யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

காதல் ரோஜாக்களிலிடையே நசுங்கிப்போன ஒரு கொடுமை

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 15, 2006

காதல், உயிர், இதயம், ரோஜா, ஜென்மம், பந்தம் எனும் வார்த்தை ஜாலங்களிடையேயும்....

" இருபதாம் நூற்றாண்டுங்க இது , சாதியாவது மண்ணாவது, அதெல்லாம் இப்போ யாருங்க பாக்குறா, சும்மா அரசியல் பண்றதுக்கும் பொழப்பு நடத்துறதுக்கும்தான் இன்னும் சில பேர் அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க... இன்னைக்கு பாருங்க உயர்ந்த சாதினு சொல்றாங்கள்ல அவுங்கள்ல எத்தனை பேரு தகுதியான திறமையிருந்தும் ஒண்ணுமே இல்லாம இருக்காங்க, தாழ்ந்த சாதினு சொல்றாங்கலே அவுங்களப்பாருங்க சலுகைமேல சலுகை வாங்கிகிட்டு எவ்வளவோ உயர்ந்த நிலையில இருக்காங்க.. காலம் மாறிப்போச்சுங்க, இன்னும் அதே பழைய உழுத்துப்போன சட்டங்களையும், சலுகைகளையும் வைச்சிருக்க கூடாது, அப்படி இருந்தா அடுத்து அடக்கப்பட்டு வைச்சிருக்குற அவுங்க போராடுவோம்னு கொரலு விட ஆரம்பிச்சிட்டாங்க...."


அங்கங்கே இந்த தலைப்பில் சண்டைகளிடையேயும், வாக்குவாதங்களிடையேயும்...

சப்தமின்றி அமுங்கிப்போனது ஒரு செய்தி....


செய்தி: இராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில், உயர்சாதியினர் எனப்படுபவர்களின் பெண்ணை கீழ்சாதியினர் எனப்படுபவர்களில் ஒரு ஆண் காதலித்ததற்காக, அந்த ஆணின் தங்கையை பட்டப்பகலில், ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தியுள்ளனர் உயர்(?)சாதி எனப்படுவோர், இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த/இருந்த உயர்சாதி எனப்படும் அவர்களில் பெண்கள், இந்த கொடுமையை தடுக்காமல், இந்த பரிதாபத்திற்கு உரிய பெண்ணை வண்புணர்ந்துவிடுங்கள் என்று கோஷமிட்டதுதானாம்.


யாருங்க காரணம் ?

பணம்,பதவி,சமூகம் என அனைத்திலும் பலம் பெற்றுவிளங்கும் உயர்சாதி எனப்படுவோரா ? இல்லை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடையாளம் கொண்டு சலுகைகள் பெற்று பணம்,பதவி,சமூகம் என்பனவற்றில் பலம் பெற்று, தன் மக்களை, தன் இனத்தை உயர்த்த வழிமுறைகாணாத மக்களா ?


இது புரிஞ்சா ஏங்க இந்த கொடுமையெல்லாம் நடக்குதுனு யாரோ இங்க சொல்றாங்க.. ஹீம் :-( வெறுமன வருத்தப்படுறதவிட, நம்ம குழந்தைகள், நம்ம கட்டுப்பாடின் கீழ் வளர்கின்ற குழந்தைகள் கிட்ட இந்த வேற்றுமைகளை புகுத்தாம வளர்க்கலாமே... உணவகத்தில் வேலை செய்ற சிறுவனை குழந்தைகள் முன் விரட்டாம நன்றாக நடத்துவது போன்ற செயல்கள் மூலம் நாம செயல்காட்டியாவும் இருக்கலாமுல்ல ?


