யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

இசையென்னும் இன்பவெள்ளம்

Published by யாத்ரீகன் under , on சனி, ஆகஸ்ட் 23, 2008
இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவ்வளவு எளிதாய் ஒரு கட்டுக்குள் அடைக்க இயலாத வாழ்வின் சில விஷயங்களில் இசையும் ஒன்று.

தெய்வீகமானது என்று சொல்லும் பழம்பெரியவர்களுக்கும், வார்த்தை தெளிவாய் இரைச்சல் குறைவாய் இருக்கும் பெரியவர்களுக்கும், மனதை வருடுவதுபோல இருக்கவேண்டும் என்று சொல்லும் முதியவர்களும், நினைவை சுகமாய் மீட்டவேண்டும் எனச்சொல்லும் நடுத்தரவயதினருக்கும், நம் கவலைகளை மறக்கடித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களுக்கும்.. என அனைவருக்கும் இசையின் வடிவம் வெவ்வேறு ஆனால் அனைத்தும் இசையே.

இப்படிப்பட்ட பறந்து விரியும் இசையின் சாம்ராஜியத்தில், நம்மில் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளின் இசை என்றாலே இரைச்சல் என்று குறுகிய வட்டத்தினுள் அடைத்துக்கொள்வோம். பொதுவாய் பத்திரிகைகளும், அந்த இசையை பெரிதாய் கேட்டிராதவர் முதற்கொண்டு, ஆங்கில இசை என்றதும்.. "யப்பா ஒரே சப்தம்.." என்று முந்திக்கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதில் எத்தனை ஆர்வம்.

ஆரம்பத்தில் கேட்டிருந்த சில புகழ் பெற்ற பாடல்களில் (சாமானியன் வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி இறைச்சல்களிலாமல்) ஆர்வம் வந்தாலும், அதில் வரும் ஒரு வரியும் புரியாததால் அதை தொடர்ந்து தேடிக்கேட்கும் ஆர்வம் என்றுமே இருந்ததில்லை. என்னதான் இசை அத்தனை வசிகரமாயிருந்தாலும் , அதில் கலந்திருக்கும் வரிகளை உதடுகள் உச்சரிக்கும்போதுதான், அந்த இசையினுள் முழுதாய் நுழைந்தெலும் மகிழ்ச்சி பொங்குவதை உணரமுடிகின்றது.

இசையை கேட்கும்போதும், அதை காதினுள் நுழைய விடுவதைவிட, அறையெங்கும் பரவவிட்டு அதில் மிதக்கும் அனுபவமே தனி. முடிந்தவரை முன்னதை தவிர்த்துவிட்டு, அறையெங்கும் இரைச்சலோ, இசையோ அதை முழுவதுமாய் பரவவிட்டு இரசித்துக்கொண்டிருப்பேன்.சென்ற ஞாயிறு அறை நண்பரின் தேர்வில், விருப்பத்தில் அருகே நடந்த "Linkin Park"-இன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கிளம்பினோம். பீட்டர் பாட்டின்மேல் ஆர்வமிலாத நானும், அதன் மேல் கடும் கிரேஸ் கொண்ட இருவரும் என.. எப்படி 5 மணி நேரத்தை போக்குவது என்ற குழப்பத்துடனே சென்றேன்.


சென்றதும் முதலில் தெரிந்தது மகிழ்ந்தது , அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அதிகபட்சம் 8 desi மக்களை மட்டும் கண்டிருப்போம் (அதில் 3 பேர் நாங்கள் ;-) , அடுத்து அங்கு வந்திருக்கும் கூட்டத்தின் சராசரி வயது :-D , அவர்களின் வித்தியாச பேஷன் உடைகளும், அலங்காரங்களும் என சாரசரியான high excited அமெரிக்க இளைஞர் கூட்டம். கொஞ்சம் அதிர்ந்து போனது, Linkin Park வரப்போவது 9 மணிக்குத்தான் அதுவரை சிறு சிறு band-கள் என்பது.


மேடையில் கண்ணுக்கு தெரிந்த மிகப்பெரிய 67 ஸ்பீக்கர்களை கண்டதும் அதில் இன்னும் இசை வராமலே அதிர்ந்து போனேன். ஒன்னும் புரியாததுடன் காது செவிடாகபோகுது என்றுதான் நினைத்தேன்.


சின்ன சின்ன Band-கள் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டத்தினுள் உற்சாகம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது, ஆனாலும் வரிபுரியா அந்த இசையில் ஏனோ ஆர்வமே வரவில்லை. அவ்வப்போது முழு பாடலிலும், சிறு சிறு பகுதிகள் அட்டகாசமாய் இருந்தது. எப்போடா முடியுமென lemonade-களும், french fries-களும் படுவேகமாய் உள்ளே போய்க்கொண்டிருந்தது.


சரியாய் 9 மணிக்கு தொடங்கியது "Linkin Park"-இன் வரவு, அட்டகாசமான பில்டப்களுடன், தீப்பொறி பறக்க, நூத்துக்கணக்கான விளக்குகளின் ஒளிவிளையாட்டுடன் தொடங்கியது. அப்படியென்ன band இது என நினைத்திருக்கையில், கடல் மணலில் பெயரை எழுதிஇருக்கையில் எதிர்பாராமல் வரும் அலையின் ஈரம் பெயரை அழித்து மணலில் வேகமாய் இறங்கும் பாருங்கள், அதுபோலத்தான் அதிரடியான இசை உள்ளத்தில் உற்சாகத்தையும், பரவசத்தையும் பரப்பத்தொடங்கியது.


வீட்டில் இருக்கும் இரண்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்ககளில் வரும் அட்டகாச இசைக்கு பரவசப்படும் நான், அந்த 67 ஸ்பீக்கர்களுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டிருபேன் என விவரிக்க முடியவில்லை. அதிரடியான எலெக்ட்ரிக் கிதாரும், டிரம்சும் வெட்டியாய் அதிரவில்லை.. அட்டகாசமான இசை... 2:30 மணி நேரம், எப்படி போனதே என்று தெரியவில்லை.. அத்தனை நேரமும் எங்களில் எல்லோருக்கும் உற்சாகம் கூடிக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை.


இறுதியில் அவர்களின் "In the End" பாடலுடன் முடித்தது சரியான சாய்ஸ். ஆனால் உற்சாகத்தில் கரைபுரண்டுகொண்டிருந்த எங்களுக்கு அதில் விருப்பமில்லை, கூட்டத்தோடு குரல் கொடுக்கத்துவங்கினோம்.. 15 நிமிடங்கள் போட்ட சப்தத்திற்கும், கூச்சலுக்கும் பலன்.. "What have i done" என்ற அந்த சூழலுக்கு பொருத்தமான பாடலுடன் அட்டகாசமாய் மீண்டும் ஒரு இறுதி பாடலுக்கு வந்தார்கள், வென்றார்கள்.


இப்போது youtube-இல் அவர்களின் பாடல்களாக (பாடல் வரிகளுடன் தேடி) முணுமுணுக்க துவங்கியிருக்கிறேன்.. இதுவும் இசைதான், வித்தியாசமானதொரு பரவசம்..


I'll face myself
To cross out what I've become
Erase myself
And let go of what I've done
What I've done
Forgiving what I've done!!!

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக