யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

எனக்குப்பிடித்த திருமணப்பரிசு - என் பார்வை

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 03, 2006

நண்பர் மார்க்கின் வலைப்பூவில் இந்த திருமணப்பரிசை முதன் முதலில் பார்த்த போது, அதில் ஏற்கனவே சிலர் மறுமொழி இட்டிருந்தனர். அவையெல்லாம் இவர்கள் அளித்த பரிசை, மிகவும் சிறந்த செயல் என பாராட்டியிருந்தனர். ஆனால் எனக்கு முதலில் தோன்றிய எண்ணமே, ஏன் ஒருவேளை உணவு இட்டதும், சிறிது நேரம் சாலையோரங்களை சுத்தப்படுத்தியதுமே அது மிகவும் சிறந்த செயலாகிவிடுமா ?


ஏன் காலம் காலமாய் ஒருவேளை உதவிசெய்தலே முன்னிறுத்தப்பட்டது...


"தர்மம் தலைகாக்கும்" என்ற சிந்தனையை விட "ஒருவனுக்கு மீன் பிடித்து குடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடு" என்ற சீனப்பழமொழியே என்னை மிகவும் கவர்ந்தது....


ஏன் அனைவரும் ஓர் குறுகிய காலத்துக்கான உதவியே அளிக்கவேண்டும், தொலைநோக்குப்பார்வையுடன், அவர்கள் இதற்குப்பின்னர் யாரிடமும் கையேந்திப்பிழைப்பு நடத்த வேண்டாமென்ற எண்ணம் இவர்களுக்கு இல்லையா ? , தான் தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள இவர்களைப்போன்றோர் தேவையென்ற எண்ணமா ?

இதற்காக பொருளாதார ரீதியா நடுத்தரக்குடும்பங்களில் இருப்போர், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போர் உதவி செய்ய நினைக்கையில், உதவி பெறுவோருக்கு நீண்டகால பலன் தரும் உதவிகளை மட்டுமே செய்ய வேண்டுமென்று கூறவில்லை, அவர்களால் முடிந்தவற்றை செய்யலாம், இங்கே செய்யும் உதவியை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை, உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமும் மிகவும் மதிப்பிற்குரியது.


நான் முக்கியமாய் சுட்டிக்காட்டி கோபப்படுவது , பொருளாதார ரீதியாய் இயன்றவர்கள், உதவி செய்கின்றேன், சேவை செய்கின்றேன் என்ற பேர்வழியாய் தையல் மிஷின் வழங்குவதும், அயர்ன் பெட்டி வழங்குவது, இலவச வேட்டி சேலை வழங்குவதுமான அரசியல்வாதிகள் , ஏழை மக்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அதை படம் எடுத்துச்செல்லும், அதை கதை சொல்லும் வெளிநாட்டவர்கள் என்று...


எங்கள் நாட்டில் வறுமை உண்டுதான், அதை நீக்க எங்கள் தலைமுறை முடிந்தவற்றை செயல் படுத்திக்கொண்டு இருக்கின்றோம், நீங்கள் உங்கள் புண்ணியம் தேடிக்கொள்ள சேவை புரியும் இடமல்ல இது, பரிசு பெற பஞ்சத்தையும் தரித்திரத்தையும் படம் பிடிக்கும் இடமல்ல இது...


இதை சிலர் ஒன்றுக்கும் உதவாத வரட்டுக்கவுரமென்று சொல்லக்கூடும், ஆனால் நம்மை தாழ்ந்தநிலையிலே வைத்திருக்கப்பார்க்கும் மனப்பான்மை என்றே தோன்றியது...


மார்க்கின் வலைப்பூவில் இதை காரசாரமாக பதிவு செய்ய நேரமில்லாவிடினும் அதை சிறிதே மறுமொழியிட்டேன்.


அதற்கு நண்பர் மார்க்கின் பதிலும், அவர்களின் பார்வையும் வித்தியாசமாய் அமைந்தது..


இதோ மார்க்கின் பதில் பதிவு ஆங்கிலத்தில் -

அதன் சுருக்கத்தை கீழே குறிப்பிடுகின்றேன்...


"நான் ஒப்புக்கொள்கின்றேன், தற்சமயம் நொடிப்பொழுதில் மறைந்துவிடக்கூடிய வகையிலான, அன்று மதியம் நாங்கள் ஆற்றிய செயலைவிட, என்றும் நிலைக்கூடிய மதிப்புவாந்த செயல்கள் பல உள்ளன.

.......

.....

.....
அந்த திருமணப்பரிசின் முக்கிய நோக்கமானது, அன்று சிலர் தங்கள் நேரத்தையும், சக்தியையும் கொண்டு, தங்கள் கண்முன் கண்ட உலகத்தின் ஒரு சிறிய பகுதியை முன்னேற்ற முயற்சிகொண்டனர்.முக்கியமான மாற்றம் ஒன்றை கொண்டுவந்திட செய்யப்படும் ஒர் முயற்சி எவ்வளவு மதிப்பு வாந்ததோ, அதன் அளவிற்கு அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்தது.


சேவையின்பால் நம்பிக்கை கொண்ட ஒருவராயிருப்பின், தன்னலமற்ற எண்ணம் உதவுவதோடு மட்டுமின்றி, பிறரை தன்னலமற்ற சேவை நோக்கி ஈர்ப்பதும் அதன் நோக்கமென்பதை அவர் புரிந்துகொள்வார், உதாரணம் அன்று எங்களுக்கு உதவிய நண்பர் வீரப்பன். இத்தகைய ஈர்ப்பும், செயலும் என்றுமே பிறரை நோக்கியே பரவும். அன்னை தெரசா சொல்கிறார் "நாமால் எந்த ஒரு மகத்தான செயலையும் செய்யமுடியாது, ஆனால் மகத்தான அன்பு நிறைந்த சிறிய செயல்களை செய்ய இயலும்".


இதுவே http://www.charityfocus.org/ இயக்கத்தின் அடிப்படைத்தத்துவமாகும் . இத்தகைய குணாதிசயத்தையே என்றும் சேவை செய்யும் உண்மையான Hero-க்களிடையே காண்கின்றேன்.."


மார்க்கின் பதில் முழுமையாக திருப்தியளிக்காத போதும், அவர் கூறிய கோணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.


அதனால் தான் என் தோழியின் குடும்பத்தினரின் செயல்கள் பல தலைமுறைகள் தாண்டி தொடர்கின்றனவா ?, அது இல்லாததால் தான் பல பெரும் மனிதர்களின் செயல்களும் தத்துவங்களும் பாடங்களாக்கப்பட்டு அவர்கள் தெவங்களாக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் சமாதி கட்டப்படனவா ?


தனி ஒரு மனிதனை விட, நோக்கம் மிகப்பெரியது. நம் பெயர் புகழ்பெறவேண்டும் என செய்யப்படும் செயல்களைவிட, இன்னும் பலரை ஈர்த்து நாம் செயல்படும் நோக்கம் நிறைவேறவேண்டும் என செய்யப்படும் செயல்கள் மிகவும் மகத்துவமானவை..


ஒருவேளை இதைத்தான் நண்பர் மார்க் எனக்கு புரிய வைக்க முயன்றாரோ ?!?!


நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் ???

1 மறுமொழிகள்:

ilavanji சொன்னது… @ செவ்வாய், பிப்ரவரி 07, 2006 11:53:00 AM

யாத்ரீகன்,

எங்கேயோ படித்தது...

"உனக்கு தேவை ஒரு மீன்!

கூடையை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வாயா? உனக்கு வாழ்க்கை தெரியவில்லை!

தூண்டிலை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு செல்வாயா? உனக்கு வாழத்தெரியவில்லை!"

அதுபோலத்தான் இதுவும்! தையல் மிசினும் அயர்ன்பாக்ஸ் கொடுப்பபவர்களின் நோக்கம் என்னவாகவோ இருக்கலாம்! ஆனால் அதைப்பெறுகிறவனுக்கு ஒரே நோக்கம்தான்! எப்படியாவது பிழைப்பு நடத்தவேண்டும்!

நானும் எண்ணங்களும் அப்படியே! அரசாங்க ஆஸ்பத்திரிகளின் அவலங்களை விட வக்கற்றவர்களுக்கு மருத்துவம்பார்க்க ஒரு இடம் இருப்பதே என் கண்களுக்கு தெரிகிறது!

கருத்துரையிடுக