கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, குகைக்கோயில், சிற்பங்கள், பயணம், புகைப்படம் on புதன், பிப்ரவரி 27, 2008சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும் பொறியியல் முறையிலும் நம்மை அசத்த வைக்கும்.
இங்கே பொறுமையாய் காண பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதால் இதை தனி தொடராக பதிய நினைத்திருந்தேன் .. படித்து, பகிர்ந்து மகிழ்வோம் :-)
கிழே இருப்பது தான் கைலாச நாதர் கோயில் எனப்படும் குகைக்கோயில். மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் இதன் உருவத்தை படத்தில் புள்ளியென தெரியும் மக்களை பார்த்தால் தெரியும். இத்தனை பிரமாண்டத்திலும் இதன் கலை நயம் சிறிதும் குறைந்ததில்லை.

Kailashanadhar Temple - Cave 16 - The Most Amazing Cave temple ive ever seen, originally uploaded by யாத்திரீகன்.
சரி இவ்வளவு பில்டப் கொடுத்தாச்சே, அப்படியென்ன இந்த குகையில் ?
ஆச்சர்யம் #1:
எந்த ஒரு குகைக்கோயிலோ அல்லது குகைச்சிற்பமோ எப்படி செதுக்கப்பட்டிருக்கும் ?
முதலில், குகைப்பாறையின் பக்க வாட்டில் தொடங்கி, குடைந்து கொண்டே உள்ளே சென்று சிற்பங்களும், கோயில் போன்ற அமைப்பும் பாறையினுள் செதுக்கத்தொடங்குவார்கள்.
இயல்பான இந்த முறைக்கு நேர்மாறாய் செதுக்கப்பட்டது தான் இந்த குகை. எப்படி ? , ஒரு பெரும் பாறையை, அதன் மேல் அமர்ந்து கொண்டு செதுக்கத்தொடங்கி உள்ளே இறங்கி, மேலிருந்து கீழ் எல்லா சிற்பங்களையும், கோயில் அமைப்பையும் செதுக்கத்தொடங்கினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்த குகைக்கோயிலும், அதன் உள்ளே இருக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாய் பார்த்தால் வித்தியாசம் மிகவும் எளிதாய் தெரியலாம், ஆனால் மேலே பாறையை குடைய ஆரம்பிக்கும் போது, எவ்வளவு கிழே செல்ல வேண்டும், ஒவ்வொரு உயரம் கிழே செல்ல செல்ல எவ்வளவு பாறை எடுத்து விட வேண்டும் என கணக்கிடுவதும், என்ன செதுக்கப்போகின்றோம் என உருவகப்படுத்தி பார்ப்பதிலும் உள்ள கஷ்டங்கள் மிக மிக அதிகம். சாதரண முறையில், கரியை வைத்து கோட்டுருவம் வரைந்து விட்டு எளிதாய் செதுக்கி விடலாம் , ஆனால் இங்கே உள்ளே சென்று குடைவதற்கு எப்படி அளவுகளை குறித்துக்கொள்வது ?
இங்கிருந்து தொடங்குகிறது ஆச்சரியம்...

a cave temple, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #2:
மொத்த கோயிலின் நிலப்பரப்பு எதேன்சில் உள்ள பார்த்தேனான் ஐ விட இரு மடங்கு பெரிது என்ற போதிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட கோயில் இது.
ஆச்சர்யம் #3:
5 வருடம் , 10 வருடம் என முடியவில்லை இந்த கோயில். கிட்டதிட்ட 100 வருடங்கள் எடுத்திருக்கின்றன. 2 இலட்சம் டன் எடையுள்ள பாறை அகற்றப்பட்டிருக்க வேண்டுமென கணிக்கப்படுகின்றது.
Temple within the mountain, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #4:
இத்தனை களேபரத்திலும், எவ்வளவு நுணுக்கமாய், இரசித்து இரசித்து செதுக்கப்பட்டிருக்கும் என என்ன வைக்கும் வேலைப்பாடுகள், அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் தெரியும்.

entering the cave temple, originally uploaded by யாத்திரீகன்.
உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப்பட்டு நிமிர வைக்கும் ஒரு கோபுரம்

when your inside this temple - its your within a rock cube whose inside is carved out for temple and statues, originally uploaded by யாத்திரீகன்.
சாதரணமாக ஒரு குகைக்கோயிளுக்குள் செல்லும் போது இருட்டு, குறைந்த காற்று, வவ்வால்களின் எச்சம் என பல விடயங்கள் நம்மை அங்கிருக்கும் அழகை இரசிக்க விடாது. ஆனால் இந்த குகையின் வித்தியாசமான குடைந்த முறை, வெளிச்சத்தை மேலிருந்து கொண்டு வருவதால், உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமாய் இருக்கின்றது.
ஏதோ ஒரு கல்லின் உள்ளே மேலிருந்து ஓட்டை போட்டு, அதனுள் நிறைய சிற்பங்களாய் செய்துவிட்டு, அதனுள் நம்மை இறக்கி விட்டு சென்றது போல் ஒரு உணர்வு .. எங்கு நோக்கினும் சிற்பங்கள் , மேலிருந்து வரும் வெளிச்சம் அத்தனையும் அழகாய் காட்ட .. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை .. அனுபவித்து பார்க்க வேண்டிய தருணம் அது ...

Temple top-1, originally uploaded by யாத்திரீகன்.
உள்ளிருக்கும் ஒரு கோபுரத்தின் க்ளோஸ் அப் ஷாட் , அதன் வேலைப்பாடுகளைக்காட்ட ..
அடுத்த பகுதியில், உள்ளிருக்கும் சிற்பங்களையும் .. மேலும் சில ஆச்சர்யங்களையும் பார்க்கலாம்...