யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஓய்ந்தது பட்டாசுச்சத்தம், என்று ஓயும் கனவுகளின் கதறல் ?

Published by யாத்ரீகன் under on திங்கள், நவம்பர் 07, 2005
அயல்நாட்டில், பட்டாசுச்சத்தமின்றி, எண்ணெய்க்குளியலின்றி, இனிப்பு கலந்த அம்மாவின் திகட்டும் அன்பின்றி, நண்பர்களுடன் ஊர்சுத்தலின்றி, இரவுநேர மத்தாப்புகளின்றி, தெருவில் இறையும் தீபாவளி புதுப்பாடல்களின்றி, தீபாவளி அன்று மட்டும் தெருவில் கூடும் நண்பர்கள் (?) அன்புக்குழுவின் அலும்புகளின்றி... நிசப்தத்தில் கடந்தது இந்த வருட தீபாவளி..

தீபாவளி கொண்டாடும் அர்த்தங்கள் ஆராய்ந்து கொண்டாட வேண்டாமென்று சிலரும், ஆராய வேணாம் அனுபவிக்கனும் என்று சிலரும், அயல்நாட்டில் தீபாவளி அனுபவங்கள் என்று சிலரும்...எல்லாவற்றிற்கு மேல் குழந்தைத்தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளைத்தவிர்ப்போம் என்றும் கூவிக்கொண்டிருக்கின்றார்கள்...

பட்டாசுத்தொழிற்ச்சாலைகள் என்பது பிஞ்சுக்குழந்தைகளின் கனவுகள் கதறக் கதற கொல்லப்படும் கொலைக்களம் என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தேன், குழந்தை தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளை ஒதுக்குவதின் மூலம் எதிர்ப்பைக்காமிக்கலாம், அதுவே தீர்வைத்தரும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தேன்.. என் வயது அப்படி, நான் வளர்ந்த சூழல் அப்படி, பிரச்சனையின் வேர் அறியாக்காலம் அது.

பின்னர் குழந்தை தொழிலாளர்கள் பற்றி, அவர்களின் படிப்பு பற்றி பல்வேறு இடங்களில் படிக்க, கேட்க... நிறைய தெரிந்தது.

அந்த குழந்தைகளின் குடும்பத்தை காப்பாற்றுவது அந்த வேலையே என்று பல இடங்களில் தெரியவந்தது, ஆகவே அவர்கள் தொழில் செய்வதை தடுப்பதைவிட, தொலைநோக்கு பார்வை வேண்டும் என்று தோன்றியது, அதன் மூலம் தோன்றியதே அவர்களுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்ற எண்ணம்..

அதன் பயனாக சென்ற தீபாவளிக்கு,நம்மால் முடிந்த உதவியை படிக்க ஆர்வம் இருந்து, பணவசதியில்லாக்குழந்தைகளுக்கு பண்ணவேண்டும் என்றென்னி, கல்லூரி நண்பர்களையும் கலந்தாராய்ந்து கல்கத்தாவிலிருந்து கொண்டே மின்னஞ்சல்களின் மூலம் திட்டமிட்டோம்,.

இதில் முதல் தடைக்கல்லாக நாங்கள் சந்தித்தது, யாருக்கு இது சென்றடையவேண்டும் என்று ?

குழந்தைகள் பலர் வெடி வெடிப்பதை கண்டு வருத்தப்படுவர் ஆகவே அவர்களுக்கு வெடியும், மத்தாப்பும் வாங்கித்தரவேண்டும் என்று சிலர் கூற..,

அவர்களுக்கு அன்று நல்ல உணவளிக்க வேண்டும் என்று மற்றொரு குழுவினர்

பல மின்னஞ்சல்களிடையே, உணவளிக்க பலர் உண்டு, மத்தாப்புகள் நிஜ மகிழ்ச்சியைத்தர போவதில்லை, கல்விக்கு உதவுவதே நிரந்தர தீர்வு என்று முடிவு செய்து முன்னேறினோம்.

பின்னர் எங்கே இந்த உதவியை செய்யவேண்டும் என்ற குழப்பம், CRY, சிவானந்த குருகுலம், உதவும் கரங்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் இருந்தும், இவர்களுக்கு பண உதவி செய்ய பலர் உண்டு, நிஜமாகவே பண உதவி தேவைப்படும் நிறுவனங்கள் கண்டுபிடிக்க சென்னையிலிருந்த நண்பர்கள் சிலர் முனைய, சில ஏமாற்று நிறுவனங்களைத்தாண்டியபின்..

சிறகுகள் என்று சென்னையில் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்கு பாடம் சொல்லித்தரும் நிறுவனம் ஒன்றை கண்டு அவர்களின் உடனடித்தேவையை அறிந்து பணமாக இன்றி, அந்த உதவியை செய்தோம்.

மீதி இருந்த பணத்தை, அப்பொழுது வந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற கல்லூரி நண்பர்களிடம் அளித்தோம்.

அதோடு நில்லாமல் ஒவ்வொரு மாதமும் சிறு அளவாவது அனைவரும் பணத்தை ஒதுக்கி, கல்வியாண்டின் தொடக்கத்தில் அதன்மூலம் உதவிகள் பண்ணலாம் என்றும் எண்ணம் தோன்றியது, வேலைப்பளு, தொடர்ந்து இதற்காக நண்பர்களை தொடர்பு கொள்ளமுடியாமை என்று பல காரணங்களால் விட்டுப்போனது சிறிது மனக்கஷ்டமாகவே இருந்தது.

அதற்கு இந்தாண்டு விடிவு பிறக்கும்போல் தெரிகின்றது, பணம் சேர்த்து வைக்க வங்கியில் தனிக்கணக்கு தொடங்கிவிட்டோம், கல்லூரி நண்பர்கள் அனைவரிடமும் பணம் சேர்ப்பதற்குள் மழை, ஆனால் இம்முறை கட்டாயம் செய்து விடவேண்டும் !!!!

4 மறுமொழிகள்:

kalai சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 11:23:00 முற்பகல்

all the best!

aana naanum idhe point thaan yosichirukken....

child labor pattasu industry la mattum illa...ella edhathulayum irukku. namma root cause paakanum....!

good luck in ur work! :)

யாத்திரீகன் சொன்னது… @ திங்கள், நவம்பர் 07, 2005 8:47:00 பிற்பகல்

@kalai: ஊக்கத்துக்கு நன்றி கலை !!

venkat சொன்னது… @ புதன், நவம்பர் 09, 2005 12:34:00 முற்பகல்

really!! this is a gud job....i too having some small saving of my pocket money....to help such peoples...
elamai kavilku oriyathu..athai veetu veru tholizel sei vathu thapu nu parents(ellarum)manasula vachuka vendum...
ana epo eruka kalvi vanthu
kasu eruntha tha nalla kalvi...nowadys peoples r money minded...atha panap peai kal ellam oliya vendum...antha peai kalidam ulla kavi yai peruvathu epadi?.....???????
valkai la poranthom,eran thom nu ella ma...ethavathu sei ya vendum....kadi pa epadi oru nalla kariyam seya vendum......
hats off to the people who really work hard for this...
ungal muyarchi vetri pera en valthukal...Keep it up!!!!!hope soon i'll join in this gang.!!

யாத்திரீகன் சொன்னது… @ புதன், நவம்பர் 09, 2005 2:31:00 முற்பகல்

நன்றி வெங்கட்,
எவ்வளவு பணம் உதவி செய்கின்றோம் என்பது முக்கியமில்லை.., நமக்கு பழைய புத்தகம் என தோன்றுவது, புத்தகமே இல்லாதவர்களுக்கு பெரிதாக தோணலாம்..

நீங்கள் சொல்லியது அப்படமான உண்மை, சில இடங்களைத்தவிர, பல கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் செல்கின்றன..

சில மாதங்களுக்கு முன், ஆனந்த விகடனில் "வெளிச்சம்" என்றொரு பகுதி இருந்தது, அதில் இப்படிப்பட்ட நிலைகளை களைய சப்தமின்றி பாடுபடும் இளைஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிலர் என பாடுபடுவதை காணலாம்..

ஓய்வு நேரங்களில், பாடம் சொல்லித்தருவது, போன்ற சின்னச்சின்ன உதவிகள் மூலம் நாம் அதை மெதுவாக அடையலாம்.. மேலும், அவர்கள் உதவி பெறுகின்றார்கள் என்ற எண்ணத்தை வளர்க்காமல், இதை அவர்களும் கடமையென கருதி, தொடர் சங்கில் போல் தொடர்ந்தால் மாற்றம் வெகு தொலைவில் இல்லை..

சமீபத்தில், சக இணைய அன்பர்கள்
"டோண்டு", "என்றும் அன்புடன் பாலா" .. இவர்களுடன் இணைந்து நான் குறிப்பிட மறந்த பல நண்பர்கள் ஓர் மாணவிக்கு உதவிவிட்டு இதையே அவர்களிடம் இருந்தும் எதிர்பார்த்திருந்தார்கள்..

இதோ இன்று, மழை, தீபாவளி, ரமலான் என விடுமுறை எடுத்திருந்த நண்பர்கள் திரும்பி விட்டு, மின்னஞ்சல்கள் தொடர்கின்றன, வேறு நாட்டில் இருந்தாலும் இதில் பங்கு கொள்ளத்தவறாத கல்லூரித்தோழர்களும் இதில் உண்டு...

அவர்களையும் இந்த பாராட்டுக்கள் சேரும்..!!!

கருத்துரையிடுக