நேத்து இந்த செய்தி NDTV செய்தி சானல்ல கேட்டதிலருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது, முன்பின் தெரியாத அந்த மனிதர்கள் மீதும், இவர்களை இப்படி பிரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீதும் பயங்கர கோபம்,ஆத்திரம்.... அதற்கு வடிகாலே இந்த பதிவு, மத்தபடி யாரையும் தாக்குறதுக்கோ, தமிழ்மணத்துல புகழடைஞ்ச உள்குத்து,வெளிக்குத்துக்காகவோ கிடையாது... ரொம்ப சென்சிடிவ்வான விஷயம் இதுனு தெரியும், இருந்தாலும் மனசை குடைஞ்சுகிடு இருந்தது

கறுப்புதினம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், பிப்ரவரி 14, 2006
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

தாவணி போட்ட தீபாவளி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 10, 2006
நேத்துதான் 16 வயதினிலே படம் எதோ ஒரு சேனல்ல ஓடிக்கிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பையில பக்கத்து ரூம்லருந்து சத்தம்.. "நான் சப்பாணி இல்ல கோவாலகிருஸ்ணன்"னு.. அட நம்ம பரட்டை அடிவாங்குற காட்சினு வேகவேகமா ரூமுக்கு போய் பார்த்ததுக்கப்புறம்தான் திருப்தியாச்சு :-)

சரி அதுல என்ன Splனு கேட்குறீங்களா.. அதுல ஒரு காட்சில நம்ம கதாநாயகியும் அவுங்க பட்டணத்து தோழிகளும் தாவணியோட சுத்திகிட்டு இருந்தாங்க..

அட எவ்ளோ அழகான உடை, இரசனையானது இப்போ எங்கே இதை பார்க்க முடியுது, சினிமாவில கூட எப்பயாவது நம்ம கதாநாயகனுக்கு காதல் ஆரம்பிக்குற காட்சில மட்டும் கதாநாயகி தாவணில வருவாங்க, அதுகப்புறம் ஒரே நாகரீகம்தான் ;-)

ஹைய்யோ ஆத்தா !! நான் ஒண்னும் பெண்விடுதலைக்கு எதிரி இல்லீங்க... , "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே"னு பாடுற காட்சில மட்டும் வேட்டி மடிச்சி கட்டுற புரட்சித்தமிழன் இல்லீங்க.. எதோ என் ரசனையையும் ஏக்கத்தையும் சொன்னேங்க.. (நம்ம தமிழ் வலைப்பூ பெண் நண்பர்கள் யாரும் நம்மல தப்பா புருஞ்சிகிட்டு விலாசிரக்கூடாது பாருங்க.. அதான் அந்த சுய விளக்கம்..)

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட அடுத்தநாள், அதாங்க இன்னைக்கு காலைல அலுவலகத்துக்கு பஸ்ல வரும்போது ஒரு நிறுத்தத்துல ஒரு பொண்னு ஏறுனாங்க, ஒரே பார்வையில ஆள அசத்துற அழகொன்னும் இல்லீங்க, பளிச்சுனு கண்ணை உறுத்துற மாதிரி பஞ்சுமிட்டாய் கலர் உடையும் இல்லீங்க,

சாதரணமான மெரூன் நிறத்துல மேலாடை, வெள்ளை நிறத்துல தாவணி அதுல மெரூன் நிறத்துல ஓரம், பெரும் வேலைப்பாடலெல்லாம் இல்லிங்க, ரொம்ப எளிமையா ....

அட பளிச்சுனு இருந்தாங்க அந்த உடையில

எனக்கோ சந்தோசம் கொல்லல, ஜெமினில இறங்குற வரைக்கும் கிடைச்ச சிறு சிறு சந்தர்பங்கள்ல அவுங்கள பார்த்தேனோ இல்லையோ, அந்த தாவணி உடையை இரசிச்சேங்க....

ஹீம் இனி எப்போ பாக்கப்போறோமோனு பெருமூச்சோட...

ஏங்க நீங்க எப்போ பாத்தீங்க கடைசியா ?!!?!

தமிழ் வலைப்பூ உலகிற்கு இது புதுசு

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 08, 2006
வருங்கால சந்ததிக்கு வாழ இடமளிப்போம்

ஆங்கில வலையுலகத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் TAG, நாம் ஒரு விஷத்தைப்பற்றி பதிவு பண்ணிவிட்டு பின்னர் நாம் யாரிடமிருந்தும் அதைப்பற்றிய கருத்தை அறிய விரும்புகின்றோமோ அவர்களை TAG செய்வதன் மூலம் அவரும் அதைப்பற்றி கட்டாயம் பதிவு பண்ணவேண்டும் என்பது பதிவு செய்யப்படாத வலையுலக சட்டம்.

அதை மீறுபவர்கள் "அந்நியனிடம் மன்னிப்பு கேட்டு நூறு பின்னூட்டங்கள்" இடனும், இடாதவுங்க வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதாங்க இன்னும் எளிமையா சொல்லனும்னா விட்டகொற தொட்டகொற :-)

சரி எதுக்கு இவ்வளவு அறிமுகம் ? சக வலைப்பதிவு நண்பர் ப்ரியா கேட்டுக்கொண்டத்துக்கு இணங்க இந்த பதிவு.

சரி விஷயத்துக்கு வருவோம்..

1) மரம் வளர்ப்போம்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்பதென்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிட்ட இன்றைய கான்கிரீட் கலாச்சாரத்தில், பிறந்தநாள் கேக்குகளிடையே ஓர் மரம் நட்டு அதை மறக்காமல் பாதுகாப்போம். எங்கங்க மரம் வளர்குறதுக்கு இடம்னு நீங்க கேக்குறது புரியுது, பள்ளிக்கூடங்கள்ள, கல்லூரிகள்ளனு நடலாம்.. வேறு மாற்று (ப்ராக்டிகலான) யோசனைகள் இருக்கா ?!

2) அன்பு வளர்ப்போம்:
வாழும் வகையில் பூமியை விடவேண்டுமென்றால், அதில் உடன் அமைதியாய் வாழ மனிதர்களும் வேண்டும், ஆக குழந்தைகளிடம் வேற்றுமை பாராமல் அன்பை செலுத்தும் குணத்தை பெரியவர்களாகிய நாம் வளர்க்க வேண்டும்.

3) ப்ளாஸ்டிக் குறைப்போம்:
மனித கண்டுபிடிப்புகளில் மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நோக்கி செல்லத்தொடங்கி உள்ளது. தேவையற்ற ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம். உதாரணம், தேவையற்ற நேரங்களிலும், சிறு,சிறு பொருட்கள் வாங்குகையிலும், துணிப்பைகளோ (அது பழைய பேஷனாக தோன்றினால்), கட்டை கைப்பிடிகள் வைத்த அலங்கரிக்கப்பட்ட பைகள் பயன்படுத்தலாம்.

4) பேப்பர் டிஷ்யூக்கள்:
இப்பொழுது பேஷனாகிவிட்ட காகித டிஷ்யூக்கள், இதற்கு பதில் துணி கைக்குட்டைகளை பயன்படுத்தினால், மரம் நடாவிட்டாலும், இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் காப்பாற்றலாம்.

5) விலங்குகளை காப்போம்:
விலங்குகள் இயற்கை உணவுச்சங்கிலியின் முக்கியமான ஓர் பகுதி. விலங்குகளை நேரடியாக காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, வளர்க்க முடியாவிட்டாலும் சரி, விலங்குகளின் தோல்,கொம்பு.. போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள பொருட்களை தவிர்ப்போம்.

6) மக்கும் குப்பை, மக்காத குப்பை:
மக்களுக்கும், அதை கையாளும் பணியாளர்களுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி மேலும் விழிப்புணர்ச்சி வேண்டும், அவைகளை தனித்தனியே பிரித்து கையாளுவதில் தொழில்நுட்பரீதியில் உயரவேண்டும்.

7) மறு சுழற்சி:
மறு சுழற்சி பற்றி மக்களுக்கும், பொருட்கள் தயாரிப்பவர்களுக்குமான விழிப்புணர்ச்சி கூடி, அதை அதிநவீன முறையில் நடைமுறைப்படுத்தி, அதில் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.

8) கல்வி:
இவையனைத்தும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இதை வெறும் மனனப்பாடம் செய்யும் நோக்கில் கற்பிப்பதைவிட தொலைநோக்கு பார்வையில் ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும்.

இதில் சொன்னவற்றை என்னால் இயன்றவரை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றேன், முக்கியமாக 1 முதல் 5 வரையிலானவற்றை கட்டாயமாக கடைபிடிக்கின்றேன், 6,7 பற்றி அதிகமாக தெரியவில்லை, யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.

