யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கனவுப்பயணத்திற்கான முதலடி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 29, 2006
1010101101010101101010101011010101010110101010101101010
101010101 பயணம் 1011010110101010101101010101011010101
1010101010110101010101101011010101010110101010101101010
101010010101010 இமயமலைச்சாரல் 10101010110101010101
1010100101010101101010101011010101010110101010101101010
10101011010101011010101010110 ஏகாந்தம் 1011010101010111
101010101 கனவு 01010111000001010101011010101010110100
1010101010110101010101101010101011010101010110 குளிர்100
1010101010110010111111 பனி 0101011011010101010111010100
1010101010110101010101101011010101010110101010101101010
1010101010110101010101101011010101010110101010101101010
1010101010110 புகைப்படம் 10101010110101011010101010110
1010101010110101010101101010101011010110101010101101010
101010101011010101101010101 உற்சாகம் 01010101011001010
1010101010110101011010101011010101010110101010101101010
101010101011 குதூகலம் 10101010110101101010101011010101
1010101010110101010101101010101001010110101010101101010
1010101010110101101 காதல்கோட்டை 1010101010110001010
1010101010110101101010101011010101010110101010101101010
1010101010110101101010101011010101010110101010101101010
0101010101101011010101010110101010101101010101011010101
1010110101010101101010101011010101010110101010101101010
புத்தாண்டு வாழ்த்துக்கள்
11010110101010101101010101011010101010110101010101101010
11010110101010101101010101011010101010110101010101101010
01010110101010101101010101011010101010110101010101101010
01010110101010101101010101011010101010110101010101101010

கொல்கத்தா துர்கா பூஜா - இறுதி பகுதி

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
கல்கத்தாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமான சோனாகாச்சிக்கு இன்னொரு முகமும் உண்டு. துர்கா சிலையை செய்யத்தொடங்குவதற்கு முன் இங்கிருக்கும் பெண்களின் காலடி மண்கொண்டே தொடங்குவார்களாம். (ஹிந்தி தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யா மாதுரியின் வீட்டுக்கு போவது நியாபகம் உள்ளதா ?) , பூஜை ஒரு பக்கம் படு கோலாகலமாக நடந்து கொண்டிருக்க, அதே தருணத்தில் போலிஸ் கொண்டு சோனாகாச்சியில் உள்ள கூட்டம் ஒழுங்குபடுத்தி அனுப்பப்படுகின்றது. அந்த பெண்களை பார்க்கையில் இத்தனை பூஜை இத்தனை செலவு எதற்கு வீணே என்றுதான் மனது படபடத்துக்கொண்டிருந்தது.



கொல்கத்தாவில் நுழைந்ததும் முதல்காட்சி, துர்கா பூஜை துவங்கும் போது கங்கை நீர் கொண்டு வருவது.


மா துர்கா தலைப்புச்செய்திகளில்
பந்தல் அமைப்பு வேலை தொடங்குகிறது
மர சமையல் பொருள்களினால் ஆன குதிரையும், சாரதியும். அருகிலுள்ள மக்களின் உயரத்தை ஒப்பீடு செய்ய பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
முகம்மது அலி பார்க்கில் உள்ள அலங்கார விளக்கு
ரோட்டோர சூதாட்டமும் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதிதான் ;-)
தோஹல் () என்ற மங்கல வாத்தியம் இந்த விழாவில் முக்கிய பங்கு, அதில் வித்தை காமிக்கும் ஒரு குழு (சால்ட் லேக்கில்) , ஒருவர் தோளில் அமர்ந்த ஒருவர், கிட்டத்திட ஐந்து தோஹல்களை கை,கால், பற்களில் பிடித்துக்கொண்டி இசைக்கும் தருணம். நம்மூர் தப்பை போலவே, நாடி நரம்பை சுண்டி இழுக்கும் இசை.

கொல்கத்தா துர்கா பூஜா - 2

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
மிக மிக வித்தியாசமான, பிரமாண்டமான பண்டல், காட்டுக்குள்ளிருக்கும் குகை ஒன்றில் குடையப்பட்ட பயங்கரமான காளி கோவில் எனும் தீம். இரத்தமெங்கும் தெளித்திருப்பதை போல் ஒரு உணர்வை உருவாக்கி, மண்டை ஓடுகளும், மிக நீண்ட பாறையில் குடைந்த குகைப்பாதையும், தொங்கும் வேர்களும், இறுதியில் பயங்கரமான காளி சிலையும் என உள்ளத்தை கவர மட்டுமின்றி, உள்ளத்தை கொஞ்சம் உறைய வைத்த பண்டல்.

முழுவதுமாய் சட்டை பொத்தான்களால் ஆன பண்டல், அந்த வித்தியாசத்தை தவிர, இந்த கலை நுணுக்கம் கொண்ட சிலையும் இந்த பண்டலின் கவன ஈர்ப்பை பெற்றது.


துர்க்காவின் உடையில் உள்ள வேலைப்பாடுகள்.



முகம்மது அலி பார்க்கில் உள்ள பந்தல் (கொல்கத்தாவில் மிக மிக புகழ்பெற்ற பண்டல்), ஒருமைப்பாட்டை உணர்த்தும் தீம்கள் எப்போதும் இங்கு உண்டு.



இங்கு வித்தியாசமான தீம் ஏதுமில்லாவிடினும், சிலைகளின் தோற்றம் மிக மிக அழகாய் :-)



பூஜை நடந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன பண்டல்


மணிக்டாலாவில் உள்ள பிரமாண்டமான மரவேலைப்பாடுகள் கொண்ட பண்டல், முழுவதுமாய் மர கரண்டிகள், பூரிக்கட்டைகள் என மர சமையல் சாமான்கள் கொண்டு நான்கு குதிர்கைகள் இழுக்கும் சாரதி கொண்ட தேர் வடிவில் செய்யப்பட்டது. தேரின் உயரம் 20 அடிக்கும் மேல், (சாரதி மற்றும் குதிரைகள் உயரத்தை கணக்கில் கொள்க).


மிக மிக வண்ணமயமாய் செய்யப்பட்ட சிலை, இதில் மிகவும் கவர்ந்தது சிலையின் கூந்தல். மிக மிக மிக நுணுக்கமாக செய்யப்பட்ட வேலை அது, நிஜமாகவே சவுரி கொண்டு செய்து விட்டார்களா என திகைக்க வைத்தது.

கொல்கத்தா துர்கா பூஜா - 1

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 06, 2006
துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேயன் (நம்மூர் முருகனைத்தான் இப்படி கூப்பிடுறாங்க, வேலுக்கு பதில் வில் ஆயுதம்.. வேல் தமிழர் ஆயுதமாச்சே ;-) சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு பந்தல்களிலும் சிலைகள் மட்டுமின்றி, பந்தல்களின் அமைப்பும் அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட தீம் நோக்கி இருக்கும்.

இரவு முழுவதும் பெங்காலிகள் தங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு பந்தல் பந்தலாக சென்று வழிபடுவது மட்டுமின்றி, போகும் வழியெங்கும் குதூகலத்துடன் விளையாடுவதும், விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்வதும் என, ஒரு ஆன்மீக திருவிழாவாய் தெரியவில்லை :-)

துர்கா பூஜையின் போதுதான் அவர்கள் அனைவரும் குளித்து புதுத்துணி அணிவார்கள் என்றொரு வதந்தியும் உண்டு ;-)

இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை.... என்று சந்தேகம் வருகின்றது..

எது எப்படியோ, கொல்கத்தாவே விழாக்கோலம் பூணும் நேரமிது, மக்கள் கூட்டத்தையும், உற்சாகமான ஒரு சூழ்நிலையையும் விரும்புவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடமும் நேரமும் இது.


பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம், இதில் முதல் பரிசு பெறுவதென்பது ஒரு பெரும் பெருமை.


மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.


இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)

இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)



பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 2

Published by யாத்ரீகன் under on புதன், செப்டம்பர் 27, 2006
காவல் சிங்கங்கள்

சக்கரத்திற்கு பக்கத்திலுள்ள சிலைகள் ;-)


பிரமாண்டம்


எங்கு நோக்கினும் அற்புதமடா


நுழைவாயில்


பராமரிப்பு பணிகள்

7 குதிரைகள், 24 சக்கரங்கள் - 7 வார நாட்கள், 24 மணி நேரம்

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 26, 2006
கோனார்க்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்



கங்கையரசர் நரசிம்ம தேவா - கோனார்க் கோவிலை கட்டக்காரணமாயிருந்தவர்


சூரியக்கடவுள் சிலையின் இடுப்பு ஆபரண வேலைப்பாடு - எவ்வளவு நுணுக்கமான வேலை


கோனார்க் கோவில் - தேரைப்போல் தோற்றம் அளிக்கின்றதா ?


புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரம் - வெறும் சக்கரம் மட்டுமல்ல சூரியக் கடிகாரமும் கூட


சிங்கம் பலத்தையும், யானை செல்வத்தையும் குறிக்க இரண்டுக்கும் அடியில் உள்ள மனிதனை அழிப்பதை குறிக்கும் சிற்பம்


கோனார்க் சக்கரம்


நடன மண்டபத்தில் ஒரு சிற்பம் - எவ்வளவு பொறுமையும் கற்பனைத்திறனும் இருந்திருக்கும்

அடுத்த பயணம் - துள்ளிக்குதிக்குது மனசு

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 14, 2006
முக்கியமான நிகழ்வு ஒன்றிருந்தாலும் மனதில் துள்ளிக்கொண்டு முதலில் வருவது, இப்போது பார்த்து வந்திருக்கும் படம். அருமையான கதைக்களம், நுட்பமான் உணர்வுகளை அருமையாய் கையாண்டிருக்கக்கூடிய வாய்ப்பு, ஆனால் எதுவும் இல்லை.

அருமையான பாடல், அட்டகாசமான சூர்யா, வழக்கம்போல் மிக மிக அழகாய் பூமிகா, இருந்தும் சொதப்பல்தான்.

சில படங்கள் அவை கிளறிவிடும் நினைவுகளுக்காகவே மனதில் தங்கிவிடும், அந்த வகையில் ஏதேதோ நினைவுகள் மனம் நிரம்பியிருக்க, யாருக்குமெ பிடிக்காத ஒரு படம் மனதில் தங்கிவிட்டது.

Project கிடைக்கும் வரை என்னை என்ன செய்வதென்ற குழப்பம், என்ன செய்யலாமென்று யோசித்து முடிப்பதற்குள் புவனேஸ்வர் கிளம்புவதற்கான வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

நாளை காலை கிளம்பி 9ஆம் தேதிதான் திரும்புகின்றேன்.

கல்கத்தாவிற்கு ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டு வந்துவிடவேண்டும் என்று துள்ளிக்குதிக்கின்றது மனசு.

மறக்க நினைக்கும் நினைவுகள் தந்தபோதிலும், மறக்க முடியாத ஊர் அது. யரைப்போய் பார்பேன் அங்கே, ஒருவரும் இல்லை ஆனால் ஒவ்வொரு வீதிகளும், ஆட்டோக்களும் இனிமையான பயணங்கள் தான்.

கோனார்க்கில் மனம் கரைய உட்கார்ந்து வர வேண்டுமென்கின்றடு இன்னொரு ஆசை.

வித்தியாசமான அனுபவங்களை கொண்ட பயணமாகத்தான் போகின்றது.

விரைவில் சந்திப்போம்..

காதல் சரியா தவறா

Published by யாத்ரீகன் under on புதன், ஆகஸ்ட் 23, 2006

காதல் சரியா தவறாதொடங்கியது விவாதம்

பெற்றோர் வைத்த நம்பிக்கையை சிதைப்பதா ?!

பதறிய மனமொன்று, பித்தென்று வைத்துக்கொள்வோம் இதை,

வாழ்வை தொடன்குவதுதான் காதல் என்றது மற்றொரு பாதி,

பற்றென்று வைத்துக்கொள்வோம் இதை,

எப்படி, எப்படியென்று கேள்வி எழுந்திட,

நீ முதலில் சிதைப்பதெப்படியென்று சொல்லென்றது பற்று,

தவறான வழியில் செல்ல மாட்டோம்,

கிடைத்த சுதந்திரத்தை தவறாய் பயன்படுத்திட மாட்டோம்

கல்வியென்ற நோக்கோடு அனுப்பியயிடத்தில்

அதைத்தவிர காதல் பாடம் படிக்க மாட்டோமென்ற

நம்பிக்கைதான் மீறப்படும்போது, சிதைக்கபடுகின்றது

பெல்ஜிய இரயில்வே நிலையத்தனிமையில் கிறுக்கிய சில குறிப்புகள்
முழுவதுமாய் சீக்கிரம் தட்டச்ச வேண்டும்...

அடுத்த பயணம்

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 10, 2006

ஆங்கிலம் இங்கில்லை

மொழிப்பிரச்சனை இங்கும் உண்டு

மொழிவாரியாக நாடும், மக்களும் பகுக்கப்பட்டுள்ளது

உலகின் இந்த நாட்டின் பகுதியில் இருக்கும் நாடுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றிய நாடு.

சாக்ஸபோன் என்ற இசைக்கருவியை உருவாக்கிய நாடு

Art Nouveau என்ற கட்டடக்கலை முறையை உருவாக்கியவர் இருந்த நாடு.

உலகப்புகழ் பெற்ற ஒரு கார்ட்டூன் தொடர்/கதாபாத்திரம்/புத்தகம் இந்த நாட்டிலிருந்துதான் உருவானது.

பிக் பாங்க் எனப்படும் பொளதிக தியரியை பயன்படுத்தியது இந்த நாட்டவர்தான்.

