யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 23, 2008
கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

>>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது. <<<

கப்பியின் இந்த பதிவில் வரும் மேற்கூறிய வாசகங்களில் உள்ள நிதர்சனம் நம் முகத்திலறையும். இதில் சமூகம் என பொதுப்படையாய் கூறியிருந்தாலும் அதிலொரு பங்கு நமக்கும் தொடர்பு உண்டு என்பது கசக்கும் உண்மை. எங்கோ நடக்கும் துயருக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேள்வி எழுப்பினால், பின் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கேதிறாய் உங்களுக்காக குரல் கொடுக்ககூட யாரும் இருக்கப்போவதில்லை.

When the Nazis came for the communists, I said nothing; I was, of course, no communist.
When they locked up the Social Democrats, I said nothing; I was, of course, no Social Democrat.
When they came for the trade unionists, I said nothing; I was, of course, no trade unionist.
When they came for me, there was no one left who could protest.

கப்பியின் இந்த பதிவில் Born into Brothels என்ற ஆவணப்படத்தை குறிப்பிட்டிருந்ததை படித்ததும், இதற்கு முன் தேடி கிடைத்திராத DVD தற்போது NetFlix-இன் உதவியுடன் பார்த்து முடித்ததும், மனக்குரங்கு சட சடவென கொல்கத்தாவின் நினைவுகளுக்கு தவ்வத்தொடங்கியது.

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது.

வேலை துவங்கி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற இடங்களாக போகத்துவங்கியதும், எப்போது எப்போது என நேரம் கிடைத்தபோதெல்லாம் பர பரத்துக்கொண்டிருந்தோம். யாவருக்கும் அங்கே செயலில் ஈடுபடுவதில் மனமில்லை என்பதோடு தைரியமுமில்லை என்று எங்களுக்குள் தெரிந்திருந்தாலும், இங்கிருக்கும்போதே எப்படி இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும் என்று ஏதோ ஒரு குறுகுறுப்பு. என்னதான் "மஹாநதி, குணா.." என்று படங்களில் பார்த்திருந்தாலும், அப்படி என்னதான் மச்சான் பண்றாங்கன்னு பார்த்திரலாம்டானு காத்துக்கொண்டிருந்தோம்.

எங்களுடன் 6 தோழியரும் இருந்த நேரம் என்பதனால் அவர்களை கழட்டி விட்டு விட்டு சென்று வர சரியான சந்தர்ப்பம் வாய்க்க காத்துக்கொண்டிருந்தோம். சோனாகாச்சி என்பது கொல்கத்தாவின் புகழ்(?) பெற்ற இடமாயினும் அது ஒன்றும் மேப்பில் உள்ள ஒரு இடமல்ல, சகவயது பெங்காலி நண்பர்களிடம் அரட்டியடிக்கும்போதும், "சோனாகாச்சி"-யின் சரியான இடமேது என்பதில் எங்களின் தேடல் துவங்கியது. கேட்ட பெங்காலி நண்பர்களும் அதிர்ச்சியோ அருவருப்போ எதுவும் தராமல், தவறாமல் சரியான விடை தெரியாமல் நாக்கை பிதுக்கிகொண்டிருந்தனர் அல்லது ஆளுக்கு ஒரு இட எல்லையை சொல்லிக்கொண்டிருந்தனர் அதுவும் உறுதியாகச்சொல்லாமல்.

ஒவ்வொரு முறையும், நிரம்பி வழியும் மேக்கப்புடன் ஒரு பெண்ணை மெட்ரோ இரயில் நிலையத்தின் இடுக்கில் பார்ப்பதும், இந்த இடமாய் இருக்குமோ என்று ஏகப்பட்ட யூகங்கள் வேறு. ஒரு வழியாய் "சோனாகாச்சி" என்பது சோவாபஜார் (Shova Bazar) மெட்ரோ நிலையத்தினருகே தொடங்கி எம்.ஜி ரோடு (Mahatma Gandhi Road) மெட்ரோ வரையிலான நிழற்ப்பகுதியே என உறுதிசெய்தோம்.

அதன் பின்னர் இவ்விரு இடங்களை கடந்து செல்லும்போதேலாம் கண்கள் அலைபாயும், 10 பேரும் தோழியருடன் அந்த இடங்களை இரவில் கடக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு பயம் உரசிவிட்டுப்போகும்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து 10 பேரும் கிளம்புவதற்கு பதிலாக நாங்கள் நால்வர் மட்டும் தங்கிவிட்டு பின்னர் தனியே புறப்பட்டோம். இரவு 10 மணிக்குள் அந்த பகுதியில் இருந்து வெளியே வந்துவிடுங்கள், பயத்தை கண்களில் தவறியும் காட்டாதீர்கள், கைப்பிடித்து இழுப்பவரை உதறுவதில் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் என பல அறிவுரைகள் வேறு.

சோவாபசாரில் இறங்கியதும், இடதா வலதா எங்குபோவது, தெரியாத ஊராயினும் வெட்க்கம்விட்டு கேட்க்க முடியாத இடம். ஒருவழியாய் ரோட்டில் ஜால்மூரி (பொறி ) விற்பவரை கேட்டு (அவர் எங்களை மேலும் கீழும் பார்த்து வழி சொன்னது வேறு கதை), நடக்க ஆரம்பித்தோம். எவனாவது ஒருவன் சஞ்சலமாவது போல் தெரிந்தாலும் மீதி மூவர் அவனை இழுத்துக்கொண்டு வெளியேறுவது என்று ஒரு ஒப்பந்தம் வேறு எங்களுக்குள்.

நடக்க ஆரம்பித்து பல அடிகள் கடந்திருந்தாலும், எதற்கான ஒரு அறிகுறியும் இன்றி, வழக்கமான பரபரப்புடன், அதிக பொதுமக்கள் (சாதரண பெண்கள்,குழந்தைகள் உட்பட) நடமாட்டத்துடன், அங்காங்கே பயனில் இருக்கும் டிராம் தடங்களுடன் இருந்த கொல்கத்தாவின் மற்றுமொரு குறுகிய பழந்தெருக்கள் போலவே தோன்றியது. இரு பொட்டலமாவது வாங்கி இருக்கலாம் அந்த ஜால்மூரி விற்பவரிடம் சரியான வழியாவது காண்பித்திருப்பான் என்று புலம்பிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம்.

போகப்போக தெரு மேலும் குறுகத்துவங்கியது, கடைகளில் வெள்ளை வெளிச்சம் போய் மஞ்சள் நிற தெருவிளக்குகள் மட்டுமே அதிகமானது. வாழ்வின் அதிர்ச்சியான கட்டங்களை நோக்கித்தான் செல்கின்றோம் எனத்தெரியாமல், வழக்கமான அபத்தமான காமேன்ட்டுகளுடன் சிரித்துக்கொண்டே தான் சென்றோம் ஒரு வீட்டின் வாசலில், அதீத மேக்கப்புடன் நிற்கும் அந்த நான்கு பெண்களை பார்க்கும்வரை.

நான்கு பெண்கள், அலைபாயும் கண்கள் எங்கும் மை, பளபளக்கும் உடை, உதட்டில் வழியும் சிவப்பு, கைகளின் மாநிறத்திற்கு பொருந்தாத பிங்க் கன்னங்கள் என அடையாளங்களை கண்டதும் நுழைந்துவிட்டோம் என்று தோன்றியது. அடுத்த வெகுதூரத்துக்கு நடந்தும், சம்பந்தமிலாமல் ஒரு நல்ல ஏரியாவில் இந்த வீடா என்று தோன்றியது. இன்னும் குறுக்கு சந்துகளுக்குள் புகுந்து செல்லச்செல்ல அங்கிருந்தது வெளியில் நாங்கள் கண்டதற்கு சம்பந்தமில்லா உலகம் கண்டு ஒரு நொடி அரண்டு போயிருந்தோம்.

வரிசையாக வீடுகள், வாசல்களில் கும்பல் கும்பலாக பெண்கள். ஒவ்வொரு வீட்டின் முன் ஆண்கள் ஒரு சில நொடிகள் நிற்பது போலத்தோன்றும், அதற்குள் எல்லாம் பேசி முடித்து, புறாக்கூண்டு போலிருக்கும் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்குள் அழைத்துச்சென்றனர். நடைபாதையில் சில போலிஸ் கான்ஸ்டபிள்கள் வாய்நிறைய ஜால்மூரியும் கைநிறைய கலைக் ஷனுமாய் ரவுண்ட்ஸ் வேறு. அவர்கள் கண்முன்னே நடக்கும் செயலுக்கும் தங்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத மாதிரி அவர்கள் சென்ற விதம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சிதான். என்னதான் படங்களில் போலீஸ்காரர்களின் கண்முன்னே தவறுகள் நடக்கும்போது சாதரணமாய் போவது போல பார்த்திருந்தாலும் , கேட்டிருந்தாலும்.. நேரில் பார்த்தபோது அதிர்வதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு வீட்டின் எதிரே ரோட்டுக்கடையில் Chowmien வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம், பின்னே மானமுள்ளவர்களுக்கு வெறுமனே வெறித்துப்பார்ப்பது கூச்சமாயிருக்காதா :-( .. ஒவ்வொரு வீட்டிலும் வருவதும் போவதும், சில நிமிடங்களில் வாசல் காலியாவதும் வாடிக்கையாய் நடந்துகொண்டிருந்தது.

வாங்கிய Chowmien தீர்ந்ததும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இந்த முறை பக்கத்தில் சென்று பார்த்துவிடுவதாய் திட்டம், ஒரு இடத்தில் கூட்டமாய் சிறு சந்து ஒன்று, உள்ளே செல்ல முடிவிடுத்து செல்லத்தொடங்கினோம். விளையாட்டாய் தொடங்கிய விஷயங்களுள் இத்தனை கூரூரம், வேதனை என வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் ஆளானவர்கள் இவர்கள் என உணரவைத்த தருணம் அது.

7 மறுமொழிகள்:

ஆயில்யன் சொன்னது… @ புதன், ஜூலை 23, 2008 11:00:00 பிற்பகல்

//ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது////

நியாங்களை மீறி தவறு செய்யும் சமூகத்தினை, தவறுகளின் வழியே கடந்து செல்ல நினைக்கும் இந்த மனிதர்கள் உண்மையிலேயே மனம் கனத்துப்போகச்செய்யும் வாழ்க்கையினைத்தான் தேர்ந்தெடுத்துச்செல்கிறார்கள் :(

ஆயில்யன் சொன்னது… @ புதன், ஜூலை 23, 2008 11:14:00 பிற்பகல்

//வாழ்வின் அத்தனை கஷ்டங்களுக்கும் ஆளானவர்கள் இவர்கள்//

உண்மைதான்!

சமூகத்தின் அழுக்கு மனங்களில் மண்டியிட்டிருக்கும் குரூரங்களின் வெளிப்பாடு! இவர்களின் கஷ்டங்களுக்கு காரணமாகியிருக்கிறது!

கிரி சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 2:32:00 முற்பகல்

யாத்ரீகன் அருமையான பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

உங்கள் பதிவில் இருந்து சிலவற்றை குறிப்பிட்டு பாராட்ட நினைத்தேன், அப்படி கூறினால் உங்கள் மொத்த பதிவையுமே போட வேண்டி வரும் போல உள்ளது. அவ்வளவு அருமையாக கூறி இருக்கிறீர்கள். நான் எதோ சும்மா பின்னூட்டம் போடுவதற்காக கூறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே நான் சமீபத்தில் படித்த இடுகைகளில் இதுவே மிக சிறந்த பதிவு.

மிக சிறப்பான எழுத்து நடையில் கூறி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள், தொடர்ந்து இது போல உணர்வு பூர்வமாக எழுத என மனமார்ந்த பாராட்டுக்கள்.

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:40:00 முற்பகல்

ஹ்ம்ம்.. தேர்ந்தேடுக்கிறார்கள் என்பதை விட தேர்ந்தெடுக்க வைக்கப்படுகின்றார்கள் ... ஆம் பலரின் வக்கிரத்தின் வடிகாலாகவே இவர்களின் மீது செலுத்தப்படும் அதிகாரமாக பார்க்கலாம் .. நன்றி ஆயில்யன்

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:40:00 முற்பகல்

பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் மிக நன்றி கிரி.. மீண்டும் வாருங்கள்

தென்றல் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 2:26:00 பிற்பகல்

romba sensitivana topic!!...nalla thoguthurukinga na!!....

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 9:30:00 பிற்பகல்

நன்றி தென்றல் :-)

கருத்துரையிடுக