தேர்வுத்தாள் நமக்கு உரியதுதானா என்ற கேள்வி முதலில் தோன்ற, பின் யோசிக்கையில் கோர்வை கோர்வையாய் பதில்கள் எழுதுவதற்கு ஏதுவாய் வரவில்லை, முதலில் யோசித்து, பின் அது சரியாய் தோன்றவில்லையென்றால் அதில் திருத்தம் செய்து எழுதுவோம், எழுதுகையிலும் திருத்தம் தோன்றும், ஆங்காங்கே அடித்தல் திருத்தல், கொக்கி போட்டு இரண்டு வார்த்தைகளிடையே ஒரு வாக்கியமே புதிதாய் சேர்த்தல் என பல ஒட்டு வேலைகள் நடக்கும். இறுதியில் ஒரு முறை பதில்கள் விட்டுப்போயுள்ளனவா, எழுதியவை சரியா என ஒரு சரிபார்த்தல்.
எல்லாம் சரியாய் இருந்தும் உங்கள் கருத்துக்களை, உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை அப்படியே தலைகீழாய் உங்கள் பேனா புரிந்து கொண்டு எழுதினால் எப்படி இருக்கும் ?
குழப்புகிறதா ? ஒரு நொடி கண்ணைக்கட்டிக்கொண்டு உங்கள் நண்பரை அல்ல, உங்களூக்கு முன்னே பின்னே தெரியாத ஒருவரை, எப்படி இருக்கும் அவர் கையெழுத்து என்று தெரியாமல், தேர்வு செய்து, அவரிடம் பதில்களை சொல்லி எழுதியபின் வாங்கிப்பாருங்கள் நான் சொல்ல வருவதின் சிரமம் புரியும்.
நேற்று லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் (Tamil Literature) படிக்கும் பார்வை குறைபாடுள்ளவர்களின் தேர்வு (Internals), அதற்கு எழுத்தராக (Scribe) போயிருந்தேன்.
தேர்வுகளில் ஒரு பெஞ்சில் ஒருவர் வீதம், அடுத்தடுத்த பெஞ்களில் உட்காரச்சொல்வார்கள் என்று நினைத்து அனைவரும் உட்கார்ந்திருந்த வேலையில், ஒரு பெஞ்ச் இடையில் காலியாக விட்டு உட்காரவும் என்று கோரிக்கை வந்த உடன் தான் உணர்ந்தேன் சொல்லும் பதில்கள் அடுத்த பரிட்சையாளரால் கேட்டுவிடப்படக்கூடாது என்று.
பின் எங்களுக்கான பயிற்சியாளர் ஒவ்வொருவராய் அழைத்து வரப்பட்டு எங்களருகில் அமரவைத்து சென்று விட்டனர். அவர்களில் முழுதாய் பார்வை இல்லாதவர் முதற்கொண்டு கண்களுக்கு மிக மிக அருகில் வைத்து மட்டுமே படித்தால் தெரியும் நிலை கொண்டவர் வரை இருந்தனர்.
கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலையா என்று சொல்லத்தெரியவில்லை ஆனால் முதல் சில நிமிடங்கள் மவுனத்திலேயே கரைந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கும் புரியவில்லை, அனுதாபமாய் பட்டுவிடக்கூடாது என்பதில மிகுந்த கவனமாய்யிருந்தேன். யார் அருகில் உட்கார்ந்திருக்கிறாகள், ஆணா, பெண்ணா என்று தெரியாத நிலையில் அருகில் இருப்பவர் என்றே அந்த அறை ஒரு கனமான மவுனப்போர்வை கொண்டு போர்த்தியது போலிருந்தது.
"வணக்கம், எம்பேரு..." என அரம்பித்த உடன், சகஜமாய் பேச ஆரம்பித்து விட்டோம். இன்றைய பாடம் என்னவென்பதில் தொடங்கி, சென்னையின் காலைப்பனி வரை பேச ஆரம்பித்து விட்டோம்.
தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பார்த்ததில்தான் எனக்கு அடுத்த ஆச்சர்யம். ஆங்கிலத்தில் கேள்விகள், அதுவும் சாதரண ஆங்கிலம் இல்லை, "டிஸ்பொசிசன் ஆட்ரிபூசன்(Disposition Attribution), சோசியல் ஸ்க்கீமா (Social Schema)..." என என்னால் தமிழாக்கம் செய்ய இயலாத ஆங்கிலம். (என் நிலமைதான் அப்படி என்று நினைத்து சுற்றி முற்றி திரும்பினால் அங்கிருந்த அனைவருக்கும் இதே நிலமைதான்).
ஆசிரியர்களிடம் கேட்டால், அவர்களுக்கு நாங்கள் சொல்லித்தந்து விட்டோம், நீங்கள் தமிழாக்கம் கூட செய்ய வேண்டாம், அவர்கள் சொல்வதை மட்டும் எழுதுங்கள் என்று பதில்.
சொல்வதை மட்டும் எழுதுவதா, அவர்கள் சொல்லும் விடைகள் தவறாய் தெரியும் தருணத்தில் நாமே சரியான பதிலை எழுதுவதா என்று ஒரு பெரிய தயக்கம்.
ஒருவழியாய் என்னருகில் உட்கார்ந்த பிரபுவும் விடைகளை யோசித்து சொல்ல, முதல் பகுதி முடிக்கையில் ஒரு அறிவிப்பு. "தமிழ் இலக்கிய கேள்வித்தாள்கள் மாறிவிட்டன என்று". புதிய கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு மீண்டும் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் சொன்ன அனைத்து தடைகளும், குழப்பங்களும், தோன்ற, கேள்விகள் புரியாவிட்டால் தமிழாக்கம் செய்ய முடிந்தவற்றை செய்தோம். அப்படியும் மிஞ்சியவற்றில், பிரபு, அருகிலிருந்த மாணவரை கேட்கச்சொல்லுமாறு சொன்னதும் என்ன செய்வதென்றே புரியவில்லை.
கேட்காமலிருந்து, கேட்டது போல் ஏமாற்றுவதா ? இல்லை கேட்டு உதவி பண்ணுவதா என்றும் புரியவில்லை.
ஒருவழியாய், முடிந்த வரை தமிழாக்கம் செய்து, கேள்வியை விரிவாய் விளக்கியும் முடிந்த வரை உதவி செய்து கொண்டிருந்தேன். பிரபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் பதில்கள் நினைவுக்கு வர, தாள்கள் நிரம்பத்தொடங்கின.
ஒவ்வொரு பகுதியாய் முடித்து , இப்போது இறுதிப்பகுதியில் 1200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு பதில் வேண்டும். கேள்வி "Explain about factors influencing Interpersonal Attraction".
எளிதான கேள்விதானே என்று நினைத்து பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த எனக்கு, "பார்த்த உடனே பிடித்துபோகும் அழகு, பழகும் போது இருவருடைய பார்வையும் ஒன்றாய் இருப்பது .. " என்று பதில்கள் என் மனதில் தோன்ற தோன்ற...... எப்படி இருந்தது என்று சொல்லத்தெரியவில்லை.
யோசித்து யோசித்து பிரபு பதில் சொல்லச்சொல்ல, அதை நான் தயக்கத்துடனே எழுதிக்கொண்டிருக்கையில், பிரபுவிடமிருந்த கனத்த மவுனத்திற்கு பின் "இதுக்கு மேல என்னண்ணா சொல்ல ? அவ்வளவுதான் தெரியுது...... , சரியாத்தானே எழுதுரீங்க, நீங்க எப்படி எழுதுவீங்கனே தெரியாது, வெறும் கோடு கோடாத்தான் தெரியுது, பார்த்து எழுதுங்கண்ணா, 15 மார்க் எடுக்கனும் பாஸ் பண்ண....".
எப்படி பதில் சொல்வதென்று தெரியாமல், சில இடங்களில் பிரபு சொல்ல சொல்ல அந்த திருத்தங்களுக்காக அடித்தல்கள் பண்ணதை நினைத்து கஷ்டப்பட்டுக்கொண்டேயிருந்தேன்.
பின் ஒருவழியாய் ஒன்னரை பக்கங்களில் பதிலை நிரப்பி, பதில்கள் நிரம்பிய தாளை கொடுக்க காத்திருக்கையில்... "அண்ணா, நீங்க காதலிச்சிருக்கீங்களா ? உங்களுக்கு பிடித்த பெண் இருக்காங்களா ?.." என்ற கேள்வி பிரபுவிடம்.
காரணம், இந்த பகுதிக்கான அவர்களின் பதிலில் பிறரைப்பற்றிய புரிதல் பற்றியும், அதில் வரும் காதல், திருமணம், ஊடல் பற்றியும் இருந்த குறிப்புகளே.
ஆவடியில் தங்கியிருக்கும் பிரபு, தினமும் லயலோ வந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேல் பயணிப்பதையும், இதிலே பேருந்தில் கூட்டமிருந்தால் கொஞ்சம் கஷ்டம் என்று சொன்னதை கேட்டு, எத்தனை பேருக்கு இறங்குகையில் உதவியுள்ளோம் என்று யோசித்து பண்ணிப்பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் நொடியில் தோன்றும் தயக்கம் தொலைத்து சில வருடங்க்கள் ஆகிவிட்டன, அதற்கு முன் யோசித்து முடிப்பதற்குள் அந்த கணம் முடிந்து போவதும், பின் அதை நினைத்து குற்ற உணர்வு கொள்வதுமாய் தன் முன்பிருந்தேன்.
பரிட்சையின் முடிவுகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு லயலோ விட்டு வெளியே வருகையில், யாருமில்லாத அந்த வராண்டவில் விழுந்த வெயிலும், அந்த பெரிய தூண்களின் நிழல்களும், எங்கோ கூவிக்கொண்டிருக்கும் பறவையின் சப்தமும், கடற்கரை மணலில் ஆழப்பதியும் கால் தடங்களைப்போல, என் நினைவுகளில் இறங்கிக்கொண்டிருந்தன.
ஒரு ஒன்றரை மணி நேரம் அவர்கள் வாழ்வில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும் ஒரு மாற்றம் கொண்டு வரும். nasrivatsan@gmail.com -ஐ அணுகலாம்.