ஆகஸ்ட் 15 அங்கேயும் விடுமுறைதான்

Waffles மற்றும் French Fries, இங்கிருந்து தான் தொடங்கியது.

Steak இவர்களின் தேசிய உணவு

உலகின் இவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள நாடுகளிலேயே, நதிகளின் தண்ணீரின் தரம் இங்கேதான் மிகக்குறைந்தது. 122 நாடுகளில் கடைசி.

எல்லாம் சரி எதுக்கு இதெல்லாம்.... இந்த நாட்டுக்குத்தான் அடுத்த பயணம், பணிரீதியாக.. எத்தனை நாளென்று தெரியவில்லை.. சராசரியாக மூன்று மாதம் முதல் தவணையாக இருக்குமென்று நினைக்கின்றேன்...

பதிலில்லை, பின்னூட்டமில்லை என்றால் மன்னிக்கவும்... :-)

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - Dr.V

Published by யாத்ரீகன் under on வியாழன், ஜூலை 27, 2006
இந்த மாமனிதரையும், அவரின் மருத்துவமனையைஉம் கிட்டதிட்ட அனைவருமே கணித்துவிட்டனர்...

தெரியாதவர்கள் வருத்தம் கொள்ளவேண்டாம், அவர் யாரென்று தெரிந்துகொண்டு மரியாதை செய்ய மற்றொரு தருணம் இது..

யாரவர் ?

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் மக்களிடமும், 1,60,00,000 வெளி நோயாளிகளிடமும் அன்புடன் Dr.V என்றழைக்கப்பட்ட , திரு. கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களே இந்த கட்டுரைக்கதாநாயகர், மாமனிதர்.


இந்த 83 வருட இளைஞரே மதுரை அரவிந் கண் மருத்துவமனையை உருவாக்கியவர். சற்று மனதை கனக்கச்செய்யும் செய்தி, சமீபத்தில் காலமாகிவிட்டார் என்பதே.

கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு சகாப்தம், இலவச கண் சிகிச்சை முகாம்களை 1970லிலேயே நடத்திக்காட்டிய முன்னோடி.

அவரின் அரவிந்த கண் மருத்துவமனையின் செய்ல்பாடுகளை, பல உலகநாடுகளில் உள்ள மருத்துவமனைகள் வந்து படித்துச்சென்று, செயல்படுத்தி வருகின்றன..

சில மாதங்களுக்கு முன்பு கூட Dr.V, கிட்டத்திட்ட அனைத்து தினங்களுக்கும் அரவிந்திற்கு வருகை தந்து வேலை செய்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்கு சீக்கிரம் செல்பவர்கள், அவர் அங்கே தன் பிரார்த்தனையுடன், அந்த நாளுக்காக ஆயத்தமாவதைக்கண்டிருக்கக்கூடும்... அவர் சொல்லிக்கொள்வதைப்போல..

"..புனிதமான வேலைக்கான சிறப்பான கருவியாய்..."

சமீபத்தில் கோமாவில் சென்ற இவர், அதிலிருந்து மீண்ட உடனே, மருத்துவமனையை சக்கர நாற்காலியில் சுற்றிச்சென்று, வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.... என்ன ஒரு அர்பணிப்பு..

தன் வாழ்நாள் முழுவதும், சிறிதென்பதை மறுத்து வந்த Dr.V தனக்குத்தானே எப்பொழுதும் கேட்டுக்கொள்கிறார், "என் பணி என்னை எப்படி ஒரு மேலும் சிறந்ததொரு மனிதனாக மாற்ற முடியும், எப்படி இந்த உலகை சிறந்ததாக மாற்ற முடியும்" என்று.

இத்தகைய தனித்துவமானதொரு நோக்கத்தை முன்னிருத்தி அவரிடம் "உங்களுக்களிக்கப்பட்ட பரிசாக/வரமாக எதை கருதுகின்றீர்கள்" என்று கேட்டதற்கு, "பலர் தங்களுக்கு பார்வை அளித்ததற்கு என்னை வாழ்த்துகின்றனர், என்னைப்பொருத்தவரை, என்னிடமிருப்பதைக்காட்டிலும், பிறருக்கு என்னால் அளிக்க முடிந்ததையே மிகப்பெரும் பரிசாக/வரமாக நினைக்கின்றேன்" என்பதுதான் அவரின் பதிலானது.

அவரின் மருத்துவமனைகளில் நடைபெரும் ஆராய்ச்சிகளை வரவேற்கும் Dr.V, அதே நேரத்தில், நிபுணர்கள் (Consultants) ஏழைகளைப்பற்றி பேசும்போது உடனே சொல்கிறார், "அரவிந்தில் உள்ள எவரும் ஏழைகள் என்ற சொல்லை பயன்படுத்துவதுகூட கிடையாது". "ஏழை என்பது பண்பற்ற சொல், ஏழைகள் என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அது அவரை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமில்லை, அவர் எந்த வகையில் ஏழை என்பதை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது..."

மேலும், "நீங்கள் இலவச மருத்துவமனைக்கு தனியாக தகுதி பெறத்தேவையில்லை, நாங்கள் யாரையும் கேள்விகள் கேட்பதில்லை, நாங்கள் சில நேரம் பணக்காரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கின்றோம், நாங்கள் வியாபாரம் நடத்தவில்லை, அவர்களுக்கு பார்வை அளிக்கின்றோம்" என்று அவர் சொல்லும் போது, அவர் செயல்களில் உள்ள உன்னதம் புரிகின்றது.

இதோடு நிற்காத அவர், 1978-ஆம் ஆண்டு "சேவா பவுண்டேசன்" எனும் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனம் இபோது நேபாள்,திபெத்,கம்போடியா,பங்களாதேஷ்,எகிப்து,டான்சானியா மற்றும் Gஉஅடெமல போன்ற நாடுகளில் எல்லோராலும் பெறக்கூடிய கண் சிகிச்சையை செய்து வருகின்றது.

இவரைப்பற்றிய சில சுவாரசியமான நிகழ்வுகள்:
Dr.V, சுவற்றில் சாய்ந்தபடி கொஞ்சம் நிலைதடுமாறியவரைப்போல் நின்றுகொண்டிருக்கின்றார், அதைக்கண்ட மருத்துவர் ஒருவர் உதவி செய்ய முயல, அதற்கு அவரின் பதில், "உன்னால் எனக்கு உதவ முடியாது, நான் இந்த சுவற்றை சாய்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்" என்றாராம் :-) , தன்னம்பிக்கையையும் நகைச்சுவையுணர்வோடு.

மருத்துவமனையின் புதிய வாயிற்காப்பான், இவரை அறியாமல், மக்களின் வழியை மறிக்காமல் உட்காருங்கள் பெரியவரே என்று கூறியதும், அதன் படியே வரவேற்பறையில் உட்கார்ந்து விடுகின்றார். அவரை அறிந்தவர்கள் வந்து ஏன் என்று கேட்டதற்கு, "என்னால் இப்போது செல்ல இயலாது என்று கூறி விட்டனர், அதனால் காத்திருக்கின்றேன்" என்றாராம்.

ஒருநாளுக்கான அதிக அறுவைசிகிச்சைகள் (155) செய்த உஷா அவர்களிடம் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி, "கிராம முகாம் ஒன்றை முடித்துவிட்டு 102 டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்ந்த அவரை, காலையில் மருத்துவமனை வந்த Dr.V, "என்ன ஆனது " என்று கேட்க, "காய்ச்சல்" என்ற பதிலை கேட்ட அவர் சிறித்துக்கொண்டே, "என் காய்ச்சல் 104, உன்னுடையது ?" என்று சிரித்துக்கொண்டே கேட்டதுதான் தாமதம், உஷா படுக்கையை விட்டு வேலைக்குச்செல்கிறார். என்ன ஒரு மன/உடல் உறுதி.

ஒரு முறை, டெல்லியைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அரவிந்திற்கு வருகை தந்து, "எனக்கு ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், இந்த மருத்துவமனை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, உங்களால் என்னுடன் வரமுடியுமா" என்று கேட்டதற்கு, Dr. V, "உங்களிடம் தான் அதற்கு சாத்தியமான பணம் உள்ளதே உங்களால் முடியும்", என்று பதில்ளளிக்க. அந்த தொழிலதிபர், "எனக்கு வெறும் மருத்துவம்னை வேண்டாம், அரவிந்தின் கலாச்சாரத்துடன் ஒரு மருத்துவமனை வேண்டும், இங்கே மனிதர்கள் விலைமதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள், பணத்தை விட அவர்களே மதிக்கப்படுகின்றார்கள். அவர்களிடம் ஒரு கருணை தெரிகின்றது, எப்படி உங்களால் முடிகின்றது".


இவர் வாங்கிய விருதுகள்:
* இந்தியாவின் உயர்ந்த பத்மஷிரி விருது
* ஹெலன் கெலர் சர்வதேச விருது
* AAOவின் IAPB (International Blindness Prevention) விருது
* உலக சுகாதார மையத்தின் "எல்லோருக்கும் உடல்நலம்" விருது (WHO Award for Health for Al)
*Academy International Blindness Prevention Award
*International Social Entrepreneurship Award
*Medal of the Presidency of the Italian Republic
* Demonstrated the link between vitamin A deficiency and childhood blindness.
* Developed and pioneered the concept of eye camps and safe assembly-line techniques, which have become models for blindness prevention and treatment programs worldwide.
* Personally performed over 100,000 successful eye surgeries.
* While at the Government Erskine Hospital, introduced the following for the blind:
* Eye Camp Programme (1960)
* Rehabilitation Center for the Blind (1966)
* Low Vision Aid Clinic (1968)
* Glaucoma Demonstration Center (1968)
* Ophthalmic Assistant Training Program (1973)
* Rural Rehabilitation for the Blind Project (1973)


இவரின் முக்கியமான ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் மேலாண்மை பற்றிய சாதனைகள்:
* Lifetime Service Award from the International Agency for the Prevention of Blindness,

* 1982 Honorary Doctorate from University of Illinois,
* 1985 Lions Clubs’ Melvin Jones Fellow Award,
* 1987 Harold Wit Lectureship, Harvard Divinity School,
* 1991 Pisart-Lighthouse for the Blind Award,
* 1992 International Blindness Prevention Award, American Academy of Ophthalmology,
* 1993 Susrata Award, Asia Pacific Academy of Ophthalmology

இவரின் புத்தக படைப்புகள்
கண் மருத்துவ உலகில் மிக முக்கியமான, புகழ்பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகள்கண் பார்வை பரிபோவதை தடுபதைப்பற்றியதான இவரின் பல கட்டுரைகள் மிக புகழ்பெற்றவை..


வாழ்க அவர் புகழ்

அவரின் நோக்கங்கள் அவரின் குடும்பத்தினரால் சீராக நடைபெறுகின்றது, அவர்களுக்கும் நன்றி/வாழ்த்துக்கள்...

இவரைப்பற்றிய கதையை உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள், விதைகள் வீரியமாய் இருக்கட்டும்

அவர் கைகளுக்கான கருவிகளைப்பற்றி சொல்வது போல...
"..சிறப்பாய் தேவைக்கேற்றபடி உருவாக்கப்பட்ட சிறந்ததொரு கருவி"..


நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - பாகம் 2

Published by யாத்ரீகன் under on புதன், ஜூலை 26, 2006
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து, நாட்டின் மருத்துவத்துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவரைப்பற்றி முன்னோட்டத்தை சென்ற பதிவில் பார்த்தீர்கள், கண்டுபிடித்தீர்களா ?

புதிர்கள் தொடர்கின்றன....

இவர் மருத்துவராக தன் வாழ்வை தொடங்கியபோது இந்தியாவிலேயே மொத்தம் 8 கண் மருத்துவர்களுக்கு மேல் இல்லை. அச்சமயம் சுமார் 20 மில்லியன் மக்கள் கண் படலத்தால் பார்வையற்று இருந்தனர், இது நம் நாட்டில் சமச்சீரற்ற உணவு மற்றும் மரபணு காரணமாய் இத்தகைய நிலை இருந்தது.

இன்று இவரின் மருத்துவமனை, உலகத்தின் மிகப்பெரும் தனியாள் கண் அறுவைசிகிச்சை சேவை தரும் இடம். இவரினால் ஆர்வமூட்டப்பட்ட இவரின் குடும்பத்தினர், சுமார் 1,488 கிராமங்களை கண்டு கண் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளனர்.

எல்லாவற்றிலும் ஆச்சரியமானது, இந்த மருத்துவமனை அரசாங்கத்திடமிருந்து ஒரு பைசா உதவியும் பெருவதில்லை, மாறாக அவை சுயசார்புடயவைகளாக இயங்கி வருகின்றது.
இம்மாமனிதரிடம் மற்றுமொரு வியக்க வைக்கும் விஷயம், தான் வாழ்ந்த வரை மருத்துவமனையின் வருமானத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளாமல், தன் ஓய்வூதியத்திலேயே வாழ்ந்தது. எத்தகைய மன உறுதி, அதை வாழ்நாள் முழுதும் செயல்படுத்திய விதம்.

இத்தகைய குறைந்த/இலவச சேவையை எப்படி தர முடிகின்றது இவரால் என்று கேள்வி எழுகின்றதல்லவா ? இதோ இப்படித்தான்..

கண்படல அறுவைசிகிச்சை செய்யப்படும் முறையை சிறிது மாற்றி அமைத்தன் மூலம் அவரால் இதை சாதிக்க முடிந்தது. ஒரு மருத்துவக்குழுவுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், அறுவைசிகிச்சையின் 70 சதவிகித வேலையை அவர்கள் செய்துவிட, மருத்துவர்கள் அதிகமான சிகிச்சைகள் செய்ய முடிந்தது.

இதைவிட மிக முக்கியமானதொரு மாற்றம், அந்த மருத்துவமனை தனக்கு தேவையான "Intra-Ocular" லென்ஸ்களையும், கண் சிகிச்சைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையிலும், மொத்த உற்பத்தி செய்துகொள்ளதொடங்கின.

இத்தகைய குறைந்த செலவுத்திறன் கொண்ட உற்பத்தியை, புதிய கட்டண திட்டங்களுடன் சேர்க்கும்போது, அதன் பலன் எல்லா வகையான மக்களுக்கும் கிடைக்கின்றது.

இவர்களின் "Aurolab" என பெயரிடப்பட்ட உற்பத்திக்கூடத்தில் உருவான பொருட்கள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கண் மருத்துவர்களாலும், மருத்துவமனைகளாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆக குறைந்த செலவு என்ற பெயரில் தரம் ஒன்றும் குறைவதில்லை, மாறாக பெரிதாக கூடியே உள்ளது. உலகெங்கும் உள்ள உற்பத்தியில், இங்கே மட்டுமே 10 சதவிகித தேவை நிறைவேற்றப்படுகின்றது என்பதை படிக்கும்போது, இந்த சின்ன ஊரிலா என்று நம்ப முடியவில்லை.

இதன் மூலம் முதலீட்டின் மேல் 30 சதவிகித வருவாய் பெருகின்றனர், மருத்துவர் தென் தமிழகமெங்கும் 5 கண் மருத்துவமனைகள் துவங்குகின்றார்.

இந்த மருத்துவமனையின் வெற்றியை, அவை பணத்தால் அவை ஈட்டி வரும் இலாபத்தை கொண்டு மட்டும் முழுதாய் கூறிவிட இயலாது.

இத்தனை வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் பின்னே நிற்பது நரைத்த முடியுடனும், இயல்பை மாறியுள்ள கைவிரல்களும் கொண்ட ஒரு 88 வயது இளைஞர்.


யார் இந்த மாமனிதர் - சென்ற பதிவின் தொடர்ச்சி

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 25, 2006

1918 அக்டோபர் 1, தூத்துக்குடியில் வடமலபுரம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது....

அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் ஏதும் இல்லை, ஆனாலும் காலையில் எருமைமாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச்சென்றுவிட்டு, பின்னர் மூன்று மைல்கள் நடந்து பள்ளிக்கூடம் சென்று படிக்கத்துவங்கினான் அந்தச்சிறுவன்.

பல வருடங்களுக்குப்பிறகு, அதே கிராமத்தில் பள்ளிக்கூடம் தொடங்கிய தருணத்தில், அங்கே பென்சிலோ, பேப்பரோ.. ஏன் சிலேட் கூட அவர்களிடமில்லை. ஆனாலும், ஆற்று மணலெடுத்து தரையில் பரப்பி, விரல்களால் அதிலெழுதி பழகத்தொடங்கினான் அந்தச்சிறுவன்.

1944, கடுமையான உழைப்பின் பயனாக, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலிருந்து மருத்துவராக வெளிவருகின்றார். வெளிவந்ததும், இந்திய இராணுவத்தின் மருத்துவத்துறையில் "Obstetrics" பணிபுரிய சேர்கின்றார்.

வாழ்வின் முக்கியமான இந்த கட்டத்தில், வாழ்வின் மாபெரும் முரண்பாடுகள் "Rheumatoid Arthritis" என்று அவருக்கு அடுத்த தடைக்கல்லாக விழுகின்றது. (நல்ல படிப்பு இருந்திட்ட நேரம், வேலை செய்ய முடியாமற் போனது) இந்த நோய் அவரின் கைகளை தாக்க, கிட்டதிட்ட இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். பின்னர் இதனால் கை விரல்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, தங்களின் இயல்பான உருவத்தை இழக்கின்றன, நான்கே வருடங்களில் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அன்று தொடங்கிய வலி அவரை இறுதி வரை விட்டுப்பிரியவே இல்லை..

இத்தகைய நிலையையும் மீறி, மருத்துவக்கல்லூரிக்கு திரும்பி "Ophthalmology"-இல் பட்டம் வாங்கினார். தன் இயல்பை மீறிய கைவிரல்களுக்கு ஏற்றார்போல் தானே மருத்துவக் கருவிகளை உருவாக்கிக்கொண்டு, அதனால் உண்டாகும் கடும் வலியையும் பொருட்படுத்தாமல் கடும் மன-உறுதியுடனும், உழைப்புடனும் கண்படலம் (Cataract ) அறுவைசிகிச்சை பயிற்சி செய்யத்தொடங்கினார். ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 100 அறுவைசிகிச்சைகள் செய்ய அந்த புதிய கருவிகள் அவருக்கு உதவத்தொடங்கின. காலப்போக்கில்

அவர் தனியொரு ஆளாக, 1 இலட்சம் கண் அறுவைசிகிச்சைகள் செய்து, நாட்டின் வியக்கத்தக்க கண்படல அறுவைசிகிச்சை (Cataract Surgeon) நிபுணராக வேகமாக உருவெடுக்கின்றார்.

இத்தகைய அசுரவேகத்தில் 25 ஆண்டுகள் ஓடிவிட, தன் வாழ்வை மட்டுமல்ல, கண் மருத்துவத்துறையை முற்றிலுமாய் மாற்றிவிடப்போகும் மாற்றத்தின் ஊக்கியை கண்டார் - மெடொனால்ட் உணவகத்தின் தங்க நிற வளைவுகள் தான் அவை.

அன்றுதான் அந்த மருத்துவர் யோசிக்கத்துவங்கினார், "மெக்டொனால்ட் பில்லியன் பெர்கர்களையும், கோக்ககோலா பில்லியன் சோடாக்களையும் விற்க முடிந்தால், ஏன் நம்மால் மில்லியன் கண்பார்வை மீட்டுத்தரும் அறுவைசிகிச்சைகளை செய்ய இயலாது" என்று.

ஒரு இளைஞராக அவர் எடுத்த முடிவு, "அறிவாற்றலும்,திறமையும் மட்டுமே இருந்தால் போதாது. அர்த்தமுள்ளதாய் ஒரு செயல் செய்யும் மகிழ்ச்சியும் வேண்டும்". முடிவெடுத்ததும், 65 வயதில் தன் வீட்டை அடமானம் வைத்து, இரண்டே வருடங்களில் 11 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனையை மதுரையில் ஒரு வாடகை வீட்டில் துவங்குகின்றார்.

மருத்துவமனையின் நோக்கம், "இலவசமாக அல்லது குறைந்த செலவில் இயலாத மக்களுக்கு கண்திரை அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்பது". அந்த முதல் வருடத்தில் மட்டும், அந்த மருத்துவர் செய்த அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை ஐயாயிரம் (5,000).

இன்று, சுமார் மூவாயிரத்து அறநூறு (3,600) படுக்கைகள், ஐந்து மருத்துவமனைகளில் நாடெங்கும் பரவி, இரண்டு இலட்சத்துக்கும் (2,00,000) மேலான கண் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துவருகின்றது.

மேலும், அங்கு வரும் 70 சதவிகித நோயாளிகள் ஒன்றுமே அல்லது மிகவும் குறைந்தபட்ச கட்டணத்தையே செலுத்துகின்றனர். இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான இயலாத இந்தியர்கள் நாடெங்கிலும் பார்வை பெருகின்றனர். வாழ்க்கையில் ஒளி பெருகின்றனர். வெளிநாடுகளில் 1600 அமெரிக்க டாலர்களுக்கு செய்துவருவதை இவர் வெறும் 10 டாலருக்கு செய்து முடிக்கின்றார்.

இது மட்டுமின்றி இந்த மருத்துவமனைகளின் இத்தகைய குறைந்த செலவில், நிறைந்த தர செயல்பாடு உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளின் வியாபார முன்மாதிரியாய் (Business Model)-ஆக திகழ்கின்றது.

இன்று ஒரு வருடத்தில் 2 மில்லியன் அறுவைசிகிச்சைகள் இந்த மருத்துவமனைகளின் நடைபெருகின்றன.

இத்தனை சாதனைகளுக்கும் உரித்தான அந்த மாமனிதர் மருத்துவர் யார் ? இத்தகைய சிறப்புவாய்ந்த மருத்துவமனை எது ? யோசித்துக்கொண்டிருங்கள்...

அடுத்த பதிவில்....

கதைசொல்லி அனுபவம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006

பல வருடங்களாய் நாட்குறிப்பு எழுதிவருவதையும், தமிழ் 1, தமிழ் 2 என தேர்வுதாள்களில் எழுதியதை தவிர கதை எழுதி எங்கும் பழக்கமில்லை எனக்கு. தேன்கூட்டின் சென்ற போட்டியான "தேர்தல் 2060" பற்றிய கதைகளை படிக்கும்போது கூட எந்த ஆர்வமும் வந்துவிடவில்லை. இந்த முறை, போட்டிக்கான கதை/கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது நாமும் கடந்து வந்தது தானே "இந்த விடலைப்பருவம்" , ஏன் ஒரு முறை முயலக்கூடாது என யோசனை.


முதலில் வந்த தடைக்கல், இதுவரை வந்த எந்த ஆக்கத்தின் பாதிப்போ, ப்ரதிபலிப்போ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், அதன்பின், வித்தியாசமான கதைசொல்லும் முறை. அட இவ்வளவுதானே, பார்த்துக்கொள்ளலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் தடையை தாண்டுவதே கடினமாய் ஆனது, காரணம் , தலைப்பில் இருக்கும் எல்லா கோணங்களையும் எடுத்து எழுதிவிட்டர்கள். எதை தொடுவது என்று நினைத்தாலும், முந்தின தினம் படித்தவைகள் நினைவுக்கு வந்து, அதுதான் அந்த கதையில் இருக்குதே என தோன்ற ஆரம்பித்தது.

இதை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்வுதான், விடலைப்பருவம் விடைபெரும்போது, அந்த பருவத்தில் தோன்றிய எண்ணங்கள் எப்படி மாற்றம்பெருகின்றது என்ற என் ஆக்கத்திற்கான கருவானது. என்னதான் பிறர் கதைகளை படிக்கும்போது நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் என தோன்றினாலும், வித்தியாசமாய்த்தான் இருந்தது திடீரென தினசரி நிகழ்வுகளில் இருந்து தாக்கம் உருவானது.

கதை சொல்லும் முறையில் ரொம்ப வித்தியாசமாய் இல்லாமல் இயல்பான மதுரை பேச்சுத்தமிழ் நடையில் இருக்கட்டும் என்று முடிவு பண்ணியது வேண்டுமானால் எளிதாய் இருந்தது ஆனால் அதை கதையில் கொண்டுவருவதற்கு கொஞ்சம் அதிகமாய் தான் மெனக்கெட வேண்டியிருந்தது. வேண்டுமென்றே வார்த்தைகளை சிதைப்பதும், சொற் குற்றங்கள் அதனால் உருவாவதும், அப்படி தெரிந்தே எழுத கஷ்டமாய் தான் இருந்தது.

எழுத/தட்டச்ச ஆரம்பிக்கையில் மனதில் இருந்தது கதை ஒரு மாதிரியாகவும், முடித்தபின் ஆங்காங்கே அது வேறு மாதிரி போனதையும் கவனிக்க முடிந்தது. மனதில் தோன்றிய நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கொண்டுவருவதில் இருந்த சிரமங்கள் புரிய ஆரம்பித்தன.

கோர்வையாக நிகழ்வுகளை கொண்டு வந்தபின், நீளத்தை கண்டு பயந்துவிட்டேன். இவ்வளவு நீளமான கதையை படிப்பதற்கு எனக்கே அயற்சியாய் இருந்தது. ஆரம்பம் என்னவென்று பாதி வருகையிலேயே மறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு :-)

நீளத்தை குறைப்பதற்கு மிகவும் திறமை வேண்டும்போல, தேவையில்லை என எந்த பகுதியை தீர்மானிப்பதும், தேவைப்படும் பகுதியை சுருக்கினாலும் அது சொல்ல வந்ததை அதே அளவு வலிமையுடன் சொல்ல வேண்டும்.

முடிவு... அடுத்த சவால், என்னதான் சுவாரசியமாய் கதை சொல்லியிருந்தாலும் முடிவு ஒன்றே படிப்பவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது. தெரிந்த/யூகிக்க முடிவதாயினும் அதை சொல்லும் விதமும் அழுத்தமாய் இருக்கவேண்டுமென்பது கஷ்டமாய் இருந்தது.

கதை படித்த சிலர், அந்த வட்டார வழக்கை கவனித்து பாராட்டியதும், ஆச்சர்யமாகவே இருந்தது.. படித்தவர்கள் மேல் அல்ல, என் மேல் எனக்கே :-)

தமிங்கலக்கலப்பும் இந்தக்கால கல்லூரி மாணவர்களின் பேச்சை பதிவு செய்யப்போக வந்தது, வேண்டுமென்றே புகுத்தப்பட்ட அது இனி இருக்காது.

போட்டிக்கான ஒவ்வொரு ஆக்கத்தின் வித்தியாசமான களத்தையும், கதை சொல்லும் முறையையும் கண்டபோது இது ஒன்றும் விளையாட்டுத்தனமான போட்டியில்லை என புரிந்தது. ஏதேதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் உள்ளேயிருந்த திறமைகள் பளிச்சிடத்தொடங்கியிருந்தது நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது.

முழுவதுமாய்ப்பார்த்தால் கதை வாசிப்பதைவிட.. கதை சொல்வது ஒரு பெரும் அனுபவமாய் இருக்கின்றது முழுமையாய் இரசித்து அனுபவித்தேன் :-)

சொல்ல வந்த கதை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 27, 2006
இந்த கதையில் நான் சொல்ல வந்தது, விடலைப்பருவ மாற்றம் என்பது ஒரு கணநேர அதிர்ச்சியில் உருவாவது அல்ல, அதை நாம் நம்மை அறியாமலே அடிமேல் அடிவைத்து கடந்து வருகின்றோம். மாற்றத்தை நாம் உணரும்போது என்றோ அதை கடந்து வந்திருப்போம் என்பதே.

விடலைப்பருவ மாற்றங்களில் பல கோண்ங்கள் உண்டு, இனக்கவர்ச்சி, வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், குடும்பப்பொறுப்பு.. என்று. அதில் ஒன்று நட்பு/உறவுகள் பற்றிய பார்வையும் மாற்றங்களும்.

நண்பர்கள், நட்பு, உறவுகள் பற்றிய பார்வை எப்படி ஆரம்ப காலங்களில் இருக்கின்றது, நாட்கள் செல்லச்செல்ல அதில் உருவாகும் மாற்றங்கள், அந்த மாற்றத்திற்கு காரணமான நிகழ்வுகள், அது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்று சொல்ல நினைத்தேன்.


கதை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வாயிலாக, நிகழ்வுகளாக விவரிக்கப்படுகின்றது. அதில் பின்நோக்கிய நினைவுகளை நினைத்துப்பார்ப்பதாக இருக்ககூடாது என முயன்றேன், காரணம் எந்த ஒரு திரைப்படத்தையும் நினைவு படுத்தி விடக்கூடாது என்று.

கதையின் இடையே, அந்த கதாபாத்திரத்தின் மனதின் குரல் மூலம் அதற்குள் நடைபெரும் சின்ன சின்ன மாற்றங்களை படம்பிடிக்க முயற்சித்தேன்.

ஆரம்பத்தில் தாய், தந்தையருடன் உறவு எப்படி இருக்கின்றது, நண்பர்களே இல்லாமல், பின் இடையில் அதில் கவனமேயின்றி முழுவதுமே நண்பர்களுடன் பொழுது என்று மாற, அதன்பின் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும் முறையும், நேர அளவும் மாற.. மீண்டும் தாய் தந்தையர் பற்றி நினைப்பதும், பின் அதிலும் மாற்றம் வருவதும் என மனதின் குரல் மூலம் காண்பிக்க நினைத்தேன்.

கல்லூரிகாலங்களில், நாள் முழுவதும் நண்பர்களுடன்.. ஆனால் பின்பு அதே நண்பர்களின் நேரமின்மை காரணமாக அவர்கள் மீது கோபப்படுவதும், பின் புரிந்துகொள்வதுமான வளர்ச்சி என...

இதையெல்லாம் வெளிப்படையாக சொல்லியபின் படிப்பவர்களுக்கு புரியக்கூடாது, அது சொல்லப்பட்ட விதத்திலேயே புரிந்திருக்க வேண்டும், அதுதான் வெற்றி.

அதனாலயே உங்கள் மறுமொழிகளுக்கு பதில் அளிப்பதில் நேரம் தாழ்த்தினேன். அந்த வகையில், உங்கள் மறுமொழிகளிலிருந்து ஒரளவு வெற்றி கண்டேன் என்பதை காணும்போது மகிழ்ச்சியே..

நன்றி !!!

என்று அடைவோம் இந்த வளர்சிதை மாற்றம் ?

Published by யாத்ரீகன் under on புதன், ஜூன் 21, 2006
"ஸ்கூல் விட்டு வந்ததும் வராததுமா படிக்கலையாப்பா...", அம்மாவோட குரல் ஒண்ணுங் ரொம்ப கண்டிப்பானதெல்லாம் இல்ல, அதுந்து கூட பேச தெரியாது அம்மாவுக்கு. ஆனா அதுக்கப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போற அப்பா, என்ன எங்கேனு கேட்டுருவாரேனு பயத்துல எழுத்து மேஜையை இழுத்து கணக்கு போட ஆரம்பிக்குறேன்.

சே !!! அந்த பாண்டி பய கபடி வெளயாடுற யெடத்துக்குள்ள விடவே மாட்டான்.. ஆறாப்பு வந்தா பெரிய பையன்டா, அப்போ கூட சேந்து வெளயாடலாம்னு நேத்து தான் அசோக்கு சொன்னான், இன்னைக்கும் பாத்து கபடி டீம்க்கு ஆள் சேக்குறாங்கே..

அசோக்கு என்னோட பெஸ்ட் ப்ரெண்ட், நானும் அவனும் என்னைக்கும் பிரிய கூடாது, கல்யாணம் பண்ணாலும் அக்கா, தங்கச்சியத்தான் கட்டிக்கனும் அப்பொதான் ஒரே வீட்டுல இருக்க முடியும்...என்னனே புரியல ஆறாப்பு வந்ததும் அப்பா என்னை, இனிமே பக்கத்து சந்துல இருக்குற பசங்களோட போய் வெளையாட வேணாம்னு ஒழுங்கா படிக்குற வேலயப்பாருனு திட்டுறாரு...

ஸ்கூலு படிக்குற வரைக்கும், வீடு - வீட்ட விட்டா ஸ்கூலுனு போய் போய் வர்ரது தான் எனக்கு வேல, பக்கத்து சந்து பசங்களோட வெளயாடவோ, ஸ்கூலுல எக்ஸ்கர்சன் போகவோ விடவே மாட்டேனுட்டாங்க.. யப்பா இப்போ காலேஜு வந்தாச்சு..

அப்பா நம்மள கொஞ்சம் கண்டிச்சாலும் நம்ம நல்லதுக்காத்தான இருந்திருக்கு. இல்லாட்டி வெளயாட்டுத்தனாமாவே இருந்திருப்பேன் நல்ல ஸ்கூல்ல எடம் கெடச்சிருக்காது, அப்பாவுக்கு மெரிட்ல சீட் கெடச்சிருக்காது,செலவு கொரஞ்சிருக்காது... நாம வளர்ர சூழல் நம்ம வளர்ச்சில எவ்ளோ பங்கு கொள்ளுது !!! ஒருவேலை வெளயாண்டுக்கிட்டே இருந்திருந்தா இதெல்லாம் நமக்கு தெரியாமலே/கெடைக்காமலே போயிருந்துருக்கும்...


"அம்மா, இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும், சத்யா ட்ரீட் இருக்குமா போய்ட்டு வர்றேன்..." "இன்னைக்கு பிரண்ட்ஸ் டேமா, எங்க கேங் எல்லோரும் இன்னைக்கு முழுக்க சேந்து சுத்தப்போறோம், போய்டு நைட்டுதான் வருவேன்...." "நாராயணன் அண்ணன் கல்யாணம்மா, பசங்க எல்லோரும் போறாங்க, அப்டியே சேந்து பக்கத்துல ஜாலியா ஊர் சுத்தீட்டு வர்றோம்மா..."

யப்பா, பிரண்ஸோட இருக்குறது எவ்ளோ சந்தோசமா இருக்கு, அப்பா-அம்மா சண்டையில்லாம, தாத்தாவோட தொந்தரவில்லாம..... இப்படியே எப்பவும்போல இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்....

நேத்துதான் பைவ்ஸ்டார் படம் பாத்தோம், ஹய்யோ.. அதுல இருக்குற மாதிரி பிரண்ஸ் எல்லாம் சேந்து ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...

இப்டி நெனைச்சுகிட்டு இருக்கைலயே நாலு வருசம் ஓடிப்போயிருச்சு.. அட வேலைக்கு முன்னால டிரைனிங்காமே, ஹை ப்ரெண்ட்ஸ் எல்லாமே சேந்து.. சரிஜாலியா இருக்கும்.

என்னடா இது ட்ரெயினிங் முடிச்சிட்டு ஒரே எடத்துல போடுவான்னு பாத்தா, என்னய மட்டும் தனியா கல்கத்தா போட்டுருக்கான், அட புது ஊருகூட பாக்கலாம் ஆனா என்னடா தனியா மாட்டிக்கிட்டோம்னு தான் இருக்கு... சரி அங்க போய் ப்ரெண்டு பிடிச்சுக்க வேண்டியதுதான்..

நல்லவேல, நல்ல கேங் அமைஞ்சிச்சு... ஒரே அரட்டை, கும்மாளமா இருக்கு, ஜாலியா போகுது...

என்னா ஆச்சு இவுங்களுக்கு, இப்டி கணக்கு பாக்குறாங்க.. சே !! அப்டி என்னத்த ஏமாத்திறப்போறோம்... ப்ரெண்ஸ்குள்ள கூடவா இப்டி 5 ரூபா எங்க போச்சுனு கணக்கு பாப்பாங்க...

எல்லாம் இந்த ஜோடி, ஜோடியா சேருராங்கல்ல அவுங்களால வந்தது.. எவ்ளோ ஜாலியா இருந்தோம் எல்லோரும். இப்போ என்னடானா, ஒவ்வொருத்தரும் தனிதனியா சுத்துறாங்க... சே !! என்ன ப்ரெண்ஸ் இவுங்க.. காலேஜ்ல யெல்லாம் எப்டி இருந்தோம்..

இனியும் எல்லாரும் சின்னப்பசங்க கெடயாது, நாம ப்ராக்டிகல் லைப்க்கு வந்தாச்சு...
ஒவ்வொருத்தரும் "தன்" எதிர்காலம்னு திட்டம் போடுற நெலமைக்கு வந்தாச்சு.. இனியும் எல்லாரையும் காலேஜ் ப்ரெண்ஸ் மாதிரி எதிர்பாக்குறது முட்டாள்தனம், நட்புக்கும், நிதர்சன வாழ்க்கைக்கும் இடைவெளி உண்டு, இல்லைனு சொல்றது நாம மட்டும் கண்ண மூடிக்குற மாதிரி.. இதுல யார் மீதும் தப்பு கெடயாது.. வாழ்க்கை போற வழி அப்படித்தான்...

ஹீம்.. ஒருவழியா ஆன்சைட் வந்தாச்சு, இனி தம்பி படிப்ப பாத்துக்கலாம்.. ஆனா ஏன் எல்லோரும் நார்த்தி, சவுத்தினு பிரிச்ச்து அடிச்சுகிறாங்க.. என்ன ப்ரெண்ஸ் இவுங்க...
அட ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆரம்பிக்குதா, சூப்பர்ல.. இவ்ளோ சீக்கிரமா நாளெல்லாம் ஓடுது... , சே !! சுபா கல்யாணத்துக்கு கூட அங்க இருக்க முடியல..

இந்த மெட்ராஸ் பசங்க செம ஜாலி பண்றாங்க, மொத பாச்சிலர் லைப் சொதந்திரம் இருக்கும்போது எல்லோரும் சேந்து இருக்காங்க, நல்லா ஊர சுத்தி என் ஜாய் பண்றாங்க, நாம் இங்க வந்துட்டோம்.. ஒருவேள நாம போறதுக்குள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆயிட்டா அப்பவும் இவ்ளோ ப்ரெண்ஸா இருப்பாங்களா.. இதப்பத்திதான் எனக்கும் கணேஷுக்கு நெறயநாள் இதப்பத்திதான் பேச்சு... பாப்போம் போகப்போக தெரியும்...

நட்புன்றது என்ன, அன்பை/சந்தோசத்தை பகிர்ந்துகிறது, அது கல்யாணத்துக்கப்புறம் பகிர்தலோட பெரிய பங்கு எங்க போகுது என்பது தான் பொஸ்சிவ்னஸ் பிரச்சனையாகுது.. முந்தி மாதிரி ப்ரெண்ஸ் கிட்ட ஒரு நாளோட முக்கால்வாசி நேரம் செலவழிக்க முடியாதுதான், ஆனால் கூட இருக்கும் அந்த சில நிமிடங்களாவது அந்த பழைய இன்டிமஸி இருந்தாலே போதுமே... அது அந்த அந்த நபர்களோட கையிலதானே இருக்கு...

ஏன்டா ஆன்சைட்ல இருந்து வர்ர மொதல்ல வீட்டுக்கு வரலியானு அம்மா கேட்டப்ப கூட... , என்னம்மா ரொம்ப நாள் கழிச்சு பசங்கள பாக்குறேன், ஒரு நாள்தானம்மா, இருந்துட்டு வர்றேனு சொல்லிட்டேன்.. அப்பா கூட ஒன்னும் சொல்லல..

என்னடா இது சில பசங்க கிட்ட என்னமோ வித்தியாசம் தெரியுது, முந்தி மாதிரி இல்ல.. எது கேட்டாலும் வேலைனு சொல்றானுங்க, எல்லாரையும் ஒரு எடத்துல கொண்டு சேக்குறது/பாக்குறதுனா பெரும்பாடா இருக்கு. மாம்பலத்துலயே ரெண்டு வீடு எடுத்து தங்கியிருகாங்கே ஆனா பாத்துகிட்டு 8 மாசம் ஆச்சாம், இன்னொருத்தன காலேஜுல பாத்ததாம்...

நட்புன்றதைவிட, பந்தங்களால் உருவாகும் அப்பா, அம்மா போன்ற சுயநலமில்லாத உறவுகள்தான் கடைசிவரை இருக்கும் போல..

காலேஜு முடிச்சு 3 வருசந்தான ஆகுது, அதுக்குள்ள 20 வருசம் முடிஞ்சு போன ரேஞ்சுக்கு பேசுறானுங்க, அப்போ 20 வருசம் கழிச்சு எப்படி இருப்பானுங்க... தெரியல.. ஒருவேல நாமலும் இன்னும் கொஞ்ச நாள்ல அப்படி ஆயிருவோமோ ?

முன்ன மாதிரி இல்ல, காரியரின் ஆரம்ப கட்டம்.. நெறய உழைக்கனும், அப்போ இப்படித்தான் ஆகும்போல.. ஆனாலும் 8 மாசமெல்லாம் ரொம்ப அதிகமில்லையா, அட எப்பயாவது ஒரு போன் கால் கூடவா கஷ்டமா இருக்கு...

ரொம்ப தயக்கத்துக்கப்புறம், நேத்து அப்பாகிட்ட அவர் ரிட்டயர்மன்ட்ல வரப்போற பணத்துல ஒரு நல்ல இடத்துல நிலம் வாங்கிப்போடுங்கப்பா பின்னாடி உதவியா இருக்கும்னு பேசிட்டுருந்தேன்.. அப்போ 6 மாசத்துக்கு முன்னாடி எங்கயோ கொஞ்சம் நிலம் வாங்கி பதிஞ்சாச்சுனு சொல்ல சொல்ல என்னவோ போலிருந்தது எனக்கு..

புது சட்டையெடுத்ததை கூட ஏதோ பெரிய விஷயம் போல பகிர்ந்துகிட்டிருந்த எனக்கு, இது ஒன்னோடது, அது அவனோடதுனு சின்ன வயசுல பழகிராத எனக்கு திடீரென ஒரு தீவைப்போல உணர்ந்ததை தவிர்க்க முடியல... , அட அப்போ தன் வாழ்க்கைனு வந்தப்புறம் பெத்தவுங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூட ஒரு இடைவெளி இருக்குனு தோண ஆரம்பிச்சிருக்கு....

ரொம்பநாளாச்சு..இங்க என் உயிர்தோழர்களையும்/தோழிகளையும் பாக்க காத்துகிட்டிருக்கேன்.. ரொம்ப வருஷங்களாச்சு அவுங்கள நேர்ல பாத்து, ஒவ்வொருவருக்கும் குடும்பம், குழந்தைகள்னு ஆகிடுச்சு... நாமதான் இன்னும் ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கோம்...

அட.. வந்துட்டாங்க.. பரவாயில்லை அரைமணிநேரம் கழிச்சு வந்தாலும்.. சிலராவது வந்துட்டாங்க.. என்ன அவனக்கானாம்?.. அட நெனக்குறோம் கால் பண்றான்!!!.. என்னாது குழந்தைக்கு ஒடம்பு சரியில்லயா.. பரவாயில்லடா .. நாம இன்னொரு நாள் தனியா பாத்துக்கலாம்.. என்னது சாரியா.. என்னடா புது வார்த்தையெல்லாம்..

எப்படி இருக்க.. எவ்ளோ நாளாச்சு.. என்னது இங்க அவரு சொந்தகாரங்க வீட்டுக்கு போனுமா.. ஹே நோப்ராப்ளம்.. நமக்குள்ள என்ன பார்மாலிட்டீஸ்.. அவுங்கதான் எதிர்பாப்பாங்க.. நீங்க போங்க நாம இன்னொருநாள் பாத்துக்கல்லாம்..

ஹேஹேஹே !!!! ஹாய்.. நாம மெயில் பண்ணியே ரொம்ப நாளாச்சுல.., ஹாங் நல்லா இருக்கேன், நீ எப்படி.. வேலைபோய்கிட்டு இருக்கு.. ஓ.. புறப்படுறியா.. சரி தென்.. பாப்போம்...

ஒவ்வொருத்தருக்கும் அவுங்க அவுங்க சூழ்நிலை, நம்ம கூட நேரம் செலவழிச்சாத்தான் நண்பர்களா என்ன... '

ஆனாலும், அந்த கெட்டுகெதர் ஹாலில் தனியே உட்கார்ந்திருந்த எனக்கு தனிமை ரொம்ப முன்னரே கைகுடுத்து மெல்ல மெல்ல பழகத்தொடங்கியிருந்தது போலொரு உணர்வு.. ஆனால் இன்றுதான் நான் அதை கவனிக்கத்தொடங்கியிருக்கேனோ ?!!!!

செய்ய நினைக்கும் தொழிலே தெய்வம்

Published by யாத்ரீகன் under on திங்கள், ஜூன் 12, 2006
ப்ரியாவின் Tag (சங்கிலித்தொடருக்கான) விருப்பத்தை தொடர்ந்து இந்த பதிவு.

எல்லோருக்கும் நாம் காணப்போகும் வேலையைப்பற்றி ஒரு கனவு இருந்திருக்கும், பள்ளிப்பருவத்திலே ஒரு fantasy (கற்பனை) , கல்லூரிபருவத்திலே ஒரு passion (பெரும் ஆசை), வேலை கிட்டாத வேளையிலே ஒரு தார்மீக கோபம், கிடைத்த வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு ஆதங்கம், குடும்பப்பொறுப்பில் மீள்கையில் ஒரு பெருமூச்சு என அந்த கனவு கலைந்திருக்கக்கூடும்/கலைந்துகொண்டிருக்கக்கூடும்...

வெகு சிலரே தன் சூழ்நிலைகளையும் மீறி.. தன் கனவுகளை புதைத்துவிடாமல், தோல்வி,தன்னம்பிக்கை,விடாமுயற்சி,உழைப்பு என அத்தனை உரங்களையும் அதில் பொறுமையாய் இட்டு முன்னேறிக்கொண்டிருப்பவர்கள்..

சரி எதற்கு இத்தனை கட்டுமானப்பணி [builtup தமிழாக்கம் ? :-) ]

ப்ரியாவின் இந்த சங்கிலித்தொடர்பதிவுக்காண தலைப்பே காரணம், வழக்கமான பிடித்த 7 என்ன என்ன என்ன.... என்றில்லாமல் .. இதோ கீழே..

"If.... if incase you HAVE TO switch fields once in every 5 years between your 30 to 50 yrs of age assuming that your monetary needs are taken care in upper-middle class standards, what (4-5 professions) you would wish to do (and say few words about it) ? "

சரி... இதோ என் தேர்வுகள்.. (இதில் குறிப்பிட்டிருக்கும் வரிசையிலேயே அமையவேண்டும்)

1) பைக்கர்:
இதனை ஒரு வேலையாக , ஏன் ஒரு பொருட்டாகவே கூட இங்கே யாருமே கருதுவதில்லை... ஒரு பைக் ஒன்றை சொந்தமாக வாங்கிக்கொண்டு, நேரம், காலம், திட்டமிடுதல் ஏதும் இன்றி, சாப்பாடு,தங்குமிடம் என்ற யோசனையின்றி கிடைப்பதே போதும் என்று, அங்கங்கே கிடைக்கும் வேலையை செய்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாடு முழுவதையும் (முக்கியமாய் மூலை முடுக்காக) சுற்ற வேண்டும். இது முதல் 5 வருடங்களில்.
காரணம்:

இந்த வயதில் இயல்பாக உள்ள வேகம், ஆர்வம் இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி இந்த பணியில் இருந்து வாழ்கை என்னவென்பதை கற்றுக்கொள்வதோடு, பல வகையான மக்கள், அவர்களின் வாழ்வு முறை என புரிந்து கொள்ள இயலும்.

2) விவசாயி:
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை " என சிறப்பிக்கப்பட்ட தொழில். கற்ற கல்வியின் மூலமும், திரட்டிய அனுபவ அறிவின் மூலமும், சிறந்த முறைகளை (உதா. இயற்கை உரங்கள் போன்று) பயன்படுத்தி, அதைப்பற்றி சக விவசாயிகளுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், தான் விளைத்தவறால் தான் நஷ்டப்பட்டு, அதன் மூலம் பிறர் இலாபப்படுவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தவேண்டும். இது அடுத்த 5 வருடங்களுக்கான தொழில்.

காரணம்:
கற்ற கல்வியையும், அனுபவத்தையும் .. இந்த வயதில் உள்ள ஆரோக்கியமான உடலுழைப்புடன் கலந்து சிறந்த பணி ஆற்ற வகை செய்யும் இந்த தொழில். மேலும் நாட்டின் முக்கிய பங்காற்றும் ஒரு பிரிவினர் படும் இன்னல்களை நேரடியாக களத்தில் சந்தித்து அதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொள்ள உதவும்.

3) தினசரி ஊடகத்தின் ஆசிரியர்:
மக்களிடம் தினசரி போய்ச்சேரும் ஒரு ஊடகத்தின் தலைமை ஆசிரியராக. அது பத்திரிக்கையானாலும் சரி, தொலைக்காட்ச்சியானாலும் சரி. ஊடகங்களின் நோக்கம் வெறும் விற்பனை/இலாபம் மட்டும் இல்லை. வெறும் செய்திகளை தொகுத்து தருவது/மறைப்பது மட்டுமின்றி, மக்களிடையே பல தலைப்புகளில் விழிப்புணர்ச்சி கொண்டுவருவதும், செய்திகளின் பின் உள்ள உணர்வுகளையும், அதில் மக்களின் பங்கு என்னவென்று அவர்களை உணர்த்துவதுமே. அதை திறம்பட செயலாக்க வேண்டும்.

காரணம்:
இந்த வயதில், வெறும் வேகம் குறைந்து, நிதர்சன வாழ்வில் பல அனுபவங்களை சந்தித்து, மனது சிறிது பக்குவப்பட்டிருக்கும், அது ஒரு செய்தியின் பல கோணங்களை காணும் சிந்தனையை கொடுக்கும். மேலும், முன்பு சந்தித்த அனுபவங்களை பலரிடம் சேர்க்க இயலும், சேர்த்து அவர்களுக்கு தீர்வு காண இயலும்.முதலில் இத்தகைய ஊடகத்தின் நிருபர் என்று யோசித்தேன், பின் நாம் என்னதான் உழைத்தாலும் அது இதன் தலைமைப்பொருப்பை சார்ந்தே அது வெளியாவது உள்ளது, மேலும் தலைமைப்பொறுப்பிலிருந்தால் இன்னும் பலரை ஊக்குவிக்கலாம் என்ற பேராசை :-)

4) ஆசிரியர் (மூன்றாம் வகுப்பு முதல் - ஐந்தாம் வகுப்பு வரை)
எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலமும், அதில் உள்ள குழந்தைகளின் குணநலன்களைப் பொருத்தே அமையும். இந்த குழந்தைகளின் குணநலன்கள் என்பது, இந்த குறிப்பிட்ட வயது குழந்தைகளிடையே எளிதாக நம்மால் பதிய வைக்க இயலும். ஆக நல்ல எதிர்காலத்துக்கான விதைகளை நாம் இங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இவர்களுக்கு வெறும் நீதிக்கதைகளை மனனம் செய்ய கற்பிக்காமல், அதில் உள்ள நீதியை விளக்கி, அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை பதிய வைக்கவேண்டும். படிப்பவற்றை தேர்வுக்கு மட்டுமின்றி, தினசரி அவர்கள் காணும் சக குழந்தைகளிடமிருந்தே அவர்கள் பயன்படுத்த துவங்க வேண்டும்.

காரணம்:
கற்ற அனுபவத்தை சிறந்த வழியில், எதிர்காலத்தில் சிலருக்காவது பயனுள்ள வகையில் செலவழிக்க இயலும்.

5) மாநில கல்வி இயக்குநகரத்தின் இயக்குநர்:
மனனம் செய்து கல்வி கற்கும் முறையை மேலும் சீராக்கி, பாடதிட்டத்தை எதிர்காலத்துக்கு (அவர்களின் வேலைவாய்புக்கு) மட்டுமின்றி, நல்ல மனிதர்களாகவும், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டாமல், தெளிவான உலகறிவு பெற்றிட ஒரு வாய்ப்பாகவும், தன்னம்பிக்கை அளித்திடவும்... என சீர்படுத்தப்பட்ட பாடதிட்டத்தை, எந்த தலையீடு வந்தாலும் அசராமல் அதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

காரணம்:
இதை இறுதியாக தேர்ந்தெடுத்த காரணம், இத்தகைய முக்கியமான பணி புரிவதற்கு முன் பரந்துபட்ட உலகறிவும், நம்மக்களின் தற்கால வாழ்வு முறை பற்றியும், மாணவர்களின் தேவை என்ன என்றும் தெளிவான சிந்தனை வேண்டும், இதற்கு இதுவரை கடந்து வந்த பாதை உதவி புரியும் என்று நம்புவதால்.

இதை படிக்கும் சிலருக்கு நிஜ வாழ்வுக்கு ஒத்துவராத புனித பிம்பங்களின் Ideal சிந்தனை என்று தோன்றலாம்...

ஆனால் பெரும் செயல்களுக்கு பின்புலமாய் இருந்தவை Ideal கனவுகளே....

"நட்சத்திரங்களை குறிவை, கட்டாயம் மண்ணிலே வீழ மாட்டாய்"

பிகு:
யாருக்கேனும் இந்த சங்கிலிப்பதிவு சுவாரசியமாய் தோன்றினால் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பலருடைய கனவுகள் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாமென்ற ஆசைதான் :-)

மரணபயம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூன் 06, 2006

ரோஜாக்களின் வாசனையை நுகர்ந்தால் என்ன தோன்றும் உங்களுக்கு ? உங்கள் முதல் காதல் ? (அ) காதலன்/லி (அ) மனைவி (அ) மென்மை (அ) இயற்கையின் அழகு என்று கவிதை எழுதப்புறப்படும் எண்ணமா ?

