யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஒலிம்பிக்ஸ் - தங்கம் - தோல்வி

Published by யாத்ரீகன் under , on செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008
அதீத பொறுப்புணர்வுடன் கூடிய நாட்டுப்பற்றை ஊறுகாயாய் ஊட்டும் விளம்பரங்களின்போதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின்போதும், திரைப்படங்களில் நம் தேசியக்கொடி எறிய அல்லது கிழே விழ அதை கதாநாயகன் தடுக்கும்போது இசைக்கப்படும் பின்னணி இசையின்போதும் நமக்கு அடிக்கடி சிலிர்த்துக்கொள்ளும் அந்த சாமானியனின் தேசபக்தியை, அவ்வப்போது கிடைக்கும் வெண்கலங்களும், எப்போதாவது கிடைக்கும் தங்கங்களும் உரசிவிட்டு குத்தீட்டுக்கொள்ளச்செய்யும்..

அப்படி ஒரு நிகழ்வாகத்தான் அபினவின் வெற்றியை வணிகமாக்கும் மீடியாக்களின் செயலும், அதை வாக்குகளாக்கும் அரசியல்வாதிகளின் செயலும், அதை பணமாக்கும் அதிகாரிகளின் செயலும் தெரிகின்றது. நம் தேசபக்தியில் குளிர்காயத்தான் இவர்கள் அனைவரும் பார்க்கின்றார்களே தவிர, அதில் ஒரு உணர்வை தேடித்தேடி களைத்துபோய்விட்டேன்..

இப்படி பதக்கங்கள் வெல்லும்போது தான் சாமானியர்களுக்கும் இப்படி ஒரு விளையாட்டு இருப்பது நியாபகம் வரும், அதை அங்கீகரிக்காத அரசாங்க இயந்திரமும், அந்த இயந்திரத்தின் பல்சக்கரங்களும் நியாபகம் வரும்.

நேர்மையாகச்சொல்லுங்கள், நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் எதிர்காலம் ஒரு விளையாட்டு வீரனாக இருக்கச்செய்ய முயலுவோம்? (அது அந்த குழந்தையின் ஆர்வமாக இருக்கும்பட்சத்தில்), தினமும் படிக்கும் பாடத்தை அன்றன்றே படித்து மனனம் செய்துவிடு என்று சொல்வதை விட்டு, விளையாட்டில் வாங்கி வந்திருக்கும் ஒரு consolation சான்றிதழில் அந்த குழந்தையின் ஆர்வத்தை கண்டு எத்தனை பேர் சரியான தீனி போட்டிருப்போம் ?

நம் அரசாங்கம் மற்றும் மீடியா மட்டுமல்ல, சமூகம் இதை பார்க்கும் விதமும் குறைபட்டுக்கொள்ளவேண்டியதாகவே இருக்கின்றது. இதை நாம் நேர்மையாக ஒப்புக்கொள்வதில் தான் இப்பிரச்சனைக்கான தீர்வு இருக்கின்றது.

பொதுவாக எந்த ஒரு சமூகத்திலும் வெற்றியை கொண்டாடுவதில் சிறிதும் குறையிருப்பதில்லை, ஆனால் அந்த வெற்றிக்கான அடிப்படையாகும் ஆரம்பகால தோல்விகளை ஒரேடியாய் ஒதுக்கும் குணம் நம் சமூகத்துக்கு சிறிது அதிகம் உண்டென்று நினைக்கின்றேன். இதற்கு மக்களின் மனநிலை, அவர்கள் வாழ்வை அணுகும்விதமே முக்கிய காரணம்.

இங்கு, மதிப்பெண்களில் முதலில் வரும் மாணவி, வித்தியாசமான முயற்சியாயினும் வெற்றி பெரும் இயக்குனர்கள், சிறு அல்லது மிக வித்தியாசமான தொழிலாயினும் கோடியில் வெற்றி பெரும் தொழிலதிபர்கள், பதக்கங்கள் வெல்லும் வீரர்கள் .. என வெற்றியை மட்டுமே கொண்டாடும் சமூகமாக இருக்கின்றதோ என்று ஒரு சந்தேகம். இதில் சமூகத்தின் அங்கீகாரம் என்பது அவரவர்களின் குடும்பத்திலிருந்து துவங்குகிறது..

வெற்றி காண்பவர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரத்தின் சிறு பங்கு கூட தோல்வியுற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை, தீண்டத்தகாதவர்களைப்போல் நடத்தப்படுவதும், இவையாவும் நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கப்போவதில்லை.

முதல் தோல்வியிலேயே ஊக்கமில்லாமல் கருகிவிடும் மொட்டுக்கள் நம் தோட்டங்களில் எத்தனையோ?. வெற்றி பெற்றவர்களை அதீத உற்சாகப்படுத்த தயங்காதவர்கள், தோல்வி கண்டவர்களை ஊக்குவிக்க தயக்கம்கொள்வதேனோ?

அடுத்த காரணம் தேர்வில் நடக்கும் அரசியல், அதை பலரும் துவைத்து, பிழிந்து அலசி காயவைத்துவிட்டார்கள், அங்கு அப்படி நடந்துகொள்பவர்களில் கணிசமான பங்கு அதிகாரிகள் அல்லவா? அவர்களும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் தானே? அவர்களை போன்ற மாற்ற அதிகாரிகள் மற்ற விஷயங்களில் செய்யும் அரசியல் இவர்களை பாதிப்பதே இல்லையா? பெரிய வட்ட மேஜையில் ஒருவர் கைமாற்றி கைமாற்றி வரும் பனிக்கட்டியை போல இறுதியில் வந்துசேரும்போது வெறும் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி என்பது போலத்தான் இவர்கள் நிதி ஒதுக்கீட்டில் செய்யும் அரசியல்.

மிகமுக்கியமான பலரும் கவனிக்கத்தவருகின்ற அல்லது வசதியாய் மறந்துவிடும் காரணம், விளையாட்டை சரியாக மார்க்கெட்டிங் பண்ணுவது. இன்னும் கூட டிடியில் அலுப்பூட்டும் வர்ணனையுடன் வரும் ஒலிம்பிக்ஸ்-ஐ எந்த சிறுவர்களும் இளைஞர்களும் பார்க்கப்போவதில்லை. ஒலிம்பிக்ஸ்-க்கே இந்த கதியென்றால், லோக்கலில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை நினைத்துப்பாருங்கள்? பின் Sponser இல்லையென்றும், யாரும் முன்வராததால் விளையாட்டை முன்னேற்றமுடிவதில்லை என்றும் குறைகூட மட்டும் அனைவரும் முன்வந்துவிடுவர். Sponser செய்பவர்கள் யாரும் சேவை செய்யப்பிறந்தவர்கள் இல்லை, அவர்களுக்கு அது ஒரு வியாபார மூலதனம்.

என் நண்பன் ஒருவன் கல்லூரியில் மிகச்சிறந்த discus thrower ஆனால் அவனும் சரி, அவனின் குடும்பத்தினரும் சரி தெளிவாய் இருந்தனர், இது வாழ்க்கைக்கு உதவப்போவதில்லை என.இதில் நாம் குற்றம் சாட்டப்போவது யாரை? சத்தியமாய் அவர்களை அல்ல, இப்படிப்பட்ட திறமைகளை ஊக்குவிக்காத விளையாட்டு அமைப்பின்மீது தான், ஒரு விளையாட்டை ஒரு profession-ஆக நம்மை தேர்ந்துடுக்க விடாத அளவுக்கு இருப்பது அதன் financial returns. அது மிகப்பெரும் வெற்றி அடைபவர்களையே சேருகின்றது.

என் தம்பி ஒருவன் athletics-லும், discus throw-விலும் பள்ளியில் மிகச்சிறப்பாய் விளையாடிக்கொண்டிருந்தவன், இப்பொழுது விளையாடிக்கொண்டே படிப்பை கோட்டை விட்டவன் என்ற பெயர்தான் அவனுக்கு வீட்டில் பலரிடம் மிச்சம் (இத்தனைக்கும் அவன் பெற்றது ஒரு descent enough percentage).

யாரிடமாவது சொல்லிப்பாருங்கள், நான் ஓவியனாக இருக்கிறேன், செஸ் விளையாடுவது என் தொழில் என்று, எம்.எப். ஹுசைன்-ஐயும், விஸ்வநாதன் ஆனந்தையும் கேலி செய்ய துணியாதவர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று.. சிறு வயதிலிருந்தே, விளையாட்டு ஒரு hobby என்று மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நம்மில் பெரும்பாலானவர்கள்.

சில வருடங்களுக்கு முன் படித்த குற்றாலீஸ்வரனின் பேட்டி ஒன்று நியாபகம் வந்து தொலைக்கின்றது, நிதர்சனத்தின் மறுஉருவம் என்று சொல்லுமளவுக்கு அமைந்திருந்தது அந்த பேட்டி.. மீடியாவின் வெளிச்சத்திலிருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவருக்கு ?
இத்தனையும் தாண்டி 110 கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கம் மட்டுமா ? (ஒலிம்பிக்கில் என்ன இத்தனை பேருக்கு ஒரு தங்கம் என்று திட்டமா இருக்குது) , சிறிய நாடுகள் குவிக்கவில்லையா ? என சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு விடைகாண முயற்சிப்போம்.


பி.கு:
அபினவின் இந்த பதிவை பார்த்ததும் ஏற்கனவே இருந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என தோன்றியதின் விளைவு.

14 மறுமொழிகள்:

ஆயில்யன் சொன்னது… @ செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008 11:31:00 PM

//முதல் தோல்வியிலேயே ஊக்கமில்லாமல் கருகிவிடும் மொட்டுக்கள் நம் தோட்டங்களில் எத்தனையோ?. வெற்றி பெற்றவர்களை அதீத உற்சாகப்படுத்த தயங்காதவர்கள், தோல்வி கண்டவர்களை ஊக்குவிக்க தயக்கம்கொள்வதேனோ///

நிச்சயம் சரியாக சொல்லப்பட்டிருக்குமம் விஷயம்!

வெற்றி பெற்ற ஒருவனை மேலும் ஊக்கப்படுத்துவதை விட, தோல்வியடைந்தவனை கொஞ்சமாய் உற்சாகப்படுத்தி பாருங்கள் பல மடங்கு வேகத்தோடே எழுவான்!

ராஜ நடராஜன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 12:32:00 AM

விளையாடறது விளையாட்டில்லாம பின்ன என்னவாம்?4 வருசத்துல ஒரு முறை அடிச்சுப் புடிச்சு வாங்குற தங்கத்துக்கு வாங்குற மூச்சு விளையாட்டுல சேர்ந்தாத்தான் தெரியும்.

(தங்கம் விக்கிற விலையில ஒண்ணா வது கிடைச்சதேன்னு சந்தோசப் படுங்கள்.)

சரண் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 1:11:00 AM

மிக அழகாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் பதிவு.

நல்ல கேள்விகள்.. உங்களைப் போல் பலருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் நிலமை சற்று முன்னேரும் என்று நம்புகிறேன்.

jeevagv சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 6:42:00 AM

சரியான ஆதங்கம்.
குற்றாலீஸ்வனுக்கு என்னவாயிற்று என வியப்பவர்களுக்கு:
http://www.rediff.com/sports/2005/oct/06spec.htm

PPattian சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 6:43:00 PM

நான் கூட குற்றாலீஸ்வரன் என்று ஒரு பையன் இருப்பாரே.. அவர் என்ன ஆனார் என்று திகைத்ததுண்டு. அவரது பேட்டி படித்ததும் சோகம்..

