எங்களிடையே பெண்கள் - 1
Published by யாத்ரீகன் under அனுபவம், பெண்கள் on திங்கள், ஜூலை 30, 2007கடவுள், அரசியல் போன்றவற்றை விட அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருள். எப்பொழுதிலிருந்து விவாதிக்க தொடங்கினோம் என்று சரியாக நினைவில்லை. அது என் ஆள், இது உன் ஆள் என ஆறாப்புலயே, ஆள் என்றால் என்னவென்றெல்லாம் தெரியாமல் தூரத்திலிருந்தே காமிக்க பயன் படும் பொருள்களாகத்தான் தொடங்கியது. எட்டாப்புலிருது எதெடுத்தாலும் சண்டை, சண்டை போடுவது சரிதானெறெல்லாமல் வீம்புக்கென்றே திரிந்த காலங்களில் இனிமையான நட்பென்பதை தவற விட்டுக்கொண்டிருந்தோம்.
கல்லூரியில், வீம்பே அடையாளமானது, தனித்திருக்க காரணமானது ஆனால் அதுவே பல உயிர் தோழிகளை அடையாளம் காட்ட உதவிக்கொண்டிருந்தது. கல்லூரியில் அதிகம் டாப் டென் அலசுவதற்கும், கூட்டை கலைப்பதுமென தான் பெண்கள் எங்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தனர். மிகவும் ஆர்வமுள்ள அரட்டைகள் அப்பொழுது எங்களுக்குள் தொடங்கியதில்லை.
தினந்தோறும் புதிய மனிதர்களும், மொழிகளும், நினைத்தேபார்த்திராத அனுபவங்களும் எங்களை கொஞ்ம் கொஞ்சமாய் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த நேரம். தினசரி வாழ்வே, 6 பெண்களின் நடுவேதான் என்று ஆனபோது, கண்கள் மட்டுமல்ல மெல்ல மெல்ல மனசும் விழித்துக்கொண்டு தன் கண்ணையும் வைத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தரும் ஒரு இரகம் என்பதை மூளை முன்பே உணர்ந்திருந்தும், மனமும் அதை புரிந்து கொள்ளத்தொடங்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் கூட ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியது. நல்ல தோழி என தொடங்கி, விரோதி என்ற நிலை தொடர்ந்து, யாரையும் எந்த ஒரு வட்டத்துக்குளேயும் அடைக்க, நம்மையும் அவர்களுடனான நம் உறவையையும்தான் சேர்த்து உரைகல்லில் உரசிப்பார்க்க வேண்டியதின் நிதர்சனம் புரிந்து கொண்டிருந்தது, அதில்லாமல் தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவு சீக்கிரம் அர்த்தமற்றவையாக் போய்க்கொண்டிருந்தது.
புதிய நட்புகளின் சூழ்நிலையில், முன்பு உணர்ந்திருக்காத அருகிலில்லாத நண்பர்களின் நட்பும், தான் எவ்வளவு விலைமதிப்பில்லாதது என்று மெளனமாய் ஒரு புன்சிரிப்புடன் தூரத்தில் அருகிலேயே இருந்தது.
அனைவருக்குமிடையில் புயல்கள் ஓய்ந்து புரிதல்கள் மெல்ல ஆரம்பிக்கும் நேரம், காலம் தன் இருப்பை பதிவு செய்ய மாற்றங்கள் தொடங்கின, இடங்கள் பெயர ஆரம்பித்த தருணம் அது. ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அவர்களைப்பற்றிய பார்வைகளை இன்னும் கூராக்க காலம் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தது.
வட்டங்கள் பெரியதாய் வரையப்பட, வரையப்பட... நட்பின் தொடர்புக்கு அருகாமையின் அவசியம் கொஞ்சமாய் ஒவ்வொருத்தருக்கும் புரிந்துகொண்டிருந்தது.
இதுவரை பார்த்ததே பெரிய மாற்றங்கள் என்று ஆசுவாசப்படுதிக்கொண்டிருந்த மனத்திற்கு, தொடுவானத்திற்கும் அப்பாலுல்ல கடலின் ஆழத்தையும், ஆகாசத்தின் வர்ணத்தையும் காலம் கோடிட்டுக்காட்டத்தொடங்கியிருந்தது. அங்கிருக்கும் ஆழமும், வர்ணமும்தான் பயணத்தை சுவாரசியமாக்க போகின்றன என புரியப் புரிய, கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சி கலைந்து புன்னகைக்கத்தொடங்கினோம்.
அடுத்த கட்டமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கியத்துவங்கள் மாறத்தொடங்கின, புதிய நபர்கள் எங்களிடையே என்பதல்ல, புதிய நபர்கள் மத்தியில்தான் நாங்கள் என வாழ்வின் நிதர்சனமும் எங்களுகு வழிகாட்டதொடங்கியது.
இப்போது பெரும் கும்பல்களில் மட்டுமே அவர்களை காண முடிந்தது, நெருக்கமான கோஷ்டிகளில் ஆண்கள் மட்டுமே அதிகமாயிருக்கின்றனர்.
இப்போது எங்கள் விவாதத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதிகம் விவாதிக்கபட்ட தலைப்பும் சரி, அதிகம் பார்த்திராத கோணங்களிலெல்லாம் சுற்றியெங்கும் நிறைந்திருப்பதாய் உணர்கின்றோம். காற்றைப்போலவே, உடனே பயணித்துக்கொண்டிருக்கின்றதா என்று தோன்றுவதைப்போல், எங்கே சென்றாலும் கேட்க்க முடிகின்றது.
இவ்வளையும் கேட்டுவிட்டு, டைம் ஆகிடிச்சு மாப்ளே வீட்ல சொல்லனும்னு சொல்ற எதிரிகளும் சரி, மச்சி இன்னும் நாலு வருசம் இருக்குடா இத்தயெல்லாம் யோசிச்சிகின்னு, ஜாலியா போய்கிட்டே இருப்போம்னு சொல்ற நண்பர்கள்ம் உண்டு.
இன்றைக்கு சுவாரசியமாய், சூடாய் மோதிக்கொள்ளும் கருத்துகளும், புரிதல்களும் சரி, மனிதர்களைப்போல மாற்றங்களுக்கு உட்பட்டே இருந்திருக்கின்றது. நாளை நகைப்புக்கும், வெட்கத்துக்கும் கூட இழுத்துச்செல்லலாம் இன்று மூச்சு முட்ட விவாதித்துக்கொண்டிருக்கும் பார்வைகள். அவற்றில் கொஞ்சத்தை பதிவு செய்து வைப்போமென்று நினைதிருந்தேன். அடுத்து வரும் பதிவுகளில் எங்கள் so called வயசுக்கோளாறு பட்டறைகளை பகிர்ந்துகொள்கிறேன்.