இந்த விட்டகுறை தொட்டகுறையை (அதாங்க TAG), ப்ரியன் தன் எண்ணங்களை ஒரு கவிதையாக வடிக்க வேண்டும்.

தயவு செய்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள் !!!

Published by யாத்ரீகன் under on திங்கள், பிப்ரவரி 06, 2006

சென்னை வந்த உடன் நண்பர்களுடன் நேரம் களிக்கவேண்டுமென்று நினைத்தது உண்மைதான் அதற்க்காக இப்படியா :-( , சென்னை வந்ததிலிருந்து மருத்துவமனையிலேயே நண்பர்களுடன் நேரம் களிப்பதாய் அமைந்துவிட்டது...


இதைப்படிக்கும் அதிவேக விரும்பிகளே, அதிவேகத்தை துணிகரமான வீரச்செயலென்று நினைப்பவர்களாய் இருந்தால் சுவற்றில் சென்று முட்டிக்கொள்ளுங்கள்..


சென்ற வாரம் என் நண்பன் சீனியின் இந்த பதிவை படித்ததும்,மிகவும் உற்சாக வேகத்திலிருந்தேன், ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு பதிவை பதிப்பேனென்று எதிர்பார்க்கவில்லை....


நேற்று சென்னையில் என் மற்றொரு கல்லூரித்தோழனுக்கு ஓர் விபத்து...


அதிவேகத்தில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்து, மோதிய வேகத்தில் நசுங்கிய வாகனத்திலிருந்து அவனை மீட்பதே கஷ்டமாயிருந்ததாம்..


கால் முட்டியிலும், முட்டிக்கு மேலும் பட்ட அடியில் கிரிக்கெட் பந்து வைக்கும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது,காலில் பல இடங்களில் சிக்கலான எழும்பு முறிவு, கையில் ஐந்து இடங்களில் எழும்பு முறிவு, நெஞ்செலும்பில் காயம், முகத்திலும் கண்ணாடி தெரித்ததில் காயம், புருவம் ஒன்று முழுவதுமாய் காணாமல் போய்விட்டது, மூளையின் உள் இரத்தக்கசிவு, அது இரத்தக்கட்டானால் கோமாவிற்கு சென்றுவிடும் அபாயம் என எவ்வளவு சிக்கல்கள்..


நேற்று இரவு அறுவைசிகிச்சை நல்லபடியாய் முடிய, காலில் பல இரும்பு தகடுகள், நட்டுகள் பொருத்தப்பட்டன.., இன்று மதியம் செய்யப்போகும் Cற்T ஸ்கேனில் இரத்தக்கசிவுன் நிலவரம் தெரிந்துவிடும்.


ப்ளேட்டுகள் பொருத்தப்பட்டதால் 12 நாட்கள் மருத்துவமனையிலும், 3 மாதங்கள் மருத்துவமனையிலும் இருக்க வேண்டும்.. அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... உடைந்த எலும்புகள் ஒட்டவேண்டும்,அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... பொருத்திய இரும்பு ப்ளேட்டுகள் அகற்றப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை...நட்டுகளின் ஓட்டைகள் நிரப்பப்படவேண்டும், அதன் பின்னராவது இயல்பாக நடமாட முடியுமாவென்றால் இல்லை... முழுவதுமாய் முன்பு போல் இயல்பாக இல்லாமல் ஒருவித கவனத்துடனேயே இருக்கவேண்டும்..
வேறு என்ன நடந்துகொண்டிருக்கின்றது ?


நிர்வாகவியல் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியிருந்த நேரம், நல்ல அனுபவங்கள் கிடைத்துக்கொண்டிருந்த நேரம், தன் கனவுகள், எதிர்காலம் என தெளிவாக திட்டமிட்டு போய்க்கொண்டிருந்த நேரம், நல்ல நண்பனாக, அன்புள்ள அண்ணனாக, நல்ல பிள்ளையாக இருந்தான்..


இன்று அவனையும் உடலால் காயப்படுத்திக்கொண்டு,அனைவரையும் மனதால் வருத்தப்படவைத்து, இந்த ஆறு மாதங்களில் அவன் வளர்ச்சியை ஈடுகட்டப்போவது எது ?


நல்ல வேளை நல்லபடியாகவே அறுவைசிகிச்சையும் நடந்து முடிந்துவிட்டது...


இவையெல்லாம் ஒரே செயலால் தவிர்க்கப்பட்டிருக்கலாம், சீட் பெல்ட் அணிந்திருக்கலாம், நள்ளிரவு நேர, குதூகலத்துக்கான அதிவேக பயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் வாழ்வில் இத்தகைய விஷயங்கள் இல்லாவிடில் சுவாரசியமேது என்பவர்களுக்கும், வாழ்வில் எதில்தான் ஆபத்து இல்லையென்பவர்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.. போய் சுவற்றில் முட்டிக்கொள்ளுங்கள்...


இந்த சின்ன விஷயத்துக்கு நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படவேணாமென்று பலர் நினைக்கலாம், நான் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை, இதை இவ்வளவு விலாவாரியாக விவரித்துக்கூறியதற்கு காரணம், இதைப்படிக்கும் சிலரில் ஒருவருக்காவது இதன் இயல்பு நிலவரம் புரிந்து கவனமோடிருக்கலாம் என்ற நம்பிக்கையில்...


வேகம் விவேகம் அல்ல


சீட்பெல்ட் அணியுங்கள், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியுங்கள்... ப்ளீஸ் !!!!

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - என் பார்வை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 03, 2006

நண்பர் மார்க்கின் வலைப்பூவில் இந்த திருமணப்பரிசை முதன் முதலில் பார்த்த போது, அதில் ஏற்கனவே சிலர் மறுமொழி இட்டிருந்தனர். அவையெல்லாம் இவர்கள் அளித்த பரிசை, மிகவும் சிறந்த செயல் என பாராட்டியிருந்தனர். ஆனால் எனக்கு முதலில் தோன்றிய எண்ணமே, ஏன் ஒருவேளை உணவு இட்டதும், சிறிது நேரம் சாலையோரங்களை சுத்தப்படுத்தியதுமே அது மிகவும் சிறந்த செயலாகிவிடுமா ?


ஏன் காலம் காலமாய் ஒருவேளை உதவிசெய்தலே முன்னிறுத்தப்பட்டது...


"தர்மம் தலைகாக்கும்" என்ற சிந்தனையை விட "ஒருவனுக்கு மீன் பிடித்து குடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடு" என்ற சீனப்பழமொழியே என்னை மிகவும் கவர்ந்தது....


ஏன் அனைவரும் ஓர் குறுகிய காலத்துக்கான உதவியே அளிக்கவேண்டும், தொலைநோக்குப்பார்வையுடன், அவர்கள் இதற்குப்பின்னர் யாரிடமும் கையேந்திப்பிழைப்பு நடத்த வேண்டாமென்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையா ? , தான் தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள இவர்களைப்போன்றோர் தேவையென்ற எண்ணமா ?

இதற்காக பொருளாதார ரீதியா நடுத்தரக்குடும்பங்களில் இருப்போர், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போர் உதவி செய்ய நினைக்கையில், உதவி பெறுவோருக்கு நீண்டகால பலன் தரும் உதவிகளை மட்டுமே செய்ய வேண்டுமென்று கூறவில்லை, அவர்களால் முடிந்தவற்றை செய்யலாம், இங்கே செய்யும் உதவியை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை, உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் மிகவும் மதிப்பிற்குரியது.


நான் முக்கியமாய் சுட்டிக்காட்டி கோபப்படுவது , பொருளாதார ரீதியாய் இயன்றவர்கள், உதவி செய்கின்றேன், சேவை செய்கின்றேன் என்ற பேர்வழியாய் தையல் மிஷின் வழங்குவதும், அயர்ன் பெட்டி வழங்குவது, இலவச வேட்டி சேலை வழங்குவதுமான அரசியல்வாதிகள் , ஏழை மக்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அதை படம் எடுத்துச்செல்லும், அதை கதை சொல்லும் வெளிநாட்டவர்கள் என்று...


எங்கள் நாட்டில் வறுமை உண்டுதான், அதை நீக்க எங்கள் தலைமுறை முடிந்தவற்றை செயல் படுத்திக்கொண்டு இருக்கின்றோம், நீங்கள் உங்கள் புண்ணியம் தேடிக்கொள்ள சேவை புரியும் இடமல்ல இது, பரிசு பெற பஞ்சத்தையும் தரித்திரத்தையும் படம் பிடிக்கும் இடமல்ல இது...


