யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கதைசொல்லி அனுபவம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006

பல வருடங்களாய் நாட்குறிப்பு எழுதிவருவதையும், தமிழ் 1, தமிழ் 2 என தேர்வுதாள்களில் எழுதியதை தவிர கதை எழுதி எங்கும் பழக்கமில்லை எனக்கு. தேன்கூட்டின் சென்ற போட்டியான "தேர்தல் 2060" பற்றிய கதைகளை படிக்கும்போது கூட எந்த ஆர்வமும் வந்துவிடவில்லை. இந்த முறை, போட்டிக்கான கதை/கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது நாமும் கடந்து வந்தது தானே "இந்த விடலைப்பருவம்" , ஏன் ஒரு முறை முயலக்கூடாது என யோசனை.


முதலில் வந்த தடைக்கல், இதுவரை வந்த எந்த ஆக்கத்தின் பாதிப்போ, ப்ரதிபலிப்போ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், அதன்பின், வித்தியாசமான கதைசொல்லும் முறை. அட இவ்வளவுதானே, பார்த்துக்கொள்ளலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் தடையை தாண்டுவதே கடினமாய் ஆனது, காரணம் , தலைப்பில் இருக்கும் எல்லா கோணங்களையும் எடுத்து எழுதிவிட்டர்கள். எதை தொடுவது என்று நினைத்தாலும், முந்தின தினம் படித்தவைகள் நினைவுக்கு வந்து, அதுதான் அந்த கதையில் இருக்குதே என தோன்ற ஆரம்பித்தது.

இதை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்வுதான், விடலைப்பருவம் விடைபெரும்போது, அந்த பருவத்தில் தோன்றிய எண்ணங்கள் எப்படி மாற்றம்பெருகின்றது என்ற என் ஆக்கத்திற்கான கருவானது. என்னதான் பிறர் கதைகளை படிக்கும்போது நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் என தோன்றினாலும், வித்தியாசமாய்த்தான் இருந்தது திடீரென தினசரி நிகழ்வுகளில் இருந்து தாக்கம் உருவானது.

கதை சொல்லும் முறையில் ரொம்ப வித்தியாசமாய் இல்லாமல் இயல்பான மதுரை பேச்சுத்தமிழ் நடையில் இருக்கட்டும் என்று முடிவு பண்ணியது வேண்டுமானால் எளிதாய் இருந்தது ஆனால் அதை கதையில் கொண்டுவருவதற்கு கொஞ்சம் அதிகமாய் தான் மெனக்கெட வேண்டியிருந்தது. வேண்டுமென்றே வார்த்தைகளை சிதைப்பதும், சொற் குற்றங்கள் அதனால் உருவாவதும், அப்படி தெரிந்தே எழுத கஷ்டமாய் தான் இருந்தது.

எழுத/தட்டச்ச ஆரம்பிக்கையில் மனதில் இருந்தது கதை ஒரு மாதிரியாகவும், முடித்தபின் ஆங்காங்கே அது வேறு மாதிரி போனதையும் கவனிக்க முடிந்தது. மனதில் தோன்றிய நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கொண்டுவருவதில் இருந்த சிரமங்கள் புரிய ஆரம்பித்தன.

கோர்வையாக நிகழ்வுகளை கொண்டு வந்தபின், நீளத்தை கண்டு பயந்துவிட்டேன். இவ்வளவு நீளமான கதையை படிப்பதற்கு எனக்கே அயற்சியாய் இருந்தது. ஆரம்பம் என்னவென்று பாதி வருகையிலேயே மறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு :-)

நீளத்தை குறைப்பதற்கு மிகவும் திறமை வேண்டும்போல, தேவையில்லை என எந்த பகுதியை தீர்மானிப்பதும், தேவைப்படும் பகுதியை சுருக்கினாலும் அது சொல்ல வந்ததை அதே அளவு வலிமையுடன் சொல்ல வேண்டும்.

முடிவு... அடுத்த சவால், என்னதான் சுவாரசியமாய் கதை சொல்லியிருந்தாலும் முடிவு ஒன்றே படிப்பவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது. தெரிந்த/யூகிக்க முடிவதாயினும் அதை சொல்லும் விதமும் அழுத்தமாய் இருக்கவேண்டுமென்பது கஷ்டமாய் இருந்தது.

கதை படித்த சிலர், அந்த வட்டார வழக்கை கவனித்து பாராட்டியதும், ஆச்சர்யமாகவே இருந்தது.. படித்தவர்கள் மேல் அல்ல, என் மேல் எனக்கே :-)

தமிங்கலக்கலப்பும் இந்தக்கால கல்லூரி மாணவர்களின் பேச்சை பதிவு செய்யப்போக வந்தது, வேண்டுமென்றே புகுத்தப்பட்ட அது இனி இருக்காது.

போட்டிக்கான ஒவ்வொரு ஆக்கத்தின் வித்தியாசமான களத்தையும், கதை சொல்லும் முறையையும் கண்டபோது இது ஒன்றும் விளையாட்டுத்தனமான போட்டியில்லை என புரிந்தது. ஏதேதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் உள்ளேயிருந்த திறமைகள் பளிச்சிடத்தொடங்கியிருந்தது நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது.

முழுவதுமாய்ப்பார்த்தால் கதை வாசிப்பதைவிட.. கதை சொல்வது ஒரு பெரும் அனுபவமாய் இருக்கின்றது முழுமையாய் இரசித்து அனுபவித்தேன் :-)

5 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ செவ்வாய், ஜூன் 27, 2006 9:29:00 பிற்பகல்

இது உங்களுக்கே அநியாயமாத் தெரியலை? போட்டிக்கு வந்ததே லேட்டு.. இதுல போட்டிக்கு நீங்க எழுதின கதையை பத்தி பேசியே மூணு பதிவு தேத்திட்டீங்க?!!! :)))

இப்போ எனக்கும் இந்த மஞ்சள் வெயில் பாட்டு தாங்க...The Class நான் படிச்சதில்லை.. புக் எப்படி? பழசை விட இந்த லே அவுட் நல்லா இருக்கு. எழுத்து அளவு தான் சின்னதா இருக்கு.. இன்னும் பெரிசு பண்ணலாமோ?

யாத்திரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 28, 2006 2:25:00 பிற்பகல்

@பொன்ஸ்:
:-))) எதோ என்னால முடிஞ்சது ... நமக்கு எழுதனும்னு தோணுறதயெல்லாம் எழுத ஒரு இடம் இருக்கையில,Count பத்தி என்ன கவலை.. பூந்து வெளயாட வேண்டியதுதான் :-D

எல்லோருக்கும் "பார்த்த நாள் முதலே பாட்டு பிடிச்சிருக்கு...." , யாருக்குமே இந்த பாட்டு பிடிக்கலைனு நெனச்சுகிட்டிருந்தேன்...

"The Class", பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம், ரொம்ப நல்லா இருக்கும்னும் கிடையாது, நல்லாவே இல்லைனும் சொல்ல முடியாது... பழைய கல்லூரி நினைவுகளை கிளறி விடும், இதில் ஹார்வார்டின் மாணவர் வாழ்கையை சுற்றி நாவல் சுழளுவதால் அந்த அளவு பாதிப்பதில்லை..

ஆனாலும் கல்லூரி காதல், நட்பு, சண்டை.. பல வருடங்களுக்கு அவர்கள் சந்திப்பின்போது என்ன செய்யப்போகிறார்கள்... என கொஞ்சம் சுவாரசியமாவே போகுது...

எழுத்து அளவு சின்னா இருப்பது கொஞ்சம் ப்ரொபசனல் டச் இருக்குனு நெனச்சிருந்தேன் :-D

தம்பி சொன்னது… @ வெள்ளி, ஜூன் 30, 2006 1:43:00 முற்பகல்

எல்லாமே ஒரு புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்கும். நீங்களே பின்னால ஒரு பெரிய கதை சொல்லியா வரலாம் யார் கண்டது. நிறய படிங்க எழுத்து தன்னால வரும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
தம்பி

மா.கலை அரசன் சொன்னது… @ ஞாயிறு, ஜூலை 09, 2006 10:28:00 பிற்பகல்

உங்கள் ஆர்வமே உங்களை நல்ல எழுத்தாளனாக உருவாக்கும். வளர வாழ்த்துக்கள்.

தம்பி சொன்னது… @ புதன், ஜூலை 12, 2006 6:45:00 பிற்பகல்

யாத்திரீகன்,

எங்க போய்ட்டிங்க ரொம்ப நாளா ஆளை காணுமே. புது போட்டி வேற
அறிவிச்சு ரொம்ப நாள் ஆகுது
சீக்கிரம் வாங்க

அன்புடன்
தம்பி

கருத்துரையிடுக