தகவலுக்கு நன்றி.. அதோடு நல்ல கட்டிரையும் கூட.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 9:03:00 PM

மிகச்சரி ஆயில்யன்.. ஒருவன் தோற்றஉடன் அவனுடைய குறைகளை ஆராய்ந்து பலப்படுத்தாமல், மீண்டும் புதியதாய் ஒருவன் என.. we keep starting from the scratch :-(

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 9:04:00 PM

>> தங்கம் விக்கிற விலையில ஒண்ணா வது <<<

வாங்க ராஜா நடராஜன்.. நம்ம ஊரு பெண்களை விட்டு, ஒலிம்பிக்-ஐ அட்சய திரிதியை அன்னைக்கு நடத்துனா நாம ஜெயிக்க மாட்டோம் ?! (ஏதோ ஒரு பதிவுல படிச்சது.. )

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 9:05:00 PM

நன்றி சூர்யா.. கட்டாயம் எனக்கு அந்த நம்பிக்கை உண்டு நம் தலைமுறை சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றதோடு பொருளாதார தன்னிறைவு நோக்கியும் சென்று கொண்டிருக்கின்றோம்.. விரைவில் மாறும், மாற்றுவோம் :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 9:07:00 PM

மிக மிக நன்றி ஜீவா.. அதை மீண்டும் படித்ததும் மனம் மீண்டும் கனத்துப்போனது :-( Why one has to be forced to drop his dreams to be settled in life ச்சே..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஆகஸ்ட் 13, 2008 9:07:00 PM

நன்றி புபுட்டியன்

பாபு சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 16, 2008 10:19:00 AM

மிக அழகாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் பதிவு"
இப்போது கூட வெற்றி பெற்ற அபினவுக்கு தான் போட்டி போட்டு கொண்டு பரிசுகள் தருகிறார்களே தவிர அவர் சார்ந்த துறை அல்லது அந்த துறையில் இருக்கும் ஆரம்ப வீரர்களுக்கு எந்தவித ஊகமோ அல்லது உதவி தொகையோ அளிக்கவில்லை.இங்கிருப்பவர்களை கண்டுகொள்ளாமல் கோடிகோடி யாய் பணமிருக்கும் அவருக்கு நம் தமிழ்நாடு அரசாங்கம் பரிசுதொகை அளிப்பது கேலிகூத்தாக இருக்கிறது

கிரி சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 16, 2008 6:01:00 PM

// நம் தேசபக்தியில் குளிர்காயத்தான் இவர்கள் அனைவரும் பார்க்கின்றார்களே தவிர, அதில் ஒரு உணர்வை தேடித்தேடி களைத்துபோய்விட்டேன்//

சரியாக கூறினீர்கள்.

//தினமும் படிக்கும் பாடத்தை அன்றன்றே படித்து மனனம் செய்துவிடு என்று சொல்வதை விட்டு, விளையாட்டில் வாங்கி வந்திருக்கும் ஒரு consolation சான்றிதழில் அந்த குழந்தையின் ஆர்வத்தை கண்டு எத்தனை பேர் சரியான தீனி போட்டிருப்போம் //

யாத்ரீகன் இதற்க்கு நம்முடைய மக்களின் வாழ்க்கை தரமும் ஒரு காரணம், பெரும்பாலனவர்கள் நடுத்தர குடும்பம் என்பதால் அவர்களால் விளையாட்டு என்பதை நினைக்க முடியவில்லை. இவர்கள் நிலை உயரும் போது அந்த சூழ்நிலை வரும் என்றே கருதுகிறேன்.

//வெற்றி பெற்றவர்களை அதீத உற்சாகப்படுத்த தயங்காதவர்கள், தோல்வி கண்டவர்களை ஊக்குவிக்க தயக்கம்கொள்வதேனோ?//

:-)

//நிதர்சனத்தின் மறுஉருவம் என்று சொல்லுமளவுக்கு அமைந்திருந்தது அந்த பேட்டி.//

என்னையும் அது மிக கவர்ந்தது.

விளக்கமாக கூறி இருக்கிறீர்கள் யாத்ரீகன்.

Maayaa சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008 9:25:00 AM

sooper post sendhil... neenga panam theratta mudinjaa/NGO vellam enna seyveenga/seyyalaam.. unga ideasa koncham sollunga!!

Maayaa சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008 9:25:00 AM

sooper post sendhil... neenga panam theratta mudinjaa/NGO vellam enna seyveenga/seyyalaam.. unga ideasa koncham sollunga!!

கருத்துரையிடுக