ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...
இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..
உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்
சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.
சிலையின் விபரம்:
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?
இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)
எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..
எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..
இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .
இந்த படத்தில் , ஷக்தியின் ஆபரணம் ஒன்றான ஒரு ருத்ராட்ச மாலையை கவனியுங்கள், ஒவ்வொரு ருத்ராட்ச்சத்தையும் சிறிதும் பிசிறில்லாத உருண்டைகளாய் , மொத்த மாலையும் பிறண்டு இருப்பதையும் அச்சு அசலாய் வடித்திருக்கிறார்கள் ..
கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்
எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..
கூர்ந்து கவனியுங்கள், எல்லோரும் விளையாட்டில் மும்முரமாய் இருக்கையில், சிறு குழந்தைகளாய் உருவகப்பட்டிருக்கும் ஷக்த்தியின் பூதகணங்கள் , தங்கள் பக்க வெற்றியை கொண்டாட , சிவனின் நந்தியை சீண்டுவதை பார்க்கலாம் ..
நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,
முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..
மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...
கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..
ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..
மேலே இருக்கும் கடைசி படம், நாங்கள் குகையினுள் இருக்கும்போது பார்க்கும் ஒரு கோணம் .. சிலைகளின் உயரம் தான் உங்களுக்கு தெரியுமே, குகையின் உயரத்தையும், அதிலிருக்கும் தூண்களின் உயரத்தையும் கண்பிக்கவே இந்த புகைப்படம் ..
இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..