யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2

Published by யாத்ரீகன் under , , on வியாழன், ஜூலை 24, 2008
வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.

ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5 பெண்கள், முன்னே சொன்ன அடையாளங்களுடன். யாரும் யாரையும் தேவையின்றி தொந்தரவு செய்வதில்லை, ரோட்டின் நடுவே வற்றிப்போக வாய்ப்பிலாத இரவு நேர ஜீவநதி, நாட்டில் ஆண்களாய் உருவகம் செய்யத்தக்க ஒரே நதியென்று நினைக்கிறேன். சாரை சாரையாய் ஆண்கள், குமாஸ்தாக்கள், கூலி வேலை செய்து களைத்தவர்கள், ரிக்க்ஷா இழுத்து வியர்வையில் குளித்தவர்கள் என ஊரின் வறுமைக்கோட்டு ஆண்களிலிருந்து மத்தியதர ஆண்கள் வரை ஒரே இரவில் குவிந்து விட்டார்களோ என்று நினைக்குமளவிற்கு.

எவரும் நிற்பதாய் தெரியவில்லை, நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து கடப்பதா இவர்களின் நோக்கம் என்று சந்தேகிக்கும் வேளையிலே அவர்களின் வேலையும் நடந்துகொண்டே இருக்கின்றது.

இருபுறமும் நிற்பவர்களை மெல்ல பார்த்த எங்களுக்கு இங்கிருந்து தான் அதிர்ச்சி தொடங்கியது. இதுவரை பாலியல் தொழில் என்று கிளு கிளுப்பான சாதரண பார்வையிலிருந்த எங்களுக்கு,அங்கிருந்த 4/5 பெண்களில் குறைந்தபட்சம் இருவராவது சிறுமிகள் என்பதே முதலில் ஜீரணிக்க முடியவில்லை.

சிறுமிகள் என்ற வார்த்தை சாதரண பயன்பாடை போலேவே தோன்றுகிறது, அதன் முழுமையான அதிர்வை கொடுக்க தவறுகின்றது. 15 வயதை கூட தொடாத குழந்தைகள் போலத்தான் இருந்தார்கள், அவர்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கவே எங்கள் மேல் எங்களுக்கு அருவருக்கத்துவங்கியது. சாதரணமாய் பார்த்தால் பள்ளி ஆண்டுவிழாவில் மேக்கப் போட்டு மேடையேரத்தயாராய் இருக்கும் குழந்தைகள் போல இருக்கும் அவர்கள், அடுத்த சில வினாடிகளில் அவர்கள் கடக்கப்போகும் நிகழ்வைக்குறித்த பிரக்ங்கை சிறிதும் இன்றி, அருகில் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, தங்களை பார்பவர்களிடம் சைகைகள் காட்டிக்கொண்டு... சத்தியமாய் மிகக்கொடுமையான தருணங்கள் அவை. மீண்டும் கற்பனை செய்து பார்க்கவே வலிக்கின்றது.

இவர்களுடன் நிற்கும் இளவயது பெண்கள், கண்களில் எந்த ஒரு உணர்ச்சியுமின்றி, அங்கு நிற்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதுபோல நின்றிருக்கிறார்கள். இப்பெண்களில் சிலர் தங்கள் கைக்குழந்தைகளில் இருந்து சிறு குழந்தைகளை கவனித்துக்கொண்டே நிற்கின்றனர்.

அடுத்து பார்த்தது வயதானவர்கள், வாழ்வின் கடைசி 15 வருடங்களில் இருப்பவர்களை போன்று இருப்பவர்கள், அவர்களும் இந்த வரிசையில் நிற்பதை என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பரிதாபமா இல்லை இவர்களையுமா வதைக்க வேண்டுமா என்று கோபமா தெரியவில்லை.

இவர்களுடன் பல திருநங்கைகளும் உண்டு.

தெரு செல்லச்செல்ல குறுகிக்கொண்டே போனது, கூட்டம் இருபுறமும் நின்று கொண்டிருந்தவர்களை இலவசமாய் உரசிச்சென்று கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த குறுகுறுப்போ போய், அருவருப்பு தொடங்கியது. அந்த வயதும், அதுவரை தெரிந்திருந்த கற்பனை உலகமும், எங்களை எதையோ எதிர்பார்த்து அழைத்து வந்திருந்தது.. ஆனால் அங்கே நடந்ததோ, உண்மையின் கசப்பும், குரூரமும் ஒன்று சேரத்தாக்க கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து போய்க்கொண்டிருந்தோம். அங்கு நடந்துகொண்டிருக்கும் எதையும் எங்களால் கனவல்ல நிஜம் என்று ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் குறுகிய தெருக்களின் இருட்டிலும் எங்கள் கண்களின் மிரட்சியையும் பயத்தையும் எளிதாய் இனங்கண்டு கொண்ட நபர்கள் தரகர்களைப்போல எங்களை இழுத்துக்கொண்டு அப்பெண்களருகே நிறுத்தி விலை பேசத்துவங்கி விட்டனர். உதறிக்கொண்டு விலகும் எங்களை பார்த்ததற்கு காசு என மிரட்டவும் துவங்கிவிட்டனர்.

இன்னும் உள்ளே செல்லச்செல்ல, பார்க்கும் விஷயங்களின் வீரியம் அதிகமாகிப்போனது, அதற்கு மேல் எதையும் கவனிக்கும் மனநிலையில் எவரும் இல்லை. உடனே திரும்பிப்போகத்துவங்கினோம்.

வீட்டிற்கு வந்து சேரும்வரை மௌனத்தை மட்டுமே பரிமாறிக்கொண்டோம், அதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட தயங்கினோம். ஒருவழியாய் வீட்டினில் நுழைந்தும் இரவு முழுவதும் அத்தனை குளிரிலும் மனப்புழுக்கம் தாங்காமலா, இல்லை குற்றஉணர்ச்சியா, அருருவருப்பா என புரியவில்லை, மயான அமைதியாய் நிசப்தத்துடன் அன்றிரவு மட்டுமல்ல அடுத்த 4/5 நாட்கள் கழிந்தன.

இந்த நிகழ்வுகளை அன்றைய நாட்குறிப்பில் குறிக்கையில் பல எண்ணங்கள். இங்கே எனக்கு வந்திருப்பதென்ன உணர்ச்சி ?

அழகான பெண்களை எதிர்பார்த்துச்சென்று அவலட்ச்சணமாணவர்களை பார்த்த அருவெறுப்பா ? இல்லை அந்த குழந்தைகளை பார்த்து, இவர்களை பயன்படுத்தும் இடத்துக்கு சென்று விட்டோமே என்று வருத்தமா/குற்றஉணர்ச்சியா ?, இல்லை திருநங்கைகளையும் வயதானவர்களையும் கூட பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களும் உண்டா என்ற அதிர்ச்சியா ? ஒன்றும் உடனடியாய் புரியவில்லை.

உண்மையை வெட்க்கமில்லாமல் ஒப்புக்கொள்வதானால், அருவருப்பில்தான் தொடங்கியது சிந்தனை. தவறுதான், இந்த சிந்தனையில் இருப்பவனுக்கும், அங்கு தெருக்களில் தன் வேட்க்கையை தனித்துவிட திரிபவனுக்கும் பெரிய வித்தியாசமில்லைதான், ஆனால் அப்படித்தான் தொடங்கியது. பின் அந்த குழந்தைகளை நினைக்கையில், எப்படி இவர்களால் முடிகின்றது, குழந்தைகள் என்ற எண்ணம் வரவே வராதா, இங்கிருந்து திரும்பி வீட்டுக்குத்திரும்புகையில் குற்ற உணர்ச்சியின் ஒரு துளிகூட இருக்காதா என தோன்றியது. இதில் வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர் மட்டும் என்றில்லை என்று Park Street-இல் இரவு 10 மணிக்கு மேல் சென்றால் தெரிந்தது.

அந்த நேரத்தில்,ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் "மன்மத எந்திரம்" என்ற கவிதைத்தொகுப்பு படிக்க வாய்ப்பமைந்தது. மனதில் தோன்றியிருந்த முடிவில்லாக்கேள்விகளுக்கு புதியதாய் ஒரு கோணம் அமைந்தது. தோன்றிய கேள்விகள் அனைத்தையும் இப்பொழுது அந்த பாலியல் பெண்களின் பார்வையில் யோசிக்க இன்னும் கொடுமையை இருந்தது. புத்தகத்தின் தலைப்பே அதன் கதை சொல்லியது.

அங்கிருக்கும் எவர்க்கும் அதில் ஈடுபாடு இருக்கப்போவதில்லை, ஆனால் அதையும் ஒரு தொழிலாக கருதிக்கொண்டு வாழும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர். இவர்கள் இல்லையேல் மற்ற பெண்கள் தைரியமாய் நடமாட முடியாது என்று சொல்பவர்களுக்கு, இவர்களை பலிகடாக்களாக்க யாருக்கு யார் அதிகாரம் தந்தது.

10 ரூபாயிலிருந்து இங்கு உங்களுக்கு தேவையானது கிடைக்குமென சொல்லும் தரகர்களின் உறுதியான குரலில் தெரிந்தது என்ன ? எப்படியாயினும் எனக்குத்தேவை சிறிது நேரத்துக்கு ஒரு உடல் என்று வெறி கொண்டு அலையும் ஆண்களின் மேல் உள்ள நம்பிக்கையா ?

எங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அங்கு நடமாடும் காவல்துறை. இவர்களை மீட்டெடுப்பது என்பது நடக்கக்கூடிய விஷயமில்லை, அதைத்தவிர உருப்படியாய் இவர்களுக்கு பாலியல் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவரத்துடிக்கும் சமூக அமைப்புகள். என அத்தனை பேரும் இவர்களைச்சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடன், இத்தகைய இடமொன்று தங்களிடையே உண்டென்பதை தங்கள் கொல்கத்தா வாழ்வின் மற்றுமொரு அங்கமாக எடுத்துக்கொண்டு அருவருக்காமல்/தயங்காமல், தனக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லாததைபோல நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன பெங்காலி நண்பர்கள்தான் சராசரியான ஒரு நடுத்தரவர்க்க பெங்காலி.

இதற்குப்பின் சோவாபஜாரை கடக்கும்பொழுதெல்லாம் எங்களையுமறியாமல் ஒரு குற்ற உணர்வில் எங்கள் மனம் கணக்கத்துவங்கியது மட்டுமின்றி இத்தகைய விஷயங்களில் எங்களின் பார்வை மாறியது.

பி.கு:
2 வருடங்களுக்கு பிறகு ஒரு விடுமுறையில் துர்கா பூஜை காண சென்றிருந்தபோது, துர்க்கா சிலை வடிக்கும் சிற்பிகள் முதல் சிலையை இப்பெண்களின் காலடி மண்கொண்டு செய்வது தெய்வீகம் என்ற நம்பிக்கை இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்று கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துர்கா பூஜையின் 3 முக்கிய நாட்களில் கொல்கத்தா நகரெங்கும் விழாக்கால பக்தி மயமாக, அன்றும் சோனாகாச்சியில் கூட்டத்துக்கு குறைவில்லை, பலத்த போலிஸ் காவலும் அங்கிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதை கண்டதும் என்ன மதம், என்ன நம்பிக்கை, என்ன சமூகம் என்று கோபங்கள் அதிகமாகிப்போனது.

23 மறுமொழிகள்:

rapp சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 1:44:00 முற்பகல்

மிக மிகக் கொடுமையான விஷயம். உங்களுடைய அனுபவத்தையும் வருத்தங்களையும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களுடைய ஆதங்கத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்

கிரி சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 2:27:00 முற்பகல்

யாத்ரீகன் அருமையான பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

உங்கள் பதிவில் இருந்து சிலவற்றை குறிப்பிட்டு பாராட்ட நினைத்தேன், அப்படி கூறினால் உங்கள் மொத்த பதிவையுமே போட வேண்டி வரும் போல உள்ளது. அவ்வளவு அருமையாக கூறி இருக்கிறீர்கள். நான் எதோ சும்மா பின்னூட்டம் போடுவதற்காக கூறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே நான் சமீபத்தில் படித்த இடுகைகளில் இதுவே மிக சிறந்த பதிவு.

மிக சிறப்பான எழுத்து நடையில் கூறி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள், தொடர்ந்து இது போல உணர்வு பூர்வமாக எழுத என மனமார்ந்த பாராட்டுக்கள்.

கானா பிரபா சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 5:33:00 முற்பகல்

நெஞ்சைக் கனமாக்கியது இந்தப் பகுதி

கானா பிரபா சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 5:33:00 முற்பகல்

நெஞ்சைக் கனமாக்கியது இந்தப் பகுதி

CVR சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 5:55:00 முற்பகல்

உங்கள் அனுபவங்களை மிக அழகாக கோர்வையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!
பாராட்டுக்கள்!

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:35:00 முற்பகல்

வாருங்கள் rapp

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:35:00 முற்பகல்

மிகவும் நன்றி கிரி, இத்தகைய ஊக்கங்கள் உற்சாகப்படுத்துகின்றது.. மீண்டும் வருக ..

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:35:00 முற்பகல்

ஹ்ம்ம் என்ன பண்ணுவது பிரபா, இனிமையான நினைவுகள் உண்டு.. இருந்தாலும் திடீரென கிளம்பிய இந்த நினைவுகளுக்கு வடிகால் வேறு தெரியவில்லை ..

யாத்ரீகன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 8:36:00 முற்பகல்

நன்றி தல .. உண்மைத்தமிழன் range-க்கு பதிவுகள் நீளமாகிட்டே போகுதேன்னு நெனச்சிட்டு இருந்தேன் ..:-)

வெண்பூ சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 2:17:00 பிற்பகல்

அற்புதமான பதிவு யாத்ரீகன். அங்கே சென்றதை மறைக்காமல் எழுதிய உங்கள் துணிச்சலுக்கு ஒரு சல்யூட். அதேநேரம் சமூகத்தின் மீதான உங்கள் கோபம் மிகவும் நியாயமானதே. ஆனால் அதற்கான தீர்வுதான் என்ன?

ஆயில்யன் சொன்னது… @ சனி, ஜூலை 26, 2008 5:53:00 பிற்பகல்

manathai pathikum vakaiyil irunthathu intha pathivu enpathu unmai!

ethaniyo sothanikal manitharkalin vazhkaiyil vanthuponalum ithu pontrathoru kodumaiyan sothanikal santhithu vaalum antha manitharkal ninaikaiyil nenjil yeno konjam sumai kudukirathu:(((

VENKATESHWARAN k சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 2:49:00 பிற்பகல்

வணக்கம். நிரம்ப நாள் கழித்து ஒரு நல்ல எழுத்தாற்றல் மிக்க ஒரு நபரின் வாழ்க்கை சுவடினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது . கல்லூரி பருவத்தில் நுழைந்து இரண்டு வருடம் ஆன எனக்கு உங்களின் அனுபவம் ஒரு வழிகாட்டி . தொடர்ந்து எழுதவும் . மகிழ்ச்சி

தென்றல் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 2:52:00 பிற்பகல்

>>>போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.>>>>

this caption holds perfect for you!!.....romba suvarasiyamana pathivu!!....kaithattugal

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 9:55:00 பிற்பகல்

நன்றி வெண்பூ.. இவர்களை மீட்டெடுப்பது என்பது அங்கு இவர்களை சுற்றி நிகழும் அரசியலில் மிகவும் கடினமானது .. (லோக்கல் தாதாக்கள் (கங்குலி அல்ல) முதல் , பெரும் காம்ரட்கள் வரை இவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் வலைப்பின்னல் மிகப்பெரியது ) .. இத்தனையும் மீறி அங்கிருக்கும் குழந்தைகளை, நல்ல கல்வி கொடுத்து வெளியேற்றுவதே சாத்தியமான, பயனுள்ள தீர்வு என தோன்றுகின்றது.. அதை செய்ய அவர்களின் உள்ளே நெருங்குவதும் மிக கடினமானது மட்டுமின்றி, ஆபத்தானதும் கூட.. (அவர்களின் நம்பிக்கையை பெரும் வரை) .. அதை இந்த "Born Into Brothels" ஆவணப்படம் தெளிவாக படம்பிடித்துள்ளது .. இக்குழந்தைகளுக்கு எயிட்ஸ் இருந்தாலே பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள பல NGO-க்களே தயங்குகின்றன..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 10:02:00 பிற்பகல்

ஹ்ம்ம்.. ஆமாம் ஆயில்யன், ஆனால் இத்தகைய சூழலிலும் வளரும் குழந்தைகளை இந்த "Born Into Brothels" ஆவணப்படத்தில் பாருங்கள்.. கப்பி சொல்லிய மாதிரி, வாழ்வின் பெரும் புரிதல்களை எளிதாய் பெற்று விட்டும் குழந்தைத்தனத்துடன் இருக்கின்றனர். அதில், "நிறைய பணமெல்லாம் வேண்டாம், பணத்தினால் சந்தோஷம் வருவதில்லை" என்று கூறும் ஒரு சிறுமி, "வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் சகஜம்.." என்பது போல கூறும் ஒரு சிறுவன் .. என , நம்பிக்கையுடன் வாழும் இவர்களுக்கு சமூகம் ஒரு வாய்பளிக்கத்தான் வேண்டும் ..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 10:02:00 பிற்பகல்

நன்றி தென்றல் ..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூலை 28, 2008 10:05:00 பிற்பகல்

நன்றி வெங்கடேஷ்.. கல்லூரிக்காலங்களிலேயே வெளி உலக நிகழ்வுகளை பல கோணங்களில் தெரிந்து கொள்வது மிகவும் சுவாரசியமானது மட்டுமின்றி, நம்மை மாற்றி அமைக்கும் தருணங்கள்.. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் :-) .. மீண்டும் வாருங்கள் ..

Athi சொன்னது… @ புதன், ஜூலை 30, 2008 11:21:00 பிற்பகல்

Machi... Really its shocking'da!! When I saw Mahanadhi, I thought, she must be one of a girl among the ladies. But, if the count is so much, then it really shows our irresponsible govt & men's sexual urge without considering anything. I doubt whether the ppl coming thr really know what is sex. For them, sex is purely sex. Its again 'coz of lack of awareness among our ppl. Atleast govt shud take action to exclude child abuse in these type of areas. Before that, ppl should change. Blaming only on Govt will never solve the issue. :-(

VJ Prakash... சொன்னது… @ வியாழன், ஜூலை 31, 2008 7:20:00 பிற்பகல்

அட்டகசாமான பதிவு ரவுடி..
மனதை கலங்கடித்து விட்டது !
அந்த இரவு மனம் கலகமடைவதற்கான காரணங்கள் என்னென்ன இருக்கலாம் என்ற விவரிப்பு அருமை !
உனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட இவை அனைத்தையும் மனம் விட்டு பேச முடியாது...ஆகவே , இந்த வலை பதிவு ... நீ சொன்ன்னது போல உன் நினைவுகளுக்கு சரியான வடிகால்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது… @ வியாழன், ஜூலை 31, 2008 7:56:00 பிற்பகல்

//15 வயதை கூட தொடாத குழந்தைகள் போலத்தான் இருந்தார்கள்,//
மனம் இறுகி போனது யாத்ரிகன் .!

ஜன்னல் சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 02, 2008 5:21:00 பிற்பகல்

அருமையான பதிவு.


வருகைக்கு நன்றி
நல்ல நகைச்சுவை உணர்ச்சி ஐயா உங்களுக்கு
ஒரு விசயத்தை எப்படி சொல்லவேண்டும் என்று உங்களுக்கு தெரிகிறது.

ஜோஸ்யம் சொல்கிறேன் உங்களுக்கு
உங்கள் அருகாமையை அனைவரும் விரும்புவர்
நீங்கள் இருக்கும் இடம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
தொட்ட காரியம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றிதான்.
இந்த கஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு நல்ல நண்பர் உங்களுக்கு கிடைப்பார்.

இந்த வீடு என் சிறிய பாட்டியுடையது.
இந்த இடம் நிறைய மகிழ்ச்சிகளையும்,இனிய நினைவுகளையும்
எனக்கு கொடுத்துள்ளது.

வாழ்க உங்கள் ரசனை.

ஜன்னல் சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 02, 2008 5:21:00 பிற்பகல்

அருமையான பதிவு.


வருகைக்கு நன்றி
நல்ல நகைச்சுவை உணர்ச்சி ஐயா உங்களுக்கு
ஒரு விசயத்தை எப்படி சொல்லவேண்டும் என்று உங்களுக்கு தெரிகிறது.

ஜோஸ்யம் சொல்கிறேன் உங்களுக்கு
உங்கள் அருகாமையை அனைவரும் விரும்புவர்
நீங்கள் இருக்கும் இடம் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
தொட்ட காரியம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றிதான்.
இந்த கஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு நல்ல நண்பர் உங்களுக்கு கிடைப்பார்.

இந்த வீடு என் சிறிய பாட்டியுடையது.
இந்த இடம் நிறைய மகிழ்ச்சிகளையும்,இனிய நினைவுகளையும்
எனக்கு கொடுத்துள்ளது.

வாழ்க உங்கள் ரசனை.

துரியோதனன் சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 04, 2008 10:13:00 முற்பகல்

மனதை கனக்க வைத்த பதிவு.

கருத்துரையிடுக