இதை சிலர் ஒன்றுக்கும் உதவாத வரட்டுக்கவுரமென்று சொல்லக்கூடும், ஆனால் நம்மை தாழ்ந்தநிலையிலே வைத்திருக்கப்பார்க்கும் மனப்பான்மை என்றே தோன்றியது...


மார்க்கின் வலைப்பூவில் இதை காரசாரமாக பதிவு செய்ய நேரமில்லாவிடினும் அதை சிறிதே மறுமொழியிட்டேன்.


அதற்கு நண்பர் மார்க்கின் பதிலும், அவர்களின் பார்வையும் வித்தியாசமாய் அமைந்தது..


இதோ மார்க்கின் பதில் பதிவு ஆங்கிலத்தில் -

அதன் சுருக்கத்தை கீழே குறிப்பிடுகின்றேன்...


"நான் ஒப்புக்கொள்கின்றேன், தற்சமயம் நொடிப்பொழுதில் மறைந்துவிடக்கூடிய வகையிலான, அன்று மதியம் நாங்கள் ஆற்றிய செயலைவிட, என்றும் நிலைக்கூடிய மதிப்புவாந்த செயல்கள் பல உள்ளன.

.......

.....

.....
அந்த திருமணப்பரிசின் முக்கிய நோக்கமானது, அன்று சிலர் தங்கள் நேரத்தையும், சக்தியையும் கொண்டு, தங்கள் கண்முன் கண்ட உலகத்தின் ஒரு சிறிய பகுதியை முன்னேற்ற முயற்சிகொண்டனர்.முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டுவந்திட செய்யப்படும் ஒர் முயற்சி எவ்வளவு மதிப்பு வாந்ததோ, அதன் அளவிற்கு அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்தது.


சேவையின்பால் நம்பிக்கை கொண்ட ஒருவராயிருப்பின், தன்னலமற்ற எண்ணம் உதவுவதோடு மட்டுமின்றி, பிறரை தன்னலமற்ற சேவை நோக்கி ஈர்ப்பதும் அதன் நோக்கமென்பதை அவர் புரிந்துகொள்வார், உதாரணம் அன்று எங்களுக்கு உதவிய நண்பர் வீரப்பன். இத்தகைய ஈர்ப்பும், செயலும் என்றுமே பிறரை நோக்கியே பரவும். அன்னை தெரசா சொல்கிறார் "நாமால் எந்த ஒரு மகத்தான செயலையும் செய்யமுடியாது, ஆனால் மகத்தான அன்பு நிறைந்த சிறிய செயல்களை செய்ய இயலும்".


இதுவே http://www.charityfocus.org/ இயக்கத்தின் அடிப்படைத்தத்துவமாகும் . இத்தகைய குணாதிசயத்தையே என்றும் சேவை செய்யும் உண்மையான Hero-க்களிடையே காண்கின்றேன்.."


மார்க்கின் பதில் முழுமையாக திருப்தியளிக்காத போதும், அவர் கூறிய கோணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.


அதனால் தான் என் தோழியின் குடும்பத்தினரின் செயல்கள் பல தலைமுறைகள் தாண்டி தொடர்கின்றனவா ?, அது இல்லாததால் தான் பல பெரும் மனிதர்களின் செயல்களும் தத்துவங்களும் பாடங்களாக்கப்பட்டு அவர்கள் தெவங்களாக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் சமாதி கட்டப்படனவா ?


தனி ஒரு மனிதனை விட, நோக்கம் மிகப்பெரியது. நம் பெயர் புகழ்பெறவேண்டும் என செய்யப்படும் செயல்களைவிட, இன்னும் பலரை ஈர்த்து நாம் செயல்படும் நோக்கம் நிறைவேறவேண்டும் என செய்யப்படும் செயல்கள் மிகவும் மகத்துவமானவை..


ஒருவேளை இதைத்தான் நண்பர் மார்க் எனக்கு புரிய வைக்க முயன்றாரோ ?!?!


நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ???