யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

மரணபயம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 06, 2006

ரோஜாக்களின் வாசனையை நுகர்ந்தால் என்ன தோன்றும் உங்களுக்கு ? உங்கள் முதல் காதல் ? (அ) காதலன்/லி (அ) மனைவி (அ) மென்மை (அ) இயற்கையின் அழகு என்று கவிதை எழுதப்புறப்படும் எண்ணமா ?

எனக்கு தோன்றுவதெல்லாம் மூச்சை முட்டும் மரணவாசனை. கட்டாயம் இது என்றோ வரப்போகும் மரணத்தைப்பற்றிய பயமல்ல... சிறுவயதிலிருந்தே ரோஜாப்பூவின் வாசனையை தனியே நுகர்ந்ததைவிட, சாவு வீட்டிலோ, ஊர்வலத்திலோ நுகர்ந்ததே எனக்கு அதிகமாயிருந்திருக்கின்றது. சாவைப்பற்றிய அறிமுகத்தோடு இலவசமாக ரோஜாப்பூவின் வாசனையும் பரிச்சயமானதுதான் காரணம்.

எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் ரோஜாப்பூவின் தனி வாசனை கூட என்னை மரணம் சம்பவித்த வீட்டின் நடுவே நிற்கும் உணர்வை கொண்டுவிட்டுவிடுகின்றது. அது காதல்-உயிர் என்று பினாத்திக்கொண்டு நண்பர்கள் கொண்டுவரும் ரோஜாவின் மணத்தின் கூட.

செய்தித்தாள்களில் மரணச்சம்பவங்கள் படிக்கும் போதோ, தொலைக்காட்சிகளில் காணும்போது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி,

இறப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ? அதுவும் தான் உறுதியாக சாகும் நிலையில் இருக்கின்றோம் என்று அறிந்தவர்களின் அந்த நொடி மன ஓட்டம் என்னவாக இருக்கும் ? மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்ன யோசித்து கொண்டு இறந்திருப்பார்கள் ? வலிக்குது என்றா ? யாரையும் விட்டு விட்டு போகின்றோம் என்றா ? எதையும் முடிக்காமல் போகின்றோமென்றா ? அய்யோ போகின்றோமே என்றா ? தான் போகப்போவது சொர்க்கமா இருக்கனும் என்றா ? கடவுளைப்பார்க்கப்போகின்றோம் என்ற கேள்வியுடனா ?

இத்தனையும் தெரிந்துவிட்டால் மரணத்தின் சுவாரசியமே தொலைந்துவிடுமே என்றும் சமாதானப்படுத்திக்கொள்வேன்.

இத்தனைக்குமான பதில் இவ்வளவு விரைவில் தெரியப்போகின்றது என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

ஒரு மாதமாகிவிட்டது எங்கும் புதிய இடங்களுக்கு பயணம் செய்து என்று, நண்பன் திருமணத்தோடு குற்றாலம் சென்றோம். முடித்துவிட்டு திரும்புகையில் பேரையூரில் ஒருநாள் தங்க முடிவு செய்தோம் (மறக்க முடியாத நினைவுகளை தரப்போகின்றது என்று அறியாமல்).
காலையில் எழுந்து நண்பனின் தோட்டத்தில் பம்ப்செட்டில் குளிக்க முடிவாகி போனபோது, அங்கிருந்த கிணற்றைப்பார்த்ததும் ஆசை தோன்றியது. என்னதான் தூசி,இலைதழை இருந்தாலும் கிணற்றில் குளிக்கும் சுகம் அறிய ஆசையானது. நீச்சல் ஒன்றும் கைவந்த கலையில்லை, அதனால் அந்த காட்டில் வேலை பார்ப்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆட்டம் ஆரம்பித்தது.

ஒவ்வொருவராய் ஆரம்பிக்க, என் முறையும் வந்தது. மனதுக்குள் மெல்லிய பயம் கலந்த உற்சாகம், முதல் முறையாய் கிணற்றுக்குளியல், குளிர்ந்த நீர் உடலெங்கும் சிலிர்ப்பைத்தூண்ட.. மெல்ல இறங்க ஆரம்பிதேன்.

குதித்து கிணற்றின் நடுவே செல்ல செல்ல, திடீரென மூழ்க ஆரம்பித்தேன் (தண்ணீரைப்பற்றி என்றுமே ஒரு பயம் இருந்திருக்கின்றது அதுதான் காரணமோ ?, பொதுவாகவே டவுன் பசங்களுக்கு இந்த பயம் இருப்பதை தவிர்க்க முடியாது போல)

மூழ்க ஆரம்பித்ததும் அலறவில்லை, ஏற்கனவே தெரிந்திருந்தபடி கையையும் காலையும் வைத்து தண்ணீரை கீழே தள்ள மேலே எழும்ப ஆரம்பித்தேன். அப்போது நான் பண்ணிய தப்பு, நீந்த துவங்காமல் ஒரு பிடியை எதிர்பார்த்து கையை நீட்ட ஆரம்பிக்க, மீண்டும் மூழ்க தொடங்கினேன். படியில் அமர்ந்திருந்த தோட்டக்காரரை, தண்ணியில் முன்னமே இறங்கி துணைக்கிருக்க சொன்னது நல்லதாய் போனது.

என்னை காப்பாற்ற அருகில் வந்தவரை எனக்கு சொல்லியிருந்த அறிவுரையெல்லாம் மீறி பிடித்து தொங்க, அவருக்கோ என் உச்சிமுடி தட்டுப்படாமலிருக்க, என்னுடன் சேர்ந்து முழ்க தொடங்கினார்.

அய்யோவென்று கத்தியபடி என்னை உதறிவிட்டு படிக்கு சென்று அங்கிருந்து அய்யோ, அய்யோ என்று கத்த தொடங்கினார்.

நானே மீண்டும் மேலே எழும்பி, அதே தவறை செய்யத்தொடங்கினேன். இந்த முறை வெளியே ஆதியின் (கல்லூரி நண்பன்) அய்யோவென்ற கூச்சலும் சேர்ந்தே கேட்கத்தொடங்கியது.

மூளையில் எந்த சிந்தனையும் இல்லை, பயமோ, பதட்டமோ இல்லை, மூழ்க தொடங்கினால் என்ன செய்யவேண்டுமென்று சொன்ன அறிவுரைகள் எதுவும் தோன்றவில்லை, கடவுள், சொர்க்கம், நரகம், நிறைவேறாத ஆசைகள்.. என என் கேள்விகளில் இருந்த எதுவுமே வரவில்லை சிந்தனைக்கு.

எப்படியோ கிணற்றுப்படியை பிடித்து வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்த அந்த நொடியும் ஒன்றுமே மனதில் ஓடவில்லை, பதற்றமும் இல்லை, இதயத்துடிப்பு எகிறியிருக்கவேண்டும் ஆனால் அதுவும் இல்லை. ஏனென்று புரியவில்லை.

பதில் கிடைத்துவிட்டது, ஆனால் புது கேள்வியும் தோன்றிவிட்டது, ஏன் இப்படி என்று :-)

28 மறுமொழிகள்:

ilavanji சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 8:28:00 PM

எனக்கும் ரோஜா வாசனைனா அது இழவுவீடுதான் நெனப்புல வருது! :)

ஆனா உங்க அனுபவம் படிக்கையில திக்திக்குங்குது! உங்களுக்கு ஒன்னுமில்லைங்கறீங்க!!!

மரணம் வேறு! மரணத்தினை பற்றிய பயம் வேறு போல!

பெயரில்லா சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 8:56:00 PM

good man,, 'selvaragavan' type of thought processum irukku unkitta...

--Satti

Maayaa சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 10:15:00 AM

hey..
did u say 'peraiyoor'. that is my paati's sondha oor..nobody lives there now.. do u have photos of that place??

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 11:32:00 AM

@இளவஞ்சி:
>> எனக்கும் ரோஜா வாசனைனா அது இழவுவீடுதான் நெனப்புல வருது!

நல்லவேளை எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதுனு நினைப்பேன்.. :-)

என்னனு தெரியல இளவஞ்சி... வெளியே வந்ததும் எல்லோரும்.. ரிலாக்ஸ்.. கூல்டவுன்னு சொல்ல.. ஒண்ணுமில்லாம இருந்தது ஏன்னே புரியல..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 11:35:00 AM

@satti:
அடப்பாவி.. உயிர் போகத்தெரிஞ்சதப்பத்தி சொன்னா.. செல்வராகவன் type thought processing-ஆ... லொள்ளுடா உனக்கு... எப்படியோ.. பாராட்டுக்கு நன்றி..( பாராட்டுதானே?) ;-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 11:38:00 AM

@ப்ரியா:
நீங்கள் சொல்லும் பேரையூர், மதுரை அருகே T.கல்லுப்பட்டி அருகே உள்ளது தானா ? அமைதியான ஊர்.. முற்றிலும் கிராமமும் கிடையாது, டவுனும் கிடையாது... படங்கள் உள்ளன... கூடிய விரைவில் அனுப்பி வைக்கின்றேன்...

இருந்தாலும் அம்மணி, உங்க ஊர்பாசம் சிலிர்க்க வைக்குது.. அவனவன் மரண்பயத்தை பத்தி பேசையில கூட உங்களுக்கு உங்க ஊர் பேர்தான் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு பாருங்க ;-)
(Juz kidding..)

Ravindran Ganapathi சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 7:07:00 PM

எனக்கு தெரிந்து ரோஜா வாசனை என்னை இழுத்து செல்வது கல்யாண மண்டபத்திற்கு தான். கூடவே வெட்றிலையும் பாக்கின் வாசனையும் !!!

பயம் இருக்கனும், பயம் தான் மனுசன காப்பாத்தும்.

உதயமூர்த்தியின் புத்தகங்களில் தேடிப் பாரேன், முக்கியமாக "எண்ணங்கள்" மற்றும் "ஆத்ம தரிசனம்". Lot of case studies there, it will be a good reading...

Unknown சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 2:38:00 PM

நான் செத்துப் பொழைச்சவன்டா என பாட்டு எல்லாம் பாடலையா?

வித்தியாசமாகவே எழுதியிருக்கிறீர்கள் - ஒரு விபரீதமான நிகழ்ச்சியை. இனிமேலாவது கவனமாக இருங்கள்.

(அப்படியே நான் எழுதிய உயிர் பற்றிய பதிவையும் படியுங்கள் - கவனமாக இருப்பது எவ்வளவு முக்கியம் எனத் தெரியும்!).

நன்றி!

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:25:00 PM

@ரவி:
>>> பயம் தான் மனுசன காப்பாத்தும் <<

ஆனா அதுவே அவனை ஒரு அடி முன்னே எடுத்து வைக்க முடியாத அளவுக்கு அமிழ்த்திரக்கூடாதுல... :-)

ஏற்கனவே சில புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கின்றாய்... படிக்காத கையிருப்பு கரைந்து வருகின்றது.. சீக்கிரம் படித்துவிட்டு என் கருத்தையும் பதிகின்றேன்...

இத்தனை நடக்கும் முன்பு... நீ ஒரு முறை கல்லூரி அருகே கிணற்றில் செய்த கூற்றை ஆதி சொல்லிக்கொண்டிருந்தான் :-))

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:27:00 PM

@துபாய்வாசி:
நன்றி துபாய்வாசி.. :-) .. கட்டாயம் இனி மேலும் கவனமாக இருப்பேன்.. , நேரம் கிடைக்கும் போது கட்டாயம் படிக்கின்றேன்....

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:28:00 PM

@துபாய்வாசி:
பாட்டு தானே.. அதே பாடல் தான் பாடினேன்.. ஒரு புதிய வரி சேர்த்துக்கொண்டு..
அது..

"ரெண்டுபேரை சேர்த்து கூட்டிப்போகத்தெரிஞ்சவன்டா... " (தோட்டக்காரர் & ஆதி, என் கல்லூரித்தோழன்..) :-)))

Sud Gopal சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:40:00 PM

//சிறுவயதிலிருந்தே ரோஜாப்பூவின் வாசனையை தனியே நுகர்ந்ததைவிட, சாவு வீட்டிலோ, ஊர்வலத்திலோ நுகர்ந்ததே எனக்கு அதிகமாயிருந்திருக்கின்றது.//

அய்யோ...

//அது காதல்-உயிர் என்று பினாத்திக்கொண்டு நண்பர்கள் கொண்டுவரும் ரோஜாவின் மணத்தின் கூட.//

அது சரி.மல்லீப்பூவு வாசம் பார்த்த மூக்குக்கு ரோசாவைப் புடிக்குமா என்ன??? ;-)

மரணம் பற்றிய பதில் தெரியா கேள்விகள் ரொம்ப எழுப்பியிருப்பீங்க.பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி விடுங்க.

வாத்தியார் மேலே சொன்னா மாதிரி "மரணம் வேறு! மரணத்தினை பற்றிய பயம் வேறு போல!"

ப்ரியன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 3:57:00 PM

எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் உண்டு செந்தில்.கிணற்றில் மூழ்கிய அனுபவம் :) நீச்சல் கற்றுக் கொள்ளாத காலத்தில் அது அதைப்பற்றி என்பதிவில் எழுதுகிறேன்.

/*மூளையில் எந்த சிந்தனையும் இல்லை, பயமோ, பதட்டமோ இல்லை, மூழ்க தொடங்கினால் என்ன செய்யவேண்டுமென்று சொன்ன அறிவுரைகள் எதுவும் தோன்றவில்லை, கடவுள், சொர்க்கம், நரகம், நிறைவேறாத ஆசைகள்.. என என் கேள்விகளில் இருந்த எதுவுமே வரவில்லை சிந்தனைக்கு. */

இது உண்மை செந்தில் சென்ற வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன்.நானும் அப்பாவும் சாலையை கடக்க இருபக்கமும் பார்த்து இடதுபுறமிருந்து ஒரு கார் வந்ததால் அப்பாவை பொறுங்கள் எனச் சொல்லி அது கடந்த உடன் வலப்பக்கம் மறுபடியும் பார்க்காமல் கடக்க முயற்சித்தேன் அதுதான் என் தவறு வலபுறமிருந்து ஒரு வேன் வேகமாக வந்திருக்கிறது முன்னால் கால் எடுத்து வைத்தவன் எதானாலோ உடலை பின்னால் கொண்டுவந்தேன் அதற்கு பிறகுதான் தெரியும் வேன் கடந்தது.பதற்றம் ஏதும் இல்லை அப்பாதான் சொன்னார் என்னைப்பார்த்து வரசொல்லிட்டு நீ பாக்காமே வரே...உண்மையில் அன்று எனக்கும் மரணத்திற்கும் எனக்கும் ஒரு இன்ச் தான்.

குழலி / Kuzhali சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 4:08:00 PM

//எனக்கு தோன்றுவதெல்லாம் மூச்சை முட்டும் மரணவாசனை. கட்டாயம் இது என்றோ வரப்போகும் மரணத்தைப்பற்றிய பயமல்ல... சிறுவயதிலிருந்தே ரோஜாப்பூவின் வாசனையை தனியே நுகர்ந்ததைவிட, சாவு வீட்டிலோ, ஊர்வலத்திலோ நுகர்ந்ததே எனக்கு அதிகமாயிருந்திருக்கின்றது. சாவைப்பற்றிய அறிமுகத்தோடு இலவசமாக ரோஜாப்பூவின் வாசனையும் பரிச்சயமானதுதான் காரணம்.

எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் ரோஜாப்பூவின் தனி வாசனை கூட என்னை மரணம் சம்பவித்த வீட்டின் நடுவே நிற்கும் உணர்வை கொண்டுவிட்டுவிடுகின்றது.
//
எனக்கும் அதே நினைப்புதான்

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 5:13:00 PM

@சுதர்சன்:
:-D ஆனாலும் மல்லீப்பூ வாசமும் மூச்சை முட்டுவது போல தோன்றும், சாமந்தினு ஒரு பூ இருக்குல.. அது ரொம்ப நாள் வாடாம இருக்கும், மீனாட்சி அம்மன் கோவில்ல , அம்மன் சன்னதியில மாலை தொடுக்கையில அந்த வாசனை ரொம்ப பிடிக்கும்.. மத்தபடி... பூவெல்லாம் செடியில இருக்கும்போது பார்த்து இரசிக்கத்தான்.. நுகரவெல்லாம் மாட்டேன் ;-)

தெரிஞ்சா இங்க தம்பட்டம் அடிக்காம வேற எங்க.. கட்டாயம் சுதர்சன்.. :-D

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 5:14:00 PM

@ப்ரியன்:
>>> அன்று எனக்கும் மரணத்திற்கும் எனக்கும் ஒரு இன்ச் தான்.

பார்த்து கவனம் ப்ரியன்..

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 5:20:00 PM

@குழலி:
ஹீம் நீங்களுமா :-) இதை நண்பர்களிடம் சொன்னா ஒரு மாதிரி பார்ப்பாங்களே.. ஏன்டா இப்படினு :-)

Sud Gopal சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 7:30:00 PM

//பூவெல்லாம் செடியில இருக்கும்போது பார்த்து இரசிக்கத்தான்.. நுகரவெல்லாம் மாட்டேன் ;-)//

ரைட்டேய்...;-)

நாமக்கல் சிபி சொன்னது… @ வியாழன், ஜூன் 08, 2006 10:26:00 PM

//எனக்கும் ரோஜா வாசனைனா அது இழவுவீடுதான் நெனப்புல வருது! :)
//

எனக்கும் அப்படித்தான் யாத்ரீகன் மற்றும் இளவஞ்சி!

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 09, 2006 2:09:00 PM

@சுதர்சன்:
ஆரம்பிச்சிடாங்கடோய் :-))

@சிபி:
பரவாயில்ல ஊருக்குள்ள பலபேர் இப்படித்தான் இருக்காக.. :-))

Vanjula சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 11, 2006 1:02:00 AM

Senthil,
muthal murai unga blog..priya oda blog lernthu..romba pudichu erunthuthu. ur writings infuse a totally different kinda feel..enna nu therla. but superb.
Nama ellarume yathreegargal thane? entha payanam sugam.
hamsa

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 11, 2006 1:21:00 AM

@ஹம்சா:
வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஹம்சா :-) இதுபோன்ற பாராட்டுக்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றது..

ஆம் நம் வாழ்க்கை எனும் பயணம் இந்த வலைப்பூவின் தலைப்பில் குறிப்பிட்டிருக்கின்ற மாதிரி.. " போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை "

உங்கள் பயணம் மகிழ்ச்சியும், சுவாரசியமும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்..

மீண்டும் வாருங்கள்... !!!

வடுவூர் குமார் சொன்னது… @ புதன், ஜூன் 21, 2006 6:28:00 AM

இந்த பதிவை உபயோகப்படுத்த உங்கள் அனுமதி தேவை.
நன்றி

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 21, 2006 10:33:00 AM

@வடுவூர் குமார்:
வாங்க குமார் வணக்கம்.. கட்டாயம் பயன்படுத்திக்கலாம்.. இதுக்கெல்லாம் என்னங்க அனுமதி கேட்டுக்கிட்டு.. ஆராய்ச்சிக்கட்டுரையா இருந்தாவேணா அதுல நியாயம் இருக்கு.. இது பயத்துல உளறுனது :-) .. நன்றி குமார்...

வடுவூர் குமார் சொன்னது… @ புதன், ஜூன் 21, 2006 7:29:00 PM

நன்றி.என் பதிவை போட்டபிறகு சொல்கிறேன்.முடிந்தால் படிக்கவும்.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 21, 2006 8:24:00 PM

அதென்ன முடிந்தால்.. கட்டாயம் படிப்போம் இதிலென்ன கஞ்சத்தனம் :-)

வடுவூர் குமார் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 6:03:00 AM

யாத்ரீகன்
இங்கே பார்க்கவும்.
http://madavillagam.blogspot.com/2006/06/blog-post_22.html#comments

VSK சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 25, 2006 9:10:00 AM

ரோஜாப்பூ வாசம் தெரிஞ்சுதா அப்போ?!!
:))

சற்று சீரியஸாக ஒரு அலசல்!

-மனோதத்துவ ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பார்த்தால், நீங்கள் வாழத் துடித்திருக்கிறீர்கள் அப்போது.

சாகப் போகிறோம் என்ற நினைவே வரவில்லை.

வாழ்க்கையில் தான் இது போன்ற உறைந்து போகும் நிகழ்வுகள் சாத்தியம்.

மரணத்தைப் பற்றி எண்ண இன்னும் கொஞ்ச நேரமாகியிருக்க வேண்டும்.

ஒரு 10 - 15 மடக்கு தண்ணிர் குடித்திருக்க வேண்டும்.

மூழ்கி மீண்டும் எழ நேரம் அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், இது நீங்கள் உறைந்து போன தருணம்.

அவ்வளவுதான்.

ஆனால், இதுதான் கொஞ்சம் கவலைக்குரியது.

உதவிக்கு யாரும் இல்லையென்றால், செயலிழந்தே செத்துப் போயிருப்பீர்கள்.

மற்றொரு நண்பர் சொன்னது போல, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள்.

உங்கள் மனநிலை அப்படி.

மன வாசனை வராமல், பிணவாசனை வருவதும் இதை உறுதிப்படுத்துகிறது.

கூடவே, உங்கலது அறிமுக வாக்கியத்தயும் கவனியுங்கள். [போய்ச்செரும் இடத்தை விட....]

வேறு சிலர் அப்போதுதான் வீறிட்டு எழுவர்.

அவர்கள் துடிப்பவர்கல் அல்ல; வாழ்பவர்கள்.

நீங்கள் விவரமாக விவரித்ததால் எழுதினேன்.

தவறாக எண்ண வேண்டாம்.

கருத்துரையிடுக