்துட்டாங்கலேன்னு ஒரு நிம்மதியும் கூட!! அத்தை(தாத்தாவோட பொண்ணு) மட்டும் அழுதுட்டு இருந்தாங்க.

இன்னும் சொல்லப்போனா, பசங்களுக்கு அந்த emotions, senti எல்லாம் ரொம்ப கம்மி... அது கூட காரணமா இருக்கலாம். மச்சான்... most of the பசங்களுக்கு possessiveness'ஓ, தன் கூட மட்டும் தான் தன்னோட அப்பா, அம்மா அதிகம் பேசனும்ன்கிற மாதிரி எண்ணமோ கிடையாது. So, நம்மை சேர்ந்த ஒருத்தர் நம்மளை விட்டுப் பிரிஞ்சு போறப்போ, emotional'ஆ ஏற்படுற இழப்பை விட, logical'ஆ அவங்க இல்லாததால ஏற்படுற இழப்பு தான் நம்மளை அதிகம் பாதிக்குது... அது தான் அவரோட character'ஐப் பற்றியும், அது உனக்குள்ள ஏற்படுத்துன மாற்றங்களைப் பற்றியும் நீ அதிகம் பேசுனதுக்குக் காரணம்.

Unknown சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 07, 2007 10:05:00 AM

good one Mr.Rowdy!!

வெற்றி சொன்னது… @ வெள்ளி, டிசம்பர் 07, 2007 10:51:00 AM

யாத்திரீகன்,
மனதைத் தொட்ட பதிவு.

Maayaa சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 11:17:00 AM

romba sorry..

பாச மலர் / Paasa Malar சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 12:41:00 PM

ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டிய தருணங்கள் இவை..இழப்புகளை எண்ணிக் கொஞ்சம் கலங்க வைத்தது இந்தப் பதிவு..cheer up..

பாச மலர் / Paasa Malar சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 12:41:00 PM

ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டிய தருணங்கள் இவை..இழப்புகளை எண்ணிக் கொஞ்சம் கலங்க வைத்தது இந்தப் பதிவு..cheer up..

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 6:06:00 PM

ஆதி ...
இருக்கலாம் மச்சான்... நீ சொல்றதும் ஒருவகைல சரி.. எமோஷன் , சென்டி ... இதெல்லாம் இயல்பா சட்டுன்னு வர மாட்டேங்குது ... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், டிசம்பர் 11, 2007 6:09:00 PM

நன்றி வி ஜெ ...

நன்றி வெற்றி

நன்றி ப்ரியா

நன்றி பாசமலர் .. நேற்று Forest Gump படத்தில் ஒரு எளிமையான வசனம் வரும்..

Forest: What is death Mama ?
Mom: Death is a part of our life my dear son.... (and it goes on like this..)

சாவும் , வாழ்வின் ஒரு பகுதி என.. ரொம்ப எளிமையான வசனம் ஆனால் ஆழமான அர்த்தம் கொண்ட வசனம் ...

கருத்துரையிடுக