எனக்கு தோன்றுவதெல்லாம் மூச்சை முட்டும் மரணவாசனை. கட்டாயம் இது என்றோ வரப்போகும் மரணத்தைப்பற்றிய பயமல்ல... சிறுவயதிலிருந்தே ரோஜாப்பூவின் வாசனையை தனியே நுகர்ந்ததைவிட, சாவு வீட்டிலோ, ஊர்வலத்திலோ நுகர்ந்ததே எனக்கு அதிகமாயிருந்திருக்கின்றது. சாவைப்பற்றிய அறிமுகத்தோடு இலவசமாக ரோஜாப்பூவின் வாசனையும் பரிச்சயமானதுதான் காரணம்.

எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் ரோஜாப்பூவின் தனி வாசனை கூட என்னை மரணம் சம்பவித்த வீட்டின் நடுவே நிற்கும் உணர்வை கொண்டுவிட்டுவிடுகின்றது. அது காதல்-உயிர் என்று பினாத்திக்கொண்டு நண்பர்கள் கொண்டுவரும் ரோஜாவின் மணத்தின் கூட.

செய்தித்தாள்களில் மரணச்சம்பவங்கள் படிக்கும் போதோ, தொலைக்காட்சிகளில் காணும்போது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி,

இறப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ? அதுவும் தான் உறுதியாக சாகும் நிலையில் இருக்கின்றோம் என்று அறிந்தவர்களின் அந்த நொடி மன ஓட்டம் என்னவாக இருக்கும் ? மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்ன யோசித்து கொண்டு இறந்திருப்பார்கள் ? வலிக்குது என்றா ? யாரையும் விட்டு விட்டு போகின்றோம் என்றா ? எதையும் முடிக்காமல் போகின்றோமென்றா ? அய்யோ போகின்றோமே என்றா ? தான் போகப்போவது சொர்க்கமா இருக்கனும் என்றா ? கடவுளைப்பார்க்கப்போகின்றோம் என்ற கேள்வியுடனா ?

இத்தனையும் தெரிந்துவிட்டால் மரணத்தின் சுவாரசியமே தொலைந்துவிடுமே என்றும் சமாதானப்படுத்திக்கொள்வேன்.

இத்தனைக்குமான பதில் இவ்வளவு விரைவில் தெரியப்போகின்றது என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

ஒரு மாதமாகிவிட்டது எங்கும் புதிய இடங்களுக்கு பயணம் செய்து என்று, நண்பன் திருமணத்தோடு குற்றாலம் சென்றோம். முடித்துவிட்டு திரும்புகையில் பேரையூரில் ஒருநாள் தங்க முடிவு செய்தோம் (மறக்க முடியாத நினைவுகளை தரப்போகின்றது என்று அறியாமல்).
காலையில் எழுந்து நண்பனின் தோட்டத்தில் பம்ப்செட்டில் குளிக்க முடிவாகி போனபோது, அங்கிருந்த கிணற்றைப்பார்த்ததும் ஆசை தோன்றியது. என்னதான் தூசி,இலைதழை இருந்தாலும் கிணற்றில் குளிக்கும் சுகம் அறிய ஆசையானது. நீச்சல் ஒன்றும் கைவந்த கலையில்லை, அதனால் அந்த காட்டில் வேலை பார்ப்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆட்டம் ஆரம்பித்தது.

ஒவ்வொருவராய் ஆரம்பிக்க, என் முறையும் வந்தது. மனதுக்குள் மெல்லிய பயம் கலந்த உற்சாகம், முதல் முறையாய் கிணற்றுக்குளியல், குளிர்ந்த நீர் உடலெங்கும் சிலிர்ப்பைத்தூண்ட.. மெல்ல இறங்க ஆரம்பிதேன்.

குதித்து கிணற்றின் நடுவே செல்ல செல்ல, திடீரென மூழ்க ஆரம்பித்தேன் (தண்ணீரைப்பற்றி என்றுமே ஒரு பயம் இருந்திருக்கின்றது அதுதான் காரணமோ ?, பொதுவாகவே டவுன் பசங்களுக்கு இந்த பயம் இருப்பதை தவிர்க்க முடியாது போல)

மூழ்க ஆரம்பித்ததும் அலறவில்லை, ஏற்கனவே தெரிந்திருந்தபடி கையையும் காலையும் வைத்து தண்ணீரை கீழே தள்ள மேலே எழும்ப ஆரம்பித்தேன். அப்போது நான் பண்ணிய தப்பு, நீந்த துவங்காமல் ஒரு பிடியை எதிர்பார்த்து கையை நீட்ட ஆரம்பிக்க, மீண்டும் மூழ்க தொடங்கினேன். படியில் அமர்ந்திருந்த தோட்டக்காரரை, தண்ணியில் முன்னமே இறங்கி துணைக்கிருக்க சொன்னது நல்லதாய் போனது.

என்னை காப்பாற்ற அருகில் வந்தவரை எனக்கு சொல்லியிருந்த அறிவுரையெல்லாம் மீறி பிடித்து தொங்க, அவருக்கோ என் உச்சிமுடி தட்டுப்படாமலிருக்க, என்னுடன் சேர்ந்து முழ்க தொடங்கினார்.

அய்யோவென்று கத்தியபடி என்னை உதறிவிட்டு படிக்கு சென்று அங்கிருந்து அய்யோ, அய்யோ என்று கத்த தொடங்கினார்.

நானே மீண்டும் மேலே எழும்பி, அதே தவறை செய்யத்தொடங்கினேன். இந்த முறை வெளியே ஆதியின் (கல்லூரி நண்பன்) அய்யோவென்ற கூச்சலும் சேர்ந்தே கேட்கத்தொடங்கியது.

மூளையில் எந்த சிந்தனையும் இல்லை, பயமோ, பதட்டமோ இல்லை, மூழ்க தொடங்கினால் என்ன செய்யவேண்டுமென்று சொன்ன அறிவுரைகள் எதுவும் தோன்றவில்லை, கடவுள், சொர்க்கம், நரகம், நிறைவேறாத ஆசைகள்.. என என் கேள்விகளில் இருந்த எதுவுமே வரவில்லை சிந்தனைக்கு.

எப்படியோ கிணற்றுப்படியை பிடித்து வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்த அந்த நொடியும் ஒன்றுமே மனதில் ஓடவில்லை, பதற்றமும் இல்லை, இதயத்துடிப்பு எகிறியிருக்கவேண்டும் ஆனால் அதுவும் இல்லை. ஏனென்று புரியவில்லை.

பதில் கிடைத்துவிட்டது, ஆனால் புது கேள்வியும் தோன்றிவிட்டது, ஏன் இப்படி என்று :-)

தவறவிடப்போவதில்லை இன்றை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 30, 2006


ஆம் இன்று புதிய நாள்தான்... இன்று எனக்கு புதிய நாள்தான்...
இன்று மட்டுமல்ல என்றும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாய் கடப்பேன்...
இன்றைய தினத்தை மட்டுமல்ல.. இனிவரும் நாட்களையும் புரிந்துகொள்வேன்...
மாற்றங்கள் காண நல்லதொரு தருணம்.. தவறவிடப்போவதில்லை இதை..

அமைதி வெளியே எங்குமில்லை,
நம்மருகிலேயே,
நம்கண்முன்னேயே,
நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கின்றது..
அதைக்காணத்தான் கண்களில்லை நம் மனதுக்கு..
என்கின்ற புரிதலோடு
ஆர்ப்பாட்டமில்லா தனிமையான ஆரம்பம், இனிமையான துவக்கம்
தவறவிடப்போவதில்லை இன்றை...

பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 22, 2006

வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே,
எதனைக்கடந்தோம் என்பதை மறந்துபோகுமளவு,
எதனை நோக்கிச்செல்கின்றோம் என்பதை மறந்துபோகுமளவு,
வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே...

வாழ்க்கை வேகப்போட்டியல்ல
அணுஅணுவாய் ஒவ்வொரு அடியும்
இரசிக்கவேண்டிய பயணம்

பார்த்த முதல் நொடியே

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 15, 2006
பார்த்த முதல் நாளே.. உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப் பிழைபோலே... உணர்ந்தேன் காட்சிப் பிழைபோலே..
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்றும் மறையாது...
...

...
...
...

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்..

இவளை, மற்றுமொறு அழகிய பிம்பமென்று ஒதுக்க இயலவில்லை... அட கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்படுறடாவென தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை....

ஒரு புன்னகையில், மனதின் பாரமனைத்தையும், விழியில் தேங்கிய கோபமனைத்தையும் தூளாக்கினாளே...!!!

நாலு இல்ல நாப்பது நாளாச்சு..

Published by யாத்ரீகன் under on புதன், ஏப்ரல் 26, 2006
பிடித்த நான்கு அரசியல்வாதிகள்:

* காமராசர்
- எங்கள் தலைமுறைக்கு முந்திய தலைவராயினும், இவர் வாழ்ந்த வீட்டை சமீபத்தில் கண்டபோது ஏற்பட்ட மன அதிர்வு விவரிக்க இயலாது.
* லெனின் - ஒரு நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிக்காட்டிய மன உறுதி
* மாசேதுங் - சாதரண குடியானவனின் வீட்டில் பிறந்து, பல எதிர்ப்புக்களிடையே ஒரு நாட்டின் நிலையையே உயர்த்திக்காட்டிய மன உறுதி.
* திரு.மோகன் (எங்கள் தொகுதி எம்.பி) - இவரின் எளிமையும், சாதரண மக்களிடம் கொண்ட அணுகுமுறையும், இந்த காலத்திலுமா என்று ஒரு நொடி தோன்ற வைக்கும்.

இதில் தனிப்பட்ட குணங்களுக்காக என்பதை விட ஒரு அரசியல்வாதிகளாக இவர்களின் அணுகுமுறையும், நாட்டுக்கும் மக்களுக்கும் இவர்கள் விட்டுச்சென்றவற்றை வைத்தே குறிப்பிட்டுள்ளேன், இவர்கள் ஒவ்வொருவரும் சாதித்த களங்களின் சூழ்நிலைகள் வேறு, அதலால் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவரில்லை என்பதால் இதில் தர வரிசையொன்றும் இல்லை.

பிடித்த நான்கு படங்கள் (வசனங்களுக்காகவும்):

*தில்லு முல்லு
- "ரெட்டைப்பிறவி என்ன உங்க குடும்ப வியாதியா ?"
*மைக்கேல் மதன காமராஜன் - "நல்லா மீன் பிடிக்க தெரிஞ்சவாளா கூட்டிகிட்டு வரவா ?"
*வீடு - வசனங்கள் அவ்வளவாய் இல்லாததனால்
*குருதிப்புனல் - "வீரம்னா என்ன தெரியுமா ? "

இப்போதான் படங்களை பொறுமையா, நுணுக்கமா இரசிக்க ஆரம்பிச்சிருக்குறேன், இதுக்கு முன்னேயெல்லாம் அம்மா சின்ன வயதில் பைண்ட் பண்ணி வைத்த பொன்னியின் செல்வன் படிக்க இருந்த பொறுமை படம் பார்க்கும்போது இருந்ததில்லை :-D

பிடித்த நான்கு உணவு வகைகள்:

*ஆப்பம் தேங்காய்ப்பால் நாட்டுச்சக்கரை
- வீட்டிலிருந்தவரை, ஞாயிறு ஆனா போதும் 10 மணிக்கு ஆரம்பிக்கும் படலம் 12/12:30 ஆகிவிடும், அப்பா திட்டதிட்ட அம்மாவின் அன்பினால் குறைந்தது 30ஆவது உள்ளேபோகும் :-D
*பழையசோறு உப்புக்கல் நல்லெண்ணெய் நீச்சத்தண்ணி - பழையசோற்றை தண்ணிலருந்து பிழிஞ்செடுத்து, கல் உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி அம்மா பிசைந்து, ஒவ்வொரு உருண்டையோடு ஒரு மாவடு வைத்து கொடுக்க, ஆஹா..!!! எந்த சுவையும் இதற்கீடாகாது, சைனஸ் இருக்குடா வேணாம்னு தாத்தா திட்ட திட்ட, வயிறு முட்ட இதை சாப்டுட்டு, சொம்பு நெறைய நீச்சத்தண்ணி குடிச்சிட்டு அப்படியே கண்ணு சொருகும் பாருங்க.. சொல்லி வெவரிக்குற சொகமா அது..
*வெந்தயக்களி - சுட சுட தட்டுல வச்சதும், கை பொசுக்குனாலும் பரவாயில்லைனு அதுல ஒரு குழி பறிச்சு, அதுல நல்லெண்ணெய் விட்டு, பக்கத்துல நாட்டுச்சக்கரை தொட்டுகிட்டு சாப்பிடனும்.. தம்பிங்க வேணாம் வேணாம்னு கத்தினாலும் எனக்காக மட்டுமாவது கொஞ்சம் பண்ணும் அம்மா நியாபகம் வருதுங்க..
*முனியாண்டிவிலாஸ் பரோட்டா சால்னா - கல்லூரில நண்பர்கள் ட்ரீட், வேலை கெடச்சாலும் சரி, பல்ப் கெடைச்சாலும் சரி, வித்தியாசம் பார்க்காம பரோட்டாவும் சால்னாவும் கார சாரமா போட்டி போட்டுகிட்டு உள்ள போகும் பாருங்க.. அதுலயும் யார்தட்டுல இருந்து யார் சாப்புடுறானு தெரியாம சாப்பிடுவொம் பாருங்க அது வாழ்க்கை..

இதுல மட்டுமாவது இன்னும் 5/6 கேட்டுருக்கலாம் ;-) ஆனால் ஒண்ணு மட்டும் நெசம்ங்க... இதே உணவுவகைகளை ஹோட்டல்லயோ இல்லை நம்ம தட்டுல இருந்து எடுத்துக்க யாருமில்லாமலும், நாம எடுத்துக்க வேறு தட்டில்லாமலும் சாப்ட்டா அதுல இந்த ருசி இருக்க மாட்டேங்குதுங்க..

விடுமுறைக்கு செல்ல விரும்பும் நான்கு இடங்கள்:

*மானசரோவர்
- அப்படியே அந்த மானசரோவர் ஏரி அருகே அமைதியா உட்கார்ந்து அந்த சுத்தமான தண்ணியில் பிரதிபலிக்கும் ஒளியை அமைதியின் பிண்ணனியில் இரசிக்கவேண்டும்.. இது ஒரு கனவு இடம்..
*இமயமலை - சுற்றுலாவாக இல்லாமல் மலையேற்றமாக செல்ல விரும்புகின்றேன், விஜய் டீவியில் ஒருமுறை இத்தகைய ஏற்றத்திற்கு தேர்ந்தேடுப்பதை பார்க்கும்போது கலந்துகொள்ள முடியாததற்கு எவ்வளவு வருத்தப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும், அதே வருத்தம் கொல்கத்தவிலிருந்தபோது டார்ஜிலிங் சென்றபோது அங்கே இருந்த மலையேற்றப்பயிற்சி பள்ளியை பார்க்கும்போது சிறிது எட்டிப்பார்த்தது..
*கோனார்க் சூரிய கோவில் - யாருடைய தொந்தரவில்லாமல் பல விருப்பப்பட்ட கோணங்களில் ஸ்கெட்ச் போட
*தஞ்சை பெரிய கோவில் - மேற்கூறிய அதே காரணங்களுக்காக..

இவற்றை வெறும் கனவுகளாக, ஆசைகளாக இல்லாமல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றத்தொடங்கியுள்ளேன், இந்த வரிசையின் முதலிரண்டு நிறைவேறும் நாளை எதிர்பார்த்திருக்கின்றேன்

நான் அழைக்க விரும்பும் நால்வர்:
அட நான் உட்கார்ந்து எழுதுறதுக்குள்ள எல்லோரும் எல்லாத்தையும் அழைச்சு முடிச்சிட்டாங்க, அழைக்கப்படவுங்களும் எழுதிமுடிச்சு மேலும் சிலரை அழைச்சு.. எல்லாம் ஓஞ்சு போச்சு.. ஆக இத்தோட முடிச்சுகிறேங்க.. (மன்னிச்சிருங்க சுதர்சன்)

மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளை கூட கிடையாதா..

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 09, 2006

"பருப்பு வைக்குற குக்கர்ல பாம் வைக்கிறாங்க படுபாவிங்க..." இத்தகைய கமெண்டுடன் ஒரு கவர்ச்சிப்படம்

இதை வெளியிடுவது சமீபகாலத்தில் முளைத்த ஒரு மாலை தினசரி.

விற்பனையைக்கூட்ட, தவறான தகவல்களும், பரபரப்பு பொய் செய்திகளும், பாதி தலைப்புச்செய்திகளும்,அருவருக்கத்தக்க படங்கள் மட்டுமின்றி அதற்கு அருவருக்கத்தக்க கமெண்டுகளும் வெளியிட்டது போதாதா...

நாட்டில் தற்போது நிலவும் நிலையில், மக்கள் பலர் பலியான சம்பவத்தை இப்படி ஒரு அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தி விளம்பரமும், இலாபமும் தேடவேண்டுமா ?

இதற்கு யோசனை கொடுத்தவருக்கு/அதை அப்ரூவ் பண்ணியவருக்கு மனசாட்சி வேண்டாம்... அட கொஞ்சம் மூளையாவது கிடையாதா ?

ஊடகங்களின் நிலமை இவ்வளவு மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது..

சிறிது அமைதிவேண்டும்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பேசிடும் முன் கேட்டிடு
எழுதும் முன் யோசித்திடு
செலவழித்திடும் முன் சம்பாதித்திடு
விமர்சிக்கும் முன் பொறுமை காத்திடு
பிரார்த்திக்கும் முன் மன்னித்திடு
கைவிடும் முன் முயற்சித்திடு

கற்றுக்கொள்ளவேண்டியவை பல
கற்றுக்கொண்டவற்றை
வாழ்வில் அதை பயன்படுத்தவேண்டிய பல
தேவையற்ற சஞ்சலங்கள் பல

தனிமையும், இசையுமே இப்போது தேவை, கடலலையே இசையானால் அதைவிட இனிமை எதுவுமே இல்லை....

தேவையில்லாத மகளிர் தினம்

Published by யாத்ரீகன் under on புதன், மார்ச் 08, 2006
பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து பூஜிக்க வேண்டாம்

உயர்த்தி, வாழ்த்தி கவிதைகள் படைக்க வேண்டாம்

தனியே இட ஒதுக்கீடு என்ற பிச்சை இட வேண்டாம்

பெண்ணுக்கும் கல்வி உரிமை உண்டு என அரசாங்கமே பிரச்சாரம் பண்ண வேண்டாம்

பெண் குழந்தையை கருவிலேயே கலைக்க வேண்டாம் என பிரச்சாரம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று சிறப்புத்திரைப்படம் வேண்டாம்

மகளிர் தினத்தன்று தெரிந்த பெண்களை கவர பரிசுப்பொருட்கள் வேண்டாம்

மகளிர் தினமென்று தனியே கொண்டாடவே வேண்டாம்

ஆணைப்போலவே பெண்ணும் பூமியில் வாழ்ந்திட வந்த இன்னொரு உயிரினமென்று மதித்திட்டாலே போதுமே....

அதை இனிவரும் தலைமுறையிடத்தும் விதைத்தால் போதுமே..

அதிமுக Vs திமுக

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மார்ச் 07, 2006

ஹீம்... அதிமுகவா, திமுகவானு எல்லோரும் அடிச்சிகிறாங்க...

கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா..

இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான ஆண்டு அனுபவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிய கட்சிகளிடமிரிந்து மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...


அரசியலில் நேர்மை, கொள்கை, சுயமரியாதை என்று பேசும் எத்தனை பேர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கை பிடிப்பை பாராட்டுவார்கள், மதிமுகவிற்கு திமுக கூட்டணியிலிருந்தால் ஓட்டு போட்டிருப்பர் ?


ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், அதற்கு கடிவாளம் வைகோ போடுவதற்கு வாய்ப்பும் அமையலாம் அல்லவா ?

அல்லது தேர்தலில் அதிக இடம் வைகோ ஜெயித்தபின், மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் அல்லவா ?

என்ன சொல்றீங்க.. ?!

இரத்ததானம் செய்வோம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மார்ச் 06, 2006
பாருங்கள் !!! ஒரு நல்ல காரியத்திற்கு சிறிது இரத்தம் இழப்பது பெரிய விஷயமில்லை...

பட உதவி: நன்றி அரவிந்த்

தானத்திலே சிறந்ததெது ?

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006



நண்பர்: நான் ஒல்லியா இருக்கேன், நான் இரத்தம் குடுக்க மாட்டேன்பா
நான்: குண்டாயிருந்தா நிறையவும், ஒல்லியா இருந்தா கொஞ்சமும் எடுக்க மாட்டாங்க, ஆரோக்கியமா இருந்தா போதும், கொஞ்சம்தான் எடுப்பாங்க
மனசாட்சி: மவனே, தின்னு கொழுத்து போயிருக்க, உன்னை கடத்திட்டு போய் ஒரு பாரல் எடுக்கலாமேடா, அவனுக்கென்னடானா 10 பாட்டில் இரத்தம் தேவை நீங்க ரெண்டு பேரும் இந்த பேச்சா பேசுறீங்க...

நண்பர்: ஹைய்யோ, இரத்தம் குடுக்குறது, எங்க மதத்துல தப்புங்க
நான்: இதுல தப்பு என்னங்க இருக்கு, ஒருத்தருக்கு உதவிதானே பண்றோம்..
மனசாட்சி: !%^&!@!@#

நண்பர்: நிறைய இரத்தம் எடுக்க மாட்டங்கள்ல ?
நான்: இல்லீங்க நம்ம உடம்புல சராசரியா 5 முதல் 6 லிட்டர் இருக்கும் அதில் 300 மிலி மட்டும்தாங்க எடுப்பாங்க.
மனசாட்சி: இவர் அன்பே சிவம் படம் பார்க்கலையா?

நண்பர்: நீங்க இதுதான் முதல் முறையா ?
நான்: இல்லீங்க இதுக்கு முன்னாடி குடுத்திருக்குறேன்
மனசாட்சி: கிட்னியாங்க கேட்டாரு, கொஞ்சம் இரத்தம் தானே...

நண்பர்: டயாலிசிஸ்னா என்னங்க ?
இன்னொரு நண்பர்: அதுவா... உடம்புல இருக்குற இரத்தத்தை மாத்துவாங்க.
நான்: இல்லீங்க, சிறுநீரகம் வேலை செய்யலைல, அதுனால இரத்தத்தை சுத்தப்படுத்த உடம்பால முடியாது, அதுனால ஒரு மிஷின் வச்சி இரத்தத்திலருந்து அசுத்தத்தை பிரிச்சு எடுப்பாங்க..
மனசாட்சி: நமீதாவோட லேட்டஸ்ட் படம் கேளு அவனுக்கு தெரியும், ஒக்காமக்க வெளுக்கனுமடா ஒன்னை...

நண்பர்: அப்போ எதுவரைக்கும் இது பண்ணவேண்டி இருக்கும் ?
நான்: மாற்று சிறுநீரகம் பொருத்துறவரைக்கும் பண்ணவேண்டி இருக்கும். மாற்று சிறுநீரகமும் யாராலயும் குடுக்கமுடியாது, டிஸ்யூ மாட்ச் ஆகவேண்டும் அதுவும் பெற்றோருக்கு மாட்ச் ஆகும் என்று சொல்ல முடியாது, பின்னர் மருத்துவ கவுன்சில் ஒன்றின் முன் தானம் செய்பவர் ஆஜராகி மனமுவந்து குடுப்பதை தெளிவுபடுத்தவேண்டும், என பல பார்மாலிட்டீஸ் உண்டுங்க...

இதையெல்லாம் கேட்டவர் யாருனு நினைக்குறீங்க, மருத்துவமனையில் அருகிலிருந்த ஒரு கிராமத்தவர் ? இல்லை !!!, சாதாரண ஒரு பாமரர் ? இல்லை !!!,

கேட்டது, சென்ற வருடம் பொறியியல் படித்து முடித்து, தற்போது கணிப்பொறி மென்பொறியாளராய் பணி புரிகின்றார்....

ஆச்சரியமாய் இருக்கின்றதல்லவா ? எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது... படித்தவர்களே இப்படியா என்று :-(

தேவையறிந்ததும் உடனே இரத்ததானம் அளிக்க வந்த அவருடைய மனப்பான்மையை பாரட்டுகின்றேன் அதே நேரத்தில் அவருடைய அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.....

இரத்ததான தகவல்கள்:
1) 18 வயதுக்குமேல், 45 கிலோவுக்கு மேலிருந்தால் போதும்
2) சராசரியாக 5 முதல் 6 லிட்டர் இரத்தம் நம் உடம்பில் உண்டு
3) யாராயிருந்தாலும், எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தாலும் 300 மி.லி மட்டுமே எடுப்பார்கள்
4) 24/48 மணி நேரத்துக்குள் இரத்தம் சுரந்துவிடும்
5) இரத்ததானத்துக்கு பிறகு சிறப்பு உணவுப்பழக்கமோ, சிறப்பு உணவோ தேவையில்லை
6) 48 மணி நேரத்துக்கு முன் எந்தவித மருந்தும் உட்கொண்டிருக்க கூடாது
7) கடந்த மூன்று வருடங்களில் ஜான்டிஸ் இருந்திருக்க கூடாது
8) தானம் செய்பவர்களுக்கு அனீமியா, சர்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்க கூடாது

இதோடு சுத்தமான ஊசிகள் பயன்படுத்துவதை நாமும் உறுதிப்படுதிக்கொள்ளவேண்டும், காரண்ம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமலிருக்க.

பயப்படாமல் இரத்ததானம் செய்திடுங்கள், ஓர் உயிரை காத்திடுவோம்..

மேலும் தகவல்களுக்கு:

1) http://members.rediff.com/bloodbank/bloodbanking.htm
2) http://www.iisc.ernet.in/medicare/bld.htm
3) http://www.google.co.in/search?hl=en&q=blood+donation+facts&meta=cr%3DcountryIN

உடலினை உறுதி செய்

Published by யாத்ரீகன் under on வியாழன், மார்ச் 02, 2006
ஒன்பது வயது குழந்தை ஒன்றுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலை எந்த வகை இரத்தமாயினும் பரவாயில்லை, ஆனால் சில உடல்நலக்குறைபாடுகள் இல்லாமலிருக்க வேண்டும் என்று ஒரு மின்னஞ்சல் கிடைத்தவுடன்,

அதில் குறிப்பிட்டிருந்தவர்களை கூப்பிட்டு என் விருப்பத்தை சொல்லிவிட்டேன், சிறிது நேரத்தில் வந்து கூட்டிச்செல்வதாக சொன்னார்கள்.

விடாத இருமலும், சளியும் நேற்றுதான் குறைந்திருந்ததாக தோன்றியது, ஆனாலும் ஒரு சின்ன தயக்கம், மருத்துவமனை சென்றபின் இந்த உடல்நலக்குறைவை காரணம் காட்டி என்னை மறுத்துவிடுவார்களா என்று...

உடனே ஜீவிக்கு கூப்பிட்டு உறுதிசெய்துகொண்டேன், இந்த உடல்நலக்குறைவு எந்த வகையிலும் இரத்ததானம் செய்வதை பாதிக்காது என்று.. நல்லவேளை..

அங்கே சென்றபின் இந்த காரணத்தை காட்டி மறுத்திருந்தால் மனது மிகவும் கஷ்டமாயிருந்திருக்கும், இதற்காவது நம் உடல்நிலையை நல்லபடியாக வைத்திருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்....

காதல் ரோஜாக்களிலிடையே நசுங்கிப்போன ஒரு கொடுமை

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 15, 2006

காதல், உயிர், இதயம், ரோஜா, ஜென்மம், பந்தம் எனும் வார்த்தை ஜாலங்களிடையேயும்....

" இருபதாம் நூற்றாண்டுங்க இது , சாதியாவது மண்ணாவது, அதெல்லாம் இப்போ யாருங்க பாக்குறா, சும்மா அரசியல் பண்றதுக்கும் பொழப்பு நடத்துறதுக்கும்தான் இன்னும் சில பேர் அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க... இன்னைக்கு பாருங்க உயர்ந்த சாதினு சொல்றாங்கள்ல அவுங்கள்ல எத்தனை பேரு தகுதியான திறமையிருந்தும் ஒண்ணுமே இல்லாம இருக்காங்க, தாழ்ந்த சாதினு சொல்றாங்கலே அவுங்களப்பாருங்க சலுகைமேல சலுகை வாங்கிகிட்டு எவ்வளவோ உயர்ந்த நிலையில இருக்காங்க.. காலம் மாறிப்போச்சுங்க, இன்னும் அதே பழைய உழுத்துப்போன சட்டங்களையும், சலுகைகளையும் வைச்சிருக்க கூடாது, அப்படி இருந்தா அடுத்து அடக்கப்பட்டு வைச்சிருக்குற அவுங்க போராடுவோம்னு கொரலு விட ஆரம்பிச்சிட்டாங்க...."


அங்கங்கே இந்த தலைப்பில் சண்டைகளிடையேயும், வாக்குவாதங்களிடையேயும்...

சப்தமின்றி அமுங்கிப்போனது ஒரு செய்தி....


செய்தி: இராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில், உயர்சாதியினர் எனப்படுபவர்களின் பெண்ணை கீழ்சாதியினர் எனப்படுபவர்களில் ஒரு ஆண் காதலித்ததற்காக, அந்த ஆணின் தங்கையை பட்டப்பகலில், ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தியுள்ளனர் உயர்(?)சாதி எனப்படுவோர், இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த/இருந்த உயர்சாதி எனப்படும் அவர்களில் பெண்கள், இந்த கொடுமையை தடுக்காமல், இந்த பரிதாபத்திற்கு உரிய பெண்ணை வண்புணர்ந்துவிடுங்கள் என்று கோஷமிட்டதுதானாம்.


யாருங்க காரணம் ?

பணம்,பதவி,சமூகம் என அனைத்திலும் பலம் பெற்றுவிளங்கும் உயர்சாதி எனப்படுவோரா ? இல்லை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடையாளம் கொண்டு சலுகைகள் பெற்று பணம்,பதவி,சமூகம் என்பனவற்றில் பலம் பெற்று, தன் மக்களை, தன் இனத்தை உயர்த்த வழிமுறைகாணாத மக்களா ?


இது புரிஞ்சா ஏங்க இந்த கொடுமையெல்லாம் நடக்குதுனு யாரோ இங்க சொல்றாங்க.. ஹீம் :-( வெறுமன வருத்தப்படுறதவிட, நம்ம குழந்தைகள், நம்ம கட்டுப்பாடின் கீழ் வளர்கின்ற குழந்தைகள் கிட்ட இந்த வேற்றுமைகளை புகுத்தாம வளர்க்கலாமே... உணவகத்தில் வேலை செய்ற சிறுவனை குழந்தைகள் முன் விரட்டாம நன்றாக நடத்துவது போன்ற செயல்கள் மூலம் நாம செயல்காட்டியாவும் இருக்கலாமுல்ல ?


நேத்து இந்த செய்தி NDTV செய்தி சானல்ல கேட்டதிலருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது, முன்பின் தெரியாத அந்த மனிதர்கள் மீதும், இவர்களை இப்படி பிரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீதும் பயங்கர கோபம்,ஆத்திரம்.... அதற்கு வடிகாலே இந்த பதிவு, மத்தபடி யாரையும் தாக்குறதுக்கோ, தமிழ்மணத்துல புகழடைஞ்ச உள்குத்து,வெளிக்குத்துக்காகவோ கிடையாது... ரொம்ப சென்சிடிவ்வான விஷயம் இதுனு தெரியும், இருந்தாலும் மனசை குடைஞ்சுகிடு இருந்தது

கறுப்புதினம்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், பிப்ரவரி 14, 2006
கிடைத்தவருக்கு நீலமாம்
வேண்டுபவருக்கு பச்சையாம்
கொண்டாடுபவருக்கு சிவப்பாம்
நட்புக்கு மஞ்சளாம்
இவையெல்லாம் முட்டாள்தனமெனும்
எங்களுக்கு கறுப்புதினமே இன்று

தாவணி போட்ட தீபாவளி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, பிப்ரவரி 10, 2006
நேத்துதான் 16 வயதினிலே படம் எதோ ஒரு சேனல்ல ஓடிக்கிட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பையில பக்கத்து ரூம்லருந்து சத்தம்.. "நான் சப்பாணி இல்ல கோவாலகிருஸ்ணன்"னு.. அட நம்ம பரட்டை அடிவாங்குற காட்சினு வேகவேகமா ரூமுக்கு போய் பார்த்ததுக்கப்புறம்தான் திருப்தியாச்சு :-)

சரி அதுல என்ன Splனு கேட்குறீங்களா.. அதுல ஒரு காட்சில நம்ம கதாநாயகியும் அவுங்க பட்டணத்து தோழிகளும் தாவணியோட சுத்திகிட்டு இருந்தாங்க..

அட எவ்ளோ அழகான உடை, இரசனையானது இப்போ எங்கே இதை பார்க்க முடியுது, சினிமாவில கூட எப்பயாவது நம்ம கதாநாயகனுக்கு காதல் ஆரம்பிக்குற காட்சில மட்டும் கதாநாயகி தாவணில வருவாங்க, அதுகப்புறம் ஒரே நாகரீகம்தான் ;-)

ஹைய்யோ ஆத்தா !! நான் ஒண்னும் பெண்விடுதலைக்கு எதிரி இல்லீங்க... , "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே"னு பாடுற காட்சில மட்டும் வேட்டி மடிச்சி கட்டுற புரட்சித்தமிழன் இல்லீங்க.. எதோ என் ரசனையையும் ஏக்கத்தையும் சொன்னேங்க.. (நம்ம தமிழ் வலைப்பூ பெண் நண்பர்கள் யாரும் நம்மல தப்பா புருஞ்சிகிட்டு விலாசிரக்கூடாது பாருங்க.. அதான் அந்த சுய விளக்கம்..)

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட அடுத்தநாள், அதாங்க இன்னைக்கு காலைல அலுவலகத்துக்கு பஸ்ல வரும்போது ஒரு நிறுத்தத்துல ஒரு பொண்னு ஏறுனாங்க, ஒரே பார்வையில ஆள அசத்துற அழகொன்னும் இல்லீங்க, பளிச்சுனு கண்ணை உறுத்துற மாதிரி பஞ்சுமிட்டாய் கலர் உடையும் இல்லீங்க,

சாதரணமான மெரூன் நிறத்துல மேலாடை, வெள்ளை நிறத்துல தாவணி அதுல மெரூன் நிறத்துல ஓரம், பெரும் வேலைப்பாடலெல்லாம் இல்லிங்க, ரொம்ப எளிமையா ....

அட பளிச்சுனு இருந்தாங்க அந்த உடையில

எனக்கோ சந்தோசம் கொல்லல, ஜெமினில இறங்குற வரைக்கும் கிடைச்ச சிறு சிறு சந்தர்பங்கள்ல அவுங்கள பார்த்தேனோ இல்லையோ, அந்த தாவணி உடையை இரசிச்சேங்க....

ஹீம் இனி எப்போ பாக்கப்போறோமோனு பெருமூச்சோட...

ஏங்க நீங்க எப்போ பாத்தீங்க கடைசியா ?!!?!

தமிழ் வலைப்பூ உலகிற்கு இது புதுசு

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 08, 2006
வருங்கால சந்ததிக்கு வாழ இடமளிப்போம்

ஆங்கில வலையுலகத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் TAG, நாம் ஒரு விஷத்தைப்பற்றி பதிவு பண்ணிவிட்டு பின்னர் நாம் யாரிடமிருந்தும் அதைப்பற்றிய கருத்தை அறிய விரும்புகின்றோமோ அவர்களை TAG செய்வதன் மூலம் அவரும் அதைப்பற்றி கட்டாயம் பதிவு பண்ணவேண்டும் என்பது பதிவு செய்யப்படாத வலையுலக சட்டம்.

அதை மீறுபவர்கள் "அந்நியனிடம் மன்னிப்பு கேட்டு நூறு பின்னூட்டங்கள்" இடனும், இடாதவுங்க வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதாங்க இன்னும் எளிமையா சொல்லனும்னா விட்டகொற தொட்டகொற :-)

சரி எதுக்கு இவ்வளவு அறிமுகம் ? சக வலைப்பதிவு நண்பர் ப்ரியா கேட்டுக்கொண்டத்துக்கு இணங்க இந்த பதிவு.

சரி விஷயத்துக்கு வருவோம்..

1) மரம் வளர்ப்போம்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்பதென்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிட்ட இன்றைய கான்கிரீட் கலாச்சாரத்தில், பிறந்தநாள் கேக்குகளிடையே ஓர் மரம் நட்டு அதை மறக்காமல் பாதுகாப்போம். எங்கங்க மரம் வளர்குறதுக்கு இடம்னு நீங்க கேக்குறது புரியுது, பள்ளிக்கூடங்கள்ள, கல்லூரிகள்ளனு நடலாம்.. வேறு மாற்று (ப்ராக்டிகலான) யோசனைகள் இருக்கா ?!

2) அன்பு வளர்ப்போம்:
வாழும் வகையில் பூமியை விடவேண்டுமென்றால், அதில் உடன் அமைதியாய் வாழ மனிதர்களும் வேண்டும், ஆக குழந்தைகளிடம் வேற்றுமை பாராமல் அன்பை செலுத்தும் குணத்தை பெரியவர்களாகிய நாம் வளர்க்க வேண்டும்.

3) ப்ளாஸ்டிக் குறைப்போம்:
மனித கண்டுபிடிப்புகளில் மிகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நோக்கி செல்லத்தொடங்கி உள்ளது. தேவையற்ற ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைப்போம். உதாரணம், தேவையற்ற நேரங்களிலும், சிறு,சிறு பொருட்கள் வாங்குகையிலும், துணிப்பைகளோ (அது பழைய பேஷனாக தோன்றினால்), கட்டை கைப்பிடிகள் வைத்த அலங்கரிக்கப்பட்ட பைகள் பயன்படுத்தலாம்.

4) பேப்பர் டிஷ்யூக்கள்:
இப்பொழுது பேஷனாகிவிட்ட காகித டிஷ்யூக்கள், இதற்கு பதில் துணி கைக்குட்டைகளை பயன்படுத்தினால், மரம் நடாவிட்டாலும், இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் காப்பாற்றலாம்.

5) விலங்குகளை காப்போம்:
விலங்குகள் இயற்கை உணவுச்சங்கிலியின் முக்கியமான ஓர் பகுதி. விலங்குகளை நேரடியாக காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, வளர்க்க முடியாவிட்டாலும் சரி, விலங்குகளின் தோல்,கொம்பு.. போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள பொருட்களை தவிர்ப்போம்.

6) மக்கும் குப்பை, மக்காத குப்பை:
மக்களுக்கும், அதை கையாளும் பணியாளர்களுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி மேலும் விழிப்புணர்ச்சி வேண்டும், அவைகளை தனித்தனியே பிரித்து கையாளுவதில் தொழில்நுட்பரீதியில் உயரவேண்டும்.

7) மறு சுழற்சி:
மறு சுழற்சி பற்றி மக்களுக்கும், பொருட்கள் தயாரிப்பவர்களுக்குமான விழிப்புணர்ச்சி கூடி, அதை அதிநவீன முறையில் நடைமுறைப்படுத்தி, அதில் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்.

8) கல்வி:
இவையனைத்தும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இதை வெறும் மனனப்பாடம் செய்யும் நோக்கில் கற்பிப்பதைவிட தொலைநோக்கு பார்வையில் ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும்.

இதில் சொன்னவற்றை என்னால் இயன்றவரை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றேன், முக்கியமாக 1 முதல் 5 வரையிலானவற்றை கட்டாயமாக கடைபிடிக்கின்றேன், 6,7 பற்றி அதிகமாக தெரியவில்லை, யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.

இந்த விட்டகுறை தொட்டகுறையை (அதாங்க TAG), ப்ரியன் தன் எண்ணங்களை ஒரு கவிதையாக வடிக்க வேண்டும்.